ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவுகள்... மருத்துவ குணங்கள்!

உடல் உபாதை எதுவும் இல்லாத என் அப்பா, அவல் சாப்பிடுவதை மிகவும் விரும்புவார்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உணவுகள்... மருத்துவ குணங்கள்!

உடல் உபாதை எதுவும் இல்லாத என் அப்பா, அவல் சாப்பிடுவதை மிகவும் விரும்புவார். அதுபோலவே சாதம், இட்லி, புட்டு, முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் இவற்றின் மீதும் அவருக்கு மோகம் அதிகம். பிடித்திருக்கிறது என்கிறார். இந்த உணவுவகைகளின் மருத்துவகுணங்கள் எவை?

கல்யாணி, திருப்பூர்.

அவலை நனைத்துக் கழுவிக் களைந்து குழைய வேக வைத்து தயிரில் குழப்பிச் சாப்பிட சீதபேதி தணியும். வேக வைத்து வடித்த இதன் நீரைச் சாப்பிட பேதி, சீதபேதி, குடல்வலி அடங்கும். பாலும் நெய்யும் சேர்த்து உண்ண உடலில் பலம் பெருகும். தயிரில் சாப்பிட பசி மந்தமாகும். மோரில் சாப்பிட உடல் கனத்திருப்பது, அசதி, உடல் எரிச்சல் நீங்கும். தனித்துத் தண்ணீரில் ஊற வைத்துச் சாப்பிட, தசைகளில் அதிக முறுக்கு ஏற்பட்டுக் கண்டு கண்டாக வலிக்கும். பசி மந்திக்கும். புளி, பழச்சாறு என ஏதாவது ஒரு புளிப்புச் சேர்த்துப் பக்குவப்படுத்த பித்த நோய் நீங்கும்.

அரிசி அன்னத்தை விட மாவும் அவலும் எட்டுமடங்கு அதிக பலம் தரக் கூடியது. அதை விட எட்டு மடங்கு பலத்தைப் பாலும் பழமும் தரும். அதை விட எட்டு மடங்கு பலத்தைக் கிழங்குகள் தரும். ஆனால் எல்லாவற்றிலும் மிதம் தப்பினால் கெடுதல். ஜீரண சக்தியும் சுறுசுறுப்பும் இருந்தால்தான் அதிக பலத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அதிக பலம் தரும் உணவும் கேடு விளைவிக்கக் கூடும்.

அரிசியைக் கொண்டு சாதம் சமைக்கவே சில நியமங்கள் உண்டு. நொய்யும் அரிசியும் கலந்து சமைக்கக் கூடாது. ஒரே தரப்பட்ட அரிசி நல்லது. சாதத்தை மிதமான சூட்டுடன் சாப்பிட மிகவும் உத்தமம். அது எளிதில் ஜீரணமாகும். நல்ல பலம் தரும். சாதத்துடன் நெய் சேர்த்துச் சாப்பிட வன்மை, விழிக்குக் குளிர்ச்சி, ஜீரணம் உண்டாகும். குடல் இரைப்பை அழற்சி நீங்கும். பால் சேர்த்துச் சாப்பிட, பித்த சீற்றமும், நாவறட்சியும் விலகும். புஷ்டி, வீர்ய விருத்தி, தரும். சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மிக நல்லது. எண்ணெய் சேர்த்துச் சாப்பிட , வன்மையும், திடமும் பசியும் உண்டாகும். தயிருடன் சாப்பிட , உடல் சூடு தணியும். உடலுக்கும் பலம் தரும். மோருடன் சாப்பிட பசி அதிகமாகும். மூலம், சோகை, கிராணி நீங்கும். வயிற்றில் புண்ணுள்ளவர்களுக்கு ஆகாது.

சாதம் வடித்துப் புளித்த பழையதைச் சாப்பிட பித்தாதிக்கம், வாந்தி, வெளுப்பாக வெளியேறுகிற மலம் இவை நீங்கும். ஆனால் அந்த அன்னம் தன்னிலை மாறி நொந்து நூலிழைந்து இருந்தால் அது கேடு விளைவிக்கும். அதிக தூக்கம், சீதளம் அதிகமாகுதல், அசதி, மயக்கம் இவற்றை அளிக்கும். இரவில் நீரிலிட்ட அன்னத்துடன் அந்நீராகரத்துடன் சூரியோதய காலத்தில் அருந்த பசி, உடல் வலிமை உண்டாகும்.

அத்துடன் மோர் சேர்த்துச் சாப்பிட, உடல் எரிச்சல், பித்தம், பிரமை நீங்கும். தூக்கக் குறைவு தீர மிகவும் ஏற்றது. நீராகாரம் வறட்சியையும், உடல் உட்புறச் சூட்டையும் தணிக்கும்.

இட்லி, தோசையைப் போல பித்தத்தை அதிகமாக்காது. ஜீரண தாமதத்தைப் போக்க மிளகு, இஞ்சி முதலியவற்றைச் சேர்க்கலாம். தோசையை விட நல்லது.
புட்டு நல்ல பலம் தரும். உடல் உழைப்பு அதிகமுள்ளவருக்கு மிகவும் ஏற்றது. தசைகளில் நல்ல சூட்டைப் பாதுகாக்கும். பெண்களுக்கு அதிக உதிரக் கசிவைக் கட்டுப்படுத்தி தெளிவுறச் செய்யும்.

முறுக்கை எண்ணெய்யில் பொரிப்பதால் கபமும் பித்தமும் அதிகமாகும். பசி குறையும். உடல் கனக்கும்.

கொழுக்கட்டை - அரிசி மாவு, தேங்காய், வெல்லம் சேர்த்து வேக வைக்கப்படுவதால் எளிதில் ஜீரணமாகாது. தாமதமான ஜீரணத்தால் குடலில் அதிகச் சூடு பிடிக்கும். வயிற்றில் வாயு தங்கும். நல்ல புஷ்டி தரும். நல்ல ஜீரணசக்தியுள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. அளவில் கட்டுப்பாடு தேவை.

தேன் குழல் - கபமும் வாயுவும் அதிகமாகும். பசி மந்தப்படும். நாவறட்சி மிகுந்து தண்ணீர் பருகுவதால், உடல் கனமும் அசதியும் அதிகமாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com