பேல்பூரி

காலையிலேயே மாமியார் - மருமகள் சண்டை ஆரம்பித்துவிட்டது.
பேல்பூரி

கண்டது

(திருத்தணி சமூகக் கூடம்ஒன்றில்)

நேரம் காலம் நிலைமைசரியில்லை - வெற்றுப் பேச்சு.
நேரம் போதவில்லை -வெற்றியின் பேச்சு.

க.அருச்சுனன்,
செங்கல்பட்டு.

(அண்ணாமலைநகரில் உள்ள ஓர் ஆயத்த ஆடை கடையில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்பு)

வாடிக்கையாளர்களே... கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டோருக்கு 15% தள்ளுபடியும், இரண்டு தவணையும் செலுத்தி கொண்டவர்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடியும் தருவதில் நாங்கள் பெருமை அடைகிறோம்.

பொன்.பாலாஜி,
அண்ணாமலைநகர்.

(மளிகைக் கடைக்கு முன்னால் தொங்கவிடப்பட்டிருந்த அட்டையில் கண்ட வாசகம்)

அலுவலகம் அருகே வாகனம் நிறுத்தாதீர்.
அருகில் பஞ்சர் கடை இல்லை.

எம் ஏ நிவேதா,
அரவக்குறிச்சிப்பட்டி .


கேட்டது


(குமுளி செல்லும் பேருந்தில்நடத்துநரும் பயணியும்)

""காரோனாவால பணம் மிச்சம்''
""எப்படி?''
""கார் பிடிச்சு ஊருக்குப் போகலாம்ணு நினைச்சேன். 4000 ரூபாய் கேட்டாங்க. இப்ப பஸ்ஸிலேயே தனியா தானே போகுறேன்... பாருங்க!''

- சிவம்,
திருச்சி.

(நாகர்கோவில் பகுதியில் உள்ள "ரீசார்ஜ்' கடை அருகேஇருவர்...)


""மாப்ள... நீ என்ன லூசா? காசு குடுத்துதானே ரீ சார்ஜ் பண்ணினே... அப்புறம் ஏன் கடைக்காரருக்கு தேங்ஸ் சொல்லிட்டு வர்றே ?''

""கிழிந்த ரூபாயைப் பார்க்காமல் அப்படியே கல்லாவில் போட்டார் பாரு... அதுக்குத்தான் "தேங்ஸ்' சொன்னேன்!''

மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.


யோசிக்கிறாங்கப்பா!

புரிந்தும், புரியாத மாதிரி இருப்பவர்களிடம்
நீங்கள் தெரிந்தும், தெரியாத மாதிரி
இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்!

பி. கோபி,
கிருஷ்ணகிரி-1.


மைக்ரோ கதை

காலையிலேயே மாமியார் - மருமகள் சண்டை ஆரம்பித்துவிட்டது. யார்ஆரம்பித்தது என்று தெரியவில்லை. யார் முடிப்பது என்றும் தெரியவில்லை. யுத்த முழக்கம் மூன்று வீடுகளுக்கும் கேட்டது.

இடையில் போர் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. மருமகள் சமையல் அறையில் புகுந்தாள்.

தடபுடா... தடபுடா.... தடபுடா மாமியார் பின்பக்கம் துணி துவைத்தாள்.

தம்தும்... தம்தும்... தம்தும் பக்கத்து வீட்டு பங்கஜம்மாள் மாமியாரிடம்வந்தாள்.

""ஏன்டிம்மா... காலையில மாமியார் மருமகயுத்தம் எங்கவீட்டு வரைக்கும் சங்கு ஊதுச்சி... இப்ப அவங்க துணி நீ துவைக்கிறியே?''

""ஆமா... புள்ளையை விட்டுட முடியுமா?''

""அப்ப அது''

""இவளுக்காக பேரன் பேத்திகளை விட்டுட முடியுமா... அவங்க துணி தான்''

""அப்ப... அந்தபுடவை... பாவாடை'' மருமகள் புடவையைக் காட்டினாள் பங்கஜம்.

""ஹும்... இவளுக்காக ஒன்னியும் துவைக்கலை... எம்புள்ளை மனசு வருத்தப்படக்கூடாதுன்னு துவைக்கறேன். எம்புள்ளையோட பொண்டாட்டிங்கறதுக்காக துவைக்கறேன். இவளுக்காகவா துவைக்கப் போறேன்... வேற வேலை இல்லையா?''

காப்பி எடுத்து வந்தாள் மருமகள்.

""இந்தம்மா தம்புள்ளை மனசு வருத்தபடக்கூடாதுன்னா, என்புருஷன் மனசு கஷ்டப்பட நான் விட்டுடுவேனா? இந்தம்மாவுக்காக காப்பி தரல்லை. என் வூட்டுக்காரர் அம்மாவுக்காக தர்ரேன். மாமியாருக்குன்னு ஒன்னியும் காப்பி தரல்லை''

""நல்ல மருமகள்... நல்ல மாமியார்''

என்ற பங்கஜம்மாள் தன் பங்குக்கு ஓசி காப்பி சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டினாள்.

சந்தானம்,
ஈக்காடு


எஸ்.எம்.எஸ்.


கடந்து போனதை நினைத்துக் கவலை வேண்டாம்.
கவலை வேண்டாம் என்பதற்காகத்தான் அது கடந்து போனது.

துரை.இராமகிருஷ்ணன்,
எரகுடி.


அப்படீங்களா!

கணினி யுகம் வந்துவிட்டதால் காகிதம் இல்லாத அலுவலகங்களை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. வரும் காலத்தில் காகிதம், பென்சில் எல்லாம் பழங்காலக் கதையாக மாறப் போவது என்னவோ உண்மைதான். என்றாலும் இப்போது வரை காகிதமும், பென்சிலும் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக, பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கையெழுத்தைத் திருத்தமாக்க, அழகாக்க பென்சிலில்தான் எழுத பழக்குகிறார்கள்.

காகிதம், பென்சில் இரண்டுமே மரத்தால்தான் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை நாம் பயன்படுத்திய காகிதங்களைக் கணக்கெடுத்துப் பார்த்தால், அவற்றிற்குப் பின் கோடிக்கணக்கான மரங்கள் மரணமடைந்திருப்பது தெரிய வரும். அப்படி நாம் பயன்படுத்திய காகிதத்தைத் தூக்கிப் போடாமல் மறுசுழற்சி செய்து, அதையே பென்சிலாக மாற்றிப் பயன்படுத்தினால், நாம் வெட்டப் போகும் மரங்களின் எண்ணிக்கை சிறிதாவது குறையும் அல்லவா?

அதைத்தான் செய்கிறது, பி&பி ஆபீஸ் வேஸ்ட் பேப்பர் புராசெஸர் என்கிற கருவி. இந்தச் சிறிய கருவிக்குள் காகிதம், பசை, பென்சில் எழுதப் பயன்படும் லீட் ஆகியவற்றைச் செலுத்தினால் போதும், காகிதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, அழுத்தம் தரப்பட்டு, பென்சிலாக உருமாறி நமக்குக் கிடைக்கும். இந்தக் கருவியை சீனநாட்டைச் சேர்ந்த மூன்று கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com