அது அந்தக் காலம்

கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வார் கோபாலன்.  என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டுமா? என்று.
அது அந்தக் காலம்


கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வார் கோபாலன்.  என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டுமா? என்று.

கோரமான ஒரு மனிதனின் முகமாகத்தான் அது தென்படும்.  பலநாட்கள் அவர் சிந்தித்துக் கொண்டே இருப்பார்,  நிச்சயமாக இது நம் முகம் இல்லையென்று. நம்முடைய ஆசை முகம் என்னாயிற்று?  கோரமான இன்னொரு வடிவாகக் கமலாவும் மாறி விட்டாளே?  அவள் எவ்வளவு அழகாக இருப்பாள்?

40 வருடத் தாம்பத்திய வாழ்க்கையைக் கடந்து வந்தாயிற்று. கமலாவைப் பெண் பார்க்கச் சென்றபோது, பெண் வீட்டார்கள் அசந்து விட்டார்கள்.  பையன் வீட்டார் பெண் பார்க்கச் சென்னையிலிருந்து இவ்வளவு தூரம் வருகிறார்களே என்று.

கோபாலனுக்கு அது ஒரு நல்ல அனுபவம்.  சென்னையிலிருந்து மாயவரத்திற்குச் சென்று பெண்ணைப் பார்த்தது.  அவரும், அவர்  அப்பாவும் அம்மாவும்தான் சென்றார்கள்.  மாயவரத்தில் அவர்கள் வீடு இருந்தது. மகாதான தெருவில் வீடு.

பழைய காலத்து ஓட்டு வீடு.  பெரிய முற்றம்,  வீட்டின் வாசலில் திண்ணை இருந்தது.  அவர்கள் வீட்டிலும் அவள் அம்மா, அப்பா கமலாதான்.

இயல்பாக இருந்தது சந்திப்பு.  உதவிக்கு அவர்கள் வீட்டிற்கு  ஒரு மாமி வந்திருந்தாள்.

கமலாவைப் பிடித்திருந்தது. பார்த்தவுடன் பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டார் கோபாலன். 

"" தனியாகப் பெண்ணிடம் பேச வேண்டும்'' என்றும் வெட்கத்தை விட்டுக் கேட்டார்.

""என் பெண்ணும் வெட்கப்படுகிறாள்.

நாங்கள் யோசித்து முடிவு சொல்கிறோம்' என்றார்கள் அவர்கள்.

கோபாலனுக்குச் சென்னை திரும்பும் வரை கமலாவின் முகமே ஞாபகத்திலிருந்து  கொண்டிருந்தது.

""கமலா, இங்கே வாயேன்.''

எதற்காகக் கூப்பிடுகிறார் என்று யோசித்தபடியே அவள் கோபாலன் முன் நின்றாள்.

""அந்த முகமா இது..சே..'' என்றார்.

""என்ன உளற ஆரம்பித்து விட்டீர்கள்.  காலை நேரத்திலேயே'' என்றாள் கமலா.
""அந்த ஆசை முகம் இல்லை இப்போது'' என்றார்.

புரிந்துவிட்டது கமலாவுக்கு. அந்த இடத்தில் நிற்காமல் போய் விட்டாள். 

ஊருக்கு வந்தவுடன் ""திக் திக்'கென்றது. கமலா தன்னை வேண்டாமென்று கூறிவிடுவாளோ என்று தோன்றியது.  இரண்டு மூன்று நாட்களாக அவர்களிடமிருந்து தகவல் வரவில்லை.  அவருக்குக் கமலாவின் முகமே ஞாபகத்திற்கு வந்தது.  குறிப்பாகக் கண்கள்.  

அவ்வளவு பெரிய கண்கள்.  சுண்டி இழுக்கும்படியான கண்கள். அலுவலகத்திலிருந்தபோது கூட அவளுடைய கண்கள் அவரைத் துரத்தித் துரத்தி வந்தன.  

அலுவலகத்தில் எதிர்ப்பட்ட பெண்கள் யாரிடமும் அப்படிப்பட்ட கண்களைப் பார்த்ததில்லை.  

திரும்பவும் கமலாவைக் கூப்பிட்டார்.  அவள் உடனே அவர் முன் வந்து நிற்கவில்லை.  ஏதோ கோட்டா செய்கிறாரென்று தோன்றியது.  காலையில் எழுந்தவுடன் அவள் குளித்து விடுவாள்.  உடனே சமையலில் இறங்கிவிடுவாள் யார் உதவியையும் எதிர்பார்க்காமல். 

கோபாலன் எழுந்து சமையலறைக்குச் சென்றார். அவரை என்ன என்பதுபோல் பார்த்தாள் கமலா. கமலா வேகமாகச் சமைத்து விடுவாள். இந்தக் கலையை எப்போது கற்றுக் கொண்டாள்?  கல்யாணம் ஆன புதிதில் அவளுக்குச் சமையல் பண்ணவே தெரியாது.  

அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்றவுடன், கோபாலன் இன்னொரு முறை ஊருக்குப் போய் அவர்களைப் பார்த்துக் கேட்டு விடலாமாவென்று நினைத்தார்.  குறிப்பாகக் கமலாவைப் பார்த்துக் கேட்கலாமென்று நினைத்தார்.

உண்மையில் காதல் என்றால் இதுதானா என்று அவருக்குத் தோன்றியது.  கமலாதான் அவருடைய ஆசைமுகமா?  கமலா எப்படி ஒரே மகளோ, அவர் அதுமாதிரி ஒரே மகன்.

ஒவ்வொரு மணித்துளியிலும் ஏன் அவர்களிடமிருந்து தொலைபேசி வரவில்லை என்று தோன்றியது.  அவரால் பொறுக்க முடியவில்லை.  வீட்டில்,  """"அலுவலகத்தில் வேலை'' என்று பொய் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.

என்ன அசட்டுத்தனம் என்று தோன்றியது அவருக்கு.  மாயவரத்தில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துக்கொண்டு தங்கினார்.  ஒரு விநாடி திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தார்.  ஆனால் கமலா முகத்தைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  அவள் அவரை நிராகரித்தாலும் பரவாயில்லை.  அவள் முகத்தை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென்று தோன்றியது.  

""என்ன இங்க வந்து நிக்கறீங்க...நீங்கச் சமையல் பண்றீங்களா?'' என்று கமலா கிண்டலாகக் கேட்டாள்.

""மார்க்கெட்டுல நடந்து வரும்போது தள்ளித் தள்ளி வந்தாயே... நான் பின்னாடி நீ வர்றதைப் பார்த்துப் பேச வேண்டியிருந்தது'' என்றார்.

""என்ன உளறீங்க..காலையிலே ஏதாவது கிறுக்குப் பிடிச்சிருக்கா?''

உடனே போகப் பிடிக்கவில்லை.  என்ன சொல்லி அவர்கள்  வீட்டிற்குப் போவது என்று யோசித்தார்.  பைத்தியக்காரத்தனம் இங்கு வந்தது என்று அடிக்கடி தோன்றியது. பட்டமங்கல தெருவை ஒட்டித்தான் அவர் லாட்ஜ் எடுத்துக்கொண்டு தங்கியிருந்தார். நல்ல ஓட்டலைப் பார்த்து டிபன் சாப்பிடலாம். பட்டமங்கல தெருவில் நடந்தார்.  மயூர விலாஸ் என்ற ஓர் ஓட்டல் 
கண்ணில் பட்டது.

உள்ளே நுழைந்து வாய்க்கு ருசியாக டிபன் சாப்பிட்டார்.

""ஆசை முகம் மறந்து போச்சேன்னு பாரதி பாடல் வரி ஞாபகமிருக்கா?''

""நான் இங்கிருந்து போயிடறேன்...நீங்கச் சமையல் பண்ணுங்க... காலை நேரத்தில ஒரே தொல்லையாப் போயிடுத்து''

திடீரென்று அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தார்.  இந்த முகமா ஆசை முகம் என்று தோன்றியது.   

எவ்வளவு பிரகாசமாக இருக்கும் அவளுடைய கண்கள்?  இப்போது சுருக்கம் விழுந்து களை இழந்து இருக்கின்றன.  முகமெல்லாம் கூட.  பொய் பற்களைக் கட்டியிருந்ததால், முகம் டொக்கு விழுந்தது போலிருந்தது.  

""என் முகம் மட்டுமென்ன?  கமலா முகத்தை விடக் கோரமாக மாறிப் போயிற்று?''

மயூர விலாஸில் டிபன் நன்றாக இருந்தது.  கல்லாவில் உட்கார்ந்திருப்பவரைப் பார்த்து, ""நன்றாக இருக்கிறது டிபன்'' என்றார். எந்த நேரத்தில் அவர்கள் வீட்டிற்குப் போவது?  என்ன சொல்லிவிட்டுப் போவது? 

பேசாமல் வீட்டிற்குப் போய்விடலாமா என்று தோன்றியது. ஏன் போய்ப்பார்த்தால் என்ன? நேரிடையாகவே கேட்டு விடலாம்.  என்ன சொல்லப் போகிறார்கள்?  பிடிக்கவில்லை என்று சொல்லப் போகிறார்கள் அவ்வளவுதானே? தயக்கத்துடன் நடந்தார்.

""அப்போது என்னைப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?''

""எப்போது?''

அவளுக்குப் புரியவில்லையா? அல்லது புரிந்ததுபோல நடிக்கிறாளா?

""நான் அப்போது அங்கு வந்து உன்னைப் பார்த்தேன்''

அவளுக்குப் புரிந்து விட்டது.  ஆனால் புரியாதவள் போல் நடித்தாள்.

""பெரிய தப்பு செய்துவிட்டேன்'' என்றாள்.

அந்தத் தெருவிலே நடந்து அவர்களுடைய வீட்டைக் கண்டுபிடித்து விட்டார். மெதுவாகத் தயங்கித் தயங்கி அந்த வீட்டின் கதவைத் தட்டினார்.  காலிங் பெல் எதுவுமில்லை.  யாரும் வந்து கதவைத் திறப்பது போல் தெரியவில்லை.

இன்னும் வேகமாகத் தட்டினார்.  யாரோ நடந்து வருவது போல் தோன்றியது.  கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

கமலா. அவரைப் பார்த்தவுடன் வெட்கத்துடன் உள்ளே போய்விட்டாள்.

அதன்பின் கமலாவின் அப்பா அம்மா என்று எல்லோரும் வந்தார்கள்.

""இந்தப் பக்கமாக வந்தேன்  அப்படியே உங்களைப் பார்த்து விட்டுப் போகலாமென்று வந்தேன்''

""உள்ளே வாங்க''

கோபாலன் உள்ளே நுழைந்து தூணிற்குப் பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார். 

""உங்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை.  பிடிக்கவில்லை என்றால் தாராளமாகச் சொல்லி விடலாம்''

""உங்களிடம் சொல்லாமல் என்ன?  எங்களுக்குப் பூரண சந்தோஷம்.  ஆனால் ஒரு துக்கம் நடந்து விட்டதால் மெதுவாகச் சொல்லலாம் என்று நினைத்தோம்'' என்றார் அவர் அப்பா.

அவர்கள் திருமணம் தள்ளித் தள்ளிப் போயிற்று.  அதற்குள் அந்த ஊருக்கு இரண்டு மூன்று முறை அவர் போய் விட்டு வந்தார். அவள் டிகிரி முடித்துவிட்டு சும்மாதான் இருந்தாள்.  

இவர் வரும்போது நாணி கோணிக்கொண்டு இருப்பாள். ஒருமுறை திருஇந்தளூர் கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போகும்படி அவர்கள் சொன்னார்கள்.

திருஇந்தளூர் கோயிலுக்கு இருவரும் நடந்து சென்றார்கள். அவர் பக்கத்தில் நடந்து வராமல் பின்னால் தயங்கித் தயங்கி நடந்து வந்தாள்.

""என் பின்னால் வராமல் தள்ளித் தள்ளி நடந்து வந்தே இல்லை''

""என்ன பேசறீங்க நீங்க.  அடிக்கடி எங்கேயோ போய் விடுகிறீர்கள்''

அவர் கமலாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

""நீங்க முதல்ல இந்த இடத்தை விட்டுப் போங்கள்''

கோபாலன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.

கோபாலன் கமலா திருமணம் செப்டம்பர் மாதம்தான் நடந்தது.  அவர்களுக்கு ஒரு புதல்வன், இரண்டு புதல்விகள்.  எல்லோரும் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  கமலாவும் அவரும் மட்டும்தான் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.  

கமலா சமையல் தயார் செய்து விட்டு கூடத்திற்கு வந்தாள். கோபாலன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.  

""போய் குளியுங்கள்.  சாப்பாடு ரெடி ஆயிடுத்து'' என்றாள் கமலா.

""ஆசை முகம் மறந்து போச்சு'' என்றார் கோபாலன்.

ஏதோ கிறுக்குப் பிடித்து விட்டது என்று நினைத்தாள் கமலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com