'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 22

பெரியவர் ரவீந்திர வர்மா அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 22

பெரியவர் ரவீந்திர வர்மா அப்படிச் சொல்வார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பசி கண்ணை அடைத்தது. எங்கே போவது என்று தெரியாமல் திகைத்துப் போய்விட்டஎனது கண்கள் குளமாகின. நிறைந்த விழிகளுடன் நான் ரவீந்திர வர்மாவைப் பரிதாபமாகப் பார்த்தேன்.

நாற்காலியிலிருந்து எழுந்து வந்தார் அவர். எனது தோளில் தட்டினார். அவரது உதவியாளரை அழைத்து என்னை அவரது குடிலுக்கு அழைத்துப் போகச் சொன்னார். போகும் வழியில் அவரது உதவியாளர் பால் வாங்கித் தந்தார்.

ரவீந்திர வர்மாவின் குடிலில் ஒரு நாடாக் கட்டிலில் கம்பளி சகிதம் எனக்குப் படுக்கை வசதி செய்யப்பட்டது. ரவீந்திர வர்மாவின் அறையை எட்டிப் பார்த்தேன். ஒரு மேஜை நாற்காலி, சாதாரண மரக்கட்டில், துணிமணிகள் வைப்பதற்கும், புத்தகங்கள் வைப்பதற்கும் இரண்டு மர அலமாரிகள் என்று மிக சாதாரணமாக இருந்தது.

நான்கைந்து குடில்களுக்குப் பொதுவான சில குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன. இந்த நாளில் இன்னார் என்றெல்லாம் முறை வைத்துக் கொள்ளாமல், கழிப்பறை சற்று அசுத்தமாகத் தெரிந்தால், தாமே முன்வந்து யாராவது கழுவி விடுகிறார்கள். நானும் கூட ஓரிரு நாள்கள் அந்தப் பணியில் ஈடுபட்டபோது, மனநிறைவு கிடைத்தது.

ஏழு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்து எட்டு மணிக்கு ஆசிரமம் முற்றிலுமாக அமைதியாகிவிடுகிறது. நான் சாப்பிட்டு விட்டு வந்து படுத்தவன்தான், நன்றாகத் தூங்கி விட்டேன். அதிகாலையில் ஏதோ சப்தம் கேட்டு விழித்து கொண்டேன். மணி ஐந்து.

ரவீந்திர வர்மா எழுந்து வெளியே போயிருந்தார். குடிலுக்கு வெளியே மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆசிரமவாசிகள் பரபரப்பாக இயங்கத் தொடங்கி இருந்தனர். அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நான் தயாரானபோது, பஜன் தொடங்கி இருந்தது.

அண்ணல் காந்தியடிகள் தங்கியிருந்த பாபு குடிலுக்கு அருகில் ஒரு பெரிய மரம். ஆசிரமவாசிகள் உட்கார்ந்து பஜன் பாடிக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையில் போய் அமர்ந்து கொண்டேன்.

சேவாகிராம் ஆசிரமத்தின் ஒவ்வொரு பகுதியையும் நான் சுற்றிச் சுற்றி வந்தேன். சகஜமாக எல்லோருடனும் பழக முடிந்தது. நட்புக்கும் இணக்கத்துக்கும் மொழி ஒரு தடையே இல்லை என்பதை அங்கேதான் நான் புரிந்து (கற்றுக்) கொண்டேன்.

சேவாகிராம் ஆசிரமத்தின் மிக முக்கியமான பகுதி "பாபு குடி' என்று அறியப்படும் பாபு குடில். காந்திஜி முதலில் தங்கியிருந்த குடில் "ஆதி நிவாஸ்' என்று அழைக்கப்படுகிறது. மீரா பெஹனால் வடிவமைக்கப்பட்ட பாபு குடிலில், சிறிது காலத்துக்குப் பிறகுதான் அண்ணல் வசிக்கத் தொடங்கினார். காந்திஜி தங்கியிருந்த போது எப்படி இருந்ததோ, அதேபோல அப்படியே பாதுகாக்கப்பட்டு வந்தது "பாபு குடில்' (இப்போது எப்படி என்று தெரியவில்லை!).

அண்ணலை சந்திக்க வரும் பிரமுகர்களையும், விருந்தினர்களையும் இந்தக் குடிலில்தான் அவர் சந்திப்பது வழக்கம். அவரது தங்குமிடமாகவும், வரவேற்பறையாகவும் மட்டுமல்ல, காந்திஜியின் அலுவலகமாகவும் இந்த "பாபு குடில்' செயல்பட்டு வந்தது. தனக்கு வரும் கடிதங்களுக்கு தினந்தோறும் பதில் எழுதுவதில் தொடங்கி, அறிக்கைகள் தயாரிப்பது வரை இந்தக் குடிலில்தான் நடக்கும். அதனால்தான் பாபு குடிலை இந்தியாவின் தலைநகரம் என்று ஜெ.சி. குமரப்பா அழைப்பார்.

திறந்த வெளியில்தான் காந்தியடிகள் இரவில் படுப்பது வழக்கம். மழை வந்தால் மட்டும்தான் குடிலுக்குள் சென்று படுப்பார். அதுவும் கூட வெராந்தாவில்தான். ஒருமுறை காந்திஜியை சந்திக்க லோத்தியன் பிரபு வந்தபோது, அவரையும் தன்னுடன் வெட்ட வெளியில் படுத்துக் கொள்ளப் பணித்தார் காந்திஜி. காந்திஜிக்குக் காற்றோட்டமில்லாத அறைக்குள் தூங்குவது பிடிக்காது.

முதலில் "பாபு குடில்' மிகச் சிறியதாகத்தான் இருந்தது. வெராந்தா, விருந்தினர் அறை, குளியலறை எல்லாம் தேவை கருதி அதிகரிக்கப்பட்டன. காந்திஜியின் நேரடிக் கண்காணிப்பில் சோஷ லிசத் தலைவர் ஆச்சார்ய நரேந்திரதேவ் இந்தக் குடிலில் தங்கியிருந்துதான் இயற்கை வைத்தியம் மேற்கொண்டதாகச் சொன்னார்கள். காந்திஜி பயன்படுத்திய எல்லாப் பொருள்களும் அந்தக் குடிலில் அப்படியே பாதுகாக்கப்படுகின்றன.

தினசரி காலையில் எழுந்து தயாராவதும், பாபு குடிலுக்குப் போவது என்பதும் எனக்குப் பழக்கமாகிவிட்டது. அந்தக் குடிலின் வாசலில் 1924-இல் "யங் இந்தியா' இதழில் காந்திஜி குறிப்பிட்டிருந்த "ஏழு சமூகக் குற்றங்கள்' ஒரு பலகையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதைப் படித்த பிறகுதான் நான் பஜனில் கலந்து கொள்வேன்.

"கொள்கை இல்லாத அரசியல்; உழைப்பு இல்லாத செல்வம்; நாணயமில்லாத வணிகம்; ஒழுக்கம் இல்லாத கல்வி; மனசாட்சி இல்லாத பொழுதுபோக்கு; மனிதம் சாராத அறிவியல்; தியாகம் இல்லாத வழிபாடு' - ஏழும் காந்திஜியின் பார்வையில் சமூகத் தீமைகள்.

"பாபு குடில்' போலவே "மா குடில்' என்கிற கஸ்தூரிபாவின் குடிலும் புனிதமானது. வணக்கத்துக்குரியது. ஆதி நிவாஸில் காந்திஜியுடன் கஸ்தூரிபாவும் தங்கியிருந்தார். விருந்தினர்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது இடம் போதவில்லை. அதற்காக உருவாக்கப்பட்டதுதான் "மா குடில்'. காந்திஜியை தரிசிக்க வரும் பெண்கள், கஸ்தூரிபாவுடன் மா குடிலில்தான் தங்குவார்கள்.

1942 ஆகஸ்ட் 2-ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்ள காந்திஜி பம்பாய் கிளம்பியபோது கஸ்தூரிபாவும் அவருடன் சென்றார். "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் அண்ணலுடன் கஸ்தூரிபாவும் கைது செய்யப்பட்டு புணே ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டார். கஸ்தூர்பாவின் உடல்நிலை மோசமாகி, 1944 பிப்ரவரி 22-ஆம் தேதி அவர் ஆகாகான் மாளிகையிலேயே இயற்கை எய்தினார். அதனால் சேவாகிராம் ஆசிரமத்துக்குத் திரும்பவே இல்லை.

சேவாகிராம் ஆசிரமம் குறித்தும், அங்கே நான் பார்த்தது, கேட்டது குறித்தும், எனது அனுபவங்கள் குறித்தும் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். இந்திய வரலாற்றுடனும், விடுதலை வேள்வியுடனும் இணைபிரிக்க முடியாமல் கலந்துவிட்டிருக்கும் அண்ணல் காந்தியடிகளின் சேவாகிராம் ஆசிரமத்துக்குச் சென்று ஒரு மாதமாவது தங்கி இருக்க வேண்டும் என்கிற எனது அவா இன்று வரை ஈடேறவில்லை. ஈடேறாமல் போகாது என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கிறது.

சரியாகச் சொல்வதானால் ஒன்பது நாள்கள் நான் அங்கே தங்கி இருந்தேன். பெரியவர் ரவீந்திர வர்மாவை அதற்குப் பிறகு நான்கைந்து முறை சந்தித்தேனே தவிர, அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆசிரம அலுவல்களும், விருந்தினர்கள் வருவதுமாக அவர் இயங்கிக் கொண்டிருந்தார்.

நான் சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒன்பது நாள்களில், வெளியுலகில் பெரிய பிரளயமே உருவாகியிருந்தது. அத்வானியின் கைதும் அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களும் அடங்குவதற்குள், அயோத்தி சூடுபிடித்து விட்டது.

அக்டோபர் 30-ஆம் தேதி அயோத்தியில் கரசேவை (ஊழியம்) நடத்தப் போவதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருந்தது. "ஈ, காக்கை கூட அயோத்திக்கு மேலே பறக்க முடியாது' என்று முதல்வர் முலாயம்சிங் யாதவ் அறிவிக்க, "முடிவு செய்த தேதியில் கரசேவை நடந்தே தீரும்' என்று அசோக் சிங்கால் தெரிவிக்க, ஒட்டுமொத்த இந்தியாவும் பதற்றத்தில் இருந்தது, சேவாகிராம் தவிர!

அயோத்தியிலிருந்து செல்லும் அனைத்துத் தரைப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதியைச் சுற்றி கம்பி வேலி போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும், காவல்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்தது.

இந்தியா முழுவதிலிருந்தும் அயோத்தி நோக்கிக் கிளம்பிய 40 ஆயிரத்துக்கும் அதிகமான கரசேவகர்கள் போக்குவரத்துத் தடையால் நடைப்பயணம் மேற்கொண்டனர். யாரும் எதிர்பாராத விதத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சரயு நதியில் நீச்சலடித்து அயோத்தியை அடைந்து விட்டனர்.

பாபர் மசூதியை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்ட மகாந்த் நிருத்திய கோபால்தாஸூம், விஎச்பியின் தலைவர் அசோக் சிங்காலும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். காவல்துறையினருக்கும் சாதுக்களுக்கும் இடையில் கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. முதல்வர் முலாயம்சிங் யாதவின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தனர். தற்காலிகமாக அயோத்தியில் அமைதி நிலைநாட்டப்பட்டது.

அப்படிப்பட்ட சூழலில்தான் நான் சேவாகிராமிலிருந்து கிளம்பி வாராணசி சென்றடைந்தேன். வாராணசி, அலகாபாத் (இப்போது பிரயாக்ராஜ்) சென்றுவிட்டு, அயோத்தி சென்றடைவது என்பது எனது திட்டம். நான் வாராணசி சென்றடைந்த நேரம், அங்கே கடும் குளிர். அயோத்தியில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஒட்டுமொத்த உத்தரபிரதேசமும் கலவர பூமியாகக் காட்சி அளித்தது.

ஏற்கெனவே மண்டல் கமிஷனுக்கு எதிரான போராட்டம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அடுத்தாற்போல, அயோத்தி ராமர்கோயில் பிரச்னை பூதாகரமாகக் கிளம்பி இருந்தது. நான் லக்னெள போகாமல் வாராணசிக்குப் போனதற்கு ஒரு காரணம் உண்டு. மூத்த காங்கிரஸ் தலைவர் கமலபதி திரிபாதியின் மூத்த மகனும், உத்தரபிரதேசத்தில் அமைச்சராக இருந்தவருமான லோக்பதி திரிபாதி எனக்கு நன்கு அறிமுகமானவர். அவரது உதவியுடன் அயோத்தி போக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.

நான் வாராணசி சென்றடைந்ததும், காசி விஸ்வநாதர் கோயில், அனுமார் கட்டம், பாரதியார் வாழ்ந்த வீடு என்று சுற்றிப் பார்த்து விட்டேன். அங்கிருந்து வெளியாகும் "ஆஜ்' என்கிற இந்திப் பத்திரிகை எனது "நியூஸ்கிரைப்' செய்தி நிறுவனத்தின் சந்தாதாரர் என்பதால், அதன் ஆலோசகரும் மூத்த பத்திரிகையாளருமான சந்திரகாந்த்ஜி நான் தங்குவதற்கும் போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்து தந்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டால் அயோத்தி பிரச்னை தற்காலிகமாக அடங்கிவிட்டது என்று பார்த்தால், நவம்பர் 2-ஆம் தேதி மீண்டும் பூகம்பம் வெடித்தது. ஒருநாள் முழுவதும் அமைதியாக இருந்த கரசேவகர்கள், மீண்டும் பாபர் மசூதியை நோக்கி ஊர்வலம் மேற்கொண்டனர். பழையபடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த முறை உயிரிழந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

பல சடலங்கள் குவித்து வைக்கப்பட்டு, காவல்துறையினரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன. துப்பாக்கி ரவைக்கு இரையான நூற்றுக்கணக்கான கரசேவகர்களின் உடல்கள் சரயு நதியில் தூக்கி எறியப்பட்டன. விவரம் கேள்விப்பட்டு, உத்தர பிரதேசம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே கொதிக்கத் தொடங்கிவிட்டது.

அடுத்த இரண்டு நாள்கள் நான் வாராணசியில் தங்குவதற்கு பட்டபாடு எனக்குத்தான் தெரியும். கமலாபதி திரிபாதி மறைந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. அதனால் லோக்பதி திரிபாதியால் வெளியில் வரவோ, எனக்கு உதவவோ இயலவில்லை.

"நாட்கோட் செளல்ட்ரி' என்று பரவலாக அறியப்படும் காசியிலுள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் வேளாவேளைக்கு ருசியாக நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டு எப்படியோ கழித்தேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலை பொழுது புலரும் நேரம். ரயில் அயோத்தி ரயில் நிலையத்தில் நின்றது. நான் இறங்கினேன். நான் மட்டும்தான் இறங்கினேன். வேறு யாரும் இறங்கவோ ஏறவோ இல்லை. மயான அமைதி நிலவியது.

ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். மரத்தடியில் ஒரே ஒரு வாடகை ஜட்கா வண்டி நின்று கொண்டிருந்தது. கம்பளியால் இழுத்துப் போர்த்தியபடி தாடியுடன் முதிய இஸ்லாமியர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சட்டை செய்ததாகவே தெரியவில்லை.

குளிர்காற்று ஜில்லென்று வீசியது. நான் நடுக்கத்துடன் அந்த ஜட்காவை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com