திரைக்கதிர்

"பாகுபலி' படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "இரத்தம் ரணம் ரௌத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன்,
திரைக்கதிர்


"பாகுபலி' படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "இரத்தம் ரணம் ரௌத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வரும் ஜனவரி 7- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

"பாகுபலி' படத்துக்குப் பின் ராஜமெளலி இயக்கும் படம் என்பதால் இந்தியா முழுவதும்  இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த  நிலையில் இந்த படத்தின்  ட்ரெய்லர் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. 

ட்ரெய்லர் வெளியான நாளில் 2 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 1.2 கோடிக்கும் அதிகமான "லைக்'குகளையும் பெற்றுள்ளது.

--------------------------------------------------------------------------------------------
 

குளோபல் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "பேய காணோம்'.

இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கெளசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம்,

ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் செல்வ அன்பரசன். இயக்குநர் பேசும் போது...

""வாழ்க்கையில் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை இந்தப் படத்தில்  தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.  இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட  படம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் திரையரங்கில் படம் வெளியாக இருக்கிறது'' என்றார் இயக்குநர்.

--------------------------------------------------------------------------------------------


நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பினார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் அவரது தோழி பவானி உயிர் இழந்தார். கால் எலும்பு முறிவு உள்ளிட்ட பல இடங்களில் காயமடைந்த யாஷிகா தனியார் மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

இந்த நிலையில் அவர்  விபத்து நடந்த இடத்தை காரில் சென்று பார்த்தார். அங்கு தன்னைக் காப்பாற்றிய அந்தப் பகுதி மக்களை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். 

பின்னர் அவர் கூறும்போது,  ""இந்த இடம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத இடம். இந்த இடத்தில்தான் என் தோழியை இழந்தேன். இந்த பகுதி மக்கள் என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது இப்போதும் நினைவிருக்கிறது.  அவர்களுக்கு நன்றி சொல்லவே வந்தேன். இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருப்பதால்தான் உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது'' என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.


---------------------------------------


டபுள்மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் "மாயோன்'. மிஸ்ட்ரி திரில்லர் பாணியில்உருவாகியிருக்கும் இந்தப் படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்குகிறார்.  சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக  தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.  ராதாரவி, கே. எஸ். ரவிக்குமார், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டைக் கலைஞர்கள் பின்னணி பாடியிருக்கிறார்கள். "மாயோனே மணிவண்ணா' எனத் தொடங்கும் அந்தப் பாடலை  இளையராஜா எழுதி இருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் பாடல் இணையதளங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களிலும் பார்வையாளர்களைக் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
 

------------------------------------------------------------

பெங்களூரில் நடைபெற்ற ஆசிய திரைப்பட விழாவில்தான் இயக்கிய "மூடர்' குறும்படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார். இவர் இயக்கியுள்ள படம் "ஆத்மிகா'.

இப்படத்தில்  வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்த ஆனந்த்நாக் நாயகனாக நடிக்கிறார் . நிகழ்ச்சி தொகுப்பாளர் ஐஸ்வர்யா முத்து சிவம் நாயகியாக நடிக்கிறார்.  ஜீவா ரவி , பிர்லா போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.  இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் படத்தைப் பற்றி  பேசும்போது ...

""படத்தில் பணியாற்றியுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இளைஞர்கள். பல பிரச்னைகளில் பல்வேறு தடைகளுக்கிடையே  படத்தை  முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு வாகனங்கள் கூட செல்லாத பல இடங்களில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தினோம். புலிகள், காட்டெருமைகள் அச்சுறுத்தல் நிறைந்த பகுதிகளில், அனைத்தையும் கடந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். இது ஒரு புது விதமான வகையில்  இருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com