பேல்பூரி

நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட,தன் காதுகளை மூடிக் கொள்வது சிறந்தது.
பேல்பூரி


கண்டது


(சென்னை மாங்காடு முதியோர் இல்லம் ஒன்றின் பெயர் பலகையில்
எழுதப்பட்டிருந்த வாசகம்)

குஞ்சு மிதித்து முடமான
கோழிகள் உயிர் வாழும் இடம்.

சுந்தரி காந்தி,
சென்னை- 56.

(ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

மான்குண்டு

கூ. முத்துலட்சுமி,
திருவாடானை.

(தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் பாக்கர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் பெயர்)


ஹிட்லர் ஹவுஸ்

குலசை நஜ்முதீன்,
காயல்பட்டினம்.

கேட்டது


(பாபநாசம் சந்நிதி தெருவில் இரு நண்பர்கள்)

""நான் உன்னைப் புரிஞ்சுக்கிட்ட வரைக்கும் நீ அரை லூசுடா''
""அப்ப நீ என்னை முழுசா புரிஞ்சுக்கலைடா''

கே.பிரசன்னா,
பாபநாசம்.

(வேதாரண்யம் மேலவீதியில்நண்பர்கள் இருவர்)

""என்ன மாப்பு எப்ப பார்த்தாலும் மணிக்கணக்கில் போன் பேசுவே. இப்ப என்னடான்னா மிஸ்டு கால் மட்டுமே கொடுக்குறே?''
""ப்ரீபெய்ட் பிளான் ரேட் எல்லாம் ஏறிப்போச்சு. என்னோட நிதி நிலைமையைச் சமாளிக்க... இந்த "ஏழைக்கேத்த எள்ளுருண்டை' மிஸ்டு கால் பிளானை கடைபிடிக்கிறேன் மாப்பு!''

-எஸ்.சுதாகரன்,
வானவன்மகாதேவி.

யோசிக்கிறாங்கப்பா!

நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட,
தன் காதுகளை மூடிக் கொள்வது சிறந்தது.

ந.சண்முகம்,
திருவண்ணாமலை.

மைக்ரோ கதை

பொட்டல் காட்டின் வழியாகப்பயணம் செய்து கொண்டு இருந்தார்கள் குருவும், அவருடைய சீடர்களும். ஒதுங்குவதற்கு நிழலும் இல்லை. தாகத்துக்குத் தண்ணீரும் கிடைக்கவில்லை. பொழுது சாய்ந்து இருட்டிவிட்டது. குரு ஓய்வெடுக்கலாம் என்று சொல்ல பசியாலும் தாகத்தாலும் வாடிய சீடர்கள் அப்படியே சுருண்டு படுத்துவிட்டனர். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவாறு இருந்தனர்.
குரு, ""கடவுளே... இன்று நீ அளித்த அனைத்துக்கும் நன்றி'' சத்தமாகச் சொல்லி வணங்கினார்.
படுத்துக் கொண்டு இருந்த சீடர்கள் எழுந்து உட்கார்ந்தனர்.
""இன்று கடவுள் நமக்கு எதுவுமே கொடுக்கவில்லை. எதற்காகப் பொய் சொல்லி வணங்குகிறீர்கள்?'' என்று கேட்டனர்.
குரு சொன்னார்:
""கடவுள் இன்று நமக்கு அருமையான பசியையும், தாகத்தையும் கொடுத்தார். உணவைக் கொடுத்ததைப் போல பசியைக் கொடுத்த கடவுளுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா? கடும்பசி எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிந்ததே''
நல்லது, கெட்டது எது என்றாலும் துறவிகள் சமமாக நினைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்ட சீடர்கள் மெளனமாக இருந்தனர்.

சு.இலக்குமண சுவாமி,
மதுரை-9.

எஸ்எம்எஸ்


கெட்டவன் சாகும் போதுதான் கஷ்டப்படுவான்
நல்லவன் சாகுற வரைக்கும் கஷ்டப்படுவான்

சு. நாகராஜன்,
பறக்கை.

அப்படீங்களா!


குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் பலவிதமானவை. அவற்றின் விலையும் வேறுபடக் கூடியவை.
ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் (1900 டாலர்) விலை மதிப்புள்ள ஒரு விளையாட்டுக் காரை அமெரிக்காவில் உள்ளடெஸ்லா என்ற மின்சார வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. காரின் பெயர்: சைபர் குவாட்.
இந்த கார், மேடுபள்ளங்களிலும் செல்லக் கூடியது. ஸ்டீல் பிரேம், எல்இடி லைட்கள், காரின் குலுங்கல்களின் அளவைச் சரி செய்யக் கூடிய அமைப்பு என இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 16 கி.மீ. காரின் அதிகபட்ச வேகத்தை அதிகப்படுத்தவோ, குறைத்து வைத்துக் கொள்ளவோ முடியும். கார் பின்பக்கம் ஓடும்போது 8 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.
எட்டு வயது நிரம்பிய குழந்தைகள் மட்டுமே இந்த காரை ஓட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வசதியுள்ளவர்கள் இந்தக் காரை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்கலாம்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com