Enable Javscript for better performance
எங்கோ பார்த்த முகம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  எங்கோ பார்த்த முகம்

  By சாந்தா தத்  |   Published On : 21st February 2021 06:00 AM  |   Last Updated : 21st February 2021 06:00 AM  |  அ+அ அ-  |  

  kadhir6

   

  ""ரண்டி... ரண்டி'' அவனிடமிருந்து பெட்டியை வாங்கிக் கொண்டாள் மோகனா.
  ""என்ன தெலுங்கெல்லாம் அட்டகாசமா பேசுற... நான் ஊரிலில்லாத மூணு நாளில் தாய் மொழியையே மாத்திட்டயா?''
  "" விஜயவாடா போய் வர்றீங்கல்ல... அதான் டக்குனு புரிஞ்சுக்கணும்''
  ""அப்ப அடுத்த வாரம் உன் ஃபிரண்டோட தம்பி கல்யாணம்னு நீ மைசூர் போய்ட்டுத் திரும்பறதுக்குள்ள நான் கன்னடம் கத்துக்கணுமா''
  ""ஃபிரண்டின் தம்பி கல்யாணம்தங்கை கல்யாணம்னு ரெண்டு பேருமா மாநிலம் மாநிலமா போய்ட்டு வரீங்க... நான் மட்டும் உள்ளூர் ஃபிரண்ட் வீட்டுக் கல்யாணத்துக்குக்கூடப் போகக் கூடாது. கரோனா பேர் சொல்லிக் கட்டிப் போட்டுட்டீங்க.''
  ""சரி... கல்யாணம் நல்லா நடந்ததாபிரபு ?சுந்தரத்துக்கு அசலே சிரிச்ச முகம். உன்னைப் பார்த்ததும் அப்படியே பூரிச்சுப் போயிருக்குமே'' -அவன் அப்பா
  முகம்... முகம்...அந்தமுகம்... யார் அது? எங்கே பார்த்திருப்போம்.
  ""என்னடா... ரயில்ல ராத்திரி சரியாத் தூங்கலயா? கல்யாணமெல்லாம் நல்லா நடந்ததான்னு கேட்டனே''
  ""ம்...ம்... என்ன கேட்டிங்கப்பா? ''
  ""அதுவா... ஆந்திராக் கல்யாணம் ரொம்ப வித்தியாசமா இருந்தது. அப்புறமா எல்லாம் விரிவா சொல்றேன். காப்பி கலந்து வை மோகனா... இதோ பத்து நிமிஷத்தில் வந்துடறேன்''
  பல் தேய்த்துமுகம் கழுவிய போது பயணக் களைப்பும் கழுவப்பட்டது போல் காணாமல் போயிற்று. பதிலாக புதுக் களைப்பு... மனக் களைப்பு மளமளவென அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.முகத்தில் படிந்த ஒவ்வொரு நீர் துளியிலும் அந்த முகம்.
  "ஒன்று... இரண்டு...பத்து... இருபது' எனப் பன்மையில்... கண்ணாடியில் அவன் முகத்துக்குப் பதிலாய் அதே அளவில் அந்த முகம்.சில கணங்கள் மட்டுமே பார்வையில் பட்ட அந்த அவர் முகம்! யார் அவர்? அதான் தெரியவில்லை. ஒரு நிமிடத்துக்கும் குறைவான நிமிடம் தான் பார்வையில் பட்டிருப்பார் அவர்.ஆனாலும் நினைவடுக்குகளில் அரக்கு முத்திரையாய் படிந்து விட்ட முகம். ஆனால் அது யார் என்று நினைவுக்கு வராத விந்தை ! எங்கேயோ பார்த்த முகமாய் தெரிகிறது. ஆனால் எங்கே... எப்போது? அது தான் இப்போது அவன் மனதைக் குளவியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. செவியில் புகுந்த பூச்சியாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.
  ""பத்து நிமிஷம்னு சொன்னீங்க. காப்பி ஆறி அவலாச்சு. இருங்க சூடு பண்ணிக் கொண்டு வரேன்''
  ""பத்து நிமிஷமா?நான் எழுந்து வந்தே அரை மணி ஆகப் போறதே... ட்ரெயின்ல அப்பா சரியா தூங்கியிருக்க மாட்டார்.அதான் பாத்ரூம்லயே''
  ""வாயை மூடுடா...இவர் ரொம்பக் கண்டார்... படிக்கற பையன் இப்பதான் எழுந்திருக்கறதா?''-பிள்ளையை அதட்டினாலும் சொல்லி வைத்தாற் போல் சற்று முன் அப்பா... இப்ப இவன்... ஆளாளுக்கு அவனுடைய ரயில் தூக்கத்தைப் பற்றியே... ரயிலில் அப்படியொன்றும் அவன் தூங்காமலில்லை.ஒருவேளை தூங்காமலிருந்திருந்தால் நினைவுக்கு வந்திருக்குமோ!யார் அவர்... எங்கே பார்த்திருப்போம்... என்றளவில் அப்போது யோசனைகள் ஓடினாலும் சில நிமிடங்களில் துக்கம் வந்து விட்டது. முதல் நாள் நள்ளிரவுக் கல்யாணம்.பின் நாளெல்லாம் நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்த நண்பர்களுடன் அரட்டை... ஊர் சுற்றியது என நேரம் கடந்த களைப்பில்இமைகளை அழுத்திய தூக்கம்.ஆனால் விடிந்தமுதல் கணம் நினைவுகளில் குபீரென எழுந்தது அந்த முகம் தான்! சென்ட்ரலில் ரயிலினின்று இறங்கியதும் ஓர்ஓரமாய் நின்று எதையோ தேடிக் கொண்டு ஓடுவது போல் அதி வேகப் பாய்ச்சலாய் விரைந்து கொண்டிருந்த ஜனங்களிடையே தேடலானான். அந்த முகக்காரரும் அதே ரயிலில் ஏறியிருக்கவும் வாய்ப்பிருக்கிறதே! ஒரு வேளை இடையில் வந்த நெல்லூர்கூடூர் எதிலாவது இறங்கியிருப்பாரோ... ச்சே... சரியான இடியட் நான்...புறப்பட்டு விட்ட ரயிலைப் பிடிக்கும் பதட்டமின்றி சற்று தள்ளித் தானே வண்டியுடன் வந்தார்.
  ""அப்படி என்ன யோசனை... வந்ததே பிடித்து நானும் பார்க்கறேன். கல்யாண வீட்டில் எதையாவது தொலைச்கிட்டிங்களா?முதல்ல காப்பியைக் குடிங்க. இன்னொரு தடவை சூடு பண்ணா அப்புறம் அது கஷாயம் தான்''
  ""இப்பவே இவன் முகம் கஷாயம் குடிச்சவன் மாதிரி தான் இருக்கும்மா... என்னான்னு தெரியலயே''
  இவளுக்கு பின் பாட்டு பாடுவது தவிர இந்த அப்பாவுக்கு வேற வேலையே கிடையாதா... எரிச்சலாக வந்தது. எதுவும் பேசாமல் ஒரே விழுங்கில் காப்பியைக் குடித்து விட்டுபெட்டியிலிருந்த பாக்கெட்டை எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.
  ""ஆந்திரா ஸ்பெஷல் பூத ரேகுலுவும்... பந்தர் லட்டும். உங்களுக்கு ஸ்வீட்டுன்னா ரொம்பப் பிடிக்குமேன்னு இன்னும் ஞாபகம் வச்சிட்டுக் கொடுத்தனுப்பியிருக்கான் சுந்தரம்.மற்ற விஷயமெல்லாம் சாவகாசமாப் பேசலாம். அப்போ பிடிச்சு தாத்தாவும் பேரனுமா சொல்லிட்டிருக்கீங்கில்ல.... இப்ப நான் போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வரேன்... நல்ல காலம்... இன்னிக்கு சன்டே...''
  "எனக்குக் கிடையாதாப்பா சன்டேல்லாம்' பையன் கேட்டு விடுவானோ என்பது போல் அவசர அவசரமாய் அறைப் பக்கம் நடந்தான்.
  ஏதோ சரியில்லையென வீட்டில் அத்தனை பேரும் ஊகித்து விட்டார்கள்.தெரிந்தால்... ப்பூ... இவ்வளவு தானா? ஏதோ தலை போகிற விஷயம்போலில்ல. தலை மேல் கை வைக்காத குறையாய் அவஸ்தைப் பட்டிட்டிருக்கீங்கன்னு கிண்டல் செய்வார்கள்.நிஜமாகவே அப்படித் தானா? உப்பு சப்பில்லா விஷயத்துக்கு நான் அலட்டிக்கிறேனா... ஆனால் மறக்க முடியவில்லையே... மனதில் அந்த அளவு ஆழமாய் புதைந்து போயிருக்கே அந்த முகம்! சில வினாடிகளே கண்ணில் பட்ட அது இவ்வளவு காட்டமாய் என்னுள் அட்டையாய் ஒட்டிக் கொண்டிருக்கிறதென்றால்அவருக்கும் எனக்குமிடையே கண்டிப்பாய் சின்னதாகவாயினும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். ஆனால் அவர் யாரென ஞாபகமே வராமல் இப்படிப் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறார்.. அவர் அவர் என்கிறேனெனில் நிச்சயம் அவர் என் வயதைவிட கொஞ்சம் அதிகமிருக்கலாம்.அது மட்டும் சர்வ நிச்சயம்!
  ரயிலின் நகர்விலும் அது மட்டும் தெளிவாய் உணர முடிந்தது. மேலும் ஆராய்வதற்குள் வண்டியின் வேகம் சற்றே அதிகமாகி மெல்ல மெல்ல பார்வையினின்றே மறைந்து போனார் அவர், கண்களினின்று மட்டுமே!
  கல்யாண வைபவங்களனைத்தும் முடிந்து, டெல்லி, புணே,ஷிமோகா, கோவை என நண்பர்கள் அவரவர் வழிகளில் கிளம்ப விஜயவாடாவில்ரயிலேறி ஜன்னல் சீட் கிடைத்த மகிழ்ச்சியுடன் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான், அவன். யானையை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சுவாரசியம் போல் ரயில் நிலையங்கள் மீது அப்படியொரு ஈர்ப்பு அவனுக்கு. எந் நேரத்துக்குமான அப் பரபரப்பு...நெரிசல்... சுறு சுறு இயக்கம்... வெளியே உலகமே அவர்களுக்காகத் தான் காத்திருக்கிறது என்பது போன்ற ஓட்டம்... இதெல்லாம் புதிதாய் தெரியும் ஒவ்வொரு முறையும்! அதுவும் விஜயவாடா போன்ற ஜங்ஷன்களில் கேட்க வேண்டுமா? சகலசந்தடிகளுடன் "ஜே ஜே' என ஜனங்கள்... ஒரே ஒரு பெரிய வித்தியாசம்... முகமூடி ஜனங்கள்! அம் முகமூடிகளால் அவர்கள் பரபரப்பைக் குறைக்க முடியவில்லை! அப் பரபரப்பு மேலும் கூடியது. வண்டி மெல்ல நகர்ந்த போது, எந் நேரமும் வண்டி கிளம்பலாம் எனும் பிரக்ஞையேயின்றி பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மூச்சிரைக்க ஓடி வந்து ஏறிக் கொள்ள... வழியனுப்ப வந்தவர்கள் வண்டியுடன் கூடவே வேக நடையில், கையாட்டியபடி! அப்போது தான் அந்த முகத்தை-அவரைக் கவனித்தான் இவன்!யாருக்கோ டாடா சொன்னபடி அவர்எங்கேயோ பார்த்தது போல் இருக்கே, அவரை. வண்டி வேகம் பிடிக்க, கணங்களில் அவர் புள்ளியாகி... பின் மறைந்தே போனார் இவன் பக்கமே பார்க்காத அந்த அவர். அவ்வளவு தான்... அப்போதிருந்து மனதில் அக் குழப்பம் பீடம் போட்டு அமர்ந்து விட்டது. எங்கேயோ பார்த்த மயக்கம் எனப் பல்லைக் கடித்துக் கடித்து உதித் நாராயணன் பாடும் விதமாய் எந்நேரமும் அதே பிரமை! தூக்கம் வருவது போல் தெரியவில்லை.வீட்டாரிடம் சொன்னால் கொஞ்சம் பாரம் குறையுமோ... கேலி பேசினாலும் பரவாயில்லை. தன்னவர்கள்தானே... மனம் லேசானால் போதும்.
  வெளியே வந்ததும் எந்தப் பீடிகையுமின்றி உடனே விஷயத்துக்கும் வந்து விட்டான்.
  "" ராத்திரி விஜயவாடா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஒருத்தரைப் பார்த்தேன். இதுக்கு முன் எங்கயோ பார்த்திருக்கேன். ஆனால் எங்கன்னு ஞாபகம் வரலே.போகட்டும் போன்னு விடவும் முடியலே.''
  ""உங்க காலேஜ் கேர்ள் ஃபிரண்டா இருக்கும்''டைனிங் டேபிளில் வைத்து கருணைக்கிழங்கு நறுக்கிக் கொண்டிருந்த மோகனா தலை நிமிர்த்தாமல் சொல்ல...
  ""புரியாமப் பேசுறயேயம்மா... அப்படியிருந்தா அது யாருன்னு தெரியாம இப்படி இவன் மாய்ந்து மாய்ந்து யோசிக்கும் தேவையே இல்லாம மூலையில் பளிச்சுனு பல்ப் எரிந்திருக்குமே. அப்படித் தானேடா?''
  ""அதெல்லாம் ஒண்ணுமில்லே தாத்தா... இது ஒரு பெரிய விஷயம்னு டென்ஷன் பட்டிட்டிருக்கார் இந்த அப்பா... பாவம்...யாரையோ பார்த்துக் குழம்பிப் போயிருக்கார். அதுவும். மாஸ்க் போட்ட முகம்''
  ""இல்லடா கோபி... அங்க மாஸ்க் போடாதவர்களும் இருந்தாங்க. எப்படி உள்ளே விட்டாங்களோ... இல்ல உள்ளே வந்து கழட்டிட்டாங்களோ?நான் சொன்ன அந்த ஆளும் மாஸ்க் போடலே...சரி இதோடு விடுங்க. சும்மாதுருவாதீங்க.உங்களிடம் சொல்லணும்னு இருந்தது. சொல்லிட்டேன். அவ்வளவுதான். முடிஞ்சு போச்சு விஷயம்''
  முடியவில்லை, பற்களிடையே சிக்கிக் கொண்ட ஏதோ ஒன்றாய் நெருடிக் கொண்டே இருந்தது. வீதிகளில்... கடைகளில்... அலுவலகத்தில் அனைவரையும் உறுத்து உறுத்துப் பார்க்கலானான். உடன் தனக்குள் அசட்டுச் சிரிப்பாய் சிரித்துக் கொள்வான். விஜயவாடாவில் பார்த்தவர், இங்கு எப்படி? ஏன்... வந்திருக்கக் கூடாதா... என்ன? இதே விதமாய் அவரும் அவஸ்தைப்பட்டு வீட்டையும் எரிச்சல்படுத்தி...நாட்களை நகர்த்தி...
  அன்று அலுவலகத்திலிருந்த போது மோகனாவிடமிருந்து அழைப்பு. ""பிஸினஸ் விஷயமா மதுரையிலேர்ந்துசித்தப்பா வந்திருக்கார். ஹோட்டலில் தங்கியிருக்காராம்.ராத்திரி ஊருக்குக் கிளம்புவதற்கு முன் நம்ம வீட்டுக்கு வரதா ஃபோன் பண்ணார்.வரும் போதுகிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து மைசூர்பா வாங்கிட்டு வாங்க. சித்தப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். சந்தோஷப்படுவார். கொஞ்சம் தாராளமாவே வாங்கிட்டு வாங்க. கடைக்குப் போய் யாரையாவது வெறிச்சுப் பார்த்து நின்னுட்டு போன விஷயம் மறந்துபோய் வந்துடாதீங்க''
  "எங்க... நான் மறக்க நினைத்தாலும் நீங்க இப்படி ஞாபகப் படுத்திட்டே இருப்பீங்களே' ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
  ""வாங்க மாப்பிள்ளை. விஜயவாடா போய்ட்டு வந்தீங்களாம். அந்தப் பக்கக் கல்யாணமெல்லாம் டோட்டலா வேற மாதிரி இருக்குமே.இவர் என் ஃபிரண்ட்... மகாதேவன்.நாகர்கோவிலில் இருக்கார். என்னோட பிஸினஸ் தான். தற்செயலா இங்க சந்தித்தோம்''அவனை வரவேற்ற சித்தப்பா அவர் வயதிருக்கும் அந் நண்பரை அறிமுகம் செய்ய... கை கூப்பி வணக்கம் தெரிவித்தான்.
  ""பிரபு... நானும் நிறையக் கேள்விபட்டிருக்கேன். தெலுங்குக் கல்யாணங்கள் மிக சுவாரசியமா இருக்குமாம். எனக்கும் ஆசை தான்.ரெண்டு மாசம் முன்ன கூட காக்கிநாடாவில் ஒரு முக்கியமான கல்யாணம்.போக முடியலே.ஒரு வருஷமா ஊரை விட்டேநகரலே. ரயிலே விடலயே'' மகாதேவன் அவன் அப்பா போலவே ஆதங்கப்பட்டார்.
  எல்லாருமாய் நாட்டு நடப்பெல்லாம் அலசிய ஒரு மணி நேரத்துக்குப் பின் சாப்பாட்டுக் கடை.
  ""சமையல் பிரமாதம்மா... அதுவும், சுரக்காய் கீர்...சான்úஸ இல்ல மோகனா... இது இருக்கறப்ப வேற ஸ்வீட்டெல்லாம் எதுக்கு சொல்லு''சித்தப்பா திருப்தியுடன் கூற... ஆமோதிப்பாய் சிரித்தார் அவர் நண்பர்.
  ""இருக்கட்டும் சித்தப்பா. மைசூர்பான்னா உங்களுக்கு உயிராச்சே...இந்த பாக்கெட் ஊருக்கு...''
  வீட்டு முன் ஓலா கேப் தன் வருகையை அறிவித்தது.
  இருவரும் கிளம்பிய போது சில நொடிகள் போல் தயக்கமாய் நின்று... பிரபுவை யோசனையுடன் பார்த்தார் மகாதேவன்.
  ""இதற்கு முன் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு பிரபு... அப்போதிருந்து எவ்வளவு யோசித்தாலும் எங்கன்னு ஞாபகம் வரலே. சரி... நாகர்கோவில் பக்கம் வந்தால் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் நீங்கல்லாம். வரட்டுமா சார். பை டா குட்டிப் பையா''
  வீதி வரை சென்று அவர்களை வழியனுப்பக் கூடத் தவறி... சரேலென பிரபுவைப் பார்த்தன வீட்டு முகங்கள்... அக் கணம் அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களைஅறிய ஆவலுற்றவர்களாய்!
  ""இவரைத்தான் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷனில் பார்த்தேன்'' -சொன்னான் பிரபு.

  செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp