நம்பிக்கை

அந்த ரூஃப் கார்டன் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிடுவதை சற்றே நிறுத்தி விட்டுப் பேசினார் சந்திரன்.
நம்பிக்கை

அந்த ரூஃப் கார்டன் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிடுவதை சற்றே நிறுத்தி விட்டுப் பேசினார் சந்திரன்.

""மூர்த்தி சார்... நான் இப்போ ரிட்டையராயாச்சு. பொழுதுபோக்குக்காக சோதிடம், ஜாதகம் பார்ப்பதையும் அதைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறேன். இப்போதான் பல்கலைக்கழகத்திலேயே சோதிடம் பாடமாகவே ஆகிடுச்சே... பிரபலமானவர்களின் ஜாதகம் வாங்கி அதை ஆராய்ந்துகிட்டுருக்கேன். உங்க ஜாதகமும் வேணும். நாளைக்குத் தபாலில் அனுப்பி வையுங்கள்'' ரசவடையின் சுவையில் மயங்கியிருந்த மூர்த்தி சிரிக்கிறார்.

""சந்திரன், தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு இந்த ஜோசியம், ஜாதகம் இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை. மன்னிச்சுக்குங்க. அது சரி... நீங்க ஒரு பெரிய நிறுவன மனிதவள மேலாளரா இருந்தீங்க... தொழில் வளர்ச்சி அப்பிடி, இப்பிடின்னு முழுக்க முழுக்க மனிதனையும் மிஷினையும் இயக்கினீங்க. இப்ப என்னடான்னா... உங்களுக்குச் சம்பந்தமே இல்லாத'' சந்திரன் இடைமறிக்கிறார்:

""அப்பிடியில்லை சார். அது ஒரு வாழ்க்கை . இது ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். நீங்க கூடத்தான் சொந்தமாகத் தொழிற்சாலை நடத்துறீங்க. அதே சமயம் பத்திரிகையில் கதை, சினிமாவுக்குப் பாட்டு எல்லாம் எழுதுறீங்க. இன்னும் சொல்லப் போனா... இந்த ரெண்டும்தான் நம்ம ரெண்டுபேரையும் இணைச்ச சங்கிலி. சரி, உங்களுக்கு வேண்ணா ஜோசியத்திலே நம்பிக்கையில்லாம இருக்கலாம். எனக்கு நம்பிக்கையிருக்கே. அப்போ சரி. உங்க பிறந்த நாள், மாதம், வருஷம், பிறந்த நேரம், பிறந்த ஊர் இதை மட்டும் சொல்லுங்க போதும்'' என்றார் .

ஸ்பூனை மேசைத் தட்டில் வைத்துவிட்டு சட்டைப் பையிலிருந்து மிகச் சிறு நோட்டுப் புத்தகம், பேனா, செல்பேசிகளை எடுத்தார். தொடர்கிறார்:

""தப்பா நினைச்சுக்காதீங்க ஒரு நிமிஷம். உங்க கைகளை ஒவ்வொண்ணா காட்டுங்க''

மூர்த்தி தன் எரிச்சலைக் காண்பித்துக் கொள்ளாமல், ""அவசியம் வேணுமா? எனக்குத்தான் இதில்'' ...

அவர் முடிக்குமுன் சந்திரன், "" ஒரே நிமிஷம்'' என்று கூறி மேசையின் மீது தனது வெள்ளைக் கைக்குட்டையை விரித்து அதில் நடுவே மூர்த்தியின் இடது உள்ளங்கையை மேல்நோக்கிப் பார்க்க வைத்து செல்பேசியில் அருகமைப் படம் எடுத்துக் கொண்டார். அடுத்து வலது கையையும். மூர்த்தி சுற்று முற்றும் பார்த்து நெளிந்தார்.

""உங்களுக்குத் தொந்தரவு குடுத்திட்டேன். மன்னிச்சுக்குங்க. நல்ல வேளை. உள்ளே கூட்டமாயிருக்கிற ஏசி ஹாலை விட இந்தத் திறந்தவெளி மொட்டை மாடி அமைப்பு நல்லாயிருக்கு'' என்றார் சந்திரன் மூர்த்தி , "" அடுத்து என்ன சாப்பிடுறீங்க'' எனக் கேட்க, "" இங்கே எது நல்லாயிருக்குமோ அதை நீங்களே சொல்லுங்களேன்'' என்கிறார் சந்திரன் வெள்ளந்தியாக.

உணவு கொண்ட பின், சந்திரனை அவர் தங்கியிருக்கும் எழும்பூர் ஓட்டலில் கொண்டு விட்டுவிட்டுத் தன் இல்லம் வந்து சேர்ந்தார் மூர்த்தி.

கிட்டத்தட்ட ஒருநாள் விட்டு ஒருநாள் மூர்த்தியிடம் பேசிவிடுவார் சந்திரன். எதாவது ஒரு விஷயம்.

""உங்க கைகளைப் புகைப்படம் எடுத்து வந்த பிறகு, நான் உங்க ஜாதகத்தைக் கணித்துக் கொண்டிருக்கேன். உங்க கவிதை நல்லாயிருந்தது. ஏன் நீங்க இன்னும் புது நாவல் ஆரம்பிக்கலை? இவை போன்ற அளவளாவல்... இடையே இலக்கிய, அரசியல், அக்கப்போர். ஊடக விவாதம் பற்றிய விவாதம்... பார்த்த சினிமா... படித்த நாவல்... கவிதை நூல்... என்றும் உங்க அடுத்த சினிமா பாடல் எந்தப் படத்தில்? அங்கே வெய்யில் எப்படி?''

மூர்த்திக்கும் எந்தப் பெரிய எதிர்பார்ப்போ, தொந்தரவோ இல்லாத இந்த மாதிரி, அன்பான இலகு மனநிலைப் பேச்சும் அவ்வப்போது தேவைப்படுகிறது.
அலுவலகத்தில் இருக்கும்போதும், இங்கே வீட்டில் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்போதும் சந்திரனின் தொலைபேசி வந்தால் எடுப்பதில்லை. அடுத்தமுறை பேசும்போது சந்திரனே சொல்வார்: ""நான் ரிட்டயராகி வீட்டில் சும்மா இருப்பவன். நீங்களோ பணியில் உள்ளீர்கள். அதுவுமில்லாமல் கவிதை எழுதுவது என்பது கரு சுமந்து குழந்தை பெறுவதுபோல. அந்தச் சமயத்தில் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது நான்''
..........
வந்தது இந்தக் கரோனா. முதலில் அங்கே எங்கோ என்பதாக இருந்தது இங்கும் வந்தேவிட்டது. காரணமோ, தீர்வோ எதுவுமே புரிபட இயலா நிலை, யாவருக்குமே, எங்குமே. ஊரடங்கு. கதவடைப்பு. வாகன ஓட்ட நிறுத்தம். முழு ஊரடங்கு. இப்படி வந்தது, முழு வீடடைவாக நிற்கிறது. கிண்டி தொழிற்சாலை... நுங்கம்பாக்கம் அலுவலகம் அனைத்தும் கதவடைக்கப் பெற்று, மூர்த்தி வீடடைவில் .

இப்போதெல்லாம் நகரம் ஓசைகள் அற்ற இயக்கம் அற்று பகலிலும் உறங்கும் நகரமாகவே உருவம் கொள்கிறது. காலையில் அக்காக் குருவியின் ஓசையும் குயிலின் குரலும் அருகிலேயே கேட்கிறது. மாமரக் காற்றின் ஓசை கூடக் கேட்கிறது இசையாக.

மூர்த்தி வாசலில் பால்காரர் வாகன ஒலி கேட்டுக் கதவு திறக்கச் செல்கிறார் .

திடீரென நினைவு வருகிறது. மூக்கு மூடி... முகமூடி... இது புகுத்தப்பட்ட புதிய பழக்கம். வாசலுக்குச் செல்வதானால் கூட முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம். பூங்கோதையின் கட்டளை. இதற்காகவே பூங்கோதை விதவிதமாக தனது தையல் யந்திரத்தில் மாஸ்க்கை தைத்துத் தந்துள்ளார்.

வராந்தாவில் ஆணியில் தொங்கும் முகமூடியை அணிந்து வாசல்கதவு திறந்து கூடையில் பால் பாக்கெட்டைப் பெற்று வருகிறார். வாசலில் கதவருகே கரைத்து வைத்திருக்கும் மஞ்சள், உப்புக் கலவைத் தண்ணீரில் பால் பாக்கெட்டை அமிழ்த்தி எடுத்த பின் தனது முகக் கவசத்தையும், கைகளையும் கழுவிக் கொண்டு வருகிறார். இன்றைய பாலை பிரிட்ஜில் வைக்கிறார், பூங்கோதை. நேற்றைய பால் பாக்கெட் எடுத்துக் காய்ச்சியதில் ஏலக்காய், இஞ்சி கலந்த தேநீர் கொண்டு வந்து தருகிறார். நன்றி புன்னகையுடன் பெறுகிறார் மூர்த்தி. முதல் தேநீர். சிற்றுண்டிக்குப் பின்னும் மாலையிலும் காப்பி. முன்னிரவில் சில சமயம் மீண்டும் தேநீர்.

இருவருக்கும் மத்திய வயது. மூர்த்தியின் கவிதையால் ஈர்க்கப்பெற்றவள் பூங்கோதை. ரசனை மனசு.

இத்தனைக் களேபரத்திலும் இந்த முழு வீடடைவு நாட்களில் ஈரோடு சந்திரனிடமிருந்து தினமும் ஒருமுறை தொலைபேசி.

""எப்பிடி இருக்கீங்க. ஜாக்கிரதை. வீட்டைவிட்டு வெளியே போகாதீங்க''

ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நேரத்தில். மூர்த்திக்கும் ஊர் நிலவரம் தெரிந்துகொள்ளும் அக்கறையில், ""அங்கே ஈரோடு எப்பிடி இருக்கு. நீங்க எப்பிடிச் சமாளிக்கிறீங்க? அங்கே உணவுப்பொருட்கள் தடையின்றிக் கிடைக்குதா?'' இப்படி .

நேற்று காலை சந்திரன் தொலைபேசியில் பேசிய பொழுது சற்றே வித்தியாசமான மெல்லிய குரலில், ""மூர்த்தி சார்... ஜாக்கிரதை. உங்க ஜாதகப்படி உங்களுக்கு இப்போ நேரம் சரியில்லை. கண்டம் ஒன்னு இருக்கு. அதைக் கடந்துட்டீங்கன்னா பயமில்லை. வீட்டை விட்டு வெளியே எங்கும் போகாதீங்க. கவனம்... சரி... வைச்சுட்றேன்'' என்றார்.

மூர்த்தி தனக்குள் சிரித்துக் கொண்டார் .

இந்த மந்தகாசக் கரோனா நாட்களில் மிக மெதுவாகவே இயல்பு வாழ்க்கை நகர்கிறது. என்ன செய்ய இருக்கிறது வேலை என்கிற அசமந்தம் மனதில் அட்டையாய் ஒட்டிக்கிடக்கிறது. அதே சமயம். ஐயோ அத்தனை வேலையும் முடங்கிக் கிடக்கிறதே என்றும் மறு மனசு சொல்கிறது. அடுப்படியிலிருந்து பூங்கோதையின் அதட்டல் அழைப்பு .

"" என்னங்க இப்பிடி. காலைல டிபன் சாப்பிடவே தினமும் பத்து மணி, பதினோரு மணி ஆனா எப்பிடிங்க? காலையிலே ரெண்டு இட்டிலி சாப்பிட்டுட்டுப் போய் பேச வேண்டியதுதான? யார் வேணாங்கிறாங்க உங்களை'' அக்கறை கோபமாய் வெளிப்படுகிறது. மூர்த்தி தலையைத் துவட்டியபடியே சென்று சிற்றுண்டியை உண்கிறார்.

""ஆமா. இன்னும் உங்க ஈரோட்டுப் ஃபிரெண்ட் இன்னிக்குப் போன் பண்ணலையா''

பூங்கோதையைப் பார்க்கத் திரும்பிய மூர்த்தியின் வாயருகே கொண்டு சென்ற இட்டிலித் துண்டு கீழே விழுகிறது.

கை கழுவி காப்பியை ரசித்தபடி சொல்கிறார். ""இல்லைப்பா... நறுமுகையில் கரோனா கவிதை கேட்டாங்கள்ல... அதை முதல்லே எழுதிடுறேன். அதுக்குள்ளே அவர் பேசலைன்னா, அப்புறம் பகல்ல நான் பேசுவேன்''

தனது எழுத்தறைக்குச் செல்கிறார். அவரை அறியாமலே செல்பேசியில் சந்திரனின் எண்ணைத் தேடி எடுத்து அழுத்துகிறார். முதலில் வழக்கம்போல் கரோனா தடுப்பு நடவடிக்கை அறிவிப்பு ஓடுகிறது. அதன் பின் அழைப்பு மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மூன்று நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்கிறார். அம் முனையில் தொலைபேசியை எடுக்கவில்லை. சரி. அவரும் நிதான மனிதராகிவிட்டாற்போல என்று நினைத்துத் தொலைபேசித் தொடர்பைத் துண்டிக்கிறார்.

மடிக் கணினியில் கவிதை எழுத ஆரம்பிக்கிறார். சட்டென்று மீண்டும் எழுந்து சென்று செல்பேசியை எடுக்கிறார் . சந்திரனின் எண்ணை அழுத்துகிறார். அதே முன்னெச்சரிக்கை அறிவிப்பு. மூர்த்தி காத்திருக்கிறார். இரண்டு நிமிடங்களில், ""ஹலோ... ஹலோ... யாருங்கோ?''

புதுக்குரல்! மூர்த்திக்குப் புரிபடவில்லை. அதற்குள் மறுமுனையில் அழுகுரலுடன், ""ஹல்லோ... யாருங்கோ''என்கிறது. மீண்டும் பெண்குரல் .

மூர்த்தி மீண்டும், சற்று உரத்த குரலில், ""அங்கே சந்திரன் இல்லையா? நான் மெட்ராஸ்லருந்து மூர்த்தின்னு''

"" ஐயோ... அவுரு போயிட்டாருங்கோ''

அழுகுரலே ஓங்கி ஒலிக்கிறது. நின்றிருந்த மூர்த்தி தளர்ந்து நாற்காலியைப் பிடித்துக் கொண்டு தனது கால்களைத் தரையில் அழுத்திப் பதிகிறார்..

"" நேத்து ராத்திரி படுத்தவருதாங்கோ. விடிகாலமே எந்திரிக்கல. போய்ட்டாருங்கோ''

"" சரி... சாரிம்மா... பிறகு பேசறேன்''

நாற்காலியில் அமர்கிறார் மூர்த்தி. காப்பியுடன் வரும் பூங்கோதை ஒன்றும் புரியாமல்.

"" என்னங்க... என்ன ஆச்சு'' எனக் கேட்கிறார், காப்பியை நீட்டியபடி .

""போயிட்டாராம்மா. சந்திரன் போயிட்டாராம்மா'' கலவரமும் இழப்பின் கனமும் சேர்ந்த குரலில், ""இப்பிடிப் போயிட்டாரே'' மூர்த்தி விம்முகிறார்.

பூங்கோதை அருகில் வந்து மூர்த்தியின் தலையைப் பெருமூச்சோடு ஆறுதலாக லேசாய் வருடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com