அடிக்கடி சிறுநீர்... தடுப்பது எப்படி?

உணவு வயிற்றில் வந்து விழுந்தவுடன், அந்தச் செய்தியானது மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மலப்பைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மலம் வெளியேறுகிறது.
 அடிக்கடி சிறுநீர்... தடுப்பது எப்படி?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
 எனது வயது 77. எனக்கு சர்க்கரை நோயோ, உயர் ரத்த அழுத்தமோ வேறு கோளாறுகளோ இல்லை. ஆயினும் சாப்பிட்ட பின் உடனே மோஷன் வருகிறது. இரவு 9.30 மணிக்குத் தூங்கச் சென்றால் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை இரவு முழுவதும் சிறுநீர் கழிக்க வேண்டி வருகிறது. பிராஸ்டேட் சுரப்பி பிரச்னை இல்லை. 10 மி.லி. சிறுநீர் கழிக்க பத்து நிமிடம் ஆகிறது. சிறுநீர் உடனே போவதில்லை. இதுவே எனது பிரச்னை. சிறுநீர் பகலிலும் இரவிலும் சிரமமில்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
 -சங்கர வெங்கடராமன், விருகம்பாக்கம், சென்னை.
 உணவு வயிற்றில் வந்து விழுந்தவுடன், அந்தச் செய்தியானது மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து மலப்பைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மலம் வெளியேறுகிறது. இந்த அவசரநிலைப் பிரகடனத்திற்குக் காரணமாக, நரம்புகளின் அதிவேக செயல்பாட்டைக் குறிப்பிடலாம். அவற்றைச் சாந்தப்படுத்தி, மலத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமிருக்கிறது.
 மனிதர்களுக்கு மலமே பலமாக இருப்பதாலும், உங்களுக்கு வயதாகிவிட்டதாலும் உடல் வலுவை இழக்கக் கூடாது. அதற்கு தாடிமாதி கிருதம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்ட பின், சிறிது சூடான வெந்நீர் அருந்தவும். இதனால், குடலில் ஏற்படும் வாத பித்தங்களின் சீற்ற நிலைமாறி, குடல் சார்ந்த நரம்புகள் வலுப்பெறும்.
Gastro Colic Reflex  எனப்படும் இந்த உபாதை, மூளையின் நரம்புகளின் தூண்டுதலாலேயே நடைபெறுவதால், அவற்றின் தூண்டுதலை சாந்தப்படுத்தும் விதமாக தலைக்குக் க்ஷீரபலா தைலம் அல்லது கார்ப்பாஸாஸ்த்யாதி தைலம் உபயோகிக்க நல்லது. தைலத்தை இளஞ்சூடாகப் பஞ்சில் முக்கி எடுத்து, தலையில் சுமார் அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரினால் தலைக்குக் குளித்து, உச்சந்தலையில் ராஸ்னாதி எனும் சூரண மருந்தைத் தேய்த்துவிடலாம். இதனால், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம் போன்றவற்றைத் தடுக்கலாம்.
 இரவில் சிறுநீரகங்கள் துரிதகதியில் சிறுநீரைச் சுரக்கச் செய்து சிறுநீர்ப்பையில் சேர்த்து அதைக் கழிக்க வேண்டிய நரம்புகள் தூண்டப்படுவதால், நீங்கள் மதியம் முதலே நீரின் ஆதிக்கம் கொண்ட கறிகாய்களையும் பழங்களையும் தவிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். வெள்ளரி, பீர்க்கு, புடலை, பூசணி, பரங்கி, முள்ளங்கி, ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றை அதிகம் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தாமதத்தைப் போக்க, இவை அனைத்தையும் காலையில் ஓர் அட்டவணை தயாரித்து ஒன்றிரண்டாக தினமும் பயன்படுத்த முயற்சிக்கவும்.
 சுகுமாரம் எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, காலை, இரவு உணவிற்கு முன்பும் பின்பும் என்ற ரீதியில் சுமார் 10 மி.லி. சாப்பிடவும். இதனால், சிறு நீரங்களின் செயல் ஊக்கியான நரம்புகள், சுரப்பிகள் அனைத்தும் வலுப்படும். சிறுநீர்ப்பையினுள்ளே அமைந்துள்ள தசைப்பகுதியின் நரம்புகளும் வால்வுகளும் தங்களுடைய முதுமையின் காரணமாக, செயலிழக்கும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு செயலூட்டம் தரும் மருந்தாக இந்த நெய் மருந்து இருந்தாலும், மஹாமாஷ தைலம், பலா அஷ்வகந்தாதி தைலம் போன்றவற்றை வெது வெதுப்பாக இடுப்பு, அடிவயிறு, தொடை இடுக்கு, தொடை ஆகிய பகுதிகளில் தடவிவிட்டு, சுமார் அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெந்நீரால் அலம்பி எண்ணெய்ப் பசையை அகற்றி, அன்று மதியம் சூடான ரசம் சாதத்துடன் சிறுகீரை அல்லது மூக்கரட்டைக் கீரை போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
 மேற்குறிப்பிட்ட இருநிலைகளிலும் உங்களுக்கு பசியின் வலுவான தன்மை குறைந்திருப்பதையே காட்டுகிறது. கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி முதலியவற்றின் துவையலையும், தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த மோரையும், அந்த மோரையும் லேசாகச் சூடாக்கி ஓமம் தாளித்து உணவில் சேர்ப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள, குடல் சார்ந்த உபாதைகள் மாறுவதுடன், பசியும் நன்றாக எடுக்கத் தொடங்கும். அதனால், உணவின் சத்து உடலுக்கு நன்கு கொண்டு செல்லப்பட்டு தாதுபலம் வளரும்.
 குடல் இழந்துள்ள சக்தியை மீட்டுத் தருபனவற்றில், ஜீரகபில்வாதி லேகியம், குடஜாரிஷ்டம், அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் நல்ல பலன் தருபவை.
 சிறுநீர் சரியாக வெளியேறவில்லையே என்று நினைத்து அடிக்கடி சிறுநீரை வெளியேற்றும் மருந்தை உபயோகிப்பதை விட, சிறுநீர் தெளிவாவதை உறுதி செய்யும் பாகற்காய், சுண்டைக்காய், வாழைக்கச்சல், கொள்ளு, பாசிப்பருப்பு, வாழைப்பூ, மணத்தக்காளி, நெல்லிமுள்ளி, ஆடை ஏற்படுமாறு இளந்தீயில் காய்ச்சி ஆடை நீக்கிய பசுவின் பால், வல்லாரைக்கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தயிர், பச்சரிசி, அதிக இனிப்பு, வெல்லம், உளுந்து, பகல்தூக்கம் முதலியவற்றைத் தவிர்க்கலாம்.
 (தொடரும்)
 பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
 ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
 நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
 செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com