'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 24

அஜீத்சிங் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால், எனக்கு சிறப்பு விருந்தினர்களுக்கான அறை, அயோத்தி அரசு விருந்தினர் மாளிகையில் ஒதுக்கப்பட்டிருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 24


அஜீத்சிங் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால், எனக்கு சிறப்பு விருந்தினர்களுக்கான அறை, அயோத்தி அரசு விருந்தினர் மாளிகையில் ஒதுக்கப்பட்டிருந்தது. சூடாகத் தேநீர் தந்தார்கள். எட்டு மணிக்கு மேல்தான் ஊழியர்கள் வருவார்கள் என்றும் அதுவரையிலும் ஓய்வெடுக்கும்படியும் சொன்னார்கள்.

நான் குளித்துத் தயாரானபோது மணி பத்தாகிவிட்டது. காலை உணவுக்கு என்ன இருக்கிறது என்று கேட்டபோது கிடைத்த பதில் என்னை ஆச்சரியப்படுத்தியது. பூரி - சப்ஜி, இட்லி,சப்பாத்தி-பரோட்டா என்று உணவு விடுதியிலிருந்து (கேன்டீன்) சொன்னார்கள். உத்தர பிரதேசம், அயோத்தி வரையில் நமது இட்லி காலை உணவாகி இருப்பது எனக்கு வியப்பாக இருந்தது.

அஜீத்சிங்கின் கட்சிக்காரர் தர்ஷன்ராம் செளத்ரி என்பவர் என்னை எல்லா இடங்களுக்கும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், சுற்றிக் காட்டவும் வந்திருந்தார். மதராஸிலிருந்து வந்திருக்கும் தனது தலைவரின் நண்பர் என்பதால் அவர் காட்டிய மரியாதையும், உபசரிப்பும் என்னைத் திக்கு முக்காட வைத்தன. காலை உணவு முடிந்ததும் தர்ஷன்ராமுடன் அயோத்தியைச் சுற்றிப் பார்க்க நான் கிளம்பினேன்.

இப்போது அயோத்தி எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அப்போது, அது கிராமமாகத் தோற்றமளித்த ஒரு புராதன நகரம். அயோத்தியும் - ஃபைசாபாதும், ஹைதராபாதும் -செகந்தராபாதும் போல இரட்டை நகரங்கள். தென்காசி - செங்கோட்டை, வேலூர் - சத்துவாச்சாரி போல என்று வைத்துக் கொள்ளுங்கள். சுமார் ஐந்து கிலோ மீட்டர்தான் இரண்டுக்கும் இடையேயான தூரம். ஃபைசாபாத் மாவட்டத்தின் தலைமையிடம் அயோத்தி என்றாலும், அயோத்தி நகராட்சி மன்றம் ஃபைசாபாதில்தான் இயங்கி வந்தது.

அயோத்தியைச் சுற்றி வருவதற்கு முன்பு அந்த நகரம் குறித்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கோசலை நாட்டின் தலைநகராக ஆரம்பத்தில் அயோத்தி இருந்து வந்தது. அதற்குப் பிறகு கெளதம புத்தர் காலத்தில் கோசலை நாட்டின் தலைநகராக இருந்தது "ஷ்ராவஸ்தி'. அப்போது அயோத்தி "சாகேதம்' என்று அறியப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஸ்ரீராமர் பிறந்த புண்ணியஸ்தலம் என்பது மட்டுமல்ல; பெளத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும்கூட அயோத்தி ஒரு முக்கியமான தீர்த்தாடன கேந்திரம். கெளதமபுத்தரும், மகாவீரரும் அயோத்திக்கு வந்திருப்பதாகவும், அங்கே தங்கி இருந்ததாகவும் பெளத்த, ஜைன வரலாற்றாளர்கள் குறித்திருக்கிறார்கள். ரிஷபநாதர், அஜிதநாதர், அபிநந்தன நாதர், சுமதிநாதர், அனந்தநாதர் என்கிற ஐந்து ஜைன தீர்த்தங்கரர்கள் பிறந்த புனிதத் தலம் அயோத்தி.

ராம ஜென்மபூமி என்பதுதான் அவை எல்லாவற்றையும் விட அயோத்திக்குச் சிறப்பு என்பதில் சந்தேகமில்லை. அயோத்தியில் பாபர் மசூதிப் பிரச்னை உருவானதற்குப் பின்புதான் கருத்து வேறுபாடுகள் தோன்றின. அதுவரை நல்லிணக்கமான ஒரு நகரமாகத்தான் அயோத்தி திகழ்ந்திருக்கிறது. நான் அயோத்திக்குப் போனபோது, அயோத்தி நகரசபைத் தலைவராக இருந்தவர் ஒரு ஹிந்துவுமல்ல, இஸ்லாமியருமல்ல. அவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்த சர்தார்ஜி.

அப்போது மேயராக இருந்த அந்த சர்தார்ஜியைப் பேட்டி எடுத்ததும், புகைப்படம் எடுத்ததும் நினைவிருக்கிறது. ஆனால், 30 வருட இடைவெளியில் அவை காணாமல் போய்விட்டன.

பத்திரப்படுத்தாதது எனது தவறு.தர்ஷன்ராமின் காரில் நாங்கள் அயோத்தியைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். எங்கள் வாகனம் பாபர் மசூதி இருக்கும் பகுதியை நோக்கி நகர்ந்தது. அயோத்தி நகரின் ஓர் ஒதுக்குப்புறப் பகுதியில் அந்த மசூதி அமைந்திருந்தது. சரயு நதியில் காலை நனைத்துவிட்டு மேலே பயணிப்போம் என்று தர்ஷன்ராம் தெரிவித்தபோது, நான் தலையசைத்தேன்.

திருச்சி, தஞ்சைப் பகுதிகளில் காவிரிக் கரையோரமாகப் பயணிக்கும் போதெல்லாம் கல்கியின் "பொன்னியின் செல்வன்' நினைவுக்கு வரும். இந்த வழியாகத்தானே வந்தியத்தேவன் பயணித்திருப்பார். இதுதான் ஓடக் கரையோ என்றெல்லாம் கற்பனை சிறகு விரிக்கும். அயோத்திக்குள் நுழைந்தபோது என் சிந்தையில் கம்பகாதையின் பாலகாண்ட ஆற்றுப்படலம் நிறைந்திருந்தது.

சரயு நதி தீரத்துக்குச் செல்கிறோம் என்றபோது மனம் குதூகலித்தது. அது என்ன சாதாரண நதியா? கைலாயத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியின் கரையை வைவஸ்வத மனு என்பவர் ஓர் அம்பினால் உடைத்துக் கோசலத்தில் பாய்வதற்காக சரயு நதியை வரவழைத்தார் என்கிறது புராணம்.

நாங்கள் சென்றபோது நதி இரு கரைகளையும் தொட்டபடி பிரவாகித்துக் கொண்டிருந்தது. குளிர்காலமானதால் தண்ணீர் ஐஸ்கட்டி போலக் குளிராக இருந்தது. காலை வைத்தால் இழுத்துச் சென்றுவிடும் என்பதுபோல ஆற்றொழுக்கு வீரியத்துடன் இருந்தது. பெயருக்குக் காலை நனைத்துவிட்டு, அந்தப் புனித நீரைத் தலையில் தெளித்துக் கொண்டேன்.

கம்பகாதையின் பால காண்டத்தில் சரயு நதியை கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணித்தது நினைவுக்கு வந்தது. அந்த அற்புதமான வரிகளைக் கல்லூரி நாட்களில் படித்தபோது, இப்படி சரயு நதியை நேரில் பார்ப்போம் என்று நான் கனவிலும் கருதவில்லை.

இரவி த‌ன் குல‌த்து, எ‌ண்​ணி‌ல் பா‌ர்​ú‌வ‌ந்​த‌ர்​த‌ம்
பர​வு‌ம் ந‌ல்​ù‌லா​ழு‌க்​கி‌ன்​படி பூ‌ண்​டது;
சரயு எ‌ன்​பது தா‌ய்​முலை அ‌ன்​ன‌து; இ‌வ்
உர​வு​நீ‌ர் நில‌த்து ஓ‌ங்​கு‌ம் உயி‌ர்‌க்கு எலா‌ம்'


""இராமபிரான் அவதரித்த சூரிய குலத்தில் உதித்த மன்னர்கள் நல்லொழுக்கம் தவறாதவர்கள். அவர்களது அரச குலம் இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. அதைப்போலவே, தாய் தனது குழந்தைகளைப் பாலூட்டி வளர்த்து வருவதுபோல, கடல்சூழ்ந்த உலகத்து உயிர்கள் அனைத்தையும் இந்த சரயு நதியும் அந்த அரசர்களின் ஒழுக்க நெறியில் நின்று தொடர்ந்து நீரூற்றி வளர்க்கிறது'' என்பது கம்பநாட்டாழ்வாரின் பதிவு.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த அயோத்தி, உண்மையிலேயே ஏதோ புராணப் படங்களில் வருவதுபோல மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும் நிறைந்ததாக இருந்தது. பிரம்மாண்டமான புராதனக் கட்டடங்கள். ஆயிரமாண்டுக் கட்டடங்களாக இல்லாவிட்டாலும், நூறாண்டுகளைக் கடந்த கட்டடங்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

தெருவின் இரண்டு மருங்கிலும் வரிசையாக பெரிய பெரிய மாளிகைகள். அவற்றில் யாரும் குடியிருக்கவில்லை. ஒவ்வொன்றும் ஏதாவது மடாலயத்துக்குச் சொந்தமானது. பல மாளிகைகள் கோயில்களாக மாற்றப்பட்டிருந்தன. நான் சென்றபோது அங்கே எல்லாம் பக்தர்கள் கூட்டம் எதுவும் அலைமோதவில்லை. பல பிரம்மாண்ட மாளிகைகள் ஆள் அரவமில்லாமல், பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டன.

கனகபவன் மாளிகை, கைகேயியின் மாளிகை, கெளசல்யாவின் மாளிகை, ஸ்ரீராமரும் சீதையும் வாழ்ந்த மாளிகை என்று ஒவ்வொன்றாக எனக்கு அடையாளம் காட்டியபடி சென்று கொண்டிருந்தார் தர்ஷன்ராம். நாங்கள் வாகனத்தை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துதான் ராம ஜென்மபூமி என்று கருதப்பட்ட பாபர் மசூதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

ராமர்கூடம் (ராம்கூட்) என்று ஒரு மாளிகையைக் காட்டினார் தர்ஷன்ராம். அங்கேதான் ஸ்ரீராமர் அஸ்வமேத யாகம் நடத்தினார் என்று சொன்னார்கள். அங்கேயல்ல, "திரேதா கி தாக்கூர்' என்ற ஆலயம் இருக்கும் இடம்தான் அஸ்வமேத யாகம் நடந்த இடம் என்று சிலர் சொல்கிறார்கள். அங்கேயுள்ள ஒவ்வொரு மாளிகைக்கும் ஒரு பின்னணிக் கதை இருக்கிறது. ஒவ்வொரு மாளிகையிலும் ஏதோ ஒரு மடாலயம் இருக்கிறது. மடாதிபதி ஒருவர் அதன் அதிபராக இருக்கிறார்.

கைகேயியின் மாளிகையில் என்னைக் கவர்ந்தது என்னவென்றால், அதில் காணப்பட்ட மீன் சின்னம். நமது பாண்டவர்களுக்கும் அந்த மாளிகைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று உள்மனது சந்தேகம் எழுப்பியது. அதற்கு விடை தருவதற்கு யாருமில்லை என்பதால் நானும் விட்டுவிட்டேன்.

நாங்கள் பாழடைந்த பாபர் மசூதி இருக்கும் பகுதிக்கு வந்துவிட்டோம். கண்ணெட்டும் தூரத்தில் அந்தக் கட்டடம் தெரிந்தது. வழியில் நூற்றுக்கணக்கில் பாதுகாப்புப் படையினர். நான்கு நாள்கள் முன்புதான் துப்பாக்கிச்சூடு நடந்திருப்பதால் கட்டடத்துக்கு அருகில் யாரையும் அனுமதிப்பதில்லை என்றார்கள்.

அங்கே காவலுக்கு இருந்தவர்களில் பெரும்பகுதியினர் நேபாளிகள் அல்லது சீக்கியர்கள்தாம். எல்லையோரப் பாதுகாப்புப் படையினர்தான் பாபர் மசூதிக் கட்டடத்துக்குப் பொறுப்பாளர்களாக இருந்தனர். நாங்கள் என்ன சொல்லியும் உள்ளே அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நான் மனம் சோர்ந்துவிட்டேன். இப்படி தூரத்தில் இருந்து பாபர் மசூதிக் கட்டடத்தைப் பார்க்க இத்தனை கஷ்டப்பட்டு ஏன் வந்தோம் என்றாகிவிட்டது.

அங்கே இருந்த சில பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்ளே அனுமதிக்கும்படி கெஞ்சிக் கொண்டிருந்தபோது, எனது கையைப் பிடித்து வரும்படி அழைத்தார் தர்ஷன்ராம். என்னை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்தப் பகுதியிலிருந்து வெளியேறிய பிறகு தர்ஷன்ராம் பேசத் தொடங்கினார்.
""சிந்த்தா மத்கரோ (நீங்கள் கவலைப்படாதீர்கள்). இதற்கொரு வழி இருக்கிறது. இதை நான் முன்பே எதிர்பார்த்தேன். அதனால் ஏற்கெனவே, ஒரு வழியைக் கண்டுபிடித்திருக்கிறேன்'' என்று அவர் சொன்னார். நான் அவரை வியப்புடன் பார்த்தேன்.

""இப்போது நாம் மதிய உணவுக்கு எங்கே போகிறோம் தெரியுமா? அரண்மனைக்கு. அங்கே இந்தப் பிரச்னைக்கு விடை கிடைக்கும்.''

என்னை மதிய உணவுக்கு அவர் அழைத்துச் சென்றது அயோத்தி மன்னரின் மாளிகை. ஆம், அயோத்தி ராஜகுடும்பம் ஒன்று இப்போதும் இருக்கிறது. அவர்கள் ரவிகுலத்தைச் சேர்ந்தவர்களா, ஸ்ரீராமரின் வம்சாவளிகளா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அயோத்தி மக்கள் அவரைத் தங்கள் ராஜாவாகக் கொண்டாடுகிறார்கள் (அப்போது!).

பெரிய்ய்யய மாளிகை. அந்த வளாகத்துக்குள் எங்கள் பியட் கார் நுழைந்தது. திருமலைநாயக்கர் மஹால், தஞ்சை சரஸ்வதி மஹால் எல்லாம் நினைவுக்கு வந்தது. அவற்றை எல்லாம்விடப் பெரிதாக இருந்தது அயோத்தி ராஜாவின் மாளிகை அல்லது அரண்மனை.

காரை விட்டு இறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் எங்களைப் பாதாதி கேசம் சோதனை செய்தனர். அதற்குப் பிறகு அரண்மனை (!) ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். அதற்குப் பிறகென்ன, ராஜமரியாதைதான்!

"மதராஸிலிருந்து ஒரு பத்திரிகையாளர் வந்திருக்கிறார். அவர் மத்திய அமைச்சர் ஒருவரின் நண்பர். அரசியல் பிரபலங்கள் எல்லாம் அவருக்கு நண்பர்கள்' - இவையெல்லாம் தர்ஷன்ராம் செளத்ரி என்னைப் பற்றி அங்கே கூறியிருந்த தகவல்கள். அதனால்தான் அயோத்தி ராஜாவால் மதிய உணவுக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

உண்மையிலேயே நாம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருப்பது போன்ற பிரம்மாண்டமான வரவேற்பறை எங்களை வரவேற்றது. "சாண்டில்யர்ஸ்' எனப்படும் விலையுயர்ந்த கண்ணாடி விளக்குகள்; பாரசீகக் கம்பளங்கள் விரிக்கப்பட்ட தரை; தந்தங்களால் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சோபாக்கள், மேஜைகள்; பணியாட்களும் சரி, சேவகர்களைப்போல உடையணியவில்லையே தவிர, அவர்களைப் போன்ற பணிவும், செயல்பாடும்.

அந்த வரவேற்பறையில் நுழைந்ததும் மலைத்துப்போய் நின்று விட்டேன். என் கைகளை மெல்லத்தொட்டார் தர்ஷன்ராம்.

""வாசல் வெராந்தாவிலும், வெளியில் ஏதாவது நிகழ்வுகளிலும்தான் "ராஜா சாஹேப்'பை நான் சந்தித்திருக்கிறேன். இந்த வரவேற்பறையில் நான் நுழைவது இதுதான் முதல் தடவை. உங்களால்தான் எனக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தது''

அவர் நெகிழ்ந்துபோய்ப் பேசிக் கொண்டிருந்தார். வியப்பில் சமைந்திருந்த நான் "ராஜா சாஹேப்' எப்போது வருவார் என்கிற எதிர்பார்ப்பில் மிதந்து கொண்டிருந்தேன். இதுபோல இன்னும் பல அதிசயங்களை சந்திக்கப் போகிறோம் என்பது அப்போது எனக்குத் தெரியாது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com