'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!

எப்போது வேண்டுமானாலும், எந்த நிமிடத்திலும் அந்தத் துயரச் செய்தி வரலாம் என்று ஒரு வாரமாகவே தெரியும்தான்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்!

எப்போது வேண்டுமானாலும், எந்த நிமிடத்திலும் அந்தத் துயரச் செய்தி வரலாம் என்று ஒரு வாரமாகவே தெரியும்தான்.

ஆனால், திங்கள்கிழமை மாலையில் அந்தச் செய்தி வந்தபோது தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏறத்தாழ 45 ஆண்டுகளாக எனக்கு வழிகாட்டிய மிகப் பெரிய ஆளுமையின் மறைவை மனது ஏற்றுக் கொள்ளவில்லை.

கொள்ளை நோய்த்தொற்றின் கொடூரம் இப்போது புரிகிறது. ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்தக் கூடப் போக முடியாமல் கட்டிப் போட்டு விட்டதே கொவைட் - 19. நாம் நேசிக்கும் அல்லது நம்மை நேசித்தவர்கள் யாராக இருந்தாலும், பிரிவு என்று வந்தால் துக்கம் மேலிடுவது இயற்கை. ஆனால், ஒரு சிலரின் பிரிவும், மறைவும் நம்மைத் தேம்பி அழ வைத்து விடுகின்றன. திங்கள்கிழமை மாலையில் உலக வாழ்க்கையிலிருந்து விடைபெற்ற பிரணாப்

முகர்ஜியின் பிரிவு என்னைப் பொருத்தவரை அப்படிப்பட்டதுதான். கண்ணீர் மல்க அழுத பிறகுதான் துக்கமும் சோகமும் வலுவிழந்தன.

பிரணாப் முகர்ஜியை நான் முதன் முதலில் சந்தித்தபோது அவருக்கு வயது 40. எனக்கோ 23. அவர் அப்போதே மத்திய அமைச்சராகி இருந்தார். நானோ எழுத்தாளராகத் தடம் பதிக்க மாநகர் சென்னையில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தேன்.

முதல் சந்திப்பு எதிர்பாராதவிதமாக நடந்தது. ஆனால் அந்த முதல் சந்திப்பின்போதே எங்களுக்குள் ஏதோ ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. கடந்த 45 ஆண்டுகளில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள், சோதனைகள், சாதனைகள். ஆனால், அவருடன் வைத்திருந்த பிணைப்பும், அவருக்கு என் மீது இருந்த அக்கறையும் மாறவேயில்லை.

தமிழகத்திலுள்ள என்னுடைய சமகால இதழியலாளர்கள் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புகளும், தொடர்புகளும் எனக்குக் கிடைத்தன. அதற்கு எனது திறமைகளல்ல, இறைசித்தம்தான் காரணம்.இல்லையென்றால், இந்தியாவின் ஏழு பிரதமர்கள், ஐந்து குடியரசுத் தலைவர்கள், பல மாநில முதல்வர்கள், முன்னணி அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் அறிமுகமும், அவர்களில் பலருடன் நெருங்கிய தொடர்பும் எனக்கு ஏற்பட்டிருக்குமா?

தேசிய அளவில் எனக்கு அறிமுகமான முதலாவது மூத்த தலைவர் பிரணாப் முகர்ஜிதான். அதனாலோ என்னவோ ஏனைய தலைவர்களை விட மிக அதிகமான நெருக்கம் அவருடன் ஏற்பட்டது.

அவருடைய வீட்டின் வரவேற்பறையில்தான் பல மூத்த காங்கிரஸ் தலைவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. தலைநகர் தில்லியில் அனைவருக்கும் அறிமுகமுள்ள பத்திரிகையாளனாக நான் வலம் வருவதற்கு அது அடித்தளமிட்டது. மற்றவர்களுக்கு அவர் அரசியல் தலைவர், ராஜதந்திரி, சிந்தனையாளர். ஆனால், எனக்கு "பிரணாப்தா' எப்போதுமே ஆசிரியரை ஒத்த வழிகாட்டி!

பிரணாப் முகர்ஜியின் தந்தை காம்தா கிங்கர் முகர்ஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். பலமுறை சிறை சென்ற தியாகி. அண்ணல் காந்தியடிகளைத் தனது தலைவராக ஏற்றுக்கொண்டு கடைசிவரை, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர். 1968-இல் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டது. இந்திரா காந்தியைத் தலைவியாக ஏற்றுக் கொண்டு பிரணாப் முகர்ஜி அவரது அணியில் இணைந்தபோது, அவரது தந்தை அவருக்குத் தந்த அறிவுரையை, பிரணாப் முகர்ஜி அடிக்கடி நினைவுகூர்வது வழக்கம். அந்த அறிவுரை இதுதான்:

""நான் வெட்கித் தலைகுனியும் படியாக நீ எதுவும் செய்துவிட மாட்டாய் என்று நம்புகிறேன். ஒருவருடைய சோதனைக் காலங்களில் அவருக்கு ஆதரவாக நீ மனசஞ்சலம் இல்லாமல் உறுதியாக நிற்கும்போதுதான், உலகுக்கு உன்னை அடையாளம் காட்டுகிறாய் என்பது நினைவிருக்கட்டும். உனது மூதாதையர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் எதையும் செய்து விடாதே!''

அதை நான் எனது டைரியில் குறித்து வைத்திருக்கிறேன். குழப்பம் ஏற்படும் போதெல்லாம் அதை எடுத்துப் பார்ப்பேன். இதை ஒருமுறை பிரணாப் முகர்ஜியிடம் நான் சொன்னபோது, அவருக்கே உரிய நமட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.

""நீ டைரியில் எழுதி வைத்திருக்கிறாய். நான் அதை என் நினைவில் நிறுத்தி இருக்கிறேன்'' என்று அவர் கூறியபோது, உயரமான நான் குள்ளமாகவும், அவர் திடீரென என்னைவிட உயரமாகவும் மாறிவிட்டார்.

தனது அலுவல்களை எல்லாம் முடித்துக் கொண்டு, மாலை ஆறு மணிக்கு மேல்தான் பிரணாப் முகர்ஜி பார்வையாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஏனைய பல தலைவர்களைப்போல, இன்னின்னாரைத்தான் சந்திப்பது என்று வடிகட்டும் வழக்கம் அவருக்கு இருந்ததே இல்லை. அவரது உதவியாளர் எம்.கே. முகர்ஜிதான் யார் யாருக்கு நேரம் ஒதுக்குவது என்பதை முடிவு செய்வார்.

பிரணாப்தாவுக்கு மிகமிக நெருக்கமானவர்கள், அவரது அரசியல் ஆதரவாளர்கள், அவரிடம் ஆலோசனை, சலுகை, சிபாரிசு கேட்பவர்கள், கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் குறித்த எல்லா விவரமும் எம்.கே. முகர்ஜியின் விரல் நுனியில் இருக்கும். எங்களைப்போல, அரசியலுக்கு அப்பால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரைச் சந்திப்பதற்கு நள்ளிரவு தாண்டியும் பல நாள்கள் காத்திருக்க வேண்டி வரும். எல்லாரையும் பார்த்துக் களைத்துப் போயிருப்பார், அவரை அதற்கு மேலும் எப்படித் தொந்தரவு செய்வது என்கிற தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தால், "பைப்'பைப் புகைத்த படி, ""கம்... கம்... புதிதாக என்ன சேதி'' என்றபடி குஷியாகப் பேசத் தொடங்குவார். "காலையில் வேலை யிருக்கிறது. அதிக நேரம் அரட்டை அடித்து அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது' என்கிற கண்டிப்பான எச்சரிக்கையுடன்தான் உள்ளே அனுப்பப் பட்டிருப்போம். பிரணாப்பின் முகத்தில் இருக்கும் உற்சாகம் அந்த எச்சரிக்கையை மறக்கடித்து விடும்.

அடுத்த அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நம்மைப் பேசவிட்டு அவர் ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பார். அல்லது, ஓர் ஆசிரியரைப் போல நமக்கு விளக்கங்கள் அளித்து, நமது கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பார். கடந்த 45 ஆண்டுகளில் நான் அவரைச் சந்தித்த பல தடவைகளில் பிரணாப்தா ஒருமுறை கூட அடுத்தவர் குறித்து அவதூறு கூறியோ, இன்னொரு தலைவரைக் கேலி செய்தோ, மற்றவர்களை மட்டம்தட்டி இளக்காரமாகப் பேசியோ கேட்டதில்லை.

சாதாரணமாக ஆங்கிலப் புத்தாண்டு அல்லது தமிழ்ப் புத்தாண்டின்போது நான் அவரைச் சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

இந்த ஆண்டு பிறந்த பிறகு நான் அவரைச் சந்திக்கவேயில்லை. கடந்த ஆண்டு எனது கடைசி சந்திப்பின்போது, என்னென்னமோ பேசினோம். "தினமணி' நாளிதழை வாங்கிப் புரட்டிப் பார்த்தார். சில விநாடிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

""ஏன் அப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன். வழக்கமான புன்னகை அவர் முகத்தில் தவழ்ந்தது.

""உன் மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. நீ பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறாய். ஜனாதிபதியாக இருக்கும் ஒருவர், அவரது புத்தகத்தை மொழி பெயர்க்கச் சொன்னால், இன்னொருவராக இருந்தால் இருக்கும் வேலையை எல்லாம் விட்டுவிட்டு அந்தப் பணியில் இறங்கிவிடுவார்கள். நீயானால் நான் ஜனாதிபதியாக இருந்து, விடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் மொழிபெயர்க்காமலேயே இருக்கிறாய்.''

""என்ன செய்வது, "தினமணி' நாளிதழின் அன்றாடப் பணிகள் அப்படி. விரைவிலேயே முடித்து விடுகிறேன்'' என்று அசடுவழிய அவரிடம் தெரிவித்தேன்.

""எனது புத்தகம் பெங்காளியிலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதிலும், தமிழில் நீதான் மொழிபெயர்க்க வேண்டும். "ஐயாம் ப்ரெளட் ஆஃப் யூ' (நான் உன்னைப் பார்த்துப் பெருமிதம் கொள்கிறேன்). மெட்ராஸில் இளைஞராகக் கையில் ஒரு பேனாவுடன் நீ வந்து நின்றதும், பேட்டி வேண்டும் என்று கேட்டதும், நான் பேட்டி தர மறுத்து உன்னை உட்காரச் சொல்லிப் பேசிக் கொண்டிருந்ததும், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். உன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து ரசித்திருக்கிறேன்...'' என்றார் பிரணாப் முகர்ஜி.

எனக்கு அழுகை வந்துவிட்டது. அது பரமானந்தக் கண்ணீர். எழுந்துபோய், குனிந்து அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன். தந்தையை வணங்கும் உணர்வு ஏற்பட்டது.

""நீ கடக்க வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய உயரமும் இன்னும் நிறைய இருக்கிறது. எனது நல்வாழ்த்துகள் உனக்கு எப்போதுமே உண்டு (மை குட்விஷஸ் வில் ஆல்வேஸ் பி வித் யூ)'' என்கிற ஆசியைப் பெற்றுக் கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றேன்.

அறைக்கு வெளியே வந்ததும், அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து விட்டேன். சென்னையில் நடந்த பிரணாப்தாவுடனான அந்த முதல் சந்திப்பை அசைபோடத் தொடங்கியது நினைவு...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com