ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தவாந்தி... பேதி... மயக்கம்!

பிளஸ் ஒன் படிக்கும் என் மகன் நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சென்று சமோசா, பர்கர், பேல்பூரி, பானிபூரி என்றெல்லாம் சாப்பிட்டு  வயிறைக் கெடுத்துக் கொள்கிறான்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்தவாந்தி... பேதி... மயக்கம்!

பிளஸ் ஒன் படிக்கும் என் மகன் நண்பர்களுடன் அடிக்கடி வெளியே சென்று சமோசா, பர்கர், பேல்பூரி, பானிபூரி என்றெல்லாம் சாப்பிட்டு  வயிறைக் கெடுத்துக் கொள்கிறான்.  10 நாள்களுக்கு ஒருமுறையாவது பித்தவாந்தி எடுத்து தலைவலி, பேதி, மயக்கம் என்றெல்லாம் கஷ்டப்படுகிறான்.  காய்கறி, கீரை, பழம் போன்றவை மீது வெறுப்பைக் காட்டுகிறான்.  வாந்தியை நிறுத்த வழி என்ன?

-சாந்தா, சென்னை.

சமோசா, பர்கர் போன்ற உணவுப் பொருள்கள் சாப்பிடுவதற்கு நன்றாக இருந்தாலும், அவற்றின் தொடர் உபயோகத்தால் இரைப்பையிலுள்ள பித்தநீர் சுரப்பிகள் அதிகமாகத் தூண்டப்பட்டுக் கசிவு அதிகமாகி, இரைப்பையினுள் பிரட்டலை ஏற்படுத்தி வாந்தியை ஏற்படுத்தும். இதுபோன்ற  உணவுப் பொருள்கள் இரைப்பையையும், குடலையும் இயக்கும் நரம்பு மண்டலங்களை அதிக பரபரப்புக்குள்ளாக்கி,  குமுறிக் கொண்டிருக்கும் நிலைக்கு கொண்டு சென்றுவிடும்.  உங்களுடைய மகனுக்குப் பிடிக்காத காய்கறி, கீரை, பழம் போன்றவற்றை உடலுக்கு நல்லது என நீங்கள் திணிக்க முற்படும்போது, பித்த நீரும் நரம்பு மண்டலங்களும் ஒன்றாகச் சேர்ந்து, அவற்றை வாய்வழியாக தூக்கி வெளியே வாந்தியாக வீசுகின்றன.  

பத்துநாட்களுக்கு ஒருமுறைதான் வாந்தி ஏற்படுகிறது என்பதன் மூலம், இந்த காய்கறி, கீரை, பழங்களை வயிற்றினுள் நேசிக்கக் கூடிய அம்சங்களும் இருப்பதாகவே தோன்றுகிறது. 

அவற்றின் தூண்டுதலைப் பெற கெட்டுப் போன பித்தநீரின் அம்சத்தை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தைச் சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதே நன்மைதரும்.  அந்த வகையில் அவி பத்தி சூரணம் எனும் ஆயுர்வேத மூலிகை மருந்தை  சுமார் 15 கிராம் எடுத்து, அதில் முப்பது மில்லி லிட்டர் தேன் குழைத்து, காலை உணவு செரித்து, மதியம் பசி எடுக்கும் வேளையில், பத்துநாள்களுக்கு ஒருமுறை நக்கிச் சாப்பிட, நீர்பேதியாகி, கெட்டுப்போன பித்தம் வெளியேறிவிடும்.  "பித்தநீர்தான் வெளியேறிவிட்டதே, நான் மறுபடியும் பர்கர் சாப்பிடப் போகிறேன்' என்று மகன் கிளம்பி
விட்டால்,  பிரச்னை தொடரத்தான் செய்யும்.  

அதனால் வாயைக் கட்ட வேண்டியது அவசியமாக உள்ளது. எனவே அதுபோன்ற உணவுகளைச் சாப்பிடும் நண்பர்களைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தமும் மகனுக்கு இருக்கிறது. 

வாந்தியை நிறுத்த சில உபாயங்கள்:

நெல் பொரியை பொடித்துத் தூளாக்கி மோர் அல்லது தண்ணீர் விட்டுக் கரைத்துச் சாப்பிடலாம். 

நெல்பொரியில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடலாம் அப்படிக் காய்ச்சும்போது,  ஓர் ஏலக்காயையும், நான்கைந்து கிராம்பையும் பொடித்துப் போடுவது மிகவும் நல்லது.  இதை வடிகட்டி, சிறிது சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு போட்டுச் சாப்பிடலாம்.   வாந்தியில் கசப்பும், துவர்ப்பும் உணரப்பட்டு, வாந்தி எடுத்த திரவம் மஞ்சள் நிறத்துடன் காணப்பட்டால், அதில் சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு, ஆரஞ்சுப் பழச்சாறு, மாதுளம்பழச்சாறு சேர்த்துச் சாப்பிடலாம்.  உமட்டுதல், விக்கல், நாவறட்சி ஆகியவற்றை இது போக்கும். 

வில்வாதி லேகியம் எனும் ஆயுர்வேத மருந்தை காலை, மாலை சுமார் 5 கிராம் அளவில்  வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படாமல் அது பாதுகாக்கும். 

கல்லீரலில் பித்த சுரப்பைக் கூட்டும்  காரம், புளி, உப்பு போன்ற சுவைகளையும், தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதையும் குறைத்து, இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவையின் மூலம் கல்லீரலைப் பாதுகாத்துக் கொள்வதே நலம். 

நன்னாரி சர்பத் எனும் இனிப்புச் சுவையுடைய பானத்தை ஐந்து - பத்து மில்லி லிட்டர் அளவில் காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி, பித்த வாந்தி ஆகியவை ஏற்படாது.  

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com