வாயுள்ள பிள்ளை

கடந்த ஒரு வாரமாகவே மாவூத்துவேலன்நினைவு,பூவைச் சுற்றிவரும்தேனீ போல சுற்றிச் சுற்றிவருகிறது.
வாயுள்ள பிள்ளை


கடந்த ஒரு வாரமாகவே மாவூத்துவேலன்நினைவு,பூவைச் சுற்றிவரும்தேனீ போல சுற்றிச் சுற்றிவருகிறது.மாவூத்துவேலன்எனது நண்பனுமில்லை; சக வாசிப்பாளனுமில்லை; அக்கம் பக்கத்தானுமில்லை; ஊரூராய்த்திரிந்து யாசித்து தின்பவன்; என்னை விட ஐந்தாறு வயது மூத்தவன். வயது முகத்தில் தெரியும்; உடல் வளர்ச்சியில்தெரியாது.கருஞ்சட்டிக் கருமேனி .கிழிந்த டிரவுசரைமுடிந்திருப்பான்; மேலே பித்தானில்லா பழுப்பேறிய சட்டையை ஒருஊக்கால் பிணைத்திருப்பான். அது சன்னல் திரைபோல் மேலும் கீழும் விலகி காற்றிலாடி நெஞ்செலும்புகளையும், ஒட்டிய வயிறையும் காட்டும். அவனை யார் திட்டினாலும்,அடித்தாலும் மறந்துவிடும் பிள்ளை மனது.வறுமையிலும் சிரித்த முகம். எனக்குபத்துவயதில் அவன் அறிமுகம். 

அவன்காலை ஏழு மணிவாக்கில் கிராமத்து ஜனங்கள் சாப்பிட்டு வேலைக்குக் கிளம்பும் முன்ஒவ்வொரு வீட்டின் முன்னும்நிற்பான்; முக்கால் பகுதி மூடிய விழிகளை சிறுபட்டுப்பூச்சி சிறகசைப்பதுபோல் இமைகளை அசைத்தசைத்து பார்த்தவாறுசிரித்த முகமாய் "டகுடகு...டகுடகுடண்டகு டகுடகு...டிவிடிவி... டிவி டிவிடிண்டகு டிவிடிவி...' என்றுஅவன் வாய் உறுமி மேளத்தை கம்பீரகாந்தமாய் ஒலிக்கும்;இடக்கை உறுமி அடிப்பதுபோல் அசையும்; வலக்கை லேஞ்சி கட்டி ஆடுவது போலும் சுழலும். கால்கள் ரெண்டும்மாறி மாறிதாள லயத்துக்கு ஏற்ப முன்னும் பின்னும் பக்கவாட்டிலும்அசைந்தபடியும்இருக்கும்.தாள லய வீச்சு வெளிப்படும்போது ஒழுங்கில்லா கடைவாயிலிருந்துவழியும் சலவாய் நீரைவலக்கை துரிதகதியில் துடைத்துஆட்ட அடவை மேற்கொள்ளும்.எனது சிறுவயதில் இவ்வளவு நுட்பமாய்க் கவனித்தேனா தெரியவில்லை.ஆனால் மாவூத்துவேலனைஅடுத்தடுத்து நான்பார்த்ததை நினைவுகூரும்போதுஇந்த நினைவுச் சித்திரம் மனதில் விரிந்து என்னுள் அவன் மீது அன்பைச் சுரக்கச்செய்கிறது.

அப்போதுஎனதப்பா இறந்த சமயம்.அம்மாவும் நானும்பாட்டி வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தோம். தாய் மாமாவுக்குஆறு மாதத்திற்கு முன்தான் கல்யாணமாகியிருந்தது.மாமாவும், மனைவியும்ஆசிரியர்கள். மாமாவின் பள்ளி பத்து கிலோ மீட்டர் தொலைவில்ஒரு கிராமத்தில் இருந்தது. அக்காவின் பள்ளிஇந்தக் கிராமத்திலிருந்துமூன்று கிலோமீட்டர்தூரத்தில் உள்ள கிராமத்தில் இருந்தது.பள்ளிக்குப் போகும்போதுமாமா சைக்கிளில் அக்காவை அவரது பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வார்.வரும்போது அக்கா நடந்துவரும்.மாமா சைக்கிளில் வீடு திரும்புவார்.

இப்படியான ஓட்டத்தில்அக்கா கர்ப்பம்தரித்திருக்கிறாள்என்ற சந்தோசத்தில் மாமா முதல்நாள் இராத்திரி வாங்கி வந்த அல்வா, ஜிலேபிகளை காலையில்அக்காஎன்னிடம் கொடுத்தாள்.நான் அல்வாவாவை சுவைத்துக் கொண்டிருக்கும் வேளையில்மாவூத்துவேலன் எங்கள்வீட்டுவாசல்முன்அவனது தாளலயத்தைஅவிழ்த்து விட்டான். அவனது தோற்றமும், சலவாய் வழியும் முகமும், இசைக்கோலமும்ஏற்படுத்திய பாதிப்பில் ஜிலேபியை அவனிடம் கொடுத்தேன்.அவன் கையில் வாங்கி கண்ணருகே கொண்டு சென்று பார்த்தான்;அதன் நிறமும், மனமும், கையில் ஒட்டிய சர்க்கரைப் பாகின் பிசுபிசுப்பும்அவனை மகிழ்ச்சிப்படுத்தஎன்னை நிமிர்ந்து பார்த்து சிரித்தபடியேவாசலுக்கு வெளியே போனான். 

இதைக் கண்ட மாமா மனைவிக்கு கோபம் பொங்க, ""கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்? இனம் இனத்தோடு சேருமாம்னு... பிச்சைக்காரனுக்கு ஜிலேபியைக் குடுக்கிறது பாரு'' என்று சொல்லிஎன்னை அடிக்க வந்தது. வாசலைக்கடந்துகொண்டிருந்த மாவூத்துவேலன் காதில் விழுந்ததும், அவன் திரும்பிவந்து, ""சின்ன அய்யா, இதை நான் திங்கலை.இந்தாங்க, நீங்க வேண்டியதை எடுத்துகிட்டு எனக்கு இம்புட்டூண்டு குடுங்க''என்றான்.

""ஆமாடா, ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான்; ரெண்டுபேரும் சேர்ந்துகாக்கா கடி கடிச்சுத் தின்னுங்க.ஆளும் முகரையும் பாரு.இனிமேஇந்தப்பக்கம்வந்தா நடக்கிறது வேறஎன்றபடிஅவனை விரட்டிட்டுஎன்னை அடிக்க வந்தது. நான் அம்மாவிடம் ஓடினேன்.

அக்காவின் தேள்கொட்டும் வார்த்தைகளை கேட்டதும் பொறுக்காது வந்த அம்மா, ""ஏய், நாக்கை அடக்கிப் பேசு.யாருக்கோவாழ்வு வந்தா என்னமோ செய்வாங்களாம்.அதுமாதிரி நடந்துக்கிறதை நிறுத்திக்க.எம்மவனுக்கு அவுங்கப்பா வாங்கிக் குடுத்து அவன் தின்னாத பலகாரத்தையா உங்கப்பன் வாங்கிக்கொடுத்துநீ தின்னுருக்கப் போறே...'' என்று பேசியதும்வீசிய புயலில்அக்கா தான் பணியாற்றும் கிராமத்துக்கே மாமாவுடன்குடியேறிவிட்டாள். 
""குடும்பத்து வாரிசை சுமந்துகிட்டு இருக்கிறவளைவிரட்டிவிட்டுட்டேயே'' என்று அம்மாவைத் திட்டிவிட்டு பாட்டி மாமாவுடன்போய்விட்டது. 
இந்நிகழ்வுக்குப் பின், மாவூத்துவேலன்எங்க வீட்டுப்பக்கம் வரவில்லை. என்றாலும் எங்கள் தெருவிலோ, அடுத்த தெருவிலோ அவன் எழுப்பும்"டண்டகு... டவிடவி டிண்டகு டிவி டிவி...' தாளகதிஎனது மனத்துடிப்பில் கலந்து உடலெங்கும் புல்லரிக்கும்.
ஆண்டிபட்டியில் மேனிலைப் பள்ளிப்படிப்பும், மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கிபடிக்கப்போன போதும் கிராமத்துக்கு வருகையில் அவ்வப்போது மாவூத்துவேலன் நினைவு எழும். ஒரு விடுமுறையின் போதுஎப்படியாவது அவனைப் பார்க்க ஆவல் உந்தியது.எனது கிராமத்து நண்பர்கள் முத்துகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோருடன் அவன் இருக்கும் போடிதாசன்பட்டிக்கு சைக்கிளில் போனோம். 
மாவூத்துவேலனைப் பற்றி ஊர் மந்தைக் கடையில் ஒரு பெரியவரிடம் விசாரித்தோம். சுற்றியிருந்தவங்கஎங்களைஏற இறங்கப் பார்த்தார்கள். 
""என்ன விவரம்? அவன் ஏதாவது தின்பண்டத்தை எடுத்துட்டு வந்துட்டானா?'' 
""ஐயோ, பாவம்...அதெல்லாம் எதுமில்லைங்க.அவனோட உறுமிப் பாட்டை கேட்டு ரொம்ப நாளாச்சு. அவனையும் பார்த்து ரொம்பநாளாச்சு; அவனைப் பார்க்கலாமுன்னு வந்தோம்'' 
""பாருய்யா...நம்ம சலவாயனுக்குரசிகர்கள் எல்லாம் இருக்காங்க...அவனைப் பத்தி நீங்க சொல்றது சந்தோசமா இருக்கு.இங்கதான் வீட்டுக்கு வீடு அவன் போய் நின்னான்னாஊத்துற கஞ்சியை குடிச்சுகிட்டு தோட்டக்காடுதிரிவான்.களைஎடுக்கிற இடத்தில ஆளோட ஆளா ரெண்டு களையைப் பறிச்சுகிட்டுவாய்க்கு வந்ததைப் பாடிக்கிட்டு நிப்பான்.கடலை எடுக்கிற இடத்தில் அவன்ஆயிற கடலைக்குதக்க கொடுக்கிற கூலியை வாங்கி நல்லதைப் பொல்லதைத்தின்னு வயித்துப் பிழைப்பை ஓட்டுறான்.ஆளு வளந்துட்டானில்ல, வெளியூர்க்காரக அவனுக்கு திங்க எதுவும் குடுக்கிறதில்லை.திருடனைக் கணக்கா அடிச்சு விரட்டுறாங்க.அதனால அவன்ஊரைவிட்டு எங்கேயும் போறதில்லை.உள்ளூரில யாரும் குடுத்தா தின்பான்.இல்லாட்டி வேப்பம் மரத்தடியில பாட்டு படிச்சுகிட்டேபடுத்துக் கிடப்பான்.யாரும்எதாவது சொல்ற வேலையைச்செய்வான்.குடுக்கிறதைத் தின்பான்.இப்படி அவன் பிழைப்பு ஓடுது''

""அய்யா, அவனுக்கு, தாய் தகப்பன், சொந்த பந்தம்னு யாருமில்லையா?'' 

""அவனுக்கு சின்னவயசிலேயேகண்பார்வை குறைஞ்சு, சலவாய் வழிஞ்சு... பேச்சும் சுத்தமா வரலை, சோதிடம் பார்க்கும் குடும்பத்தில பிறந்திட்டு வாக்கு சொல்லமுடியாத பிள்ளை எப்படி பிழைக்கப் போறான்கிற கவலையிலஅவுங்க அப்பன்செத்துப் போனான்.ஊருக்கு பஞ்சாங்கம், சாதகம் பார்த்து ஊருக்கு நல்லதுசொல்ல வேண்டிய பிள்ளை ஊருக்குவெளியே போய் உறுமியடிக்கிறதைப் பார்த்து வாய்த்தாளம் போட்டுத் திரியிறானேனு அம்மாக்காரியும்கவலைப்பட்டுஅவனை பள்ளிகூடத்துக்கு அனுப்பினா; அவன்வசங்கல. கவலையில நொந்து செத்துப்போனா. அம்மா செத்ததுக்கு அக்கம்பக்கத்தார்வந்து அழுகுறாக.இவனுக்கு கவலை தெரியாம உறுமிக் கொட்டுக்காரன்களோட சேர்ந்து தாளம் போட்டு ஆடினான்.இப்படிப்பட்ட பயலை எப்படி வளர்க்கப் போறேன்னு அவனோட அம்மாத்தாகாரியும் ரெண்டுவருஷம்இவனோட மல்லுக்கட்டி, மன்றாடி மண்டையைப் போட்டுட்டா. ஊரு பெரியமனுசங்கசேர்ந்துஅவனைக் கூட்டிப்போயி உறுமிக்கொட்டுக்காரங்க கிட்டப் பேசி அவனுக்கு முறையா உறுமி கத்துக்குடுத்துஉங்களோட சேர்த்துக்குங்கன்னுசொல்லிப் பார்த்தோம்; அவிங்க ஒத்துக்கலை.பிறவு என்ன செய்ய? அவன் இந்த ஊருப்பிள்ளையாத்தான் திரியறான்.தைப்பொங்கல்,ஊரு முத்தாளம்மன் பொங்கல் காலங்கள்ல அவனுக்கு துணிமணி எடுத்துக் குடுப்போம்.அம்புட்டுத்தான்''

நாங்க பேசிகிட்டிருக்கும் போதே, யாரோ போயி அவனைத் தேடி இழுத்துவந்தார்கள். மந்தையில்கூட்டமாநிற்கிறதைப் பார்த்ததும், அவன் வரத் தயங்கி ஓட முயன்றான்.அவனை இழுத்து வந்து என் கையில் கொடுத்தார் ஒருவர்.

என் கை பட்டதும் அவனது மூக்கு துடித்து, கண் ரெப்பை அடித்து, ""சிலேப்பி சின்ன அய்யாவா... நல்லா இருக்கீகளா?அம்மா, சொந்த பந்தமெல்லாம் நல்லா இருக்காகளா ? படிப்பு முடிஞ்சு வேலை கிடைச்சுருச்சாய்யா''என்று கேட்கவும் எனது மேனி சிலிர்த்து விம்மி பெருமூச்சு விட்டு பேச்சிழந்துஅவனைக்கட்டிப் பிடித்தேன்.

""நல்லா இருய்யா.. . நல்லா இருய்யா...'' என்றபடிஎனது பிடியிலிருந்து விலகி நின்றான்.எனது நண்பர்கள் உள்பட ஊரேஅன்னம்பாரித்துநின்றது.என்னைச் சுதாரித்துக் கொண்டுஅவனைஎங்களருகில்உட்கார வைத்துநாங்கள் கொண்டு வந்தபலகாரத்தைக் கொடுத்தேன்.அவன் உட்கார மறுத்தான். பலகாரத்தைவாங்கிக் கொண்டான். 
ஊர்ப்பெரியவர், ""எலேய் தம்பி, உம்பாட்டைக் கேட்கணுமுன்னு சித்தனம்பட்டியிலிருந்து வந்திருக்காகப்பா.செத்த பாடு''
"'அப்படியா...யாராச்சும் ஒரு முடக்கு தண்ணி குடுங்க'' என்று ஊர்ப்பெரியவரிடம் பலகாரப் பொட்டலத்தைக்கொடுத்தான்.கைகளைக் குவித்து வாகாக தண்ணீர் குடிக்க முகத்தைத்தாழ்த்தினான்.
சாட்டையில் அடிபட்டது போல் எனது முதுகு நெளிந்தது. கடைக்காரர்செம்பிலிருந்து தண்ணீர் ஊற்றினார்.தாகம் அடங்கவும் தலையை அசைத்தான். செம்பு நகரவும் தலை நிமிர்ந்து முகத்தை கைகளால் துடைத்தான். தனது இருகைகளை நீட்டி தன்னைச் சுற்றி ஒருமுறை சுழன்றான். அவனுக்கு இடம் கொடுத்து ஊரார்நகர்ந்துநின்றனர். நன்றாக எச்சிலைவிழுங்கித் தொண்டையைச்செருமி சரி செய்தான். 

நான் கொண்டுவந்தடேப்ரிகார்டரைஇயக்கினேன்.அவன் தொடங்கினான். 

இடக்கைஉறுமி மேளம் அடிப்பதுபோல்அசைய; வலக்கைலேஞ்சி சுற்றியதுபோல்சுழன்றாடஅதற்கேற்ப கால்கள் முன்னும் பின்னும் போய்ஆட, " ட்றும்...ட்றும்... ட்றும்... ற்...ற்...றும்.டகுடகுடண்டகு டகுடகு... டிவிடிவி... டிவி டிவிடிண்டகு டிகுடிகு...டிவி.. டிவி...தன்னன்னநகர்தன்னதன்னன்ன நகர்தன்ன...என்று புதுப்புது ஒலிலயங்களோடு, ஹேய்...இந்தா...இப்படி... இந்தா...இப்படி இப்படி' என்றுஆட்ட உற்சாக ஒலிகளோடு ஆடினான்.வேர்வைஅருவியாய் வழிந்துமாவூத்துவேலனின் சட்டையைத் தொப்பலாக்கியது. நிஜமாகவே பல்சுவை தேவராட்டம் பார்ப்பதுபோல் உணர்வு ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் அவனைத் துன்புறுத்துகிறோமோ என்ற உணர்வு வரஅவனைக் கட்டிப்பிடித்து நிறுத்தினேன். அவனிடம் பத்து ரூபாய்கொடுத்தேன்.

""துட்டு வேண்டாம் சின்ன அய்யா.அதான் பலகாரம் குடுத்திட்டீங்கள்ல''என்று மறுத்தான்.""உன்னை இன்னொரு சமயம் வந்து பார்க்கிறேன்'' என்று அவனிடம் விடை பெற்றேன். ஊர்ப்பெரியவரிடம், ""அய்யா ரொம்ப நன்றி, மாவூத்துவேலனை பத்திரமா பார்த்துக்குங்க, இவனால இந்த ஊருக்கு நல்ல பேரு கிடைக்கும்''அவரது கைகளைப் பற்றிச்சொல்லி புறப்பட்டோம். 

போகும்போதுஎனக்குசைக்கிள் மிதிக்கத் தோன்றவில்லை.முத்துகிருஷ்ணன் மிதிக்க நான் பின்னால் உட்கார்ந்தேன்.மாவூத்துவேலன் நினைவாகவே இருந்தேன். நண்பர்கள் இருவரும் ஏதேதோ பேசினார்கள்; என் மனதில் உட்காரவில்லை. 

மதுரைக்கு வந்ததும்எனது நண்பர்கள் மூலம்மதுரை வானொலி நிலையத்தில் இயக்குநரைச் சந்தித்து மாவூத்துவேலன் பாடிய உறுமி தாளத்தைக்கேட்கச் செய்தேன்.

""நன்றாக இருக்கிறது.இதைக் கோடை பண்பலை மூலம்அவரிடமே நேரே போய் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்கிறேன்'' என்றார்.

ஒருவாரம் அவகாசம் தெரிவித்து போடிதாசன்பட்டி கிராமஅலுவலருக்கு தகவல் தெரிவித்துவிட்டு சோமாஸ்கந்த மூர்த்தியின் குழுவினர் கிராமியச் சூழலில் மாவூத்து வேலனின் உறுமி தாள இசையைப்பதிவு செய்தனர்.மூன்றாம் நாள் அறிவித்துவிட்டு மண்ணின் மனம் நிகழ்வில் அரைமணி நேரம் ஒலிபரப்பினார்கள். இத்தகவலறிந்த சுற்றிலும் உள்ள கிராமத்து மைக்செட்காரர்கள் டேப்பில் பதிந்து வைத்து சந்தர்ப்பம் வாய்த்தபோதெல்லாம் அவரவர் பாணியில் வர்ணனைகளோடு தமது ஒலிபெருக்கிகளில் ஒலிபரப்பினர். போடிதாசன்பட்டி பெயர், மாவூத்துவேலனின் தாளலயங்கள் கோடைபண்பலையில் வர்ணனையோடு உலா வந்தது.வேலனுக்கு வயிறு நிறைய ருசியான உணவும், நல்ல உடைகளும்கிடைத்தன. போடிதாசன்பட்டிக்காரர்கள்சித்தனம்பட்டி பெரியவர்களிடம் என்னைப்பற்றி பெருமையாகப் பேசினாராம். 

எனக்கு அந்த இசை நிகழ்ச்சியைக் கேட்கஅவகாசம் கிட்டவில்லை; வேலை தேடி சென்னை, பெங்களுரு, ஐதராபாத் என்று அலைந்து கொண்டிருந்தேன். ஒருமாத அலைச்சல்களுக்குப் பின் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தற்காலிக வேலை கிடைத்தது. நல்லவேலை கிடைக்கும் வரை சோற்றுப்பாட்டுக்குகவலை இல்லை. அம்மாவின் கவலைக்கு கொஞ்சம் ஆறுதல்.டிசம்பரில் கிடைத்த மூன்றுநாள் விடுமுறையில் கிராமத்துக்கு அம்மாவைப் பார்க்க வந்தேன்.நண்பர்களும் சேர்ந்து கொண்டனர். 

வழக்கமான ஊர்ப்புறணிக்குப் பின்மாவூத்து வேலனின்உறுமி தாள லய நிகழ்வை கோடைப் பண்பலை ஒலிபரப்பைஎனக்கு போட்டுக் கேட்கச் செய்தார்கள்.வேலனின் குரலில் உறுமி தாள முழக்கத்தையும், குழைவையும் வெளிப்படுத்தும் விதமாக கேள்விகள் எழுப்பி மாவூத்துவேலனின் மனதில் பதிந்திருந்த இசைநுட்பத்தைக் கறந்து காற்றில் இசைவெள்ளத்தைமடை மாற்றியிருந்தார்கள். கேட்கும்போது அழவும், மகிழவும், மனம் மெலிதாகி பறக்கவும் செய்வித்தது.உருகி,நெகிழ்ந்து, உடலற்று உணர்ந்தேன்.

நண்பர்கள் தயங்கித் தயங்கி என்னிடம் பேச்சைத்தொடங்குவது போலிருந்தது. என்னவென்றேன். மாவூத்துவேலனின் கோடைபண்பலை நிகழ்ச்சி தென்மாவட்டங்கள் பூராவும் வேலனையும், அந்த ஊரையும் பற்றி பெருமையாகப் பேசச் செய்துவிட்டது. இதன் தாக்கத்தில்உள்ளூர் உறுமிமேளக்காரர்கள்மாவூத்து வேலனைதங்கள் குழுவில் சேர்த்து அவனுக்குதக்க மரியாதை செய்கிறோம் என்று ஊர்க்காரர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். 

இந்தத் தருணத்தில்வைரஸ் காய்ச்சல் தாக்கிவேலனை சுருட்டி விழுங்கிவிட்டது.வேலன் இறந்த செய்தியை சுற்றுப்பட்டிகளில் உள்ள மைக்காரர்கள்தகவல் பரப்பி அந்த ஊர் இதுவரை பார்த்திராத வகையில்பூவால அன்னப்பாடை ஜோடிச்சு தேவராட்ட ராஜா உடைகளும் உருமாலுமாய்வேலனை அலங்கரித்து ஆயிரம்பேர் நடந்து வரசவ ஊர்வலம் போனது. 

விம்மலோடுமுத்துகிருஷ்ணன் சொன்னான். 

அதுவுமில்லாமல் துக்கம் கேட்டுசுற்றுப்பட்டிகளில் ஊர்க்காரர்கள் கொண்டுவந்த தானிய தவசுகள், கோடித்துணிகள் எல்லாவற்றையும் ஊர்ப் பொதுவில் ஏலம்விட்டு கிடைத்த தொகையில் மாவூத்து வேலனுக்கு சமாதி கட்டி அதன்மேல்அவன் பாடி ஆடுவதுபோல் சிலையும் வைத்துள்ளார்கள் என்ற ராமகிருஷ்ணன் உறைந்து போயிருந்த என்னை உலுக்கினான்.

""வா, போய்ப் பாப்போம், மாவூத்துவேலனின் சமாதியைப் பார்த்தால் உனது மனசுக்கு ஆறுதலாக இருக்கும்'' என்றார்கள். 

பார்க்க வேண்டாம். மாவூத்துவேலன்என் மனசில் உயிரோடவே இருக்கட்டும். எழுந்து நகர்ந்தேன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com