ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சுமூகம்... மகிழ்ச்சி... ஆரோக்கியம்!

என் வயது 28. புதிதாக கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். சமீபத்தில்தான் திருமணமும் செய்து கொண்டேன்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சுமூகம்... மகிழ்ச்சி... ஆரோக்கியம்!

என் வயது 28. புதிதாக கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். சமீபத்தில்தான் திருமணமும் செய்து கொண்டேன். நற்பழக்கங்கள் சிலவற்றை ஆயுர்வேதம் மூலம் அறிய விரும்புகிறேன். மனைவியுடன் சுமூகமாகவும் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியமாக வாழ விரும்புகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

சுரேஷ், கும்பகோணம்.

மூன்றிலும் பாக்கி வைக்காதே: கடன், வியாதி, எதிரி இம்மூன்றையும் அடியோடு அழிக்காமல் பாக்கி வைத்தால் மறுபடியும் பரவிக் கொண்டுதான் இருக்கும். அதனால் பாக்கி இல்லாமல் இவற்றைப் போக்க வேண்டும்.

தூயதாக்கிக் கொள்:

கண்களால் நன்கு பார்த்த பிறகே அடி எடுத்து வை. சுத்தமான தண்ணீரை மட்டுமே அருந்து. உண்மையால் தூய்மை பெற்ற பேச்சைப் பேசு. மனத்தால் சுத்தமானதெனத் தெளிந்தபின் அதன்படி நட.

அநீதியால் கிடைத்த பொருள் வேண்டாம்:

அநியாயத்தால் ஈட்டிய பொருளைப் பெறுவதைக் காட்டிலும் தரித்திரமே நல்லது. வியாதியால் வீங்கி உடல் பருத்து விடுவதை விட இளைத்திருப்பதே நல்லது.

அவன் எதிரி எனச் சொல்லாதே:

யாரையும் அவன் எனக்கு எதிரி என வெளிப்படையாகக் குறிப்பிடாதே; அல்லது அவனுக்கு நான் எதிரி எனவும் கூறாதே. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தானே வெளிப்படுத்தாதே. தனது எஜமானன் தன்னிடம் அபிமானத்துடன் இல்லை என்பதையும் வெளியாக்காதே.

சக்திக்கு மீறி ஈடுபடாதே:

உடற்பயிற்சி, இரவில் கண் விழிப்பு, வழி நடத்தல், அதிகச் சிரிப்பு, பேச்சு இவற்றில் சக்திக்கு மீறிஈடுபடாதே. யானையை இழுக்கத் துணியும் சிங்கம் வலுவிழந்து மடிவது போல இவற்றில் சக்திக்கு மீறி ஈடுபடுபவன் கேடுறுவான்.
இதுபோன்ற நற்பழக்கங்களை நீங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

ஆபஸ்தம்ப தர்ம ஸூத்ரம்:

ஆண், பெண் திருமணமானவுடன், கடமைகள், வாழ்க்கை வழக்கங்கள், மனப்பான்மை எல்லாம் புதிதாய் மாறியமைகின்றன. வயதினால் மட்டுமின்றி தாம்பத்யம் ஏற்பட்டதும் ஆண் - பெண் உடல் நிலையிலும் காரியத்துக்கேற்றவாறு பலவித வளர்ச்சிகளும் மாறுதல்களும் ஏற்படுகின்றன. அதனால் ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு முன்புள்ள வாழ்க்கைக் காலத்தில் எந்தவிதமான உணவும் நடவடிக்கையும் செய்து வந்தார்களோ அவற்றை அவ்விதமாகவே திருமணத்துக்குப் பிறகு அனுசரிக்கக் கூடாது.

அவை பற்றிய விவரம்:

தர்ம செயல்களைப் புரிய வேண்டும். பொருள் சம்பாதிக்க - சுகபோகங்களை அனுபவிக்க நல்ல சந்ததியை உண்டு பண்ண - சமுதாய சேவை செய்ய, உடல் திடம் பெற, மூலாதாரம் உணவாகவே இருப்பதால், பகல் - இரவு இருவேளையும் சாப்பிட வேண்டும். வயிற்றின் பாதியளவு கன பதார்த்தம், கால் பங்கு திரவம், கால் பங்கு வாயு சஞ்சாரத்திற்காக காலியாக விடுதல் மிகவும் நல்லது.

அமாவாசை, பெளர்ணமி நாட்களில் தம்பதிகள் இருவரும் உபவாசமிருக்க வேண்டும். இது குடலின் ஜீரண சக்தியின் பலத்தை நன்கு வளர்க்கும். தங்களுடைய திருமண நாளின் மாதம், நட்சத்திரம் கூடும் ஒவ்வோர் ஆண்டும், பிரியமான உணவு வகைகளைக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் புசித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இதனால் தம்பதிகளின் பரஸ்பரம் அன்பு மிகுதியாக வளரும். கணவன், மனைவியின் ஒற்றுமையும் அன்பும்தான் இக பர சகல இன்பங்களுக்கும் மூலப் பொருள் என்பது நிச்சயம். ஜோதிட விஞ்ஞானப்படி தாயின் கருவிலிருந்து பூமியில் ஜனிக்கும் லக்கினப்படி ஜாதக பலன் அமைவது போலவே, ஆண்,பெண் விவகாக லக்கினப்படியும் வாழ்க்கையில் ஜாதக பலன்கள் மாறி அமைகின்றன. அதனால் நீங்கள் உங்கள்
மனைவியுடன் ஒவ்வோர் ஆண்டும் திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com