'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 33

குடியரசு துணைத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவை நான் அறிந்த பத்து ஆண்டுகளில், அவர் அப்படி என்னைப் பார்த்ததே இல்லை. அவரது பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 33


குடியரசு துணைத் தலைவர் சங்கர்தயாள் சர்மாவை நான் அறிந்த பத்து ஆண்டுகளில், அவர் அப்படி என்னைப் பார்த்ததே இல்லை. அவரது பார்வையை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

""குடியரசு துணைத் தலைவர் என்பது ஒரு பொறுப்பான அரசியல் சாசனப் பதவி. நடப்பு அரசியல் நிகழ்வுகளுக்கும் எனக்கும் இப்போது தொடர்பு கிடையாது. இதுபோன்ற பிரச்னைகள் குறித்து நான் உங்களுடன் விவாதிக்கவோ, உரையாடவோ தயாராக இல்லை. பிரதமர் என்கிற முறையில் சந்திரசேகர்ஜி என்னிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கேட்பது என்பது வேறு. என்னை நீ அணுகியதே தவறு'' என்று அவர் கறாராகவும், ஒருவிதக் கண்டிப்புடனும் கூறியபோது எனக்கு எனது தவறு புரிந்தது.

நான் எழுந்துபோய் ""மாப்கீஜியே'' (மன்னித்துக் கொள்ளுங்கள்) என்று அவரது காலைத் தொட்டபோது தடுத்து நிறுத்தி அமரச் சொன்னார்.

""உனக்கு வயதும், அனுபவமும், புரிதலும் போதாது. ஆர்வக்கோளாறால் என்னிடம் வந்திருக்கிறாய், தவறில்லை. இதோடு இதை மறந்துவிடு. என்னை சந்தித்ததையும், நாம் பேசியதையும் யாரிடமும் சொல்லிவிடாதே. அதற்குக் கண்ணும் மூக்கும் வைத்து அரசியல் செய்து விடுவார்கள். நான் வகிக்கும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு எந்தவித கெளரவக் குறைவும் வந்து
விடக் கூடாது.''

நெடுஞ்சாண் கிடையாக அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்கத் தோன்றியது. எத்தனை பெரிய மனிதர். தனக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்று கூட நினைக்கவில்லை சர்மாஜி; தான் வகிக்கும் பதவிக்குக் களங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கும் அவரைப் போன்ற அந்தத் தலைமுறை அரசியல்வாதிகளை நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது.

சர்மாஜியிடம் விடை பெற்றுக் கொண்டு நான் மீண்டும் அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்துக்குள் நுழைந்தபோது இருட்டத் தொடங்கி இருந்தது. பிரதமர் சந்திரசேகரின் போன்சி பண்ணைக்குக் கிளம்பினேன். குருகிராமைத் தாண்டிச் செல்ல வேண்டும். விமான நிலையத்திலிருந்து குருகிராம் போகும் நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து காணப்பட்டது. அந்த நெரிசலில் "யெஸ்டி' மோட்டார் சைக்கிளில் நான் பயணித்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

நான் போன்சி பண்ணையை அடைந்தபோது இரவு மணி ஒன்பதை நெருங்கி இருந்தது. பிரதமர் இன்னும் வரவில்லை என்பதை பரபரப்பின்மை எடுத்தியம்பியது. உள்ளே போனபோது எனக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஆச்சரியப்படுத்தியது. பிரதமர் வருவதற்கு நேரமாகலாம் என்றும், இரவு உணவை முடித்துக் கொள்ளும்படியும் உதவியாளர் கெளதம் வற்புறுத்தினார்.

இரவு பத்து மணிக்கு மேல்தான் பிரதமர் சந்திரசேகர்ஜி வந்தார். நான் அழைக்கப் படுவேனா, மாட்டேனா என்கிற சந்தேகத்துடன் காத்திருந்தேன்.

இரவு சுமார் 11.30 மணிக்கு, என்னைப் பிரதமர் அழைப்பதாகச் சொன்னார்கள். தனது கட்டிலில் அமைதியாக சாய்ந்து அமர்ந்தபடி எதையோ படித்துக் கொண்டிருந்தார் சந்திரசேகர்ஜி. தனது அரசுக்கு நெருக்கடி இருப்பது குறித்தோ, மிகப் பெரிய அரசியல் புயலை எதிர்கொள்வது குறித்தோ அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. வழக்கம்போல சிரித்தபடி, கட்டிலின் அருகில் இருந்த நாற்காலியில் அமரச் சொன்னார்.

""சோ ராமசாமி அழைத்திருந்தார். காலையில் தில்லி வருகிறார். நீங்கள் போன்சி பண்ணையில் காத்திருப்பதாகச் சொன்னேன்'' என்றார் பிரதமர்.

நான் பதிலேதுவும் சொல்லவில்லை. அவரே கேட்டார்.

""பிரணாப் முகர்ஜி என்ன சொல்கிறார்?''

""நீங்கள் அவசரப்படக் கூடாது என்றுதான் அவரும் நினைக்கிறார். ஆனால், காங்கிரஸிலுள்ள சில முக்கிய தலைவர்கள், நீங்கள் வலுப்பெறுவதை விரும்பவில்லை என்பது அவருடன் பேசியதிலிருந்து தெரிந்தது. பிரச்னைகளை நீங்கள் தீர்த்துவிடக் கூடாது என்றும், அவை காங்கிரஸால்தான் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது.''

சந்திரசேகர்ஜி கலகலவென்று சிரித்தார். பிறகு என்னை அமைதியாகப் பார்த்தார்.

""எனது ஆட்சி கவிழ வேண்டும் என்று விரும்புவது காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல. அவர்களை இயக்கும் சில வெளிநாட்டு சக்திகளும்தான் என்பது உனக்குத் தெரியாது. பிரச்னைகளை நான் தீர்த்துவிடக் கூடாது என்பது அல்ல அவர்களது எண்ணம். அவர்களின் திட்டப்படி பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுதான் பிரச்னை.''

""அப்படி இருக்கும்போது நீங்கள் பதவி விலகுவது சரியாக இருக்குமா?''

""இருக்காதுதான். ஆனால், அவமானப்பட்டு பதவியிலிருந்து அகற்றப்படுவதை விட, கெளரவமாக விலகிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். அப்படி நான் விலகுவதன் மூலம் இந்தியாவுக்குள் நுழைய முயலும் அந்நிய சக்திகளைத் தடுக்க முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான். அதுபற்றியெல்லாம் உன்னிடம் விவரமாகச் சொல்ல முடியாது.''

""உங்களிடம் கேட்காமல் ஒரு தவறு செய்துவிட்டேன்.''

""என்ன?''

""உப ராஷ்ட்ரபதியை (குடியரசு துணைத் தலைவரை) சந்தித்தேன்.''

சர்மாஜியைப் போலவே சந்திரசேகர்ஜியும் என்னை முறைத்துப் பார்த்தார். நடந்ததை எல்லாம் சொன்னேன். அதற்குப் பிறகுதான் சற்று சமாதானமானார்.
""அவர் என்னைத் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார். ஆனாலும், அவரை சந்தித்துப் பேசியிருக்க வேண்டாம். யாரும் வெளிப்படையாக எதுவும் பேசாவிட்டாலும், விவரம் தெரிந்த அனைவருக்கும் என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும்.''

அதற்குப் பிறகு அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொன்ன பல செய்திகளை நான் அப்போதே மனதில் புதைத்துவிட்டேன். அதையெல்லாம் தோண்டி எடுக்க நான் தயாராக இல்லை.

மாணவனுக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதுபோல இந்தியப் பொருளாதாரம் குறித்தும், அரசியல் நிலைமை குறித்தும் நடுநிசி நேரத்தில் பாரதப் பிரதமரிடம் பாடம் கேட்ட அனுபவம், இன்றும் எனக்கு வழிகாட்டுகிறது.
எட்டு மணிக்குக் காலை உணவு அருந்தக் கூடியபோது, சோ சார் வந்திருக்கவில்லை. நாடாளுமன்றக் கூட்டம் இருந்ததால் பிரதமர் ஏழு மணிக்கே கிளம்பிப் போய்விட்டதாகச் சொன்னார்கள். இரவில் வெகுநேரம் பிரதமருடன் தனிமையில் நான் என்ன பேசினேன் என்பதைத் தெரிந்து கொள்வதில் அங்கிருந்தவர்கள் ஆர்வம் காட்டினர். அதனால் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் நான் கிளம்பிவிட்டேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவைத் தலைவர் ரபி ரேயின் பரிந்துரையுடன் மக்களவை பார்வையாளர் பகுதியில் சென்று அமர்ந்தேன். வழக்கத்துக்கு விரோதமாக அறையில் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது. எதிர்க்கட்சிகள் மெளனமாக வேடிக்கை பார்க்க, ஆளும் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் காங்கிரஸ் கட்சி சந்திரசேகர் அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தது.

பிரதமர் சந்திரசேகர் அமைதியாக அமர்ந்திருந்தார். சட்ட அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிதான் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் சளைக்காமல் பதிலளித்துக் கொண்டிருந்தார். ஹரியாணா முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்திய வண்ணம் இருந்தது.

எதுவும் பேசாமல் சட்டென்று எழுந்து பிரதமர் சந்திரசேகர் வெளியேறியபோது, காங்கிரஸார் மேலும் ஆத்திரமடைந்தனர். அவருக்கு எதிராகக் குரலெழுப்பினர். அதையெல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாஜக தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும்.

வாஜ்பாயி, அத்வானி, இந்திரஜித் குப்தா, சோம்நாத் சாட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் மனதிற்குள் சிரித்தபடி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் முகபாவனைகளை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்தில் நானும் எழுந்து வெளியே வந்து விட்டேன். நாடாளுமன்ற வராந்தா வழியாக நடந்து வெளியேற நினைத்தபோது, பின்னாலிருந்து யாரோ என்னைப் பெயர் சொல்லி அழைப்பது கேட்டது. திரும்பிப் பார்த்தேன் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் இரா. அன்பரசு வந்து கொண்டிருந்தார்.

பேச்சுக் கொடுத்துக் கொண்டே நாடாளுமன்ற வளாகத்திலிருந்து இருவரும்
வெளியேறினோம்.

"மீனா பாக்' என்று அழைக்கப்படும் மெளலானா ஆசாத் சாலையில் இருந்தது இரா. அன்பரசின் வீடு. போகும் வழியில் அவர் என்னை காங்கிரஸ் தலைமையகத்தில் இறக்கிவிட்டார். ஜி.கே. மூப்பனாரின் அறைவாசலில் நிறையக் கூட்டம். அப்படியே சில பொதுச் செயலாளர்களின் அறைகளைக் கடந்து, கட்டடத்துக்குப் பின்புறம் இருந்த பிரணாப் முகர்ஜியின் அறைக்கு வந்து சேர்ந்தேன். அவர் உள்ளே இருந்தார். நான் அழைக்கப்பட்டேன்.

""எங்கிருந்து வருகிறாய்?''

""பார்லிமெண்ட் போயிருந்தேன். இரவில் போன்சி பண்ணையில் பிரதமரை சந்தித்தேன். நீங்கள் சொன்னதைச் சொன்னேன்.''
எதுவும் பேசவில்லை. சாவதானமாக பைப்பில் புகையிலையை நிரப்பி பற்ற வைத்துப் புகையை இழுத்து வெளியில் விட்டார்.
""சோ ராமசாமி வந்து விட்டாரா?''
""காலையில் வருவதாகச் சொன்னார் பிரதமர். நான் இன்னும் சந்திக்கவில்லை.''
""நேற்று இரவு அவரே என்னிடம் பேசினார். இன்று வருவதாகச் சொன்னார். அவர் சொல்வதைப் பிரதமர் கேட்பாரா என்பதுதான் தெரியவில்லை.''
""சோ சார் என்ன சொல்லப் போகிறார்?''
""அதை நீ அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள். சந்திரசேகர்ஜி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நீ பிரார்த்தித்துக் கொள்.''
சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார் பிரணாப்தா. நான் தொந்தரவு செய்யாமல் வெளியேறினேன்.
பிரதமரின் 3, செளத் அவென்யு லேன் இல்லத்தில் "துக்ளக்' ஆசிரியர் சோ சார் இருப்பது கேள்விப்பட்டு அங்கு விரைந்தேன். நான் பார்த்தது, கேட்டது, சந்தித்தது என்று அனைத்தையும் சோ சாரிடம் "மளமள' வென்று கொட்டித் தீர்த்துவிட்டேன்.
""நேற்று இரவு நீங்கள் தொலைபேசியில் உரையாடியதாக பிரணாப் முகர்ஜி சொன்னார். என்ன பேசினீர்கள் என்பதை உங்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொன்னார்.''
சோ சார் சிரித்தார். அதற்குள் பிரதமர் வந்துவிட்டதால் ஏற்பட்ட பரபரப்பைத் தொடர்ந்து, நாங்கள் இருவரும் சந்திரசேகர்ஜி இருந்த அறைக்கு அழைக்கப்பட்டோம். சோ சாருக்கும், பிரதமர் சந்திரசேகர்ஜிக்கும் இடையே பதினைந்து நிமிட நேரம் கடுமையான விவாதமும், வாக்குவாதமும் நடந்தது.
பதவி விலகுவதைத் தவிர வழியில்லை என்று பிரதமர் சந்திரசேகரும், "கூடவே கூடாது' என்று சோ சாரும் வாதிட்டனர். கடைசியில் சோ சார் சொன்னார் :
""நீங்கள் பதவி விலகத்தான் வேண்டும், பிரதமராகத் தொடர முடியாது என்றால், பேசாமல் காங்கிரஸூக்கு ஆதரவு அளித்து ராஜீவ் காந்தி பிரதமராவதற்கு சம்மதிக்க வேண்டும்.''
முந்தைய இரவில் பிரணாப் முகர்ஜியும் சோ சாரும் பேசியபோது எடுத்த முடிவு அது என்பது எனக்கு அப்போது தெரிந்தது. எனக்கும் கூட அந்த யோசனை சரியானதாகத்தான் பட்டது.
பிரதமர் சந்திரசேகர் எழுந்தார். "லெட் மி திங்க்' (யோசிக்கிறேன்) என்று அமைதியாக கூறிவிட்டு நகர்ந்தார்.
நானும் சோ சாரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
அங்கிருந்து நகர்ந்த பிரதமர் சந்திரசேகர் இன்னொருவரைக் கலந்தாலோசிக்கப் போகிறார் என்பது அப்போது எங்களுக்குத் தெரியாது. அவர் முடிவெடுப்பதற்கு முன்பு யாரை கலந்தாலோசித்தார் என்று தெரிந்தால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com