பேல்பூரி
By DIN | Published On : 06th September 2020 08:25 PM | Last Updated : 06th September 2020 08:25 PM | அ+அ அ- |

கண்டது
(ஸ்ரீ வில்லிபுத்தூர் நகைக்கடை ஒன்றின் விளம்பர போர்டில்)
அழகு நகைகளோடு ஆசியும் ராசியும் இணைந்து வரும் கைராசியான
ஸ்தாபனம்.
ப.அடைக்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
(நாட்டரசன்கோட்டை பாரதியார் தெருவில் நின்று கொண்டிருந்த ஓர் இருசக்கரவாகனத்தில்)
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
யோசிக்கிறாங்கப்பா!
சிறகுள்ள பறவைகளைக் கூண்டில் அடைத்து அப்பறவை வளரத் தீனி போடுவதே நவீன மனிதநேயம்.
கௌந்தி. மு, சென்னை-119
மைக்ரோ கதை
ஒரு பஸ் ஸ்டாபில் ஆசிரியர் ஒருவர் பஸ்ஸில் ஏறினார்.
அவரைப் பார்த்த மாணவன் உடனே எழுந்து அமரச்சொன்னான். அவர் அவன் தோள்பட்டையை அமுக்கி உட்கார வைத்தார்.
""என் உடலில் பலம் இருக்கு நின்றுகொண்டே வர்றேன்'' என்றார். அடுத்த ஸ்டாப் வந்தது.
அப்போது அந்த மாணவன் எழுந்தான்.
""தம்பி மரியாதை மனசுல இருந்தா போதும். நீ உட்கார்'' என்றார்.
மூன்றாவது ஸ்டாப் வந்தது. அப்போதும் எழுந்தான். ஆசிரியர் அவன் தோள்பட்டையை அமுக்கி உட்கார வைத்தார்.
இந்த முறை அவன் அழுதேவிட்டான்.
""ஏம்பா அழறே?''
""சார் நீங்க ஏறுன ஸ்டாப்ல நான் இறங்க வேண்டியவன் சார்''
ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-1.
எஸ்எம்எஸ்
புதைந்த பிறகே விதையும்,
சிதைந்த பிறகே மனமும்,
"புதிய கோணம்' காண்கிறது!
எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1
அப்படீங்களா!
செல்லிடப்பேசி வந்த பிறகு வழக்கமான கடிகாரங்களை மாற்றி அமைத்து புதுவிதமாக அவற்றைச் செயல்படச் செய்தால்தான் கடிகாரங்கள் விற்பனையாகும் நிலை ஏற்பட்டுவிட்டது. "சென்சார்வேக்' என்ற இந்த கடிகாரம் செயல்படும்விதமே வித்தியாசமானது.
காலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால் அலாரம் வைப்போம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் அலாரம் அடிக்கும். நல்ல தூக்கத்தில் வெறுப்புடன் எழுவோம். அல்லது அலாரம் அடிக்கும் கடிகாரத்தின் தலையில் தட்டி அலாரம் ஒலியை நிறுத்திவிட்டு, பழையபடி குறட்டை விடுவோம்.
ஆனால் இந்த சென்சார்வே கடிகாரம் முதலிலேயே அலாரம் ஒலியை எழுப்புவதில்லை. அலாரம் ஒலி எழுவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னதாக உங்களுக்குப் பிடித்தமான நறுமணம் காற்றில் கலந்து உங்கள் மூக்கில் நிறையும். அடுத்த நிமிடம் இந்த கடிகாரத்திலிருந்து சூரிய உதயத்தின்போது எப்படிப்பட்ட ஒளி ஏற்படுமோ அதுபோன்ற வெளிச்சத்தை இந்த கடிகாரம் வெளிப்படுத்தும். அதற்குப் பிறகு உங்களுக்குப் பிடித்த இசையுள்ள அலாரம் ஒலிக்கும்.
ஒருவர் படுக்கையிலிருந்து எழும்போது மிகவும் மகிழ்ச்சியாக எழ வேண்டும் என்பதே இந்த சென்சார்வே கடிகாரத்தின் நோக்கம்.
ஆரஞ்ச் பழ வாசனை, மல்லிகைப் பூ வாசனை என உங்களுக்குப் பிடித்த 9 விதமான வாசனையுள்ள சென்ட்களை இந்த கடிகாரத்தில் ஏற்கெனவே நீங்கள் நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். சென்ட் என்றவுடன் எண்ணெய் மாதிரி இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இப்போது கேப்ஸ்யூல் வடிவில் அவை கிடைக்கின்றன. அலாரம் ஒலிக்காக ஐந்துவிதமான ஓலியை நீங்கள் இந்தக் கடிகாரத்தில் செட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்.
என்.ஜே., சென்னை-58