ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் இறுக்கம், எரிச்சல், சோர்வு!

என் வயது 45. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இடுப்புப் பகுதி முதல் கால் பாதம் வரை நெருப்பு போல் சூடு பரவுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் இறுக்கம், எரிச்சல், சோர்வு!

என் வயது 45. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இடுப்புப் பகுதி முதல் கால் பாதம் வரை நெருப்பு போல் சூடு பரவுகிறது. மே மாதம் முதல் வலது கை தோள்பட்டையில் ஓர் இறுக்கம் ஏற்பட்டு கையை முழுமையாகத் தூக்க முடியவில்லை. எவ்வளவு எண்ணெய் தேய்த்தாலும் தோல் வறட்சியாகவே உள்ளது. சிறுநீரும் அதிக அளவு சூடாகவே வெளியேறுகிறது. மாலையில் உடல் எரிச்சலும், சோர்வும் அதிகப்படியாக இருக்கிறது. இவைஎதனால் ஏற்படுகின்றன? எப்படி குணப்படுத்துவது?

பி.அமுதவள்ளி, அரியலூர்.

வாயுவினுடைய வறட்சியும், பித்தத்தின் உஷ்ணமும் கைகோர்த்துக் கொண்டு உங்கள் உடல் முழுவதும் நடைபோடுவதை நன்கு அறிய முடிகிறது. இவ்விரு தோஷங்களையும் சீற்றமடையச் செய்யும் காரச்சுவையை நீங்கள் பெரும் அளவு குறைத்தல் நலமாகும்.

இனிப்புச் சுவையில் பொதிந்துள்ள நிலம் மற்றும் நீரின் ஆதிக்க அம்சத்தினால் மட்டுமே இவ்விரு தோஷங்களின் சீற்றத்தையும் அடக்க முடியும் என்பதால், நல்ல பசி உள்ள நிலையில் இனிப்பை நீங்கள் முக்கிய சுவையாகத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதே நல்லது. மதுரமான சுவைகளை உள்ளடக்கிய மருந்துகளையும்நீங்கள் சாப்பிட்டால் உபாதைகளை நன்கு குறைத்து விடலாம்.

திராட்சை, இலுப்பைப் பழம், அதிமதுரம், வெள்ளிலோத்திப்பட்டை, நெல்லிக்காய், இருவேலி, தாமரையல்லி, பதிமுகம், தாமரைத்தண்டு, சந்தனம், வெட்டிவேர், கூவலக்கிழங்கு, சிற்றீந்தல் ஆகிய மூலிகைகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயத்தை, சிறிது தேன், சர்க்கரை மற்றும் நெல் பொரித்தூள் கலந்து அருந்த வாத- பித்த தோஷங்களால் ஏற்படும் உடல் சூடானது நன்கு குறைந்துவிடும். இந்த கஷாயத்திற்கு மேலும் சில சிறப்புகள் உள்ளன. மதுபானத்தால் ஏற்படும் மயக்கநிலை, குமட்டல், வாந்தி இன்ன காரணம் என்று அறிய முடியாமல் ஏற்படும் மயக்கம், உடல் தளர்ச்சி, தலைசுற்றல், வாய் வழியாக ஏற்படும் ரத்த வாந்தி, தண்ணீர் தாகம், மஞ்சள் காமாலை போன்றவற்றையும் குணப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதை நீங்கள் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. பல கம்பெனிக்காரர்களே தயாரித்து விற்கிறார்கள். சுமார் 15 மி.லி. கஷாயத்தில், 60 மி.லி. ஆறிய வெந்நீர் கலந்து மேற்குறிப்பிட்ட சரக்குகளைச் சேர்த்து சாப்பிட்டாலே போதுமானது. குறைந்தது மூன்று வாரமாவது சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் நிற்கக் கூடிய வயதை நீங்கள் விரைவாக நெருங்கிக் கொண்டிருப்பதால், உடலில் ஏற்படும் சுரப்பிகளின் ஹார்மோன் அளவில் ஏற்றமும் குறைவும் ஏற்படும் காரணமாகவும் நீங்கள் குறிப்பிடும் உபாதைகள் தலைதூக்குதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில் தான்வந்திரம் எனும் கஷாய மருந்தை முன் குறிப்பிட்ட கஷாயத்துடன் சம அளவாகக் கலந்து 60 மி.லி. தண்ணீருடன் சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்தது.

உடலைக் குளிரூட்டக் கூடிய ஹிமஸாகர தைலம், சந்தனாதி தைலம், வலிய அமிருதாதி தைலம் போன்றவற்றில் ஒன்றைத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க, நீங்கள் பயன்படுத்தலாம். தோள்பட்டை வலிக்கு பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கார்ப்பாஸாஸ்த்யாதி தைலத்தையோ, மஹாமாஷ தைலத்தையோ சூடாக்கித் தேய்த்துக் குளித்து வரலாம்.

இப்படி தோஷநிலை, காலநிலை, உடல்நிலை ஆகியவற்றை நன்கு ஊகித்தறிந்து மருந்தையும், உணவையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டு, உடல், உள்ளம் மற்றும் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com