'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 9

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டு கேட்டில் சரசரவென்று மூன்று நான்கு கார்கள் நுழைந்தன. முதல் வாகனத்திலிருந்து சேலம் கண்ணன் எம்பி இறங்கினார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 9

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டு கேட்டில் சரசரவென்று மூன்று நான்கு கார்கள் நுழைந்தன. முதல் வாகனத்திலிருந்து சேலம் கண்ணன் எம்பி இறங்கினார். அடுத்த காரிலிருந்து ஜெயலலிதா புன்னகைத்தபடி வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஆர். ராமகிருஷ்ணன், மேலும் ஒரிருவர் வந்திருந்தனர்.

பிரணாப்தாவும் குடும்பத்தினரும் வாசலில் வந்து ஜெயலலிதாவை வரவேற்றார்கள். அவர் ஒரு பெரிய பூங்கொத்தைப் பிரணாப்தாவின் மனைவியிடம் கொடுத்தபோது அவருக்கு ஒரே மகிழ்ச்சி.

அங்கே நான் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோது அவருக்கு ஒரே ஆச்சரியம். அது, ஆச்சரியமா, அதிர்ச்சியா என்று என்னால் சொல்ல முடியவில்லை. பிரணாப்தா வெகு சகஜமாக ஜெயலலிதாவிடம் சொன்னார்:

""நானும் வைத்தியநாதனும் கடந்த ஒரு வாரமாக உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதுவும் உங்களது கன்னிப் பேச்சு குறித்து நான் என்ன கருத்துத் தெரிவித்தேன் என்று நீங்கள் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.''

ஜெயலலிதா அதிர்ந்தாரோ என்னவோ நான் அதிர்ந்தேன். ஏதோ நண்பரை அறிமுகப்படுத்துவதுபோல அல்லவா, என்னை அடையாளம் காட்டிவிட்டார் பிரணாப்தா. "இவர் எனக்கு வேண்டியவர்' என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

""எனக்கும் இவரை முன்பே தெரியும்'' என்று ஜெயலலிதா கூறுவார் என்று நான் எதிர்பார்த்தேன். சொல்லவில்லை. என்னைப் பார்த்து நட்புறவுடனான புன்னகையை மட்டும் உதிர்த்தார்.

பிரணாப்தாவின் குடும்பத்தினருடன் ஜெயலலிதா அவர்கள் வீட்டுக்குள் போனார். நாங்கள் அலுவலகத்துக்குப் போனோம். சேலம் கண்ணனும், ஆர். ராம கிருஷ்ணனும் வீட்டு வராண்டாவில் நின்று விட்டனர்.

பத்து நிமிடத்தில் ஜெயலலிதா கிளம்பிவிட்டார். அவர் போன சிறிது நேரத்தில் நானும் கிளம்பி விட்டேன்.

அதற்குப் பிறகு நாடாளுமன்ற வராந்தாவில் ஜெயலலிதாவை இரண்டு முறை நேருக்கு நேர் பார்த்தேன். நான் வணக்கம் தெரிவித்தவுடன், மறு வணக்கம் சொல்லிப் புன்னகைத்ததுடன் சரி, பேசிக்கொள்ளவில்லை. பிரணாப்தா அவர் குறித்து என்ன சொன்னார் என்று கேட்பார் என்று நான் எதிர்பார்த்தேன். கேட்கவில்லை.

பிரணாப்தாவை ஜெயலலிதா ஏன் வீடு தேடி வந்து சந்தித்தார், அதன் பின்னணிதான் என்னவாக இருக்கும் என்கிற கேள்விகள் எனக்குள் எழுந்தன. நான் சென்னை திரும்புவதற்கு முன் பிரணாப்தாவைச் சந்திக்கச் சென்றேன். அவராகவே சிரித்தபடி, பேச்சை எடுத்தார்.

""ஜெயலலிதாவைப் பார்த்தாயா? ஏதாவது கேட்டாரா?'' - பிரணாப்தா கேட்டார்.
""இரண்டு முறை நாடாளுமன்ற வராந்தாவில் எதிர்எதிராகப் பார்த்தோம். சிரித்தபடி வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம். எதுவும் பேசவில்லை. அவர் கேட்கவும் இல்லை, நான் பேசவும் இல்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டபோது, அங்கேயும் நான் இருந்தேன். என்னைப் பார்த்துப்
புன்னகைத்தார். அவ்வளவுதான்.'' 

""நீயாகப் போய்ப் பேச்சுக் கொடுத்திருக்க வேண்டியதுதானே? பயமா, தயக்கமா?''

""நான் ஏன் பயப்பட வேண்டும்? தயக்கம்தான். அவர் அதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று தெரியாது. பேச வேண்டும் என்று அவர் நினைத்தால், அவராகவே அழைத்துப் பேசுவார். நானாக வலியப் போய்ப் பேசுவானேன்?''

எனது பதிலைக் கேட்டதும் பிரணாப்தா சிரித்து விட்டார்.

""ஜெயலலிதா எதற்காக என்னைச் சந்திக்க வந்திருந்தார் தெரியுமா?''

""நீங்கள் சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதா சொல்ல வேண்டும். இரண்டு பேரும் சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும்?''

""அவர் இப்போது தமிழ்நாடு ஹெளசில் தங்கி இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினரான அவருக்கு வீடு ஒதுக்கித் தரப்பட வேண்டும். முதல் தடவை எம்.பி.யாக வருபவர்களுக்கு சாதாரணமாகத் தனி பங்களா ஒதுக்கப்படுவதில்லை. அவருக்குப் பிடித்த மூன்று பங்களாக்களைக் குறிப்பிட்டு அதில் ஒன்றைத் தனக்கு ஒதுக்கித் தரும்படி பிரதமர் அலுவலகத்தைக் கேட்டிருக்கிறார். பிரதமர் என்னை சந்திக்கச் சொல்லி இருக்கிறார். அதனால்தான் வந்திருக்கிறார்.''

பிரணாப்தா சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது. எம்.பி.க்களுக்கு வீடுகளை ஒதுக்க நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் அடங்கிய "ஹெளசிங் கமிட்டி' ஒன்று இருக்கும். அதற்கும் நிதியமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பிறகு ஏன் பிரணாப்தாவை சந்திக்கும்படி ஜெயலலிதாவைப் பிரதமர் அனுப்ப வேண்டும் என்பதுதான் எனது சந்தேகம். அவரிடமே கேட்டுவிட்டேன்.

""இந்தப் பிரச்னையில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது இந்திராஜிக்கும் நன்றாகவே தெரியும். ஜெயலலிதாவின் மீது தனக்கு அக்கறை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துவதற்காகத்தான், என்னை சந்திக்கச் சொல்லி இருக்கிறார். அதேபோல, ஜெயலலிதாவுக்கும் எனது முக்கியத்துவத்தை உணர்த்துவதுதான் அவரது நோக்கம்.''

இவையெல்லாம் நுணுக்கமான அரசியல் சமிக்ஞைகள் என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

1984 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது வரை, அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1984 ஏப்ரல் மாதம் மாநிலங்களவைக்கு ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு ஆறு மாதங்கள்தான் முடிந்திருந்தன. முதல்வராக இருந்த எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கும் சென்றுவிட்டார்.

எம்ஜிஆர் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குப் போனதைத் தொடர்ந்து, ஜெயலலிதா எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம். தில்லி தமிழ்நாடு இல்லத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட அதிர்ச்சிகரமான பல நிகழ்வுகளுக்கு நான் நேரடி சாட்சியாக இருந்திருக்கிறேன். இந்தத் தொடருக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதால், அது குறித்து விளக்க விரும்பவில்லை.

பிரதமர் இந்திரா காந்தியை அவர் சந்தித்தார். அடுத்த ஒரு வாரம் அவருக்குப் பல வகையிலும் உறுதுணையாக ஆர்.கே. தவானும், பிரணாப்தாவும் இருந்தார்கள். இந்திரா காந்தி ஏன் ஜெயலலிதாவிடம் பிரணாப்தாவை சந்திக்கப் பணித்தார் என்பதன் காரணம், அப்போதுதான் ஜெயலலிதாவுக்கே புரிந்திருக்கும்.

அக்டோபர் முதல் வாரத்தில் எம்ஜிஆர் உடல் நலக் குறைவு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் என்றால், அக்டோபர் 31-ஆம் தேதி பிரதமர் இந்திரா காந்தி காவலர்களால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

பிரதமர் இந்திரா காந்தி படுகொலையின் போது நான் சென்னை திரும்பி இருந்தேன். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றங்களையும், ராஜீவ் காந்தி பிரதமரானது குறித்த விவாதங்களையும் நான் பலரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேனே தவிர, அப்போது தில்லியில் இருக்கவில்லை. பிரணாப்தா குறித்த தொடர் இது என்பதால், அன்றைய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த பலர் சொன்ன செய்திகளின் அடிப்படையில் சில பதிவுகளை இங்கே செய்தாக வேண்டும்.

இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்த இடத்தில் அமைச்சரவையில் இருந்த பிரணாப் முகர்ஜி இடைக்காலப் பிரதமராக விரும்பினார் என்கிற தவறான கருத்து நிலவுகிறது. அது தவறு. அப்படியொரு கருத்தைப் பரவச் செய்து, ராஜீவ் காந்திக்குப் பிரணாப்தாவின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, சிலர் தங்களது திட்டத்தில் வெற்றியும் அடைந்தனர்.

இந்தத் தொடருடன் தொடர்பில்லை என்றாலும், இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட அந்த 1984, அக்டோபர் 31-ஆம் தேதி நிகழ்வுகளை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். பிரணாப்தா ராஜீவ் காந்தியிடமிருந்து ஒதுக்கி நிறுத்தப்பட்டதன் பின்னணியில் ஒரு மிகப் பெரிய சதி இருக்கிறது. அந்த சதி, இந்திய அரசியலையே புரட்டிப் போட்டு, காங்கிரஸ் கட்சியை நிரந்தரமாகப் பலவீனப்படுத்தியது என்பது யாராலும் உணரப்படாத உண்மை.

இந்திரா காந்தியின் படுகொலையின்போது, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த ராஜீவ் காந்தி மேற்கு வங்க சுற்றுப்பயணத்தில் இருந்தார். மேற்கு வங்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரணாப்தாவும், கனிகான் செüத்ரியும் உடனிருந்தனர். அக்டோபர் 31, 1984 காலை சுமார் 9.30 மணிக்கு, தில்லியில் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட செய்தி முதலில் நிதியமைச்சர் பிரணாப்தாவுக்குத்தான் கிடைத்தது.

அந்தத் துயரச் செய்தியை, ராஜீவ் காந்திக்குத் தெரிவித்ததும், அவர் மிக தைரியமாக அந்தத் தகவலை எதிர்கொண்டார் என்று பிரணாப்தாவே இரண்டு மூன்று தடவை தெரிவித்திருக்கிறார். சிறப்பு விமானம் வரவழைக்கப்பட்டு, ராஜீவ் காந்தியும், பிரணாப்தாவும் தில்லி திரும்பினார்கள். அவர்களுடன் அதே விமானத்தில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த உமா சங்கர் தீட்சித், அவரது மருமகளான ஷீலா தீட்சித், மக்களவைத் தலைவர் பல்ராம் ஜாக்கர், கனிகான் செüத்ரி ஆகியோரும் பயணித்தனர்.

""விமான ஓட்டிகள் இருக்கும் காக்பிட்டுக்கு சென்ற ராஜீவ் காந்திதான் முதலில் இந்திரா காந்தி இறந்துவிட்ட செய்தியைச் சொன்னார். என்னுடைய தாயார் இறந்தபோதுகூட நான் அப்படி அழுததில்லை. தேம்பித் தேம்பி அழுதுவிட்டேன். எல்லோரும் என்னைத் தோளில் தட்டி சமாதானப்படுத்தினார்கள். இந்திரா காந்திக்கு அப்படியொரு முடிவு ஏற்பட்டிருக்க வேண்டாம்'' என்று விமானப் பயண நிகழ்வுகளைப் பிரணாப்தா பலமுறை விவரித்திருக்கிறார். அப்படி அவர் இந்திராவின் மறைவுச் செய்தியைக் கூறும்போதெல்லாம், அவரை அறியாமலேயே கண்ணீர் பெருகி வழியும்.

ராஜீவ் காந்தி உடனடியாக பிரதமராகப் பதவி ஏற்றுக் கொள்வது என்பதை விமானத்தில் தில்லி திரும்பும்போதே முடிவெடுத்து விட்டனர். விமானத்தின் பின் பகுதிக்கு ராஜீவ் காந்தியை அழைத்துச் சென்றார் பிரணாப்தா. அவர் உடனடியாகப் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது பிரணாப் முகர்ஜிதான்.

""எனக்கு எந்த முன் அனுபவமும் கிடையாதே என்னால்சமாளிக்க முடியுமா?'' என்று தயங்கினார் ராஜீவ் காந்தி. ""நாங்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறோம். உங்களால் நிச்சயம் சமாளித்துவிட முடியும். அதைத்தான் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்'' என்று கூறி ராஜீவ் காந்தியை சம்மதிக்க வைத்தது பிரணாப்தாதான். இதை என்னிடம் அந்த விமானத்தில் உடனிருந்த பல்ராம் ஜாக்கரும், ஷீலா தீட்சித்தும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

புதிய அரசு பதவி ஏற்பதுவரை, இந்திரா காந்தியின் மரணச் செய்தியை அறிவிக்காமல் நிறுத்தி வைப்பது என்று தில்லிக்கு செய்தி அனுப்பப்பட்டது. ஏற்கெனவே, குடியரசு துணைத் தலைவர் ஆர். வெங்கட்ராமனும் அதே முடிவை எடுத்து, உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்குக்கும், பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நிலவி வந்த நேரம் அது. குடியரசு தலைவர் ஜெயில் சிங், அப்போது ஓமன் நாட்டுக்கு அரசுமுறைப் பயணம் சென்றிருந்தார். செய்தி கேட்டதும் அவர் உடனடியாக தில்லி திரும்புகிறார் என்றாலும், காலதாமதம் பிரச்னையாகி விடக்கூடாது என்கிற பரபரப்பு எல்லோருக்கும். இடைக்கால அரசு ஏற்படுத்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கூட்டம் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசு தலைவர் சொல்லிவிட்டால் என்ன செய்வது என்கிற சந்தேகமும் பலருக்கும் இருந்தது.

அக்டோபர் 31 நடந்த நிகழ்ச்சிகள் குறித்து குடியரசுத் தலைவராக இருந்த கியானி ஜெயில் சிங், துணைத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், பின்னாளில் பிரதமரான பி.வி.நரசிம்ம ராவ், இந்திரா காந்தியின் பிரதான செயலராக இருந்த பி.சி. அலெக்சாண்டர், பிரணாப் முகர்ஜி ஆகியோர் தங்களது புத்தகங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அவை அனைத்துமே பிரணாப்தா இடைக்காலப் பிரதமராக விரும்பவில்லை என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகின்றன.

இந்தக் குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்திரா காந்திக்கு மிகவும் நெருக்கமாகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கும் பிரணாப்தாவை எப்படியாவது பழி சுமத்தி ஓரங்கட்டுவது என்று சிலர் முடிவெடுத்தனர். அதில் முக்கியமானவர் குடும்ப உறவினரான அருண் நேரு. பிரணாப்தா இடைக்காலப் பிரதமராக ஆசைப்படுகிறார் என்பது போன்ற கருத்தை ராஜீவ் காந்தியிடம் தெரிவித்து அவரை நம்பவும் வைத்தார்கள்.

அருண் நேரு தலைமையில், திட்டமிட்டு பிரணாப்தாவை ஓரங்கட்டி, ராஜீவ் காந்தி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் யார், யார் என்று கேட்டால் அதிர்ச்சி அடைவீர்கள். "இவரா அப்படி' என்று திகைப்பீர்கள். அப்போது தொடங்கிய சதியின் நீட்சிதான் ராஜீவ் காந்தியின் உயிர்ப் பலி!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com