சினி பிட்ஸ்

இரு நடிகைகளுக்குப் பாடிய டி.எம்.செளந்தரராஜன் டி.எம்.செளந்தரராஜன், பிரபலமான நடிகர்களுக்கு மட்டுமின்றி, பிரபலமில்லாத நடிகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார்.
சினி பிட்ஸ்

இரு நடிகைகளுக்குப் பாடிய டி.எம்.செளந்தரராஜன் டி.எம்.செளந்தரராஜன், பிரபலமான நடிகர்களுக்கு மட்டுமின்றி, பிரபலமில்லாத நடிகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். இரு நடிகைகளுக்கு இவர் குரல் கொடுத்துள்ளார். "எங்கள் குலதேவி' படத்தில் "ஏ குட்டி நாவம்மா' என்ற மேடை நாடகப் பாடல் ஒன்று இடம் பெற்றது. இப்பாடல் காட்சியில், ஆண் வேடமிட்ட எம்.மைனா வதிக்கு டி.எம்.செளந்தரராஜனும், எல்.விஜயலட்சுமிக்கு சுசீலாவும் குரல் கொடுத்துள்ளார்கள். இதேபோல் "மகராசி' படத்திலும் "மச்சானைப் பார்த்துவிட்டு மான்குட்டி மயங்குது' என்ற பாடலை மனோரமாவுக்காக டி.எம்.எஸ். பாடியுள்ளார். 

பல படங்களிலும், ஆண் வேடமிட்ட பெண்களுக்கு பெண்கள்தான் குரல் கொடுத்துள்ளார்கள். "கலை அரசி', "மர்மவீரன்', "கன்னியின் காதலி', "ரிக்ஷாக்காரன்', "தில்லானா மோகனாம்பாள்', "வாழ்க்கை', "தெய்வத்தின் தெய்வம்' - ஆகிய படங்களில் ஆண் வேடமிட்ட பெண்களுக்கு, பெண்கள்தான் குரல் கொடுத்துள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மூத்தவர்களுக்கு தந்தையாக நடித்த சிவாஜி கணேசன்!


சிவாஜி கணேசன் தன்னை விட மூத்தவர்களான இரு நடிகர்களுக்கு தந்தையாக நடித்துள்ளார். சிவாஜியை விட 6 வயது மூத்தவரான ஸ்ரீராமுக்கும், 10 மாதங்கள் மூத்தவரான எஸ்.எஸ்.ஆருக்கும் சிவாஜி தந்தையாக நடித்துள்ளார்.

"வாழ்விலே ஒரு நாள்' படத்தில் ஸ்ரீராம் நாயகனாகவும், சிவாஜி நாயகனின் தந்தையாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் குற்றம் செய்த தந்தையைக் கைது செய்யும் கடமை தவறாத சப் - இன்ஸ்பெக்டர் முருகனாக நடித்தார் ஸ்ரீராம்.

"ரங்கோன் ராதா' படத்தில் கொடுமைக்கார தந்தையாக வில்லன் குணம் கொண்ட நாயகன் வேடத்தில் சிவாஜி கணேசனும், அவரது முதல் மனைவியின் (பானுமதி) மகனாக எஸ்.எஸ்.ஆரும், இரண்டாவது மனைவியின் (எம்.என்.ராஜம்) மகனாக ஏ.வீரப்பனும்  நடித்துள்ளார்கள்.

பழைய காமெடி நடிகர்!

1935- ஆம் ஆண்டிலிருந்து 1958 - ஆம் ஆண்டு வரை சுமார் 50 படங்களில் நடித்துள்ளார் இந்த ஏழுமலை. இவர் ஒரு சிறந்த காமெடியன் மற்றும் நாடக நடிகர். நாடகம் மற்றும் சினிமாவில் நடிக்கும் போது இவர், தன் அப்ளாக் குடுமியுடன்தான் நடிப்பார். இவர் தன் பெயரிலேயே "ஏழுமலையான் பிக்சர்ஸ்' என்ற அடையாளத்தில் "மாதா பிதா குரு தெய்வம்' என்ற படத்தை தயாரித்தார். படம் வளரவும் இல்லை, திரைக்கு வரவும் இல்லை. இவர் இரு பாடல் காட்சிகளில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்த இரு பாடல்களில், ஒரு பாடலில் டி.எம்.செளந்தரராஜனே இவருக்கு குரல் கொடுத்துள்ளார்.

"மாங்கல்யம்' படத்தில் வி.எம்.ஏழுமலையும் ஏ.கருணாநிதியும் நடித்துள்ள "கூஜா கூஜா கூஜா' என்ற பாடல் காட்சி ஒன்று உள்ளது. இப்பாடலில் வி.எம்.ஏழுமலைக்கு டி.எம்.செளந்தரராஜனும்,  ஏ.கருணாநிதிக்கு கே.ஆர்.செல்லமுத்துவும் குரல் கொடுத்துள்ளார்கள்.

"மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் ஏ.ஜி.ரத்னமாலாவும் எஸ்.சி.கிருஷ்ணனும் பாடும் "அடி தாராபுரம் தாம்பரம்' என்ற பாடல் காட்சியில் வி.எம்.ஏழுமலையும் டி.பி.முத்துலட்சுமியும் நடித்துள்ளார்கள். 

எஸ்.எஸ்.ராஜேந்திரனும் விஜயகுமாரியும் அண்ணன் தங்கையாக நடித்த படம்!


ஜெமினி - சாவித்திரி, ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா தம்பதிகள், பல படங்களில் காதலர்களாக, கணவன் மனைவியாக நடித்துள்ளார்களே தவிர,  அண்ணன்  தங்கையாக நடித்ததில்லை. ஆனால், எஸ்.எஸ். ராஜேந்திரனும் அவருடைய மனைவி விஜயகுமாரியும் பல படங்களில் காதலர்களாக மற்றும் கணவன் மனைவியாக நடித்திருந்தாலும், ஒரு படத்தில் அண்ணன் தங்கையாக நடித்துள்ளனர். 

"கைதியின் காதலி' படத்தில் அண்ணன் அழகிரி வேடத்தில் எஸ்.எஸ்.ஆரும், தங்கை கண்ணம்மா வேடத்தில் விஜயகுமாரியும் நடித்துள்ளார்கள். இப்படத்தில் எஸ்.எஸ்.ஆரின் ஜோடியாக எல்.விஜயலட்சுமி நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com