13 ஆயிரம் சதுர அடியில் ஒரு நூலகம்!

 பல கல்லூரிகளில் நூலகத்துடன் இணையதளம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.
13 ஆயிரம் சதுர அடியில் ஒரு நூலகம்!

 அனைத்து கல்லூரிகளிலும் நூலகம் கண்டிப்பாக இருக்கும்.
 பல கல்லூரிகளில் நூலகத்துடன் இணையதளம் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டிருக்கும். விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் 13 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைத்துள்ளனர். இதில் முதல் தளம் 9 ஆயிரம் சதுர அடியிலும், இரண்டாம் தளம் 6 ஆயிரம் சதுர அடியிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான நூலகம் குறித்து கல்லூரி தாளாளர் ஏ.பி.செல்வராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
 "தற்போது அனைத்து துறைகளும் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்று வருகிறது. மாணவர்கள் புதியவற்றைத் தேட தொடங்கியுள்ளனர். மாணவர்களின் தேடுதலுக்கு ஏற்ப கல்லூரியில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஏற்கெனவே கல்லூரியில் நூலகக் கட்டடம் உள்ளது. எனினும் தற்கால தொழில்நுட்பத்துடனும், மாணவர்களை வாசிக்க வைக்க வேண்டும் எனவும் முடிவு செய்து, 13 ஆயிரம் சதுர அடியில் ரூ. 5.50 கோடி மதிப்பீட்டில் புதிய நூலகக் கட்டடம் அமைத்தோம்.
 இந்த கட்டடத்தை தமிழக கூடுதல் காவல்துறை இயக்குநர் (சமூகபாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள்) பி.ராஜேஸ்தாஸ் பிப்ரவரி 9 - ஆம் தேதி திறந்து வைத்தார்.
 தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்முறையாக ரூ. 5.50 கோடி மதிப்பில் நவீன டிஜிடல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது என அவர் கூறினார். வேறு எந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இந்த அளவுக்குப் பிரம்மாண்ட நூலகம் அமைக்கப்பட வில்லை.
 நாங்கள் மாணவர்களை வாசிக்க வைத்து, அவர்களது திறமையையும், அறிவுத்திறனையும் வளர்த்து, அவர்கள் வாழ்க்கையில் சிறப்பான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
 இந்த நூலகத்தில் அனைத்து போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள், தேசிய அளவிலான ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பு, பல்கலைக்கழகம் அறிவுறுத்தியபடி , குறிப்பு உதவி புத்தகங்கள், தகவல் களஞ்சியங்கள், சர்வதேச அளவிலான மொழிவாரியாக அகராதிகள், கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட பருவத் தேர்வுக்கான வினாத்தாள்கள், முதுகலை ஆய்வு நூல்கள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்து நூல்களும் உள்ளன.
 மாணவர்களின் அடையாள அட்டைகளில் பார்கோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களிலும் பார்கோடு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நூலகத்தில் சுலபமாக நூல்களை பெற்றுக் கொள்ளலாம். டிஜிடல் நூலகத்தில், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள டெவலப்பிங் லைப்ரேரி நெட் ஒர்க் அமைப்புடன் இணைந்துள்ளோம். என்லிஸ்ட் தேசிய நூலகம் மற்றும் தகவல் தொழில் நுட்பச் சேவை மையம் ஆகியவற்றில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளோம்.
 இதன் மூலம் மாணவர்கள் மின்நூல்கள், மின் ஆய்வுக்கட்டுரைகள் உள்ளிட்டவற்றைப் பதிவிறக்கும் செய்து கொள்ளலாம். இதற்காக 15 கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 கூட்டஅறை, கருத்தரங்க கூடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. இந்த நூலகம் அமைக்கப்பட்ட பின்னர் புத்தகம் வாசிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனை நூறு சதமாக்கி சிறந்த மாணவர்களை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார் செல்வராஜன்.

ச.பாலசுந்தரராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com