'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 8

பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்த அந்தப் பிரமுகர் வேறு யாருமல்ல, பின்னாளில் நிதியமைச்சராகவும், பாரதப் பிரதமராகவும் உயர்ந்த டாக்டர் மன்மோகன் சிங்தான்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 8

பிரணாப்தாவைச் சந்திக்க வந்திருந்த அந்தப் பிரமுகர் வேறு யாருமல்ல, பின்னாளில் நிதியமைச்சராகவும், பாரதப் பிரதமராகவும் உயர்ந்த டாக்டர் மன்மோகன் சிங்தான். நிதியமைச்சகத்துடனான டாக்டர் மன்மோகன் சிங்கின் தொடர்பு, நரசிம்ம ராவ் பிரதமரானவுடன் திடீரென்று ஏற்பட்டுவிடவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் ஐ.நா. சபையில் பணியாற்றி வந்தார்.

வர்த்தகத்துறை அமைச்சராக இருந்த எல்.என்.மிஸ்ராவால் ஆலோசகராக நியமிக்கப்பட்ட டாக்டர் மன்மோகன் சிங், ஏதாவது ஒரு விதத்தில் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் தொடர்புடையவராக இருந்து வந்திருக்கிறார். 1972 முதல் 1976 வரை, இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங்.

வரவேற்பறையில் நிதியமைச்சரைச் சந்திக்க நிறையப் பேர் காத்திருப்பதைப் பார்த்த எனக்கு, பிரணாப்தாவை அன்று சந்திக்க முடியும் என்று தோன்றவில்லை. அவருக்கும் டாக்டர் மன்மோகன் சிங்குக்கும் இடையேயான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டு கொண்டிருந்தது. நான் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மெல்ல நழுவி விட்டேன்.

தில்லியிலிருந்து வெளியாகும் "தி சன்', "பேட்ரியட்', "வீக் எண்ட் ரெவ்யூ' ஆகிய ஆங்கில இதழ்களில் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்ததால், அடுத்த ஒரு வாரம் அந்தப் பத்திரிகை அலுவலகங்களிலும், அங்கே பணிபுரியும் நண்பர்களைச் சந்திப்பதிலும் எனது நேரம் நகர்ந்தது.

காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான 10, அக்பர் சாலை, ஆந்திர அரசின் விருந்தினர் மாளிகையான ஆந்திர பவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான "அஜாய் பவன்' மூன்றும் தினசரி உலாவில் இடம் பெறாமல் இருக்காது. அதேபோல, யு.என்.ஐ. எனப்படும் ரஃபி மார்கிலுள்ள யுனைட்டட் நியூஸ் ஏஜன்சி அலுவலகமும். தில்லியில் நம்ம ஊர் உணவு வேண்டும் என்றால், நான் மேலே குறிப்பிட்ட நான்கு இடங்களையும்தான் அப்போது நாட வேண்டும். இப்போதுபோல, சரவண பவன்கள் எல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிடையாது.
நான் மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு எல்லாமே நடந்துதான் செல்வது வழக்கம். அப்போது சுட்டெரிக்கும் வெயிலிலும் கூட, நடந்துதான் சென்று கொண்டிருந்தோம் என்பதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. இப்போது மெட்ரோ ரயிலே வந்துவிட்டது.

இந்த இடங்களுக்கெல்லாம் போவது, சாப்பிடுவதற்காக மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். அங்கே, பத்திரிகையாளர்களை மட்டுமல்ல, அரசியலில் தடம் பதிக்கப் போராடிக் கொண்டிருக்கும் பல அரசியல்வாதிகளையும் சந்திக்க முடியும். அரசியலிலும், அரசிலும் நடக்கும் திரைமறைவுக் காட்சிகள் அங்கே விலாவாரியாகப் பகிரப்படும்.

அப்படியொரு நாள் நான் யு.என்.ஐ. உணவகத்தில் உப்புமாவும், காபியுமாக இருந்தபோது, எனக்கருகில் இருந்த ஐந்தாறு பேர் பேசிக் கொண்டிருந்தது என் ஆர்வத்தை அதிகரித்தது.

டாக்டர் மன்மோகன் சிங்கை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முடிவெடுத்திருப்பதாக அவர்கள் பேசிக் கொண்டனர். ஐ.எம்.எஃப். என்கிற சர்வதேச நிதியத்தின் வற்புறுத்தல்தான் அதற்குக் காரணம் என்று ஒருவரும், சர்வதேச நிதியத்தை நாடுவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்று இன்னொருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
காதில் விழுந்த செய்தி உண்மைதானா என்று தெரிந்து கொள்ள அன்று மாலை 13, தல்கத்தோரா சாலைக்குச் சென்றேன். பிரணாப்தா அலுவலகத்திலிருந்து வந்திருக்கவில்லை. பட்ஜெட் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறார் என்று சொன்னார்கள். முக்கியமான அலுவல்கள் இருந்தால், விருந்தினர்களைச் சந்திப்பதை முற்றிலுமாகத் தவிர்த்து விடுவார் பிரணாப்தா. வேலையில் மூழ்கி விட்டால், அவரது கவனம் வேறு எதிலுமே திசை திரும்பாது.
அதே போலத்தான், புத்தகங்களும் அறிக்கைகளும் படிப்பதிலும் அவர் ஒன்றிப் போய் விடுவதைப் பார்த்திருக்கிறேன். பெரிய பெரிய அறிக்கைகள், புத்தகங்களை அவரைப்போல அதிவிரைவாகப் படித்து முடிக்க யாராலும் முடியாது. ஆங்காங்கே குறிப்பு எழுதுவதும், அடிக்கோடிடுவதும் வேறு இருக்கும். படித்துவிட்டு அவர் எழுதும் குறிப்புகள் அற்புதமானவை. ஒன்றிரண்டு குறிப்புகளைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ரத்தினச் சுருக்கமாக, அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அவை அமைந்திருந்தன.
அடுத்த இரண்டொரு வாரங்களில், டாக்டர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது. அப்போது நான் சென்னை திரும்பி இருந்தேன். அடுத்த சில மாதங்கள், தில்லியுடனான எனது தொடர்பு பத்திரிகைகள் மூலமும், நண்பர்களுடனான சில நிமிட "டிரங்க் கால்' தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவும் மட்டும்தான்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜிக்கும் இடையே கூட கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்தன. இது குறித்து டாக்டர் மன்மோகன் சிங்கே கூட குறிப்பிட்டிருக்கிறார். அப்படி கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், இருவருக்கும் இடையில் நல்ல புரிதலும் இருந்தது என்பதைப் பிரணாப்தா பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் டாக்டர் மன்மோகன் சிங் குறித்துப் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.
பிரணாப் முகர்ஜி மத்திய நிதியமைச்சராகத் தொடர்ந்தது வரை, டாக்டர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகத் தொடர்ந்தார்.
இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் ராஜீவ் காந்தியால்தான் அவர் அந்தப் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, திட்டக் கமிஷன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது, அவரை அரசியல் ரீதியாகவும், நாடாளுமன்ற விவாதரீதியாகவும் வழி நடத்திய பெருமை பிரணாப் முகர்ஜிக்கு உண்டு. பல இக்கட்டான தருணங்களில், பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர் பிரணாப் முகர்ஜிதான் என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான்.
ஒரு சந்தர்ப்பத்தில் விரக்தியில் தனது பதவியை ராஜிநாமா செய்வது என்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் முடிவெடுத்தபோது, அதைத் தடுத்து அவருக்கு பக்கபலமாக இருந்து பிரணாப் முகர்ஜி செயல்பட்டதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அது குறித்துப் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் விவரிக்கிறேன்.
இதற்கிடையில். நான் "சாவி' வார இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்துவிட்டேன். அதற்குப் பிறகு நான் தில்லிக்குச் செல்வது குறைந்துவிட்டது. அப்படியே ஒன்றிரண்டு முறை நான் தில்லிக்குச் சென்றது, சொல்லாமல் கொள்ளாமல் "சாவி'யிலிருந்து நின்று விடுவதன் மூலம்தான். விடுப்பு எடுத்தெல்லாம் போக முடியாது.
"சாவி' இதழிலிருந்த நான் திடீர் திடீரென்று காரணமே இல்லாமல் விலகிவிடுவதும், பிறகு சேர்ந்து கொள்வதும் வழக்கமாகவே இருந்தது. கோபக்காரரான ஆசிரியர் சாவி, அதை ஏற்றுக் கொண்டாரா, சகித்துக் கொண்டாரா என்பது ராணிமைந்தனுக்குத்தான் வெளிச்சம்.
ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றபோது நான் தில்லியில் இருந்தேன். அப்போது, பிரணாப் முகர்ஜிதான் மாநிலங்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். காங்கிரஸூக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டு விட்டிருந்தது. பிரதமர் இந்திரா காந்திக்கும் ஜெயலலிதாவை மிகவும் பிடித்திருந்தது என்பதை ஆர்.கே. தவானிடமிருந்து தெரிந்து கொண்டேன்.

""ஜெயலலிதா ரொம்பவும் கெளரவம் பார்ப்பவர். அகம்பாவம் கொண்டவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர் மிகவும் சகஜமாக எல்லோரிடத்திலும் பழகுகிறாரே... பிரதமரைச் சந்திக்க வந்திருந்தார். எங்களிடம் எல்லாம் கூடத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்'' என்று ஆர்.கே. தவான் நெகிழ்ந்துபோய் விவரித்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.
ஜெயலலிதாவின் மாநிலங்களவை கன்னி உரை நிகழ்ந்த அன்று இரவு, நான் பிரணாப்தாவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். நான் தில்லிக்கு வந்திருப்பது அப்போதுதான் அவருக்குத் தெரியும். அவரே என்னை உள்ளே அழைத்தார். அறைக்குள் சென்றேன்.
""ஜெயலலிதாவின் கன்னிப் பேச்சு குறித்து செய்தி சேகரிப்பதற்காக தில்லி வந்திருக்கிறாயோ?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
""நான் வந்து பத்து நாள்களாகி விட்டன'' என்று தெரிவித்தேன். ""எனது தாயார் தில்லியிலுள்ள சகோதரி வீட்டில் இருப்பதால் வந்திருக்கிறேன்'' என்று சொன்னேன். பேச்சு ஜெயலலிதாவைக் குறித்துத் திரும்பியது.
""ஜெயலலிதா பற்றி நீ என்ன நினைக்கிறாய்?''
""ஒன்றும் நினைக்கவில்லை. இந்திரா காந்திபோல தனது கட்சிக்கும் ஒரு பெண் தலைவி இருப்பது நல்லது என்று எம்ஜிஆர் நினைத்திருக்கலாம். சினிமா கவர்ச்சிக்குக் கவர்ச்சியுமாயிற்று. தில்லியில் உங்களைப் போன்ற தலைவர்களுடன் தனது சார்பில் பேச நம்பிக்கைக்குரிய ஒருவர் கிடைத்ததாகவும் ஆயிற்று என்று எம்ஜிஆர் நினைத்திருக்கலாம்.''
""உனது கணிப்பு பாதிதான் சரி. அவரது கன்னிப் பேச்சு எழுதி வாசிக்கப்பட்டதுதான் என்றாலும், அதில் அவர் சில இடங்களில் அழுத்தம் கொடுத்துப் பேசியதிலிருந்து, ஜெயலலிதாவை சாதாரணமாக எடைபோட முடியவில்லை. எப்படி காமராஜர், அதுல்யா கோஷ் போன்றவர்களை மீறி இந்திரா காந்தி வளர்ந்தாரோ, அதேபோல ஜெயலலிதாவும் எம்ஜிஆரையும் மீறி வளர்ந்து விடுவார், பார்த்துக்கொள். எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி ஜெயலலிதாவின் கைக்குப் போய்விடும்.'' பிரணாப் முகர்ஜி இப்படிச் சொன்னது 1984 மே மாதம். ஜெயலலிதாவின் வளர்ச்சியை அவர் அப்போதே கணித்திருந்தார்.
அதற்குப் பிறகு, ஒரு வாரம் கழித்து ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி இருக்கும். பிரணாப்தா வீட்டில் இருந்தார். வீட்டை ஒட்டியிருக்கும் அவரது அலுவலகத்தில் நாங்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். மேற்கு வங்கத்தில் இருந்து வந்த சில கட்சித் தலைவர்களும் இருந்தனர்.
இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசிய உதவியாளரின் முகம் மாறியது. பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது. "பிரணாப்தாவைச் சந்திக்க ஜெயலலிதா வரப் போகிறார்' என்பதுதான் அவர் தெரிவித்த செய்தி.
பிரதமரையே சந்தித்துவிட்ட ஜெயலலிதா எதற்காக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை இப்படி திடீரென்று சந்திக்க வந்திருக்கிறார்? இதன் அரசியல் பின்னணி என்ன? இவ்வாறெல்லாம் சிந்தித்தபடி, நானும் ஜெயலலிதாவின் வரவுக்காகக் காத்திருந்தேன்.

(தொடரும்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com