சினிபிட்ஸ்

எஸ்.ஏ.அசோகன் "ஒளவையார்' (1953) படத்தில்தான் ஒரு சிறு வேடத்தில் முதன் முதலில் அறிமுகமானார்.
சினிபிட்ஸ்
Published on
Updated on
2 min read

அசோகனின் ஆரம்பகாலப் படங்கள்!

எஸ்.ஏ.அசோகன் "ஒளவையார்' (1953) படத்தில்தான் ஒரு சிறு வேடத்தில் முதன் முதலில் அறிமுகமானார். பின்பு "இல்லற ஜோதி' (1954) படத்திலும் சிறு வேடம் ஏற்று நடித்தார். அடுத்து "மர்ம வீரன்' (1956) படத்தில் குடிமக்களில் ஒருவராக, ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். "குலதெய்வம்' (1956) படத்தில் ஒரு காட்சியில் டாக்டராக சிறு வேடத்தில் நடித்துள்ளார். அதாவது, புயலில் சிக்கி காயமடைந்த முத்தையாவுக்கு (எஸ்.வி.சகஸ்ரநாமம்) சிகிச்சை அளிக்கும் டாக்டராக ஒரு காட்சியில் நடித்தார்.

"புதையல்' (1957) படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்தார். இப்படி 5 படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த அசோகனுக்கு, "மாய மனிதன்' (1958) என்ற படத்தில் "மெய்யப்பன்' என்ற பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. "யார் இந்த இளம் வில்லன்' என்று பத்திரிகைகள் பாராட்டின. எம்.ஜி.ஆர். நடித்த "பாக்தாத் திருடன்' (1960) படத்தில் இவர் நடித்த வில்லன் வேடம் பேசப்பட்டது. எம்.ஜி.ஆரும் அசோகனும் சேர்ந்து நடித்த முதல் படம் "பாக்தாத் திருடன்' என்பது குறிப்பிடத் தக்கது.  

கலைவாணர் - மதுரம்!

கலைவாணரும்  மதுரமும் சிறந்த நகைச்சுவை ஜோடிகள், தங்களுக்கான பாடலை தாங்களே பாடிக் கொள்ளக் கூடியவர்கள். ஒரு பாடலில் மட்டும் கலைவாணருக்கு மதுரமும், மதுரத்திற்கு கலைவாணரும் குரல் கொடுத்துள்ளது ஓர் அரிய நிகழ்வாக உள்ளது. "காவேரி' (1955) படத்தில் ஒரு காட்சி. அதாவது, நினைவு தடுமாறிய நிலையிலுள்ள நாயகன் இளவரசன் விஜயனை (சிவாஜி கணேசனை) பழைய நினைவிற்கு கொண்டு வரும் முயற்சியில் கலைவாணர், மதுரம், பத்மினி, ராகினி, குசலகுமாரி, ரீடா - ஆகியோர் ஆடிப் பாடுவார்கள். இப்பாடல் காட்சியில் பெண் வேடத்தில் ஆடிப் பாடும் கலைவாணருக்கு மதுரமும், ஆண் வேடத்தில் ஆடிப் பாடும் மதுரத்திற்கு கலைவாணரும் குரல் கொடுத்துள்ளனர்.

கே.வி.ஸ்ரீனிவாசன்!

ஒரு வானொலியில் ஒலிபரப்பான நாடகத்தைக் கேட்டுவிட்டு கடிதம் எழுதிய நேயர்கள், "இந்த நாடகத்தில் என்.டி.ராமாராவ் நடிப்பதை ஏன் குறிப்பிடவில்லை' என்று கடிதம் எழுதினார்களாம். "நாடகத்தில் என்.டி.ராமாராவ் நடிக்கவில்லை, என்.டி.ராமாராவுக்கு குரல் கொடுத்த கே.வி.ஸ்ரீனிவாசன் என்பவர் நடித்தார்' என்று வானொலியில் பதிலளிக்கப்பட்டது. ஆம்! என்.டி.ராமாராவ் நடித்த படங்களில் அவருக்கு டப்பிங் பேசியது இந்த கே.வி.ஸ்ரீனிவாசன்தான். சிவாஜி நாடக மன்றம் நடத்திய நாடகங்களில் நடித்துள்ளார் இவர். 

என்.டி.ராமாராவ் நடித்த "கர்ணன்' படத்தில் கர்ணனுக்கு பெயர் சூட்டும் முனிவராகவும், "சம்பூர்ண ராமாயணம்' படத்தில் பாணராகவும் (பாடகர்), "மாயா பஜார்' படத்தில் கர்ணனாகவும், "மந்திரி குமாரி' படத்தில் ஒரு சிறு வேடத்திலும், "பொன்முடி' படத்தில் கணக்கன் வேடத்திலும், "மாங்கல்யம்' படத்தில் நாடக கம்பெனிக்காரர் பாலு என்ற வேடத்திலும், "நான் பெற்ற செல்வம்' படத்தில் ஒரு சிறு வேடத்திலும், "தலை கொடுத்தான் தம்பி' படத்தில் வில்லன் நாகநாதனுடைய (டி.கே.ராமச்சந்திரன்) கையாள் நரிக்கண்ணன் வேடத்திலும், மேலும் சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.  என்.டி.ராமாராவ் நடித்த நேரடி தமிழ் படங்களில் என்.டி.ராமாராவுக்கு கே.வி. ஸ்ரீனிவாசன் குரல் கொடுத்துள்ளார். என்.டி.ராமாராவ் நடித்த டப்பிங் (மொழி மாற்று) படங்களில் என்.டி.ராமாராவுக்கு குரல் கொடுத்தது பி.ஜெகதீசன் என்பவர்.

காதல் பாடல்களில் டி.ஆர்.ராமண்ணாவின் கைவண்ணம்!

டி.ஆர்.ராமண்ணா காதல் பாடல் காட்சிகளை வித்தியாசமான இடங்களில் படமாக்கியிருப்பார். அதாவது ஒரு குறுகிய இடத்தில் இருந்து கொண்டு காதலர்கள் டூயட் பாடுவதாக படமாக்கியிருப்பார். "நான்' படத்தில் காருக்குள்ளும், "மூன்றெழுத்து' படத்தில் பெட்டிக்குள்ளும், "தங்கச் சுரங்கம்' படத்தில் கிணற்றுக்குள்ளும், "புதுமைப் பித்தன்' படத்தில் சனிக் கிரகத்திலும், "பறக்கும் பாவை' படத்தில் சர்க்கஸ் மரணக் கூண்டுக்குள்ளும், "பணக்கார குடும்பம்' படத்தில் கட்டை வண்டிக்குள்ளும் - இப்படி வித்தியாசமான இடங்களில் காதல் பாடல்களைப்  படமாக்கியுள்ளார் ராமண்ணா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com