பேல்பூரி

உணவை உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.உணவை உண்ட பின் உற்பத்தி செய்த விவசாயிக்கு நன்றி கூறுங்கள்.
பேல்பூரி

கண்டது

(சிதம்பரம் அருகே தில்லைநாயகபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள வாசகம்)

உணவை உண்பதற்கு முன் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
உணவை உண்ட பின் உற்பத்தி செய்த விவசாயிக்கு நன்றி கூறுங்கள்.

 பொ.பாலாஜிகணேஷ்,
கோவிலாம்பூண்டி.

(செங்கப்பள்ளியில் ஒரு திருமண மண்டபத்தின் பெயர்)

கெட்டி மேளம் மஹால் 

 துடுப்பதி வெங்கண்ணா,
பெருந்துறை.

(சென்னை ஆவடியில், பரோட்டா கடை ஒன்றின்  பெயர்)

அடப்பு  ஃபரோட்டா  ஸ்டால்

சத்யா நம்மாழ்வார்,
மதுரை. 


கேட்டது


(திருச்சி -பழக்கடை ஒன்றில்)

""அண்ணாச்சி எப்படி?''
""பரவாயில்லை தம்பி... போன வாரம் தான் கரோனா வந்திட்டுப் போச்சு!''
""அட! நான் பழத்தைக் கேட்டேன்யா''
""அது பேரு அன்னாசியில'' 

-சிவம்,
திருச்சி


(ஸ்ரீரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இரு நண்பர்கள்)

""மச்சான்... கொஞ்ச நேரமா ஏன் ஒரு மாதிரியா இருக்கே'' 
""எனக்கு கரோனாவோன்னு பயமா இருக்கு... ஏன்னா கொஞ்ச நேரம் முன்னாடி உங்க வீட்டுல காஃபி சாப்டேன்ல... அதோட டேஸ்ட், ஸ்மெல் ரெண்டும் எனக்கு தெரியவே இல்லை''
""சரியான லூசா இருக்கியே... என் மனைவி போடுற காபி எப்பவுமே அப்படித்தான் இருக்கும். பயப்படாதே'' 

ஆர்.பிரசன்னா,
ஸ்ரீரங்கம்.

யோசிக்கிறாங்கப்பா!


குறை இல்லாதவனும் இல்லை...
குறை கூறாதவனும் இல்லை! 

நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.

மைக்ரோ கதை

சொந்தக்காரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் பெண் பார்க்கச் சென்றான் சுரேஷ்.

அவன் ஒரு காபி பிரியன். இதை ஏற்கெனவே சொந்தக்காரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார்,  பெண்ணின் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியைப் பரிமாற வைத்து விட்டார்கள். அப்படி ஒரு காபியை அவன் இதுவரை குடித்ததே இல்லை!

அவ்வளவு சுவை...

அவன் மெய்மறந்து குடித்துக் கொண்டிருக்கும் போது, ""என்ன மாப்ள காபி புடிச்சிருக்கா ?'' என்று பெண்ணின் தகப்பனார் கேட்டார்.

அதே நேரத்தில், ""என்ன தம்பி பொண்ணைப் புடிச்சிருக்கா'' என்று பையனின் சித்தப்பா கேட்க,

""ரொம்பப் புடிச்சிருக்கு,  சான்சே இல்ல'' என்று சுரேஷ் சொல்லி விட்டான்.
அப்புறம் என்ன?

"பையனே பொண்ண ரொம்பப் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டார்' என்று சொல்லி சித்தப்பா தட்டை மாற்றி விட்டார்.

கல்யாணமும் முடிந்து விட்டது. முதலிரவில்  தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு, ""எனக்கு சுவையான காபியைப் போட்டுத் தந்த கைக்கு அன்னைக்கே முத்தம் குடுக்கணும்னு நெனச்சேன். ஆனா உங்க அப்பா திட்டுவாருன்னு பேசாமப் போயிட்டேன்'' என்றான் சுரேஷ்.

"நீங்க அன்னைக்கே முத்தம் குடுத்திருந்தாலும் எங்க அப்பா ஒண்ணும் சொல்லி இருக்க மாட்டாரு'' என்றாள் அவள்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்து, ""என்ன சொல்றே?'' என்று கேட்டான் சுரேஷ்.

அதற்கு அவள் சொன்னாள்:

""அந்த  காப்பியைப் போட்டதே எங்க அப்பா தான்'' 

 அமுதா அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.


எஸ்.எம்.எஸ்.


இன்பம் எப்படி இருக்கும் 
என்பதை உணரும் முன்பே,
வலி எப்படி இருக்கும் என்பதை 
உணர்த்தி விடுகிறது வாழ்க்கை! 

ஜி. மஞ்சரி,
கிருஷ்ணகிரி

அப்படீங்களா!

புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.  பார்வைக்குறைபாடு உள்ளவர்கள், படிக்க முடியாதநிலையில் உள்ள டிஸ்லெக்ஸியா பாதிப்பு உள்ளவர்கள் புத்தகங்களைப்  படிக்க நினைத்தாலும் படிக்க முடிவதில்லை.  படிப்பதற்கு சோம்பேறித்தனப் படுபவர்களும் இருக்கிறார்கள். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில்  உருவாக்கப்பட்டுள்ள பேனா வடிவிலான "ஆர்காம் ரீட்' என்ற கருவி, 2021 - ஆம் ஆண்டுக்கான சிஇஎஸ் (கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ) விருதைப் பெற்றுள்ளது. 

செய்தித்தாள்கள், புத்தகங்கள், கம்ப்யூட்டர்கள்,  ஸ்மார்ட்போன்கள் என எதில் எழுத்து இருந்தாலும் அதை இந்தக் கருவியின் முன் காட்டினால், உடனே சத்தமாக வாசித்துவிடும். தனித்தனி எழுத்துகள், சொற்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஒரு புத்தகத்தின் ஒரு முழுப் பக்கத்தையும் இந்தக் கருவி ஒருமுறை பார்த்தால் போதும். முழுப்பக்கத்தையும் ஸ்கேன் செய்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டு வாசிக்கத் தொடங்கிவிடும். 

இந்தக் கருவி வேலை செய்ய ஒரு பட்டனை அழுத்தினால் போதும். பல மொழிகளில் உள்ள எழுத்துகளையும் வாசிக்கும் இந்தக் கருவி இயங்குவதற்கு இண்டர்நெட் இணைப்பு தேவையில்லை. 

இனி நீங்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டியதில்லை. கேட்டால் போதும்.

என்.ஜே.,
சென்னை -58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com