'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 25

அயோத்தி ராஜகுடும்பத்தை தசரத மன்னனின் வம்சாவளி என்று நிறுவுவதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 25

அயோத்தி ராஜகுடும்பத்தை தசரத மன்னனின் வம்சாவளி என்று நிறுவுவதற்கான எந்தவித ஆதாரமும் கிடையாது. அவர்களும் தங்களை அப்படி வர்ணித்துக் கொள்வதில்லை. இப்போதைய அரசராக இருக்கும் ராஜா விமலேந்திர மோகன் பிரசாத், அதுகுறித்து தனக்குத் தெரியாது என்றுதான் கூறுகிறார்.

அயோத்தி ராஜகுடும்பத்துக்கும் தென்கொரியாவுக்கும் இருக்கும் தொடர்பு ஆச்சரியமானது. தென்கொரிய இலக்கியங்கள் அயோத்தியை "அயுத்தா' என்று குறிப்பிடுகின்றன. இர்யான் என்கிற பெளத்தத் துறவி எழுதிய "சம்குக் யூசா' என்கிற கொரிய நூலில், தென்கொரியாவுக்கும் அயோத்திக்கும் இடையேயான தொடர்பு விவரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, அயோத்தியின் இளவரசி கடல் பயணம் மேற்கொண்டார். அவர் சென்ற பாய்மரக் கப்பல் கொரிய நாட்டைச் சென்றடைந்தது. தென்கொரியாவிலுள்ள கிம்ஹே என்கிற துறைமுக நகரத்தைத் தலைநகராகக் கொண்ட "காயா' என்கிற நாட்டின் அரசராக இருந்த கிம் சுரோ அந்த இளவரசி மீது காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

இப்போது கொரியாவில் இருக்கும் ராஜ குடும்பம், கிம் சுரோவின் 72-ஆவது தலைமுறை. அவர்கள் தங்களது அயோத்தித் தொடர்பைப் பெருமையுடன் நினைவு கூர்வது மட்டுமல்ல, அந்தத் தொடர்பு அறுந்துவிடாமல் இருப்பதிலும், கவனமாக இருக்கிறார்கள். ஆண்டுதோறும் தென்கொரியாவில் நடத்தப்படும் கிம் சோரோ நினைவு நிகழ்ச்சிக்கு, அயோத்தி ராஜகுடும்பத்தினரை அழைத்து அவ்வப்போது கெளரவப்படுத்துகிறார்கள். ராஜா விமலேந்திர மோகன் பிரசாத் அங்கு சென்றுவந்திருக்கிறார். தென் கொரிய நாட்டினர் அயோத்தியிலும் தங்களது மூதாதையரான மகாராணிக்கு ஒரு நினைவகம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆங்கிலம் தெரிந்த ஒருவர் எங்கள் இருவரையும் உணவருந்த அழைத்துச் சென்றார். சுமார் 20 பேர் அமர்ந்து சாப்பிடும் அளவிலான அந்த மேஜையில் நாங்கள் இருவரும் அமர்ந்தோம். "ராஜா சாஹேப்...' என்று நான் கேட்டபோது, அந்த உதவியாளருக்கு நான் என்ன கேட்க வருகிறேன் என்பது புரிந்துவிட்டது; விளக்கினார்.

நாங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தாலும் ராஜாவுடன் அமர்ந்து சாப்பிட முடியாது. ராஜகுடும்பத்தினர் உணவு அருந்தும் அறை தனியாக இருந்தது. அயோத்தி ராஜாவுடன் உணவருந்தப் போகிறோம் என்று எதிர்பார்ப்பு பொய்த்து, தர்ஷன் ராமுடன் அரண்மனையில் சாப்பிடும் வாய்ப்புதான் எனக்குக் கிடைத்தது.

நாங்கள் சாப்பிடும்போது எங்களை அழைத்து வந்த மேலாளர், அயோத்தி ராஜகுடும்பம் குறித்து மேலும் பல தகவல்களைத் தெரிவித்தார். அயோத்தி ராஜகுடும்பத்தின் கிரீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் ஏராளமான வைர, வைடூரியங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

அந்தக் கிரீடம் பிரிட்டிஷரால் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. அரண்மனையில் இருந்த பல விலைமதிப்பில்லாத கலைப் பொருள்களும், நகைகளும், விதவிதமான உடைவாள்களும் பிரிட்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன என்றும் அந்த மேலாளர் தெரிவித்தார்.

உணவு முடிந்து நாங்கள் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தோம். வரும் வழியில் மூன்று பதப்படுத்தப்பட்ட புலிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ராஜா சாஹேபின் பாட்டனார் ஜகதாம்பிகா பிரதாப் நாராயண் சிங் வேட்டைப்பிரியர். பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் அவர் வேட்டைக்குப்போய் பல வனவிலங்குகளை வேட்டையாடி இருக்கிறார். அப்படி அவரால் வேட்டையாடப்பட்ட புலிகளில் மூன்று மட்டும் பதப்படுத்தப்பட்டு அரண்மனையில் பாதுகாக்கப்படுகின்றன.

சுமார் அரை மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு ராஜா சாஹேபை சந்திக்க எனக்கு மட்டும் அழைப்பு வந்தது. சஃபாரி சூட் அணிந்த இரண்டு பேர் என்னை மாடியிலுள்ள ஓர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, வண்ணப் பூந்தொட்டிகளும் கொடிகளும் நிறைந்த திறந்த பால்கனியுடன் கூடிய விசாலமான அறையில், மிகவும் சாதாரணமாக குர்த்தா, பைஜாமாவுடன் அமர்ந்திருந்தார் "ராஜா சாஹேப்' என்று எல்லாராலும் அழைக்கப்படும் ராஜா விமலேந்திர மோகன் பிரசாத்!

எங்களுடன் உணவருந்தவில்லை என்பதால் எனக்கு அவர்மீது ஏற்பட்டிருந்த தவறான அபிப்பிராயம், அவரைப் பார்த்த அந்தக் கணத்திலேயே அகன்றது. ராஜ கர்வம் எதுவும் இல்லாமல், நட்புறவுடன் அவர் வரவேற்று உபசரித்தது மகிழ்ச்சியாக இருந்தது.

""ராஜகுடும்பத்தில் பிறந்து விட்டதால் சில சம்பிரதாயங்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாகப் பல வழக்கங்களை மாற்றிக் கொண்டு வருகிறேன். உங்களுடன் உணவருந்தாதற்கு வருந்துகிறேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.''

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவர் இதெல்லாம் சொல்லியிருக்கவே வேண்டாம்.

என்னைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டார். வி.பி. சிங் தனது உறவினர் என்றும், சந்திரசேகர் தனது நலன் விரும்பி என்றும் தெரிவித்தார். அடுத்த சில நாள்களில் சந்திரசேகர் பிரதமராகப் போகிறார் என்கிற செய்தியை எனக்குத் தெரிவித்தது ராஜா சாஹேப்தான்.

அயோத்தி வரை வந்தும் கூட பாபர் மசூதி அருகில் கூட செல்ல முடியாமல் இருக்கும் எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன். கலகலவென்று சிரித்தார்.

""தவறான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் வந்திருந்தால் பாபர் மசூதிப் பகுதியில் நாய்கள்தான் திரிந்து கொண்டிருந்தன. யாரும் போக மாட்டார்கள். அங்கே பூஜை செய்து கொண்டிருக்கும் பாபா லால் தாஸூக்கு நாங்கள் எல்லாம்தான் பூஜை நடத்துவதற்கும், அவரது செலவுக்கும் பணம் கொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போது நிலைமையே மாறிவிட்டது...''

""பாபர் மசூதியில் உள்ள ராமர் கோயிலுக்கு நான் போவதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.''

என்னை ஒரு நிமிஷம் வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராஜா சாஹேப். புன்னகைத்தார்.

""இவ்வளவு பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும்போது, அயோத்தி வந்து பாபர் மசூதியைப் பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது? தேடி வந்திருக்கும் உங்களை ஏமாற்றத்துடன் அனுப்ப எனக்கு மனமில்லை. ஒரு நிமிஷம் பொறுமையாக இருங்கள்'' என்றபடி எழுந்தார் அவர்.

அப்போது செல்லிடப்பேசி இல்லாத காலம். அவரே எழுந்துபோய் அறையிலுள்ள மேஜையில் இருந்த தொலைபேசியை எடுத்து மாவட்ட ஆட்சியரின் எண்ணைச் சுழற்றினார்.

""ராஜா சாஹேப் பேசுகிறேன். மாவட்ட ஆட்சியரிடம் (அவரது பெயரைச் சொல்லி) பேச வேண்டும்.''

அடுத்த சில விநாடிகளில் இணைப்புக் கிடைத்தது. என்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, பாபர் மசூதிக்குப் பத்திரமாக அழைத்துச் சென்று காட்டிவிட்டு, அரசு விருந்தினர் மாளிகையில் கொண்டு விடும்படி கேட்டுக் கொண்டார். ""மேலிடத்திலிருந்து யாராவது கேட்டால், ராஜா சாஹேப்பின் வேண்டுகோள் என்று சொல்லுங்கள்'' என்றும் வழி சொன்னார். திரும்பிவந்து என்னுடன் அமர்ந்தார்.

""நீங்கள் போய்ப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து யாராவது வந்து உங்களை அழைத்துச் செல்வார்கள். அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். சீக்கிரமே அங்கிருந்து வந்து விடுங்கள்.''

""இதில் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?''

""நிறையவே இருக்கிறது. நீங்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. ஏதாவது விஷமிகள் உங்களைத் தாக்கினால் என்ன செய்ய முடியும்? அதுமட்டுமல்ல, யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பது முலாயம் அரசின் உத்தரவு. அதிகாரிகளிலேயே சிலர் உங்களது அனுமதியை எதிர்க்கலாம். யார் கண்டது?''
ராஜா சாஹேபின் எச்சரிக்கை உணர்வில் அர்த்தம் இருக்கத்தான் செய்தது. அவர் மேலும் தொடர்ந்தார்:

""நீங்கள் இன்று இரவே அயோத்தியிலிருந்து கிளம்பி விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்.''

நான் தலையை ஆட்டினேன். தில்லி அரசியல் குறித்து சிறிது நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். வாசலில் காவல் துறையினரின் வாகனம் வந்திருப்பதாகச் சொன்னார்கள். ராஜா சாஹேப்பிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கீழே வரவேற்பறைக்கு வந்தேன்.

பாபர் மசூதிக்குச் செல்வதற்கு எனக்கு மட்டும்தான் அனுமதி. தர்ஷன் ராமுக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார் காவல்துறை அதிகாரி. அவரை விருந்தினர் மாளிகைக்குப் போகச் சொல்லிவிட்டு நான் அந்த அதிகாரியுடன் காவல் துறை வாகனத்தில் ஏறினேன். பாபர் மசூதியை நோக்கிச் சென்றோம். பாதுகாப்புப் படையினரிடம் அவர் பேசி என்னை உள்ளே அழைத்துச் சென்றார்.

பிரம்மாண்டமான அந்த பாபர் மசூதி கட்டடத்தின் பெரும்பகுதி பயன்படுத்தப்படாமல் பாழடைந்த நிலையில் இருந்தது. கேட்டுக்குள் நுழைந்தால் இருநூறு அடி தூரத்தில் ஒரு சிறிய அறையில் மிகச் சிறியதாக ராமர், சீதை விக்கிரகங்கள் இருந்தன. அதை "ராம் லல்லா' என்று குறிப்பிட்டார்கள்.

பாபர் மசூதி கட்டடத்தின் அந்தப் பகுதியைத் தவிர, ஏனைய பகுதிகள் இருளடைந்து கிடந்தன. சில இடங்களில் 40 வாட்ஸ் மஞ்சள் பல்புகள் பெயருக்கு வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில் தூண்கள் என்பதை நான் பார்த்தேன். ஏதோ கோயிலை இடித்து அதன் தூண்களைப் பயன்படுத்தித்தான் அந்த மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பதை அந்தச் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் தெரிவித்தன. ஓரிரு தூண்களைத்தான் என்னால் பார்க்க முடிந்தது.

"ராம் லல்லா' பகுதிக்கு வந்தேன். அங்கே தலைமைப் பூஜாரியாக இருந்தவர் பெயர் பாபா லால்தாஸ். நீதிமன்ற உத்தரவின்படி, 1981-இல் பாபர் மசூதியில் அமைந்த பிரச்னைக்குரிய ராம ஜென்மபூமி கோயிலில் பூஜாரியாக அவர் நியமிக்கப்பட்டதாகச் சொன்னார். ஓரளவுக்குப் புரியும்படியான ஆங்கிலத்தில் அவரால் பேச முடிந்தது.

எனது பெயர், நட்சத்திரம் எல்லாம் கேட்டு ராம் லல்லாவுக்கு அர்ச்சனை செய்தார். காவல் துறையினரின் பாதுகாப்புடன் வந்திருப்பதால் நான் யாரே பெரிய மனிதன் என்று அவர் நினைத்திருக்கக் கூடும்.

கட்டடத்தில் ஆங்காங்கே காரை பெயர்ந்து செங்கற்கள் வெளியில் தெரிந்தன. அப்படியே விட்டிருந்தாலும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த பாபர் மசூதிக் கட்டடம் தானாகவே இடிந்து விழுந்திருக்கும் என்பதுதான், அதை நேரில் பார்த்த எனது கருத்து. அதிகபட்சம் 20 நிமிஷங்கள்தான் அந்தக் கட்டடத்தில் இருந்திருப்பேன்.

அன்று நான் பாபர் மசூதி ராமர் கோயிலில் சந்தித்த பூஜாரி பாபா லால்தாஸ், 1992 மார்ச் மாதம் அகற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மஹான்த் சத்யேந்திரதாஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். 1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1993 நவம்பர் 16-ஆம் தேதி இரவு அயோத்தியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள ராணிப்பூர் சத்தர் என்கிற கிராமத்தில் பாபா லால்தாஸ் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கான உண்மைக் காரணம் இதுவரையில் வெளிவரவில்லை.

பாபர் மசூதி வளாகத்திலிருந்து என்னை ஏற்றிக் கொண்டு அந்தக் காவல் துறை வாகனம் அரசு விருந்தினர் மாளிகைக்கு விரைந்தது. அன்று இரவு தில்லிக்குச் செல்லும் ரயிலில் செல்வதற்கான எனது பயணம் ராஜா சாஹேபால் உறுதி செய்யப்பட்டு "டிக்கெட்' தர்ஷன் ராமிடம் தரப்பட்டிருந்தது.

மூட்டை மூட்டையாக செய்திகளையும், அவிழ்க்க முடியாத பல புதிர்களையும் சுமந்து கொண்டு தில்லி செல்லும் ரயிலில் நான் தலைநகர் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன். நான் தில்லி ரயில் நிலையத்தில் சென்று இறங்கியபோது, 343 நாள்கள் பிரதமராகப் பதவி வகித்த விஸ்வநாத் பிரதாப் சிங் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து பதவி விலகி இருந்தார்.

தில்லியில் கடும் குளிரும், பரபரப்பான அரசியல் சூழலும் என்னை வரவேற்க ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com