ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பேனையும், ஈறையும் போக்கும் தைலம்!

என் மகளுக்கு வயது 20.தலையில் பேனும் ஈறும் அரிப்பும் அதிகமுள்ளது. வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக் கூடிய வகையில் தைலம் ஏதேனும் உள்ளதா?
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பேனையும், ஈறையும் போக்கும் தைலம்!


என் மகளுக்கு வயது 20.தலையில் பேனும் ஈறும் அரிப்பும் அதிகமுள்ளது. வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தக் கூடிய வகையில் தைலம் ஏதேனும் உள்ளதா?

- சரோஜா, காஞ்சிபுரம்.

கடுக்காய் தோல் 50 கிராம், தான்றிக்காய்தோல் 50 கிராம், நெல்லிமுள்ளி 50 கிராம், வேப்பிலை 150 கிராம், கருநொச்சி இலை 125 கிராம் ஆகியவற்றை நன்கு இடித்து 3 லிட்டர் தண்ணீருடன் கலந்து முக்கால்லிட்டர் ஆகும் வரை வற்றியதும், கஷாயமாக்கி வடிகட்டிக் கொள்ளவும். வெள்ளைக் குங்குலியம், சிலாரஸ், தேன்மெழுகு, குக்கில், கந்தாபிரோஜாஆகிய இந்த ஐந்தும் வகைக்கு 40 கிராம், நல்லெண்ணெய் 800 மி.லி. ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இரும்பு வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி நன்கு சூடேறியதும் வெள்ளைக் குங்குலியம் முதலியவற்றைப் போட்டு இரும்புத் துடுப்பால் கிளறி வர, எல்லாம் கரைந்துவிடும். பிறகு வடிகட்டி வைத்துள்ள கஷாயத்தையும் ஊற்றி நன்கு காய்ச்சவும். அதிலுள்ள நீர் வற்றி, கலக்கிய பொருள்கள் மணல் மணலாக கீழே தங்க ஆரம்பித்ததும், இறக்கி வைத்து வடிகட்டி இளஞ்சூட்டில் இருக்கும் போது அதில் 50 கிராம் கட்டி சூடத்தைத் தூள் செய்து கலக்கவும்.கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

தலையில் பேனும் அரிப்புமுள்ள மகளுக்கு, இந்த தைலத்தை தலைமுடியில் தடவி 1- 2 மணி நேரம் முடிந்து வைக்க, பேன்கள் பொல பொலவென உதிர்ந்து கொட்டும். அப்போது தலையை நன்கு வார பேனும் ஈறும் வந்து விடும். இவ்விதம் தொடர்ந்து 4-5 தினங்கள் செய்ய பேனும் ஈறும் அகன்றுவிடும். தினமும் தைலத்தைத் தடவி வாரியபிறகு சீயக்காய்த்தூளை வடிகஞ்சியில் குழப்பித் தேய்த்து தலைக்குக் குளிக்கச் செய்வது நல்லது.

இந்த மருந்து சரக்குகளை வாங்கித் தயாரித்துப் பயன்படுத்த முடியாதவர்களும் இருக்கக் கூடும்.

அவர்கள் ஆயுர்வேத மருந்துக் கடைகளில் விற்பனையிலுள்ள துர்தூரபத்ராதிகேர தைலம் எனும் மூலிகைத் தைலத்தைப் பயன்படுத்தலாம்.

மேற்குறிப்பிட்ட வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய தைலத்தில் சிறிது டர்பன்டைன், யூகலிப்டஸ் தைலங்களை வகைக்கு 25 மி.லி. சேர்த்துக் குலுக்கி, மழை - பனி நாள்களில் வாயுவாலும் கபத்தாலும் சீதளத்தாலும் மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம், பிடிப்பு, தசைநார்களில் வலி, அதிகதூரம் நடப்பதாலும், சைக்கிள் மிதிப்பதாலும் ஏற்படும் கெண்டைக்கால் இறுக்கம், வலி ஆகியவற்றுக்குத் தேய்க்க வலி, இறுக்கம் நீங்கும்.

ரத்தக் கட்டு கரையும். இதைத் தடவி வெந்நீர் விட்டோ, தவிடு வறுத்தோ ஒத்தடம் கொடுக்கலாம்.தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை, பிடறி வலி,இசிவு ஆகியவற்றுக்குத் தடவித் தேய்க்க வலி வேதனை குறையும். காது வலியின்போதுகாதைத் துடைத்துஇந்த தைலத்தைப் பஞ்சில் நனைத்துச் செருக வலிகுறையும். சீழ் வடிதலும் நிற்கும். மார்பில் சளி கட்டி இருக்கும் போது இதைத் தடவித் தேய்த்து, தவிடு வறுத்தோ கம்பளியைச் சூடு காட்டியோ ஒத்தடம் கொடுக்கலாம்.

சீழ் அகற்றிய புண்களை ஆற்றயூகலிப்டஸ், டர்பன்டைன் நீக்கிய தைலத்தைத் துணியில் நனைத்து வைத்துக் கட்டலாம். புண்கள் ஆறும்.வலி குறையும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com