'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 32

பிரதமர் சந்திரசேகரின் செளத் அவென்யு இல்லத்திலிருந்து பொடி நடையாக ரஃபி மார்க்கிலுள்ள யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திலிருந்த உணவகத்துக்கு காபி குடிக்க வந்தேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 32


பிரதமர் சந்திரசேகரின் செளத் அவென்யு இல்லத்திலிருந்து பொடி நடையாக ரஃபி மார்க்கிலுள்ள யு.என்.ஐ. செய்தி நிறுவனத்திலிருந்த உணவகத்துக்கு காபி குடிக்க வந்தேன். அங்கே குழுமி இருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்திர சேகர் அரசு தொடருமா, கவிழுமா என்கிற விவாதம் காரசாரமாக நடந்து கொண்டிருந்தது.

அவர்களில் பலருக்கும், ஏன் அத்தனை பேருக்குமே, என்னையும் தெரியாது, நான் பிரதமர் சந்திரசேகருக்குத் தெரிந்த பத்திரிகையாளன் என்பதும் தெரியாது. அது எனக்கு மிகவும் வசதியாகி விட்டது. பல்வேறு தரப்பினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஒளிவுமறைவில்லாமல் தெரிந்து கொள்ள முடிந்தது.

யு.என்.ஐ. கேண்டீனிலிருந்து வெஸ்டர்ன் கோர்ட் அதிக தூரத்தில் இல்லை என்பதால் அங்கிருந்து மெதுவாக நடையைக் கட்டினேன். வெஸ்டர்ன் கோர்ட்டில் பிரணாப்தாவின் அறை பூட்டிக் கிடந்தது. எதிரிலிருந்த மூப்பனார்ஜியின் அறை திறந்திருந்தது. ஜி.கே. மூப்பனார் சென்னையில் இருந்ததால் அங்கே உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார். அவரது அனுமதியுடன் பிரணாப் முகர்ஜியின் வீட்டைத் தொடர்பு கொண்டபோது, அவர் ராஜீவ் காந்தியை சந்திக்கச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.

ராஜீவ் காந்தியின் 10, ஜன்பத் இல்லத்துடன் அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகம் ஒட்டி இருப்பதால், சந்திப்பு முடிந்ததும் பிரணாப் முகர்ஜி தனது அலுவலகம் வருவார் என்கிற எதிர்பார்ப்பில் அக்பர் ரோட்டுக்கு நகர்ந்தேன். காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் பின்புற வாயில் பகுதியில் மெளலானா ஆசாத் சாலை இருக்கிறது. அதற்கு அருகில்தான் குடியரசு துணைத் தலைவரின் மாளிகை.

குடியரசு துணைத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மாவை சந்திப்பதற்கு ஏற்கெனவே நேரம் கேட்டிருந்தேன். என்மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்த தலைவர்களில் அவரும் ஒருவர். கனவில் கூட யாருக்கும் தீங்கு நினைக்காத, அனைவரையும் நேசிக்கும் நல்ல மனிதர் ஒருவரை அடையாளம் காட்டச் சொன்னால் சங்கர்தயாள் சர்மா என்று சிந்தித்துப் பார்க்காமல் சொல்லிவிடலாம்.

பிரணாப் முகர்ஜியின் அறைக்குப் போனவுடன் முதல் வேலையாகக் குடியரசு துணைத் தலைவர் மாளிகையைத்தான் தொடர்பு கொண்டேன். எனது சந்திப்புக்கான கோரிக்கை என்ன நிலைமையில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதுதான் நோக்கம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

கட்சி, கருத்து வேறுபாடுகளைக் கடந்து மாற்றத்தையும் மீறி பிரதமர் சந்திரசேகர் மதிக்கும் இரண்டு தலைவர்கள் சங்கர்தயாள் சர்மாவும், அடல் பிகாரி வாஜ்பாயும். சங்கர்தயாள் சர்மாவை "குருஜி' என்றும், வாஜ்பாயை "குருதேவ்' என்றும் சந்திரசேகர்ஜி அழைப்பது வழக்கம். எனக்கு வாஜ்பாயைத் தெரியுமே தவிர, நெருக்கமான பழக்கம் கிடையாது. ஆனால் சங்கர்தயாள் சர்மாஜியுடனான நெருக்கம் அப்படியல்ல.

பிரதமர் சந்திரசேகர் அவசர முடிவு எதுவும் எடுத்துவிடாமல் குடியரசு துணைத் தலைவர் சங்கர்தயாள் சர்மா நினைத்தால் தடுக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. அதனால்தான் அந்த சந்திப்புக்கு அவசரப்பட்டேன்.

சுமார் ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி தனது அறைக்கு வந்தார். அவருடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பட்டாளமே வந்தது. தினேஷ் சிங், பிந்தேஸ்வரி துபே, ஜாபர் ஷெரீப், பி. சங்கரானந்த், என்.கே.பி. சால்வே ஆகியோர் என் நினைவில் இருக்கிறார்கள்.

இன்னும்கூட நான்கைந்து முக்கிய தலைவர்கள் அவருடன் வந்தனர்.

அடுத்த ஒரு மணி நேரம் பிரணாப்தாவின் அறையில் காரசாரமாக விவாதம் நடந்தது. நான் வெளியில் இருந்த வரவேற்பறையிலும், கேண்டீனிலுமாகப் பொழுதை நகர்த்திக் கொண்டிருந்தேன். பிரணாப் முகர்ஜியைத் தனியாக சந்திக்க முடியாமல் போகுமோ என்கிற அச்சமும் எனக்கு இருந்தது.

குடியரசு துணைத் தலைவர் மாளிகையை மீண்டும் தொடர்பு கொண்டபோது, மாலை ஐந்து மணிக்கு வரும்படி எனக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒருவழியாக கூட்டம் முடிந்து ஒருவர் பின் ஒருவராகத் தலைவர்கள் கலையத் தொடங்கினர்.
மற்றவர்கள் போன பிறகும் தினேஷ் சிங்கும், சங்கரானந்தும் பிரணாப் முகர்ஜியுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அகன்ற பிறகும் எனக்கு தர்மசங்கடம். ஏறத்தாழ நான்கைந்து மணி நேரமாக சர்ச்சையில் இருக்கும் பிரணாப் முகர்ஜியை எப்படி தொந்தரவு செய்வது? அவர் உணவு அருந்திவிட்டாரா? ஓய்வெடுக்கப் போகிறாரா என்கிற கேள்விகளெல்லாம் எனக்குள் எழுந்தன. நான் வந்திருப்பதும், காத்திருப்பதும் அவருக்குத் தெரியுமா, அப்படியே பார்த்திருந்தாலும் நினைவிருக்குமா என்கிற சந்தேகங்கள் வேறு.

அவரது உதவியாளர் இன்டெல் 386 கணினியை எப்படிப் பயன்படுத்துவது என்று பயிற்சி செய்து கொண்டிருந்தார். நான் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளேயிருந்து அழைப்புமணி ஒலித்தது. பரபரப்பாக உள்ளேபோன உதவியாளர், அதே வேகத்தில் திரும்பி வந்தார். நான் அழைக்கப்படுவதாகச் சொன்னார். சென்றேன்.

""சாப்பிட்டாயா, இல்லையா?''
""இல்லை, கேண்டீனில் சாப்பிடுவேன்.''
""என்னைச் சந்திக்கும்படி பிரதமர் உன்னை அனுப்பினாரா?''
"ஆமாம்' என்று தலையை மட்டும் ஆட்டினேன். அவர் சிரித்தார்.
""சோ ராமசாமி, சென்னை திரும்பிவிட்டாரா இல்லை தில்லியில்தான் இருக்கிறாரா?''
""சென்னைக்குப் போய்விட்டார் என்றுதான் நினைக்கிறேன். நீங்கள் அவரிடம் என்ன பேசினீர்கள் என்பது குறித்து அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவசரப்பட்டு எந்தவித முடியும் எடுத்துவிட வேண்டாம் என்று அவர் பிரதமர் சந்திரசேகரை வலியுறுத்தினார். ராஜீவ் காந்தி முந்திக் கொண்டு ஆதரவை விலக்கிக் கொண்டால் தனக்கு அவமானம் என்று சந்திரசேகர்ஜி கருதுகிறார். நீங்கள்தான் இந்தப் பிரச்னைக்கு நல்லதொரு முடிவைக் காண வேண்டும்.''
""நான் என்ன செய்துவிட முடியும்? ராஜீவ்ஜி என்னை கலந்தாலோசிக்கிறாரே தவிர, முடிவெடுப்பது அவர்தான். காங்கிரஸில் பலரும் நாம் ஆட்சி அமைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அயோத்தி பிரச்னையை பிரதமர் சந்திரசேகர் முடிவுக்குக் கொண்டுவந்துவிடக் கூடாது என்றும், காங்கிரஸ்தான் அதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் பலர் நினைக்கிறார்கள். அங்கேதான் பிரச்னை எழுகிறது.''
""அயோத்தி பிரச்னைக்குப் பிரதமர் சந்திரசேகரால் முடிவெடுத்துவிட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'
""அந்தப் பிரச்னைக்கு அவர் அநேகமாக முடிவு காணும் நிலையை எட்டிவிட்டார். வி.எச்.பி.யையும், முஸ்லிம் அமைப்புகளையும் தனித்தனியாக அழைத்துப்பேசி சமரசத் திட்டத்தை ஏற்கும்படி செய்திருக்கிறார். அந்த செய்தி கசிந்து விட்டதால்தான் பிரச்னையே...''
""இன்று இரவு என்னை போன்சி பண்ணைக்கு வரச் சொல்லி இருக்கிறார் பிரதமர். அவரிடம் நான் என்ன சொல்லட்டும்...''
""தேவிலாலிடம் எடுத்துச் சொல்லி ஓம் பிரகாஷ் செளதாலாவை ஹரியாணா முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொல்ல வேண்டும். போலீஸ்காரர்கள் வேவு பார்த்த பிரச்னை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள இதுபோன்ற சிறிய சமரசங்களை அவர் ஏன் செய்துகொள்ள மறுக்கிறார் என்பது தெரியவில்லை. நீங்கள் சொல்வதை விட இதையெல்லாம் சோ ராமசாமியை விட்டுச் சொல்லச் சொல்லுங்கள். அவர் சொன்னால்தான் பிரதமர் கேட்பார்.''
""முயற்சிக்கிறேன்'' என்று உற்சாகமில்லாமல் தலையாட்டினேன்.
""இந்தியா எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை மிகவும் சாதுர்யமாகக் கையாள்கிறார் பிரதமர்
சந்திரசேகர். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகுதான் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டும் என்று நானும் சிலரும் கருதுகிறோம். ஆனால், காங்கிரஸிலுள்ள பெரும்பாலான தலைவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இது நீ மட்டும் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன், பத்திரிகைக்காக அல்ல.''
""ராஜீவ்ஜி என்ன நினைக்கிறார்?''

""கட்சித் தலைவர்கள் நினைப்பதை அவர் பிரதிபலிப்பார். இப்போது ஆட்சி கவிழ்வதும் தேர்தல் நடப்பதும் நல்லதல்ல. அது ஆபத்தில் முடியும் என்று நான் நினைப்பதுபோலப் பிறரும் நினைப்பதாகத் தெரியவில்லை.''
அரசியல் நிலைமையை கட்சித் தலைவர் ராஜீவ் காந்திக்குத் தன்னால் உணர்த்த முடியவில்லை
என்கிற ஆதங்கம் பிரணாப்தாவிடம் தெரிந்தது. அவருக்கு சந்திரசேகர் அரசின் மீதிருந்த அக்கறையை விட இந்தியப் பொருளாதாரம் மீதும், அரசியல் நிலைமை குறித்தும், காங்கிரஸ் கட்சியின் நன்மை குறித்துமான கவலைதான் மேலோங்கி இருந்தது என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.
பிரணாப் முகர்ஜி வீட்டுக்குக் கிளம்பினார். நான் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த கேண்டீனில் மதிய உணவு அருந்திவிட்டு, பிரணாப்தா அலுவலகத்தின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தபடியே சற்று கண்ணயர்ந்தேன். சரியாக நான்கரை மணிக்கு எழுந்து, பின்புற வாயில் வழியாக குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையை நோக்கி நடந்தேன்.
குடியரசு துணைத் தலைவர் மாளிகை புல்வெளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார் சங்கர் தயாள் சர்மா. அவரது அருமை பெருமைகளை இந்தியா உணரவில்லை என்பது துரதிர்ஷ்டம். தம்பட்டம் அடித்துக் கொள்ளத் தெரியாத மாமனிதர் அவர். "பெருக்கத்து வேண்டும் பணிவு' என்கிற குறளுக்கு இலக்கணம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் படித்து, அங்கேயே விரிவுரையாளராகவும் பணியாற்றிய சங்கர்தயாள் சர்மாவுக்கு ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயில 1938-லேயே உதவித்தொகை கிடைத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அந்தக் காலத்து ஹார்வர்ட் பட்டதாரி அவர்.
காந்தியடிகளின் அறைகூவலை சிரமேற்கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டது முதல் அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. விடுதலைப் போராட்டத்தில் அடியும் உதையும் பெற்று சிறைச்சாலைக் கொடுமைகளை எதிர்கொண்ட தியாகிகளில் அவரும் ஒருவர்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஹைதராபாத், ஜூனாகட் நவாபுகளைப்போல, போபால் சமஸ்தான நவாபும் இந்தியாவுடன் இணைய மறுத்துத் தனி நாடாக இருப்பது என்று முடிவெடுத்தார். அதை எதிர்த்து நடந்த போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர் சங்கர்தயாள் சர்மா. நவாப் அரசால் சிறை பிடிக்கப்பட்ட சங்கர்தயாள் சர்மாவை விடுவிக்கக் கோரி மக்களின் எதிர்ப்பு வலுத்ததால் வேறுவழியில்லாமல் விடுவிக்கப்பட்டார்.
இந்தியாவுடன் இணைந்துவிட்ட போபால் சமஸ்தானம், 1952-இல் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபோது அதன் முதலமைச்சராக சர்மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகக் குறைந்த வயதில் முதல்வரான முதல் முதல்வர் அவர்தான். 1956-இல் மாநிலங்களின் மறுசீரமைப்புக்குப் பிறகு
மத்திய பிரதேச மாநிலம் உருவானபோது, 1967 வரை மாநில அமைச்சரையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் அவர்.
1969-இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சங்கர்தயாள் சர்மா, 1972-இல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் சிறிது காலம் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்திருக்கும் சர்மாஜி, ஆந்திரம், பஞ்சாப், மகாராஷ்டிர மாநிலங்களின் ஆளுநராகவும் பதவி வகித்தவர்.
குடியரசு துணைத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த சங்கர்தயாள் சர்மாஜிக்கு குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமனைப் போலவே நான்கு பிரதமர்களுடன் (பி.வி.நரசிம்மராவ், அடல்பிஹாரி வாஜ்பாய், தேவே கெளடா, இந்தர்குமார்குஜ்ரால்) பணியாற்றிய அனுபவமும் உண்டு.
என்னை வரவேற்று அமரச் சொன்னார் அந்தப் பெருந்தகை. என்னைப் பற்றி, என் குடும்பத்தினர் பற்றி, எனது செய்தி நிறுவனம் குறித்து என்று எல்லா விவரங்களையும் அக்கறையுடன் விசாரித்த பிறகு எங்கள் பேச்சு பிரதமர் சந்திரசேகர் குறித்துத் திரும்பியது.
பிரதமர் சந்திரசேகர்ஜி மீது சர்மாஜிக்கு அளப்பரிய பாசம் உண்டு என்பதும், சந்திரசேகர்ஜிக்கு சர்மாஜி மீது அளவு கடந்த மரியாதை உண்டு என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும் என்பதால், நான் நிலைமையை எடுத்துரைத்தேன். அதுவரை சிரித்த முகத்துடன் இருந்த குடியரசு துணைத் தலைவர்
சங்கர்தயாள் சர்மாவின் முகம் மாறியது. ஒருவித இறுக்கம் ஏற்பட்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை.நான் சட்டென மெளனமானேன். அவரும்தான்!

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com