ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மறதி நோயைக் குணப்படுத்த...!

மூளையிலுள்ள நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் அறிவாற்றல் இழப்பின் மறதிநோய்க்கு அல்சைமர் நோய் எனப் பெயராகும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மறதி நோயைக் குணப்படுத்த...!

அல்சைமர்ஸ் நோய் எனப்படும் மறதி நோய்வராமல் இருக்கவும் வந்த பின்னால் குணப்படுத்தவும் என்ன வழி?

கோ.ராஜேஷ் கோபால்,
அரவங்காடு.

மூளையிலுள்ள நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும் அறிவாற்றல் இழப்பின் மறதிநோய்க்கு அல்சைமர் நோய் எனப் பெயராகும். அல்சைமர் பாதிக்கப்பட்ட நபர்களின் மூளையில் அதிக அளவு புரதங்கள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மூளையில் இருக்கும் நரம்பு செல்களுக்கு வழக்கமாகக் கிடைக்கப் பெறும் தகவல் தொடர்புகள், தேவையற்ற புரதங்களால் தடுக்கப்படுகின்றன. மரபணு குறைபாடு கொண்டிருந்தாலும், மூளையின் பக்கவாட்டு பகுதியில் ரசாயன சுரப்பு குறையும்போதும் இந்த உபாதை உருவாகிறது. மூளையின் செயல்திறன் குறைவதால் புதிய தகவல்களை மூளை பதிய வைத்துக் கொள்ளாது என்பதோடு, ஏற்கெனவே பதிவு செய்திருந்த தகவல்களும் மூளையை அண்டாது பொருள்களை உரிய இடத்தில் வைக்காமல் எங்காவது வைத்துவிட்டு அதை மறந்து தேடுவதும், முக்கியமான வார்த்தைகளை சட்டென்று நினைவுபடுத்திக் கொள்வதில் சிரமமும், குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மறப்பதும், அன்புக்குரியவர்களின் பெயர்களை மறப்பதும் இந்த உபாதையின் பிரச்னைகளாகும்.

நடுத்தர வயதுக்கு மேல் எப்போதும் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நினைவுத்திறனை அதிகரிக்கும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். எப்போதும் யாரிடமாவது பேசிக் கொண்டே இருப்பதும், பொதுப்படையான விவாதங்களில் ஈடுபடுவதும், புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதும் இந்த நோயிலிருந்து தள்ளி வைக்கும் சில உபாயங்களாகும். மனதை அழுத்தும் - மனச்சோர்வை உண்டாக்கும் விஷயங்களை ஒதுக்கி எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தின் பாதிப்பை நம்மால் பெருமளவு தவிர்க்க முடியும்.

மனம், மூளையைப் பயன்படுத்திச் செய்யக் கூடிய செயல்பாடுகளில் கீழ்வரும் தொகுப்புகளை நாம் அறிவது அவசியமாகும்.

1.சிந்த்யம்: ஒவ்வொரு விஷயத்தையும் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்று சிந்தனை செய்வது.

2.விசார்யம்: இது இவ்விதம் இருக்கத் தக்கதா? தகாததா? என்று விமர்சனம் செய்தல்

3. ஊஹ்யம்: இதை இவ்விதம் செய்தால் இவ்விதம் பலிக்கக் கூடியது என்று வரக் கூடிய பயனை ஊகித்து அறிதல்

4. த்யேயம்: பரம்பொருளை சுத்த சைதந்ய ஸ்வரூபமாகவோ, பராசக்தியுடன் சேர்ந்ததாகவோ தன் மனதுக்கு உகந்த உருவத்துடனோ, அதே சித்தத்
துடன் தியானம் செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது விஷயத்தைத் தியானம் செய்வது

5.ஸங்கல்ப்யம்: இது நல்லது அல்லது கெடுதல் என்று காரணங்களைக் கொண்டு பரீட்சித்து தீர்மானித்தல்.

6.அநுபாவ்யம்: இன்பங்களையும் துன்பங்களையும் உணர்ந்து அனுபவித்தல்.

7.நிஜநிக்ரஹணம் (தன்னடக்கம்): மனமே முதலில் சிந்திக்காமல் ஒரு குற்றமான கெடுதலான எண்ணத்தை எண்ணுகிறது. கெட்ட காரியத்தை புலன் மூலம் நடத்தவும் தொடங்குகிறது. ஆனால் தன் தவறுதலைத் தானே உணர்ந்து, பச்சாதாபம் கொண்டு, கெட்ட எண்ணத்தையும் காரியத்தையும் அகற்றிக் கொள்கிறது. நல்லதை மேற்கொள்ளத் தீர்மானிக்கிறது. அவ்வாறு செய்கிறது.

8.ஸ்மரணம்: அறியப்பட்ட - செய்யப்பட்ட - விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுதல் அவசியமான சூழலில் அதை உபயோகித்தல்.

மேற்குறிப்பிட்ட மனதின் காரியங்களை நாம் சீராக்கிக் கொண்டு பயன்படுத்தினால், நீங்கள் குறிப்பிடும் அல்சைமர்ஸ் நோயின் தாக்கத்தைத் தவிர்க்கலாம். மூளைக்குச் சிகிச்சை அளிப்பதை விட, மனதிற்குச் சிகிச்சை அளிப்பதே சாலச் சிறந்தது. அந்த வகையில், பஞ்சகவ்யகிருதம், கல்யாணக கிருதம், மானஸமித்ரம் குளிகை போன்ற ஆயுர்வேத மருந்துகளால் மனதையும், மூளையையும் சிகிச்சை செய்து காப்பாற்ற முடியும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com