ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதய நோயும்  ஓரிலை வேரும்!

இதயம் கெடுவதற்கான பழக்கங்கள் எவை?  புகைப்பழக்கம்  இதயத்துக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்?   இதயத்தை வலுவாக்கும் மூலிகை எது?   
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இதய நோயும்  ஓரிலை வேரும்!

இதயம் கெடுவதற்கான பழக்கங்கள் எவை? புகைப்பழக்கம் இதயத்துக்கு எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? இதயத்தை வலுவாக்கும் மூலிகை எது?

ரமணி, கும்பகோணம்.

சிகரெட் குடிப்பவர்களை விட காபி குடிப்பவர்கள் இதய பாதிப்பை அதிக அளவில் அடைகிறார்கள்.
ரத்தக் குழாயின் சுவரில் சுண்ணாம்புப் படலம் போல கொழுப்பை ஒட்டச் செய்வதில் காபி அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் ஆவதற்கும் காபி அதிகம் சாப்பிடுவதற்கும் தொடர்பு உண்டு.
மேலும் திடீ ரென்று ஏற்படும் சூழ்நிலை மாறுதலுக்கேற்ப நம் உடல் நிலை மாற, சிறிது அவகாசம் தேவை. நம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பழக்கத்தின்படி, ஒரு குறிப்பிட்ட எல்லை வரை உடல் உழைப்பையோ மன உழைப்பையோ தாங்கக் கூடிய சக்தி நம் உடலுக்கு உண்டு. ஆனால் திடீரென ஏற்பட்ட சூழ்
நிலையில் இந்த எல்லைக்கு மீறி உடலாலோ மனதாலோ பணி புரிய நேரிடலாம். ஆனால் இதற்கென சிறிது அவகாசம் கொடுத்து முறைப்படி சிறிது சிறிதாக வேகத்தை அதிகப்படுத்திச் செயலாற்றுவதே முறை. இதைக் கருத்தில் கொள்ளாமல் திடீரென சாகசச் செயல்களில்ஈடுபடுவது இதய நோய்க்குக் காரணமாகலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்கென்று திடீரென பட்டினி கிடப்பதும், உணவின் அளவைத் திடீரெனக் குறைப்பதும், இதயம் தளரக் காரணமாகும். திடீரென உணவைக் குறைப்பது, தசைகள் பெற்று வந்த ஊட்டத்தை உடனே நிறுத்திவிடுகிறது. கொழுப்பைக் குறைக்கும் முயற்சி தசைகளைத் தளரச் செய்கிறது. தசைகளாலான உள் உறுப்புகள் அனைத்தும் இதனால் தளர்கின்றன. இதயம் எப்போதும் இயங்கும் தசைகளால் ஆனதால் அதன் தளர்ச்சி இதயப் பாதிப்பு நோய்க்குக் காரணமாகிறது.
மனதில் ஏக்கத்தையோ, கொந்தளிப்பையோ, வளர்த்துத் கொள்வது மற்றொரு காரணம். ஏக்கம் இதயத்தின் துடிப்பை மிகவும் குறைத்துவிடும். கொந்தளிப்பு இதயத்தை அளவுக்கு மீறி துடிக்கச் செய்யும். இந்த நிலைகளைத் தவிர்ப்பதன் மூலமாகவும் மனதை லேசாக்கிப் பழக்கிக் கொள்வதன் மூலமாகவும் இந்த சிரமத்தை நீக்கிக் கொண்டுவிடலாம்.
புகைப்பதன் விளைவாக ரத்தத்தில் கார்பன் மானாக்ûஸடு அதிகமாகி ரத்தத்தினுள் செந்நிறத்துக்குக் காரணமான ஹிமோக்ளோபின் கேடுற்று, கார்பாக்ஸி - ஹிமோகுளோபின் அம்சம் அதிகமாகி உடலைப் பெருமளவு பாதிப்படையச் செய்யும்.
புகைபிடிப்பவர்களை மட்டுமே புகை விஷம் பாதிக்கும் என நினைப்பது தவறு. அவர்கள் புகைபிடிக்கும்போது அருகில் இருப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
வீட்டில் ஓர் அறையில் உள்ள தம்பதிகள், கணவன் புகைத்தால், அவர் விடும் புகையை சுவாசிக்கும் மனைவிக்கும் அது கேடு விளைவிக்கும். சிறு குழந்தைகள் அங்கிருந்தால் அவர்களை அது எளிதில் தாக்கும். புகைப் பழக்கமே இல்லாத அப்பாவிகளுக்கும் புகையின் சூழ்நிலையால் பாதிப்பு ஏற்படலாம்.
இதயத்தை வலுவாக்குவதில் ஓரிலை வேர் மிகச் சிறந்த மூலிகையாகும். சுவையில் கசப்பும் இனிப்பும் கலந்தது. லேசான தன்மை, நெய்ப்பு எனும் குணம் உடையது. சூடான வீரியமும், சீரண இறுதியில் இனிப்பாக மாறும் தன்மையும் உடையது. ஓரிலை வேரை பதினைந்து கிராம் எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீருடன் கொதிக்கவிட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, சம அளவு பால் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இதயம் சார்ந்த பல நோய்களையும் குணப்படுத்த முடியும் என ஆயுர்வேத நூலில் கூறப்பட்டு உள்ளது.

(தொடரும்)


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com