நன்மைக்கே

கவலையின் வளையத்திற்குள் இருந்தவன் படுத்தபடியே இருக்க, சிறிது நேரத்தில் உறங்கிப் போனான். அவன் நன்றாக உறங்கி வெகு நாள் ஆகி இருந்தது. அவனது இரவுகள் மிகவும் நீண்டவை ஆயின. 
நன்மைக்கே

கவலையின் வளையத்திற்குள் இருந்தவன் படுத்தபடியே இருக்க, சிறிது நேரத்தில் உறங்கிப் போனான். அவன் நன்றாக உறங்கி வெகு நாள் ஆகி இருந்தது. அவனது இரவுகள் மிகவும் நீண்டவை ஆயின.
உறக்கம் கலைந்து கண் விழித்தவன் ப்ரதாப் எண்ணை இணைத்தான்.
""ஹலோ சுரேஷ் , சொல்லுப்பா, எப்படி இருக்கேன்னு கேட்க முடியலை. சாரி.. ..சொல்லு என்ன விஷயம்?'' கேட்டான் ப்ரதாப்.
""அது வந்து... உன் கூட அன்னிக்கு வந்த உன் ப்ரண்ட்... அதான் உன் கூட வேலை செய்யற அவன் பெயர் ?''
""நாதன்... ஆமாம் சொல்லு''
""அவனுக்கு அன்னிக்கு என்ன ஆச்சு?'' கேட்டான் சுரேஷ் .
""முதல்ல ரொம்ப சாரி ... அவனை உன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு. அவன் என் கூட வேலை செய்யறவன். நாங்க ரெண்டு பேரும் ஆபீஸ் வேலையாதான் வெளியே வந்திருந்தோம். அதுதான் அன்னிக்கு ஆபீஸ் டயத்துலயே உன்னை வந்து கொஞ்ச நேரம் பார்த்துட்டாவது போயிடலாம்னு வந்தேன். கூட நாதனும் வந்தான். அவன் கிட்ட சொன்னேன். என் ப்ரண்ட்டை முக்கியமான விஷயத்துக்காக நான் போய் பார்த்தே ஆக வேண்டிய சூழ்நிலை. ஒரு பத்து நிமி ஷம் பார்த்துட்டு வந்துடறேன். கொஞ்சம் காபி ஷாப்புல வெயிட் பண்ணுன்னு சொன்னேன். காரணத்தை நான் சொன்னதும் நானும் கூட வரேன்னு சொன்னான். அதான் கூட்டிண்டு வந்தேன். ஆனால் அப்படி உன் கிட்ட பேசுவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை சுரேஷ் . ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி, என்னை மன்னிச்சுடுப்பா'' சொன்னான் ப்ரதாப்.
""அதெல்லாம் விடு ப்ரதாப். அன்னிக்கு அவனுக்கு என்ன ஆச்சுன்னு நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே. ..''
""நீ கோபமா அவனை தள்ளி விட்டே இல்ல. சுவர்ல போய் தலை பலமா மோதித்து. பத்து தையல் மண்டையில. ரத்தம் கொஞ்சம் போச்சு. ஸ்கேன் எடுத்துப் பார்த்ததுல, வேற எதுவும் ப்ராப்ளம் இல்லை. ப்ளட் க்ளாட் அது இதுன்னு எதுவும் இல்லை. ஹீ ஈஸ் பர்பக்ட்லி ஆல்ரைட் நெள.. ..'' சொன்னான் ப்ரதாப்.
""சாரிப்பா ப்ரதாப். நான் அன்னிக்கு அப்படி நடந்துட்டு இருக்கக் கூடாது. வருத்தப்படறேன். நல்ல வேளை ப்ராப்ளம் எதுவும் இல்லைங்கற..''
""சாரி நீ ஏம்பா கேட்கறே? அவன் அப்படியா பேசுவான். நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை . இடிஞ்சு போயிருக்கற உன் கிட்ட பேசற பேச்சா இது ஆறுதல் சொல்றேன் பேர்வழின்னு. நான்சன்ஸ்'' - ப்ரதாப் கோபத்தில் அந்த முனையில் பொரும, கைப்பேசியை வைத்து மீண்டும் படுக்கையில் படுத்த சுரேஷின் மனம் அன்று நடந்த நிகழ்வை அசை போட ஆரம்பித்தது...
காலிங் பெல் ஓசை கேட்க, சோகமே உருவான மனத்துடன் சென்று கதவைத் திறந்த போது ப்ரதாப் நின்றிருந்தான். அவன் கூட ஒரு புது முகம். சுரேஷுக்குப் பரிச்சயம் இல்லாத நபர்.
""வா... வா என்று வாயால் சொல்ல முடியாத மனநிலையில் இருந்ததால் அவர்களை உள்ளே வரச் சொல்லி மெளன சைகை செய்தவன் ஒரு நாற்காலியில் போய் பொத்தென்று அமர்ந்தான். அவன் தோளை ஆதரவாகப் பற்றிய ப்ரதாப்பின் கண்கள் கலங்கி இருந்தன.
""எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை . உன் வாழ்க்கையில் இந்த சோகம், இடி வரும்னு நான் கனவுல கூட நினைச்சுப் பார்க்கலை. வாழ்க்கையிலே ரொம்ப சந்தோஷமான விஷயம் நடக்கப் போறது, ஒரு குழந்தைப் பிறக்கப் போறதுன்னு நினைச்ச போது ஒய்ஃப்பும், பிறக்க இருந்த குழந்தையையும் சேர்த்துப் பறி கொடுக்கறதுங்கறது...உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலை. என்ன சொல்லுவேன். சாரிப்பா. எக்ஸ்ட்ரீம்லி சாரி...'' அவனை இறுக அணைத்துஅன்போடு கட்டிக் கொண்டான் ப்ரதாப்.
""உடனே வர முடியாத சூழ்நிலை . அன்னிக்கு நான்ஃபாரின் டூர் போயிருந்தேன். ரொம்ப லென்த்தி டூர். உன் வாழ்க்கையின் சோகமான கட்டத்துல நான் உன் கூட இருந்திருக்கணும். முடியலைப்பா. என்னை மன்னிச்சுடு...'' உண்மையாக வருத்தப் பட்டான் ப்ரதாப். அந்த உண்மையான வருத்தம் சுரேஷின் மனதை லேசாக இளக்கியது.
""சே... சே... என்ன ப்ரதாப் நீ. நானும் நீயும் ஃபர்ஸ்ட் ஸ்டேண்டர்ட்லேயிருந்து ப்ரண்ட்ஸ். என்ன வேணும்னாலும் உன்னை அதிகாரம் பண்ணி உன் கிட்டே நான் உதவி கேட்கலாம். உன் ஆபீஸ் வேலை விஷயமா நீ போனதுக்கு எதுக்கு சாரி கேட்கறே. உன் கடமை இல்லையா. தினமும் போன் பண்ணி பேசினே. உன்னால அந்த சூழ்நிலையில முடிஞ்சது... ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ப்ரதாப்'' - மெல்லிய குரலில் சொன்னான் .
""சே என்னப்பா இது. உன் கூடவே இருந்து உனக்கு உதவி செய்ய முடியாம போயிடுச்சேன்னு நான் வருத்தப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற போன் பண்ணினே சரி என்னதான் ஆச்சு. போன்ல சொன்னதான். ஆனால் இப்ப முதல் தடவை நேர வந்து பார்க்கறதுனால கேட்கறேன். என்ன ஆச்சு?
""என்னப்பா சொல்வேன். படிச்சுப் படிச்சு சொன்னேன். சிசேரியன் பண்ணறதுதான் பெஸ்ட். நார்மல் டெலிவரி வேண்டாம். நார்மல் டெலிவரிங்கற பெயர்ல எப்ப வலி வருமோன்னு டென்ஷன்ல இருக்க வேணாம். தேவை இல்லாத டென்ஷன், பதட்டம், பரபரப்பு, பயம் இதெல்லாம் எதுக்குன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டேனே... கேட்கலையே அவ. அவளோட அவ அம்மாவும்... என்ன கண்றாவி இது சிசேரியன் அது இதுன்னு. குழந்தை தானாதான் பிறக்கணும். என் பெண்ணுக்கு எப்படி டெலிவரி நடக்கணும்னு நாங்கதான் முடிவு எடுக்கணும்.
அதுவும் இல்லாம சிசேரியன் பண்ணிக்கிட்டா அப்புறம் ஆயிரம் ப்ராப்ளம் வரும். மாலா ஹெல்த் கெட்டுப் போயிடும். அவ காலம் ஃபுல்லா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கணுமா. அதெல்லாம் நான் அனுமதிக்கவே மாட்டேன். இந்தக் கதையே வேண்டாம். என் பெண்ணுக்கு நார்மல் டெலிவரிதான் நடக்கணும். சொல்லிட்டேன்... அது இதுன்னு அம்மாவும் பெண்ணும் சேர்ந்து அடிச்சுப் பேசி என் வாயை அடக்கிட்டாங்களே''
பேசியபடியே இயலாமையால் நாற்காலியில் அப்படியே சாய்ந்தவனை எழுந்து ஆதரவாகக் கட்டிக் கொண்டான் ப்ரதாப்.
""மனசைத் தேத்திக்கோ ... கஷ்டம்தான். ரொம்ப ரொம்ப கஷ்டம்... என்னால தாங்க முடியலை. நீ பாதிக்கப் பட்டவன்... ஆனா இடிஞ்சு போயிடாதேப்பா. அதை என்னால பார்க்க முடியலை'' நாற்காலியை சுரேஷின் நாற்காலியின் மிக அருகில் இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்தான் ப்ரதாப். இரண்டு நிமிடங்கள் இருபது நிமிடங்களாகக் கழிந்த பின் பேச ஆரம்பித்தான்
""அப்புறம் சுரேஷ் ?''
""மாலாவுக்கு பெயின் வந்த போது ராத்திரி சரியா பன்னிரண்டு மணி. நான் பயந்தபடியே.ஆஸ்பிட்டல் போகறத்துக்குள்ள கொஞ்ச நேரம் ஆயிட, மாலாவுக்கு வலி ஜாஸ்தியானதோடு, வயித்துல கொஞ்சம் சிக்கல் ஆக... ஆஸ்பத்திரிக்குப் போய் பெட்ல அட்மிட் ஆன உடனே செக் அப் பண்ணி டாக்டர் சொன்னது குழந்தையும் தாயும் கொஞ்சம் க்ரிடிகல் கண்டீஷன்ல இருக்காங்கன்னு'' சொன்னவன் முகம் மீண்டும் சோகத்தை பிரதிபலித்தது.
""அப்புறம் கொஞ்ச நேரத்துல என் மாலாவும் பிறக்க இருந்த என்னோட... எங்களோட குழந்தையும்... அங்கே போயிட்டாங்க ப்ரதாப்...'' மேலே கை காட்டியபடியே ஓவென அழ ஆரம்பித்தான் சுரேஷ் . செய்வதறியாது தவித்தான் ப்ரதாப். சுரேû ஷ அணைத்தபடியே உட்கார்ந்திருந்தவன் தன் அலுவலக வேலையை அடியோடு மறந்தான். அது விஷயமாகத்தானே வெளியே வந்திருந்தான்.
நண்பன் இந்த இடிந்த நிலையில் இருக்கும் போது அலுவலகத்தை அவன் மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
ஆனால் அலுவலகம் சும்மா இருக்குமா? அதன் வேலையின் கவலை அதற்கு. அதற்கு சுரேஷ் யாரென்றே தெரியாதே...
கைபேசி ஒலிக்க எடுத்தான் ப்ரதாப். அந்த முனையில் அவன் பாஸ்...
""சொல்லுங்க சார், கொஞ்சம் டயம் ஆகும். பேங்க்ல ஸ்டேட்மெண்ட்ஸ் கொடுத்திருக்கோம். செக் பண்ணிட்டு இருக்காங்க. கஸ்டம்ஸ் ஆபீஸ்ல வேலை முடியலை...வந்துடறோம் சார்... ‘' பேசி விட்டு கைப்பேசிஇணைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்தான்.
""சாரி சுரேஷ்...உன்னை இந்த நிலைமையில் விட்டுட்டுப் போக வேண்டிய சூழ்நிலை. பாஸ் கிட்டே இருந்து கால்... உடனே கிளம்பணும்...'' சொல்லியபடியே அவன் எழுந்தான். ""அப்புறம் இவன் என் கலீக் நாதன். காரணம் சொல்லி உன்னைப் பார்க்கணும். எங்கேயாவது வெளியே வெயிட் பண்ணுன்னு சொன்னாலும் கேட்கலை. நானும் கூட வரேன்னு வந்தான்...'' சொல்லியபடியே அவனை அறிமுகப் படுத்தினான்.
நாதனை சுரேஷ் நிமிர்ந்து பார்த்தான். புன்னகைக்க முயல முடியவில்லை. எழுந்தான் நாதன். சுரேஷின் எதிரில் வந்தான். அவனைப் பார்த்தான்.
""சார்... வாழ்க்கையில் எது நடந்தாலும் அது நம்ம நல்லதுக்காகத்தான் நடக்கறதுன்னு நம்பறவன் நான். உங்க வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வும் உங்க நல்லதுக்காகத்தான்னு நம்புங்க''
ஆயிரம் ஆட்டம் பாம்கள் ஒன்றாக வெடித்ததைப் போன்று அதிர்ந்தான் ப்ரதாப். என்ன பேசுகிறான் இவன்... திடுக்கிட்டவன் என்ன செய்வதென்று என்று யோசிப்பதற்குள்,
சுரேஷ் திடீரென்று இவ்வளவு ஆக்ரோஷமாக எழுந்திருப்பான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அப்படி எழுந்ததன் முழு பலத்தையும் திரட்டி நாதனை ஒரே தள்ளு தள்ள, நாதன் போய் சுவரின் மேல் விழ, அவன் தலையில் பயங்கர அடி பட்டு ரத்தம் கொட்டத் தொடங்க, அம்மா என்று வலியால் கதறத் தொடங்க...சுரேஷின் மன வேதனை கொடூர கோபமாக மாறி விட்டிருந்ததை ப்ரதாப் கண்டான். அதுவும் ஒரே விநாடியில்.
""இவனை உடனே இங்கிருந்து அழைச்சுட்டுப் போயிடு. இல்ல என் கையாலயே இவனை...''கர்ஜிக்க ஆரம்பிக்க, அவனை உடனே கைத் தாங்கலாக அழைத்துக் கொண்டு வெளியேறினான் ப்ரதாப்.
காலிங் பெல் அடிக்க, கதவு திறக்க, தலையில் கட்டுடன் நாதன். ப்ரதாப்பிடம் கேட்டு நாதன் வீட்டு விலாசத்தை வாங்கி இருந்தான் .
""வாங்க வாங்க'' புன்முறுவலோடு வரவேற்றான்.
உள்ளே சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்த சுரேஷின் மனதில் உணர்ச்சி வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. பல வண்ணங்
களில், பல திசைகளில். என்ன பேசுவதென்று முதலில் தெரியவில்லை. அவன் யோசித்து அமர்ந்திருப்பதற்குள் உள்ளே சென்று திரும்பிய நாதன் கையில் ஒரு க்ளாஸ். அதில் ப்ரூட் ஜூஸ்.
""குடிங்க சுரேஷ்'' அவன் கொடுக்க, வாங்கிக் கொண்டு லேசான கனிவோடு நாதனைப் பார்த்தான். முகத்தில் நன்றி என்ற வாசகம் எழுதப் பட்டிருந்ததோ...
""சாரி கேட்டுக்கறேன்... அன்னிக்கு நான் உங்களை... சாரி...'' சொன்னதுதான் தாமதம், சிரித்தான் நாதன்.
""சாரியா எதுக்கு ?''
""அன்னிக்கு நான் உங்களை அப்படித் தள்ளி விட்டதுக்கு. நீங்க போய் சுவரில் பலமாக விழ, உங்களுக்கு மண்டையில் அடி, தையல்...''
""எல்லாம் நல்லதுக்குத்தான் சார். நம்ம வாழ்க்கையில நடக்கற எல்லாமே நம்முடைய நல்லதுக்காகத்தான்... அப்புறம் சாரி எதுக்கு?'' கூலாகச் சொல்லி விட்டு அவன் எதிரில் அமர்ந்தான் நாதன்.
அவனை ஆச்சரியத்தோடு பார்த்தான் . அன்று இந்த நாதன் சொன்ன அதே வார்த்தைகள். எந்த வார்த்தைகளைக் கேட்டு மிகுந்த கோபத்தில் அவனைத் தள்ளி விட்டானோ அதே வார்த்தைகள்.
""என்ன சார் அப்படி ஆச்சரியமா என்னை பார்க்கறீங்க?'' கேட்டான்.
""அன்னிக்கு சொன்ன அதே வார்த்தைகள்... அதையேவா சொல்றீங்க இன்னிக்கும்... ம்?
""என்ன வார்த்தைகள்... ?''
""நம்ம வாழ்க்கையில நடக்கற எல்லா நிகழ்வுகளும் நம்ம நல்லதுக்காகத்தான்...அன்னிக்கு சொன்னது அதையே இன்னிக்கு''
""ஆமாம், நான் உண்மையா நம்பறவன்... எப்பவும் இதைத்தான் சொல்வேன்'' சிரித்துக் கொண்டே சொன்னான் நாதன்.
சுரேஷின் மனதும் லேசாக நம்ப ஆரம்பித்ததை அவனே உணர ஆரம்பித்தான். நாதனின் பேச்சு அவனை ஆச்சரியப்படுத்தியது.
""நான் உங்களைத் தள்ளி விட்டதுல உங்களுக்கு என்ன நல்லது நடந்தது சொல்லுங்க''
""ஏன் இல்லை. லீவே போடாம கம்பெனி வேலை வேலைன்னு இருந்தேன். என் அம்மா கூட என்னடா இது அரை நாள் ஒரு நாள் கூட லீவு போடாம ஓயாம உழைக்கறேன்னு கேட்பாங்க.இப்ப ஒரு வாரம் லீவு போட்டு ரெஸ்ட் எடுக்கறேனா''
""அப்புறம்?''
""மனைவி குழந்தையை இழந்திருக்கற நீங்க இந்த நிலையில என்னை வந்து நலம் விசாரிக்கறீங்க பாருங்க. இந்த ப்ரண்ட்ஷிப். ஒரு நல்ல
நண்பர் கிடைச்சிருக்கீங்களே. நீங்க என்னை தள்ளி விட்டதனாலதான உங்க மனசுல சின்ன குற்ற உணர்வு... என்னை வந்து நலம் விசாரிக்கறீங்க''
""ஏங்க, உங்க உடம்புல வலி, தலைல கட்டு... மருந்து செலவு... இதெல்லாம் நல்லதுக்கா. சொல்லுங்க''
கேட்டான் .
""சார், நல்லா புரிஞ்சுக்குங்க. பத்து ரூபாய் கிடைச்சா லாபம். தொலைஞ்சா நஷ்டம்தான். அதை நான் லாபம்னு சொல்லலை. ஆனா அந்த பத்து ரூபாய் நஷ்டம் ஆகறது ஏதோ ஒரு நல்லதுக்காகத்தான்னு எடுத்துக்கணும். அதுதான் நான் சொல்றது. புரியுதா சார்...அப்படித்தான் சார் நாம நினைக்கணும். நம்பணும். நான் நம்பறேன்.''
அவன் பேசுவதை சுரேஷ் ஆச்சரியத்தோடு கேட்டுக் கொண்டே இருந்த போது வெளியே சென்றிருந்த நாதனின் அம்மா வந்தாள்.
""யாருப்பா நாதன்... உன் ஃப்ரண்டா... வாப்பா செளக்கியமா? கேட்டபடியே நாற்காலியில் அமர்ந்த அவள் முகத்தில் முதுமை தெரிந்தது.
""இப்ப எனக்குக் கிடைச்சிருக்கற ஒரு நல்ல ஃப்ரண்டும்மா. சார் பெயர்'' அவன் சொல்ல, அவனையே கூர்ந்து பார்த்தாள் நாதனின் அம்மா.
""என்ன மாமி அப்படி பார்க்கறேள்?'' கேட்டான் .
""நீ தானே?... உங்க ஒய்ப் குழந்தை''
அதைக் கேட்ட சுரேஷின் மனது ஒரு நிமிடம் மீண்டும் சோகத்தின் விளிம்பிற்குள் சென்று ஒளிந்து கொண்டது.
""நாதன் சொன்னான்.கேட்கவே ரொம்ப சங்கடமா இருக்கு. இதை எப்படி தாங்கிக்கறியோ தெரியலப்பா. பகவான் இந்த துக்கத்தைத் தாங்கிக்கற மன தெம்பை உனக்குக் கொடுக்கணும்னு மனசாரா வேண்டிக்கறேன்'' மாமி அப்படிச் சொல்ல, சுரேஷின் மனம் லேசாக அமைதி அடைந்தது.
நாதனைப் பார்த்தான். அவன் மனம் இன்னும்
கொஞ்சம் லேசாக ஆரம்பித்தது. மாமியைப்
பார்த்தான்.
""மாமி... நான் உங்க பையனைக் கீழே தள்ளி விட்டதை இவர் சொல்லலையா. அதனாலதானே இவர் தலையில கட்டு. பத்து தையல். அதுக்காக என்னைத் திட்டாம''
""நல்லாயிருக்கேப்பா, இவன் பேசினது, ஒய்ப், குழந்தையைப் பறி கொடுத்தவா கிட்டே போயி இதெல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்குங்கோன்னு சொன்னா கோபம வராம பின்னே என்ன கொஞ்சவா தோணும். உன் நிலைமையில யார் இருந்தாலும் அப்படித்தான் செஞ்சிருப்பாப்பா. உன் மனசு துக்கம் குறையணும்பா. நீயும் என் பையன் மாதிரிதான். உன் மனசுக்கு சாந்தி கிடைக்கணும்'' சொன்னாள்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் பேச ஆரம்பித்தாள்:
""அது மட்டும் இல்லாம நீ எப்படி என் பிள்ளையைத் தள்ளி விடலாம்னு நான் கேட்கறேன்னே வைச்சுக்கோ விடுவானா இவன்...என்னைத் தள்ளி விட்டது என் நல்லதுக்குத்தான்னு சொல்லுவான்''
""எப்பவும் நாதன் இப்படித்தானா மாமி?'' கேட்டான் .
""சின்ன விஷயம் பெரிய விஷயம் எது நடந்தாலும் இதைத்தான் சொல்லுவான். நம்பறான். ஒரு நாள் பாரேன். பயங்கர பசிம்மா. நல்லா சமைச்சு வைன்னு ஆபீஸ்ல இருந்து போன் பண்ணினான். குழந்தை கேட்கறதேன்னு அவனுக்குப் பிடிச்ச அயிட்டங்களா சமைச்சு வைச்சேன். ஆசையா சாப்பிட உட்கார்ந்தான். எப்படீன்னே தெரியலை. டைனிங் டேபிள் அப்படியே சாஞ்சு எல்லா அயிட்டமும் அப்படியே தரையில விழுந்துடுத்து. ஒண்ணும் மிஞ்சலை. மணி ராத்திரி பத்து. இருந்தாலும் திரும்பி சமைக்கறேன்டான்னு சொன்னேன். நீ இனிமே கஷ்டப் படவேண்டாம்மான்னு சொன்னவன் அப்புறம் சொன்னான் "எல்லாம் நல்லதுக்குத்தானேம்மா. நான் இது வரைக்கும் விரதம் இருந்ததே கிடையாது. இன்னிக்கு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்குன்னு சொன்னான்னா பாரேன்'' சொன்னவன் தன் மகனின் தலையில் பாசத்தோடு தடவிக் கொடுத்தாள். முகத்தில் சோகம்.
""ஏன் மாமி என்ன ஆச்சு. திடீர்னு சோகமாயிட்டேள்?'' கேட்டேன்.
""என்னப்பா சொல்றது. ஒரு கல்யாணம் பண்ணிக்கோடான்னு சொன்னா மாட்டவே மாட்டேங்கறான். ரொம்ப பிடிவாதமா இருக்கான். கொஞ்சம் சொல்லேம்பா நீயாவது'' சொன்னாள்.
""ஏன் நாதன், அம்மா இவ்வளவு வருத்தப்படறா. கல்யாண வயசாயிடுச்சே. கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா?'' கேட்டேன்.
""அட போங்க சார், ஃப்ரீயா இருக்கேன். ஒருத்தி வந்தா அவளோட எண்ணம் செயல் எல்லாம் வேற மாதிரி இருக்கும். அதுக்கு ஏற்ற மாதிரி நாம வளைஞ்சு கொடுக்கணும். இல்லேன்னா சண்டை, சச்சரவு வரும். பிடுங்கல் சார். நிம்மதியே போயிடும். ஆளை விடுங்க'' சொன்னான்.
""நீங்க கல்யாணம் பண்ணிக்காம இருக்கறதைப் பார்த்து உங்க அம்மா கவலையா இருக்கறதும் உங்க நன்மைக்கேதானா?'' லேசான கிண்டலோடு கேட்ட
படியே நாதனைப் பார்த்தான்.
""இல்லையா பின்னே. கல்யாணம் பண்ணிண்டு நான் சொன்ன மாதிரி எனக்கும் என் ஒய்ஃப்புக்கும் சண்டை சச்சரவு பிரச்னைன்னு வந்தா அதைப் பார்த்து என் அம்மாவோட மனசு ரொம்ப வேதனைப்படுமே. அதுலேயிருந்து அம்மா தப்பிச்சுட்டாங்க இல்லையா'' சிரித்தபடியே சொன்னான்.
""ஐயையோ நான் வரேன் மாமி... என்னால தாங்க முடியலை'' சொல்லியபடியே அங்கிருந்து கிளம்பினான் .
நான்கு நாள் கழித்து காலிங் பெல் அடிக்கப்பட, கதவைத் திறந்தான். நாதன் நின்றிருந்தான். ""வாங்க வாங்க'' வரவேற்று அவனை நாற்காலியில் அமர வைத்து இவனும் அமர்ந்து கொண்டான்.
நாதன் வந்திருந்ததைப் பார்த்ததும் எழுந்தாள் சுமலதா ""என்ன எழுந்துட்டே சுமா, உட்காரேன்.'' சொன்னான்.
""இல்ல , நான் கிளம்பறேன். ஆனா நான் சொன்னதை நல்லா யோசிச்சுப் பாருங்க. உங்க மனசு வேதனை மறைஞ்சதும், என்னை ஏத்துக்குங்க. நீங்க இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை. நான் உங்க நிழலா உங்க வாழ்க்கையில் துணையா இருப்பேன். என் வீட்டுல என் முடிவைச் சொல்லிட்டேன். ஓகே சொல்லிட்டாங்க. உங்க முடிவைத்தான் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.'' சொல்லியபடியே அவள் கிளம்ப... பெருமூச்சு விட்ட படி கதவைத் தாளிட்டு உள்ளே வந்தான்.
""என்ன சுரேஷ் , உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?'' கேட்டான் நாதன்.
""உண்மையைச் சொல்லணும்னா நீங்க வந்தது எனக்கு ரொம்ப நன்மையா இருக்கு. நல்லது பண்ணி இருக்கீங்க'' சொன்னான். அவனை நாதன் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தான்.
""என்ன, நான் உங்க டயலாக் பேசறேன்னு பார்க்கறீங்களா. உண்மைதான். ரொம்ப தாங்க்ஸ் சொல்லணும்'' சொன்னான்.
""அவங்க சொன்னது... உங்க பர்சனல் லைப் பற்றி கேட்கறேன்னு நினைச்சுக்கக் கூடாது. ஆனா என் முன்னால இல்ல சொன்னாங்க. அதான்'' தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டான் நாதன்.
""அதான் ஓபனா சொல்லிட்டுப் போனாளே. என் கூட வேலை செய்யறவ. சுமலதா. திடீர்னு ஒரு நாள் ஆபீஸ்ல வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறதா சொன்னா. என்னை ரொம்ப நாளா காதலிச்சுட்டு இருந்தாளாம். எனக்குத் தெரியாது. ஆனா அதுக்குள்ள எங்க வீட்டுல என் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க. நிலைமையைச் சொன்னேன். ரொம்ப அப்செட் ஆயிட்டா. இப்ப என் வாழ்க்கையில் இப்படி ஆனதும் அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்தறா. ஒரே தொல்லை. நீங்க வந்ததும் கிளம்பிட்டாளே. எனக்கு நன்மைதானே'' சொல்லிவிட்டு சிரித்தான் .
""சார், உங்க வாழ்க்கையில் நடந்தது சோகமான விஷயம்தான். ஆனா அதனால இந்த சுமலதா மீண்டும் உங்க வாழ்க்கையில் வர்றாங்க. உங்க மேல ரொம்ப அன்பு வைச்சிருக்காங்க மாதிரி இருக்கு. ஏத்துக்குங்க சார். நல்ல விஷயம்தானே.. .. ..''
""உங்க தத்துவம் உண்மை ஆயிடுச்சுன்னு பேச ஆரம்பிச்சுட்டீங்களே. நியாயமா சார். மாலா...''
""சார் மறுபடியும் சொல்றேன். உங்க மனைவி இறந்தது சோகம்தான் சார். ஆனா அதனால இப்ப சுமலதா உங்களை நெருங்கி வர்றாங்க. úஸா... ஏதோ ஒரு நல்லது நடக்குதுன்னு இவங்களை ஏத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழுங்க. அதான் சொல்றேன். கொஞ்ச காலம் வேணும்னா டயம் எடுத்துக்குங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்குங்க...''
""அது நான் மாலாவுக்குப் பண்ணற துரோகம் ஆகாதா?'' கேட்டான்.
""அன்னிக்கு ஏன் என்னை அப்படி தள்ளி விட்டீங்க?''
""மனைவி இறந்ததை நன்மைக்கேன்னு நினைக்கச் சொன்னதுக்கு''
""அது எதைக் காட்டறது. நீங்க உங்க மனைவி மேல வைச்சிருந்த இன்னும் அதாவது அவங்க இறந்த பிறகும் அவங்க மேல வைச்சிருக்கற அன்பைக் காட்டறது இல்லையா... அப்புறம்... அதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய முடியாதே சார். இப்ப அவங்க இல்லை. உங்க வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கு. ஒருத்தி என்னை ஏத்துக்கோன்னு சொல்லிண்டு வர்றாங்க. அவங்களை கொஞ்ச காலம் கழிச்சாவது ஏத்துக்கோங்க...''
""நீங்க மட்டும் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க. என்னை இரண்டாவது தடவை வேற பண்ணிக்கச் சொல்லி சொல்வீங்க இல்ல...'' கொஞ்சம் உரிமையோடு கடிந்து கொண்டான் .
""இது என்ன கேள்வி. எனக்குக் கல்யாணம்னாலே பிடிக்கலை. நீங்க கல்யாணம் பண்ணிண்டு உங்க மனைவி இப்ப இறந்துட்டாங்க. ஏற்கெனவே உங்களைக் காதலிச்ச ஒரு பெண் இப்பவும் உங்களை விரும்பறதா சொல்றா. புத்திசாலித்தனமா பேசறதா நினைச்சுண்டு தப்பாப் பேசறீங்க... அதுவும் இல்லாம ஒரு வேளை என் அம்மா வற்புறுத்தல் தாங்காம நான்
கல்யாணம் பண்ணிக்க ஒத்துண்டா அதுவும் என் வாழ்க்கையின் நன்மைக்காகத்தான்னு நம்பி ஏத்துப்பேன்...
சந்தேகமே இல்லை'' சொல்லியபடியே எழுந்தான் நாதன்.
""சுரேஷ், நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடுங்க. எனக்கு என்னவோ நீங்க சுமலதாவை இப்ப மனசார மட்டுமாவது ஏத்துக்கறது நல்லதுன்னு தோணறது. உங்க நன்மைக்குத்தான். கல்யாணம் அப்புறம் பண்ணிக்குங்க. எனக்கு முடிவை தெரியப் படுத்துங்க'' சொல்லி விட்டுக் கிளம்பினான்.
இரண்டு நாட்கள் கழித்து ப்ரதாப் போன் செய்தான், எடுத்து ""சொல்லு ப்ரதாப்... என்ன விஷயம்?'' கேட்டான். ப்ரதாப் சொன்ன விஷயம் சுரேஷை உலுக்கத்தான் செய்தது.
""நாதனோட அம்மா இறந்துட்டாங்க . மார் வலிக்கறதுன்னு போன் பண்ணி அவங்க அம்மாவேதான் சொன்னாங்க. இவன் கிளம்பி வீட்டுக்குப் போனான். போனா அப்படியே சோபாவில தலை சாய்ஞ்சபடி இறந்து கிடந்தாங்களாம் . இப்பத்தான் போன் பண்ணி சொன்னான். நீ ஆபீஸ் ஜாய்ன் பண்ணிட்டியா?'' கேட்டான்.
""இல்லப்பா இன்னும் ரெண்டு நாள் லீவுதான். என்னப்பா சொல்றே? கேட்கவே கஷ்டமா இருக்கு. நாலு நாளைக்கு முன்னாடிதானே போய் அவங்க கிட்டயும் பேசிட்டு வந்தேன். ரொம்ப அன்பா பேசிண்டு இருந்தாங்க. என்னையும் அவங்க பிள்ளை மாதிரின்னு சொன்னாங்க. அடடே...''
""ஆமாம் . ஒரே பையன். இவன் மேலே உயிரையே வைச்சிருந்தாங்க. இவனுக்கும் அம்மான்னா ரொம்ப பிரியம்''
இந்த உரையாடலை முடித்து சுரேஷ் உடனே
நாதனின் வீட்டை அடைந்தான். நான்கு நாட்களுக்கு முன்னால் அவனை பிள்ளையாக ஏற்றுக் கொண்ட நாதனின் அம்மா இந்த உலகத்தில் தன் கடமையை முடித்து உறங்கிக் கிடந்தாள். அமைதியாக, சலனமில்லாத முகத்துடனேயே இருந்தான் நாதன். மிகவும் குறைவான உறவினர்கள், நண்பர்கள் என்று வந்திருக்க, அம்மாவுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தான்.
பதினைந்து நாட்கள் கழித்து அவன் மீண்டும் நாதன் வீட்டுக்குப் போக ""வாங்க'' அழைத்து அமர வைத்தான்.
""உங்க அம்மாவின் மறைவுக்கு என்ன ஆறுதல் சொல்றதுன்னே தெரியலை நாதன். என்னையும் அவங்க பிள்ளைன்னு சொன்னாங்க. இப்ப திடீர்னு காலம் ஆயிட்டாங்க. என் ஆழ்ந்த இரங்கலைச் சொல்லிக்கறேன்'' அவனை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தபடியே
சொன்னான்.
""தாங்க்ஸ்'' சொல்லி விட்டு அமைதி ஆனான்.
""தப்பா நினைச்சுக்காதீங்க நாதன், இப்ப உங்க மனநிலை. உங்க அதே தத்துவம்...நடக்கறதெல்லாம் நம்ம நன்மைக்கே... உங்க அம்மா இறந்ததும் நன்மைக்கேன்னு...உங்களால சொல்ல முடியுமா. நீங்க வருத்தமான்னா இருக்கீங்க. உங்க முகம் சொல்லுதே'' கேட்டான்.
"" சார். எனக்காக இருந்த ஒரே ஜீவன் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க. அது வேதனையான விஷயம்தானே. ஆனா ஏதோ நன்மைக்காக நடந்தது. இந்த சோகமும் ஏதோ நன்மை நடக்கறதுக்காக நடந்ததுன்னுதான் நினைச்சுக்கணும். நம்பணும்னுதான் நான் சொன்னேன். அது உங்க வாழ்க்கையிலும் சரி. என் வாழ்க்கையிலும் சரி. ..''
""சரி நாதன், உங்க அம்மா இறந்ததுனால என்ன நன்மை விளைஞ்சதுன்னு நீங்க நினைக்கறீங்க?'' கேட்டான், நாதனை எதிர்பார்ப்போடு பார்த்தபடியே.
""எனக்கு இழப்புங்கறது பெரிய மைனஸ். நன்மை என்னன்னா அம்மா சுகர் பீபி, ஆஸ்துமான்னு கஷ்டப் பட்டுண்டு இருந்தா. நிறைய பேருக்கு இருக்குதான். ஆனா என் அம்மா இப்ப அதிலிருந்து விடுபட்டுட்டாங்க. அடுத்து தன் பையன் கல்யாணம் பண்ணிக்கலேங்கற கவலையாவே இருந்தாங்க. அதில இருந்து அந்த ஆத்மாவுக்கு இப்ப விடுதலை. அடுத்து ஒரு வேளை நான் இறந்து என் அம்மா உயிரோட இருந்திருந்தா.மகன் இறந்த வேதனையை அவங்க தாங்குவாங்களா. அது தவிர்க்கப்பட்டிடுச்சு. அடுத்ததா...அம்மாவை இழந்த வேதனையை நான் ஒரு நாள் சந்திக்கணும். அது என்னன்னு இப்ப நான் பார்த்துட்டேன். அதனால அது என்னிக்கு வருமோ, வரும்போது எப்படி இருக்குமோன்னு நினைச்சு நினைச்சு நான் நடுங்க வேண்டாம் இல்லையா?எல்லாத்துக்கும் மேல ஒரு பொருளை இழக்கும் போதுதான் அதன் உண்மையான மதிப்பு ஒருத்தருக்குத் தெரியும்பாங்க. என் அம்மாவை நான் முழுசா உணர ஒரு சான்ஸ்... இல்லையா ...'' முடித்தான் நாதன்.
எழுந்தான் . அவன் அருகில் சென்று அவன் முகத்தையே பார்த்தவன் திடீரென்று அவன் மனதில் உணர்ச்சிகள் பொங்க அவனை அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டான். நாதன் திடுக்கிட்டுப் போனான்.
""என்ன ஆச்சு ?'' கேட்டான்.
தன் அணைப்பில் இருந்து நாதனை விடுவித்து அவனைப் பார்த்தான்.
""என் உணர்ச்சிகளை என்னால கட்டுப் படுத்தமுடியாம கட்டி அணைச்சுக்கிட்டேன். நம்ம முதல் சந்திப்பில் நீங்க எனக்கு ஒரு கொடியவனா தெரிஞ்சீங்க. இன்னும் கொஞ்ச நேரம் அவன் இங்கே இருந்தா அவனை என்ன செய்வேன்னு தெரியாதுன்னு ப்ரதாப் கிட்டே சொன்னேன். ஆனா இன்னிக்கு இப்ப... நம்ம வாழ்க்கையில் இன்பமும் துன்பமும், சந்தோ ஷமும் துக்கமும், மகிழ்ச்சியும், சோகங்களும் மாறி மாறி கூடவோ குறைச்சலாவோ வரத்தான் செய்யும். ஆனா எது நடந்தாலும் அவை ஒரு நன்மைக்காகத்தான்னு நினைக்கணும், நம்பணும்கற உங்க தத்துவம்... அது என் மனசுலேயும் ஆழப் பதிஞ்சுடுச்சு நாதன்.
ஒரு சோகம் நடந்தா கூட அதைத் தடுக்க முடியலேன்னாலும் அந்த சோகத்துல ஏதாவது சிறு நன்மை இருந்தா கூட அதை மட்டுமே நினைச்சுப் பார்க்கற அந்த பார்வையினால, நாம துவண்டு போகாம ஆக்டிவ்வா நம்ம வாழ்க்கையை வாழ முடிஞ்சா, இந்த உலகத்துக்கு உபயோகமா வாழ்ந்துட்டுப் போக முடியும்னு தோணறது நாதன். அதை என் மனசுல பதிய வைச்ச உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.
உங்களைச் சந்திக்கலேன்னா எனக்கு நடந்த நிகழ்வினால நான் ரொம்ப ரொம்ப ஆடிப் போயிருப்பேன். இப்ப ஸ்டடியா நிற்கறேன்... யூ ஆர் கிரேட் நாதன்'' சொல்லி விட்டு அவனுக்கு ஒரு பெரிய சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான் சுரேஷ் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com