'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 23

அயோத்திக்கு ரயிலில் புறப்படுவதற்கு முன்பு, வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த செளத்ரி அஜீத்சிங்கை, நான் வாராணசியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 23

அயோத்திக்கு ரயிலில் புறப்படுவதற்கு முன்பு, வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்த செளத்ரி அஜீத்சிங்கை, நான் வாராணசியிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். "அயோத்தி செல்கிறேன்' என்று நான் அவரிடம் சொன்னபோது, அவருக்கு ஒரு விநாடி திகைப்பு.

""இந்த சூழ்நிலையில் நீங்கள் ஏன் மதராஸிலிருந்து கிளம்பி வாராணசி வந்தீர்கள்? இப்போது எதற்காக அயோத்தி செல்ல வேண்டும்? மூன்று நாள் முன்புதான் துப்பாக்கிச் சூடு நடத்திருக்கிறது. புறப்பட்டு நேராக தில்லி வந்து சேருங்கள்'' என்று என்னிடம் கூறினார்.

நான் அயோத்தி செல்ல வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால், ""நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்'' என்று கேட்டார்.

""எனக்கு உத்தரபிரதேசமும் புதிது, அயோத்தியும் புதிது. அயோத்தியில் நான் எங்கே தங்குவது? அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து தர முடியுமா?''

முன்னாள் பிரதமர் செளத்ரி சரண் சிங்கின் மகன் என்பது மட்டுமல்லாமல், மேற்கு உத்தர பிரதேசத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் ஜாட் இனத்தவர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர் அஜீத் சிங். உத்தரபிரதேசத்தில் குறிப்பிடத்தக்க சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களில் அவரும் ஒருவர்.

""அயோத்தியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு வசதியான அறையும், உணவு வசதியும் செய்து தரச் சொல்கிறேன். அதிக நாள் அங்கே தங்காமல், விரைவிலேயே வேலையை முடித்துக் கொண்டு பத்திரமாக தில்லி வந்து சேருங்கள்'' என்று அஜீத் சிங் வழிகாட்டியிருந்தார்.

நடுங்கும் குளிரில் அந்த ஜட்கா வண்டிக்கு அருகில் சென்று நின்றேன். என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல அந்த முஸ்லிம் கிழவர் புகைபிடித்துக்
கொண்டிருந்தார்.

""அரசு விருந்தினர் மாளிகைக்குப் போகவேண்டும். வருகிறீர்களா?''

என்னை முறைத்துப் பார்த்தார்.

""நீங்கள் ஹிந்துவா, முஸல்மானா?''

""ஹிந்து!''

""அப்படியானால் இந்த ஜட்கா வராது. அந்தப் பகுதியில் ஹிந்துக்களை ஏற்றிச் செல்லும் ஜட்கா ஏதாவது வரும். அதில் செல்லுங்கள்...''

""ஏன், இது முஸ்லிம்களுக்கு மட்டுமான ஜட்காவா? இதில் ஹிந்துகளை ஏற்றிக்கொள்ள மாட்டீர்களா?''

என்னை மீண்டும் உற்றுப் பார்த்தார் அவர். எனது ஹிந்தியிலிருந்து நான் "மதராஸி' (தென்னிந்தியர்) என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

"" நீங்கள் மதராஸி என்று நினைக்கிறேன். இந்த ஊர் நிலைமை உங்களுக்குப் புரியாது. அயோத்தியில் இப்போதெல்லாம் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் ஜட்காவிலும், முஸ்லிம்கள் ஹிந்துக்களின் ஜட்காவிலும் ஏறுவதில்லை.

நாங்கள் ஒன்றுக்கொன்று உறவாக, அண்ணன், தம்பிகளாகப் பழகியது ஒரு காலம். இப்போது அப்படியல்ல.''

""அப்படியானால் நீங்கள் என்னை உங்கள் ஜட்காவில் ஏற்றிக்கொள்ள மாட்டீர்கள், அப்படித்தானே? குளிர் கடுமையாக இருக்கிறது. சரி, அரசு விருந்தினர் மாளிகை எங்கே இருக்கிறது என்று சொல்லுங்கள். நான் நடந்தே போகிறேன்.''

""அதோ ரயில்வே தண்டவாளத்தையொட்டிச் செல்லும் அந்த சாலையில் நேராக நடந்தால் இரண்டு மைல் தூரத்தில் இருக்கிறது. என்னால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது. அதனால்தான் சொல்கிறேன், நான் வரமுடியாது''

அவரிடம் பேசிப் பயனில்லை என்பது மட்டுமல்ல, அவரிடம் பேசிப் புரியவைக்கும் அளவிலான ஹிந்திப் புலமை எனக்கு அறவே இல்லை. அதனால், பெட்டி, கைப்பையுடன் அவர் காட்டிய திசையில் நடக்கத் தொடங்கினேன்.

சுமார் ஒரு பர்லாங் தூரம் நடந்திருப்பேன்.

பின்னால் குதிரை வண்டி வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்த முஸ்லிம் கிழவர் என் அருகில் ஜட்காவை நிறுத்தினார். கீழே இறங்கி வந்து எனது பெட்டியையும், கைப்பையையும் வாங்கிக் கொண்டார். வண்டியில் ஏறச் சொன்னார்.

நான் எதுவும் பேசாமல் அவரது ஜட்காவில் ஏறினேன். சரளமாக அவருடன் என்னால் ஹிந்தியில் பேச முடியவில்லையே தவிர, அவர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மெதுவாக ஜட்காவை ஓட்டிக் கொண்டே அவர் பேசத் தொடங்கினார்.

""நல்ல வேளையாக ஈ காக்காய் இல்லாத பொழுது புலராத நேரம். நான் ஒரு ஹிந்துவை எனது ஜட்காவில் ஏற்றிக் கொண்டேன் என்று தெரிந்தால், எங்கள் ஆட்கள் என்னைச் சும்மா விடமாட்டார்கள். அதேபோல, ஒரு முஸ்லிமின் ஜட்காவில் நீங்கள் ஏறியது தெரிந்தால், இங்குள்ள ஹிந்துகள் உங்களைத் தாக்கக்கூடும். யாராவது கேட்டால் ஹிந்து, முஸ்லிம் என்று சொல்லாமல் "மதராஸி' என்று மட்டும் சொல்லுங்கள்'' என்றார் அவர்.

""ஏன் இப்படி வெறித்தனமாக இருக்கிறீர்கள்?''

""அதுதான் எனக்கும் புரியவில்லை. இந்த பாபர் மசூதிப் பிரச்னைதான் எங்களை இப்படித் துண்டாடி எதிரிகளாக்கி வைத்திருக்கிறது. எனது பதின்மூன்றாவது வயதிலிருந்து அறுபது வருடங்களாக நான் இதே அயோத்தியில்தான் ஜட்கா ஓட்டுகிறேன். கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் இப்படி''

""துப்பாக்கிச் சூடெல்லாம் நடந்ததாமே?''

""கடந்த பத்து நாளில் மூன்று நான்கு தடவை துப்பாக்கிச் சூடு நடந்துவிட்டது. இரண்டு துப்பாக்கிச் சூடு பற்றித்தான் வெளியுலகத்துக்குத் தெரியும். எங்களுக்குப் பாதுகாப்பு தருகிறோம் என்று கூறி ராணுவத்தினர் படுத்தும்பாடு கொஞ்சம் நஞ்சமல்ல''

அவ்வப்போது அவர் குரல் உடைந்தது, கண்களைத் துடைத்துக் கொண்டார். எனக்கே என்னவோ போலிருந்தது.

""நாங்கள் இருக்கும் குடியிருப்பை மூன்று நாள்கள் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு போட்டுவிட்டார்கள். யாரும் உள்ளே நுழையவும் முடியாது, வெளியே போகவும் முடியாது. ஃபைசாபாதிலுள்ள முஸ்லிம்கள் பணக்காரர்கள். இங்கே அயோத்தியில் வாழும் நாங்கள் அன்றாடம் காய்ச்சிகள். என்னைப்போல தினமும் வேலை பார்த்துச் சாப்பிட வேண்டும். என்ன சொல்ல? எனது எட்டே மாதமான கொள்ளுப் பேத்திக்கு மருந்து வாங்கிக் கொடுக்க முடியாமல் நாங்கள் அந்தக் குழந்தையைப் பறிகொடுத்து விட்டோம்''

அவர் தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். தனது எஜமானனின் சோகத்தைத் தெரிந்து கொண்டதோ என்னவோ அந்தக் குதிரை, அதுவும் நின்றுவிட்டது. அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்தேன் நான். தன்னை சற்றுத் தேற்றிக் கொண்டு அவர் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

""அந்தப் பாழடைந்த பாபர் மசூதியில் நாங்கள் யாரும் தொழுகை நடத்தவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அது பாழடைந்துதான் கிடக்கிறது. அதை இடித்துக் கோயில் கட்டிக் கொள்ளட்டும். அப்போதாவது நாங்கள் முன்பு இருந்ததுபோல, சகோதரர்களாக நட்புறவுடன் இருக்க முடியுமானால் அதுதான் எங்களுக்கு வேண்டும்.''

அவர் மீண்டும் தேம்பித் தேம்பி அழுதார். கண்களைத் துடைத்துக் கொண்டு என்னைத் திரும்பிப் பார்த்தார்.

""ஹிந்துவாக இருந்தால் வேறு ஜட்காவில் போங்கள் என்று உங்களிடம் நான் சொன்னேனே. இதே அயோத்தியில் வாழும் எத்தனையோ ஹிந்துக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளை நான்தான் எனது ஜட்காவில் பள்ளிக்கு அழைத்துக்கொண்டு போவேன். அதேபோல, முஸ்லிம் வீடுகளுக்கு ஹிந்து ஜட்கா வாடிக்கையாக இருக்கும். அந்தக் குழந்தைகள் பெரியவர்களானாலும், ஜனாப் சாப், அலி தாதா, சாச்சா ஜி என்று என்னை அன்புடன் அழைப்பார்கள். வெளியூருக்கு வேலைக்குப் போய் ஊருக்குத் திரும்பும்போது மறக்காமல் ரயில் நிலையத்துக்கு எனது ஜட்கா வர வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவித்திருப்பார்கள்.''

ஒருசில விநாடிகள் பழைய நினைவுகளில் மூழ்கினார் அந்த முதியவர். குதிரை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.

""இப்போது அதே குழந்தைகளும், அவர்களுடைய வாரிசுகளும் ரயிலில் வந்து இறங்கினால், நேராக என்னிடம் வராமல் ஹிந்து ஜட்கா ஓட்டிகளைத் தேடிப் போகும்போது எனக்கு எப்படி இருக்கும், சற்று யோசித்துப் பாருங்கள். நான் தோளில் தூக்கி வளர்த்த குழந்தைகள். அவர்களது திருமணம், அவர்களுடைய குழந்தைகளின் பிரசவம் எல்லாவற்றிற்கும் எனது ஜட்காவில் பயணித்தவர்கள். இப்போது, மரியாதைக்குக் கூட ஒரு புன்னகை கிடையாது. முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். அந்த சோகத்தை அனுபவித்தால்தான் புரியும்''

அவரது சோகம் அனுபவிக்காமலேயே எனக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்தார்:

""இது எனக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் நிற்கும் வயதான ஹிந்து ஜட்கா ஓட்டிகளுக்கும் இதே மனவேதனைதான். எங்கள் தலைமுறையினர் பலரும் இறந்துவிட்டார்கள். நாங்கள் மூன்று பேர்தான் இன்னும் இருக்கிறோம்''

""இப்போதைய தலைமுறையினர் மத்தியில் நட்பு எப்படி இருக்கிறது?''

""நட்பா? எங்கள் குதிரைகள்கூட ஹிந்து - முஸல்மான் என்று பிரிந்து கிடக்கின்றன. அவர்களுக்குள் துவேஷமும், பகையும் சகிக்க முடியவில்லை. தினமும் ஜட்கா நிறுத்தத்தில் சண்டைதான். நான் ஒரு ஹிந்துவை எனது வண்டியில் ஏற்றினேன் என்று தெரிந்தால், என்னை சக முஸ்லிம் ஜட்காக்காரர்கள் அடித்தே கொன்று விடுவார்கள்''

""இதற்கு முடிவே கிடையாதா?''

""அல்லாஹு எல்லாருக்கும் நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். நாங்கள் அன்றாடம் உழைத்து சம்பாதித்தால்தான் இரண்டு வேளை உணவு. இப்படியே போனால், இன்னும் எத்தனை துப்பாக்கிச் சூடுகள் நடக்கப் போகிறதோ, எத்தனை பேர் சாகப் போகிறார்களோ, ஹே அல்லாஹ்!''

""இதற்கு எப்படி முடிவு ஏற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''

""நீங்கள் மதராஸி. உங்களிடம் சொல்லலாம். யாரிடமும் சொல்ல மாட்டீர்கள். நான் தினமும் நமாஸில் வேண்டிக் கொள்வதெல்லாம், சண்டை சச்சரவில்லாமல் நாம் விட்டுக் கொடுத்து பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதுதான். ராமர் இங்கேதான் பிறந்தாரா, பாபர் மசூதி அவரது பிறந்த அதே இடத்தில்தான் கட்டப்பட்டதா என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுவோம். ராமர் கோயில் கட்டுவதால் நாங்கள் அயோத்தியில் பத்து வருடத்துக்கு முன்பு இருந்ததுபோல ஒற்றுமையாகப் பழக முடியுமானால், அதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதில் தவறில்லை.''

""அதை எப்படி முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்கள்?''

""ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், என்ன செய்ய? ஹிந்துக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். நாங்களும் ஒரு காலத்தில் ஹிந்துக்கள்தானே? விட்டுக் கொடுத்து விடுவோம். பிரச்னை முடிவுக்கு வரட்டும். பெரிய ராமர் கோயில் கட்டப்படும். நிறையப்பேர் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கோயிலுக்கு வருவார்கள். எங்களுக்கு நிறைய சவாரி கிடைக்கும். அயோத்தியே செழிப்பாக இருக்கும்.''

""அது நடக்கிற காரியமாகத் தெரியவில்லையே''

""எனது காலத்தில் நடக்குமா என்பது சந்தேகம்தான். சண்டை போடாமல் சமரசமாக ராமர் கோயில் என்றால்தான், அயோத்தியில் பழைய அமைதி திரும்பும். நாங்கள் ஒன்றாக வாழ முடியும். சண்டை முற்றி, கலகம் ஏற்பட்டு அதற்குப் பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டால், அதனால் ஹிந்துக்கள் சமாதானமாகலாம். ஆனால், பழைய நட்புறவு ஏற்படாது''

அந்த முதிய இஸ்லாமிய ஜட்காக்காரரின் தொலைநோக்குப் பார்வையும், நல்லிணக்கச் சிந்தனையும் இப்போது நினைத்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கிறது.

குதிரையின் லகானை இழுத்து வண்டியை நிறுத்தினார். சுமார் நூறு மீட்டர் தூரத்தில் அரசு விருந்தினர் மாளிகை பனிமூட்டத்திற்கிடையில் மங்கலாகத் தெரிந்தது.

""நான் அங்கே வரவில்லை. நீங்கள் இனி நடந்து செல்லுங்கள். எனது ஜட்காவில் வந்ததாக யாரிடமும் சொல்ல வேண்டாம்''

நான் கீழே இயங்கினேன். அவரே இறங்கி வந்து எனது பெட்டியையும், பையையும் எடுத்துத் தந்தார். அவருக்குப் பணம் கொடுப்பதற்காக பையில் கையை விட்டேன். தடுத்து விட்டார்.

""நான் உங்களுக்குக் கூலிக்காக வரவில்லை. உதவி செய்வதற்காகவும் வரவில்லை. நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு ஹிந்து சவாரி கிடைத்த திருப்திக்காக வந்தேன். என் மனதில் வெளியில் சொல்ல முடியாமல் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் உங்களிடம் கொட்ட முடிந்தது. இஸ்லாமிய ஜட்கா ஓட்டும் கிழவர் ஒருவரை அயோத்தியில் சந்தித்ததை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இனி நாம் சந்திக்கப் போவதில்லை. சந்திக்க முடியாது. நீங்கள் கவனமாகவும், பத்திரமாகவும் போங்கள். அல்லாஹு உங்களுக்கு எல்லா நன்மைகளையும் சமாதானத்தையும் தரட்டும். குத்தா ஹாஃபிஸ் (கடவுள் பாதுகாப்பாராக!)''

எனது தாத்தாவை அரவணைத்து விடைபெறுவதுபோல, அந்த முதிய இஸ்லாமியரை அணைத்து விடை பெற்றேன். அவரது ஜட்கா திரும்பிச் சென்றது. நான் பெட்டியும் பையுமாக அயோத்தி அரசு விருந்தினர் மாளிகையை நோக்கி நடந்தேன்.

அரசு விருந்தினர் மாளிகை வாசலில் நின்றபடி திரும்பிப் பார்த்தேன். ஜட்கா பனிமூட்டத்தில் மறைந்திருந்தது. 30 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னும் அந்த முதியவர் என் நினைவிலிருந்து அகலவில்லை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com