'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 7

தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே, எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 7

தமிழகத்தில் எம்ஜிஆர் தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டு, சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே, எம்ஜிஆர் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்திருந்தார். பிரணாப்தா கூறியதுபோல, எம்ஜிஆரா - இந்திராவா என்றபோது இந்திராவும், எம்ஜிஆரா - கருணாநிதியா என்றபோது எம்ஜிஆரும் வெற்றி அடைந்தனர்.

சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார். தில்லி அரசியல் சூழலை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சஞ்சய் பாபுவின் மரணம் மிகவும் பாதித்தது. சஞ்சய் காந்தியைப் பற்றி இதேபோல ஒரு தொடரே எழுதலாம் என்பதால், அவர் குறித்த செய்திகளையும், சம்பவங்களையும் நான் அதிகம் விவரிக்க முற்படவில்லை. கட்டுரையின் நோக்கம் திசைதிரும்பிவிடும்.

சஞ்சய் காந்தியின் மரணத்தின்போது ராஜீவ் காந்தியின் குடும்பம் இத்தாலியில் இருந்தது. அடுத்த நாள்தான் ராஜீவ் காந்தி தில்லி வந்து சேர்ந்தார். சஞ்சய் காந்தியின் மரணம் இந்திரா காந்தியை நிலைகுலைய வைத்தது என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்? 

சஞ்சய் காந்தியின் விமான விபத்து குறித்தும், மரணம் குறித்தும் பல்வேறு ஐயப்பாடுகளும், வதந்திகளும் கிளம்பின. அவை, பிரதமராக இருந்த இந்திரா காந்தியை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கின. அன்றைய சூழல் குறித்தும், நிகழ்வுகள் குறித்தும் நேரடி சாட்சியாக இருந்த ஆர்.கே. தவானும், கே. கருணாகரனும் என்னிடம் பகிர்ந்து கொண்ட செய்திகளிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

மருத்துவமனையிலிருந்து 1, அக்பர் சாலையில் அமைந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு சஞ்சய் காந்தியின் உடல் எடுத்துவரப்பட்டபோது, மேனகா காந்தியையும் அந்த வாகனத்தில் தன் அருகில் அமரச் செய்தார் பிரதமர் இந்திரா காந்தி. அப்போது மேனகா காந்தியின் வயது 24. வருண் காந்தி மூன்று மாதக் குழந்தை. அந்தக் காட்சி ஏற்படுத்திய அனுதாபத்தைச் சொல்லி மாளாது. அதையெல்லாம்  பார்த்தவர்களுக்கு, சஞ்சய் காந்தியின் வாரிசாக, இந்திரா காந்தி மேனகா காந்தியைத்தான் அமேதி இடைத்தேர்தலில் வேட்பாளராக்குவார் என்கிற எண்ணம் ஏற்படவே செய்தது.  சஞ்சய் காந்தியின் மறைவைத் தொடர்ந்து அமேதி தொகுதியின் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று அவரது மனைவி மேனகா காந்தி விரும்பினார். கணவர் சஞ்சய் காந்தி மறைந்த சில மாதங்களில் மேனகா காந்தி அரசியலுக்கு வருவதில் இந்திரா காந்திக்கு விருப்பமில்லை. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு முதல் காரணமாக அமைந்தது அமேதி இடைத்தேர்தல்தான்.

குழப்பத்தில் இருந்த இந்திரா காந்தியிடம் நேரு குடும்பத்தின் சார்பில் மேனகா காந்தி அல்லது  ராஜீவ் காந்தியை அமேதி இடைத்தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர்கள் ஆர்.கே. தவான், பிரணாப் முகர்ஜி, ஜி.கே. மூப்பனார், ஆர். வெங்கட்ராமன் ஆகிய நால்வரும்தான். ஆர்.கே. தவான், ஜெயில்சிங், வி.பி. சிங் மூவரும் மேனகா காந்தியை நிறுத்துவதில் அதிக விருப்பம் காட்டினார்கள் என்று பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அரசியலுக்கு வருவதிலோ, இடைத்தேர்தலில் நிற்பதிலோ ராஜீவ் காந்திக்கு விருப்பம் இருக்கவில்லை. அமேதி இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகும்கூட, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் சேர விரும்பவில்லை. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியேகூட, அவர்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும்.

நேரு குடும்ப அரசியலில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தன. முழு நேர அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட ராஜீவ் காந்தியைச் சுற்றி அருண் நேரு, வி.பி. சிங், அருண் சிங் உள்ளிட்ட பல நண்பர்கள் சூழ்ந்து கொண்டனர். மணிசங்கர் அய்யர் போன்ற தனது பள்ளிக்கூடத் தோழர்களை ராஜீவ் காந்தியே அழைத்துத் தனக்கருகில் வைத்துக் கொண்டார்.

இன்னொருபுறம், குடும்பத்திற்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, மேனகா காந்தி வெளியேற்றப்பட்டார். தனது கைக்குழந்தையையும் தூக்கிக் கொண்டு இந்திரா காந்தியின் 1, சப்தர்ஜங் சாலை இல்லத்தில் இருந்து மேனகா வெளியேறிய, வெளியேற்றப்பட்ட, சம்பவம் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் விரைவிலேயே அடங்கிவிட்டது.

குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், அது குறித்து எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் இந்திரா காந்தியால் இயங்க முடிந்தது என்பது மிகப் பெரிய ஆச்சரியம். "இந்திரா காந்தி போன்ற மனவலிமை படைத்த ஒருவரைப் பார்க்க முடியாது' என்று பிரணாப்தா அடிக்கடி கூறுவதுண்டு. ஆனால், அவருக்குள்ளேயும் ஒரு மென்மையான, உணர்ச்சிகள் நிறைந்த பெண்மணி இருந்தார் என்பதை ஷீலா கெüல் தெரிவித்த பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்திரா காந்தியின் வாழ்க்கையில், குறிப்பாக, அவர் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகு, அவருக்குத் தனிப்பட்ட நெருக்கமான தோழிகள் என்று குறிப்பிட வேண்டுமானால் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சனையும், ஷீலா கெüலையும்தான் குறிப்பிட வேண்டும். புபுல் ஜயகரும் இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தார் என்றாலும் தேஜி பச்சனும், ஷீலா கெüலும் ஒருபடி மேலே. 

ஜவாஹர்லால் நேருவின் மனைவி கமலா நேருவின் சகோதரர் கைலாஷ்நாத் கெüலின் மனைவிதான் ஷீலா கெüல். இந்திரா காந்திக்கு மாமி முறை, வெளிப்படையாகப் பேசுபவர். சோதனையான குடும்பப் பிரச்னைகளில், மாமா மனைவியான ஷீலா கெüலைத்தான் இந்திரா காந்தி நாடுவது வழக்கம். மேனகாவுக்குப் பதிலாக ராஜீவ் காந்தியை அரசியலுக்குக் கொண்டுவரும் முடிவு எடுக்கப்பட்டதற்கு ஷீலா கெüலும், தேஜி பச்சனும்தான் முக்கியமான காரணம்.

லக்னெü மாநகராட்சி உறுப்பினராகவும், உத்தர பிரதேச மேலவை உறுப்பினராகவும் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, 101 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தவர் ஷீலா கெüல். லக்னெü, ரேபரேலி தொகுதிகளிலிருந்து ஐந்து முறை ஷீலா கெüல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1980 இந்திரா காந்தி அமைச்சரவையிலும், 1991 நரசிம்ம ராவ் அமைச்சரவையிலும் பங்கு பெற்றவர். ஹிமாசலப் பிரதேச ஆளுநராக இருந்தவர்.

2015-இல்தான் அவர் காலமானார். தில்லியை அடுத்த காஜியாபாதில் தனது இறுதிக் காலத்தைக் கழித்தார். அவரைப் பலமுறை சந்தித்து, பல செய்திகளை கேட்டுத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

அலுவல் ரீதியாக முடிவெடுப்பதற்கு ஆர். வெங்கட்ராமனையும், பிரணாப் முகர்ஜியையும் இந்திரா காந்தி கலந்தாலோசிப்பார் என்றால், அரசியல் ரீதியிலான முடிவுகளுக்கு அவர் ஜி.கே. மூப்பனார், கே. கருணாகரன் இருவரையும் கலந்தாலோசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளுக்குத் தனிச் செயலர் என்.கே. சேஷனையும் (டி.என். சேஷன் அல்ல), தனி நபர்கள் குறித்த அல்லது தனிப்பட்ட தகவல்களுக்கும், தொடர்புகளுக்கும் ஆர்.கே. தவானையும் பிரதமர் இந்திரா காந்தி தனது நம்பிக்கைக்குரியவர்களாகக் கொண்டிருந்தார்.

மேலே குறிப்பிட்ட தகவல்கள் பெரும்பாலும் பிரணாப்தா, ஆர்.கே. தவான், ஷீலா கெüல் உள்ளிட்ட சிலருடன் எனக்கு இருந்த தொடர்பால் தெரிந்து கொண்டவையே தவிர, நான் நேரிடையாகப் பார்த்து சேகரித்த தகவல்கள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

இந்திரா காந்தி என்கிற ஆளுமையை எட்ட நின்றும், கிட்ட இருந்தும் பார்த்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்றாலும், நெருக்கமாகப் பழகும் அளவிலான தொடர்பில் நான் இருக்கவில்லை. அதற்குக் காரணம் எனது வயது மட்டுமல்ல, நான் அரசியல்வாதியாக இல்லாமல் பத்திரிகையாளனாக இருந்ததுதான். அந்த அடையாளத்தை இழந்துவிட நான் தயாராக இருக்கவில்லை.

இதற்கிடையில் இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. இடையிடையே தில்லிக்குப் போவதும் வருவதுமாக இருந்தேன். கோடைக்காலம் என்றால் தில்லியைத் தவிர்ப்பதும், குளிர்காலம் வந்தால், அதை அனுபவிக்க தில்லியில் நீண்ட நாள் முகாமிடுவதும் எப்போதுமே எனக்குப் பிடிக்கும்.

ஆர். வெங்கட்ராமன் குடியரசு துணைத் தலைவராகிவிட்ட நிலையில், பிரணாப் முகர்ஜியிடம் நிதித்துறைப் பொறுப்பு தரப்பட்டது. மாநிலங்களவையின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமைச்சரவையில் பிரதமர் இந்திராவுக்கு அடுத்த இடத்தில் இருந்தார். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் தில்லி சென்றேன். அவரை சந்திக்க 13, தல்கத்தோரா சாலை வீட்டுக்குப் போனபோது, அவர் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார். கேட்டில் நான் நுழைவதைப் பார்த்ததும், காரில் ஏற இருந்தவர் அங்கேயே நின்றுவிட்டார்.

""மனைவியுடன் வந்திருக்கிறாயா, தில்லிக்குத் தனியாக வந்திருக்கிறாயா?''

""தனியாகத்தான் வந்திருக்கிறேன்.''

""அப்பாவாகப் போகிறாயா, அப்பாவாகிவிட்டாயா?''

""இரண்டுமே இல்லை'' என்றபடி, கையோடு கொண்டு போயிருந்த சபரிமலை பிரசாதத்தைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டார். அடுத்த நாள் காலையில், நார்த் பிளாக்கிலுள்ள நிதியமைச்சர் அலுவலகத்துக்கு வரச் சொன்னார். போனேன். எனக்கு அது புது அனுபவம்.

அதற்கு முன்னால் தில்லிக்குப் பலதடவை போயிருக்கிறேன்; தில்லியிலேயே இருந்திருக்கிறேன் என்றாலும், எந்த ஓர் அமைச்சரையும் அவரது அலுவலகத்தில் சந்தித்தது கிடையாது. அரசியல் தலைவர்களை அவர்களது வீட்டிலோ, கட்சி அலுவலகத்திலோ சந்தித்திருக்கிறேனே தவிர, அமைச்சகங்களில் சந்தித்து இல்லை.

பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் உள்ள செüத் பிளாக், அதற்கு எதிரே, நிதியமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் உள்ள நார்த் பிளாக்,  வேளாண் அமைச்சகம் (க்ருஷி பவன்),  ரயில்வே அமைச்சகம் ( ரயில் பவன்) என்று வெளியிலிருந்து அந்தக் கட்டடங்களைப் பார்த்திருக்கிறேன், அவ்வளவே. 

வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த என்னை உள்ளே அழைத்து உட்கார வைத்தபோது, என்மீது பிரணாப்தா வைத்திருந்த நம்பிக்கையை நினைத்து நெகிழ்ந்தேன். பிரதமரின் அறைக்கு நிகரான அறை நிதியமைச்சருடையது என்பார்கள். முதன் முதலாக, அந்த அறையைப் பார்த்தபோது பிரமித்து விட்டேன். 

அறையின் ஒரு பகுதியில் போடப்பட்டிருந்த சோபாவில் நான் அமர்ந்து கொண்டிருந்தேன். இன்னொரு பகுதியில் நிதியமைச்சர் பிராணாப்தா அமர்ந்திருந்தார். நிதியமைச்சரின் மேஜைக்கு எதிரேயும், சற்று தள்ளி பக்க வாட்டிலும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பிரணாப்தா கோப்புகளைப் பார்த்துக் கையொப்பமிடுவதும், தொலைபேசியில் பேசுவதும், அதிகாரிகளைச் சந்திப்பதுமாக இருந்தார்.

நிதியமைச்சரை சந்திக்க வந்து போகும் அதிகாரிகள் சிலர், அறையின் இன்னொரு பகுதியில் சோபாவில் அமர்ந்து தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருக்கும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தபடி சென்றனர். சிலர் வணக்கம் தெரிவித்தனர். முக்கியமான நபராகத் தெரியாத ஓர் இளைஞர், சர்வ வல்லமை பொருந்திய நிதியமைச்சரின் அறையில் வெட்டியாக சோபாவில் அமர்ந்திருப்பது அவர்களை வியப்பிலாழ்த்தியதில் நியாயம் இருக்கிறது.

திடீரென்று சலசலப்பு. சில அதிகாரிகள் புடைசூழ ஒருவர் நுழைந்தார். பிரணாப்தா தனது நாற்காலியிலிருந்து எழுந்து, மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். அவர் நுழைந்தபோது நானும் என்னையறியாமல் எழுந்து விட்டேன். என்னை அவர் திரும்பிப் பார்த்தார். நான் வணக்கம் சொன்னேன். அவரும் வணக்கம் தெரிவித்தார்.

பிரணாப்தாவிடம் கைகுலுக்கிய பின் அவருக்கு எதிரில் அமர்ந்தார் அவர். ஏனைய அதிகாரிகள் வெளியேறினார்கள். முக்கியமான ஒருவர், முக்கியமான எதையோ பேச வந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். இங்கிதம் தெரிந்து அந்த அதிகாரிகளைத் தொடர்ந்து நானும் அறையிலிருந்து வெளியேறினேன்.

வெளியில் வரவேற்பறையில் வந்து அமர்ந்தபோது, அங்கே சிலர், பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்த பிரமுகர் குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். கூர்ந்து கேட்டேன். அப்போதுதான் நான் அந்த பிரமுகரின் பெயரை முதன்முதலில் கேள்விப்படுகிறேன், அவரைப் பார்க்கிறேன். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரசியலில் அவர் முக்கியப் பங்கு வகிக்கப் போகிறார் என்றோ, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவரிடம் நெருங்கிப் பழகுவேன் என்றோ அப்போது நினைத்துப் பார்க்கவில்லை.

பிரணாப்தாவின் அறையில் நடந்த அந்த முதல் சந்திப்பை நான் மறக்காததுபோல, அவரும் மறக்காமல் இருந்தார் என்பதுதான் ஆச்சரியம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.