'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 17

நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் எதிரில் அமர்ந்திருப்பது பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ஆர்.கே. தவான் என்கிற நிதர்சனம் புரிந்தது. 
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 17


நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். என் எதிரில் அமர்ந்திருப்பது பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ஆர்.கே. தவான் என்கிற நிதர்சனம் புரிந்தது. காரணமில்லாமல் அவர் எதையும் கூற மாட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

""உடனடியாக நீங்கள் மெட்ராசுக்குத் திரும்ப வேண்டும். முடிந்தால், இன்றைக்கே கூட கிளம்புங்கள். நான் உங்கள் பயணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்'' என்றார் தவான்ஜி.

""எனது சகோதரியின் வீட்டில் தாயார் இருக்கிறார். தில்லிக்கு வந்ததும் வராததுமாக நான் திரும்புகிறேன் என்று சொன்னால் நன்றாக இருக்காது. இரண்டு நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பினால் போதாதா?''

""நடராஜனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? ஜெயலலிதாஜியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன என்பது குறித்து அவர் ஏதாவது தெரிவித்தாரா?''

""இல்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு நான் நடராஜனையோ, ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களையோ சந்திக்கவில்லை. திமுக தலைமையகத்தில் முதல்வராகி இருக்கும் கருணாநிதியை, பத்திரிகையாளர்
சந்திப்பில் இரண்டு முறை சந்தித்ததுடன் சரி.

தில்லிக்குக் கிளம்பி வந்துவிட்டேன்.''

""இரண்டு நாள் கழித்துக் கிளம்பினால் போதும். ஆனால், நடராஜனுடன் தொடர்பில் இருங்கள். திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால்,

தமிழக அரசியல் எப்படி மாறும் என்று தெரியாது. ஜானகிஜியிடம் உங்களுக்கு நெருக்கம் உண்டா?''

""அதிகமான நெருக்கம் கிடையாது. இரண்டு, மூன்று தடவை சந்தித்திருக்கிறேன். அதிகம் பேசியது இல்லை. ஆர்.எம். வீரப்பனைப் பார்த்திருக்கிறேனே தவிர, பேசியதுகூட இல்லை.''

""ஜானகிஜிக்கு நெருக்கமானவர்களில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் யார், யார்?''

""நெருக்கம் என்று சொன்னால் எஸ். மாதவன் மிகவும் நெருக்கம். அவர் அண்ணாதுரை அமைச்சரவையில் இருந்தபோது, கல்லூரி மாணவராக அவருக்கு நான் அறிமுகம். என்மீது அவருக்கு எப்போதுமே ஒருவித அக்கறை உண்டு.''

""அவர் எந்த அளவுக்கு ஜானகிஜியுடன் நெருக்கமாக இருக்கிறார்? வீரப்பனைவிட நெருக்கமா?''

""அதெல்லாம் எனக்குத் தெரியாது. எம்ஜிஆர் காலத்திலேயே அவர் அதிமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டவர். அவர் சட்ட அமைச்சராக இருந்தவர் என்பதாலும், 1962 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார் என்பதாலும் முக்கியமான கட்சிப் பிரச்னைகளிலும், சட்டப் பிரச்னைகளிலும் எம்ஜிஆர் அவரைக் கலந்தாலோசிப்பது வழக்கம். அதனால், ஜானகி அம்மாவும் அவரிடம் ஆலோசனைகளைக் கேட்பார் என்று நினைக்கிறேன்.''

""அவரிடம் மட்டும் நீங்கள் தொடர்பில் இருங்கள், போதும்.''

எதற்காக அவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவரிடம் கேட்பதற்கும் தயக்கம். நான் பேச வாயெடுப்பதற்குள், பிரதமரின் அறையிலிருந்து அவருக்கு அழைப்பு வந்துவிட்டது. அவர் எழுந்தார். நானும் எழுந்துவிட்டேன்.

செளத் பிளாக் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தேன். பொடி நடையாக நடந்து நாடாளுமன்ற வரவேற்பறை வளாகத்தை அடைந்தேன். கேண்டீனில் உணவு அருந்திவிட்டு, வரவேற்பறையில் சற்று நேரம் அமரலாம் என்று போனபோது, அங்கே இரா. அன்பரசு உட்கார்ந்திருந்தார்.

முந்தைய மக்களவையின் உறுப்பினரான இரா. அன்பரசுவுக்கு, 1984 - தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்தது முதலே, எனக்கு அறிமுகம். ஏழாவது மக்களவையில் அவர் உறுப்பினராக இருந்தபோது நெருக்கம் அதிகரித்தது.

எங்கள் பேச்சு எதிர்பார்த்ததுபோல, தமிழக அரசியல் குறித்துத் திரும்பியது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, மூப்பனாருக்குப் பதிலாக வேறொருவரைத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராகப் போட இருப்பதாகவும், தனக்கு அந்தப் பதவி கிடைப்பது தொடர்பாகத் தலைவர்களைச் சந்திக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

""காங்கிரஸில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதனால்தான் டாக்டர் ராமதாஸூம், பாட்டாளி மக்கள் கட்சியும் உருவாகி இருக்கிறது. திமுக, அதிமுக என்று எல்லா கட்சிகளிலும் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. காங்கிரஸில், வன்னியர்கள் என்றாலே ஓரங்கட்டப் படுகிறார்கள்'' - அவர் பேசிக் கொண்டே போனார்.

இரா. அன்பரசிடம் விடை பெற்றுக் கொண்டு அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்தேன். காங்கிரஸ் கட்சியின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் என்கிற முறையில் பிரணாப் முகர்ஜிக்கு அக்பர் ரோடு அலுவலகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது. தினந்தோறும் தனது அறைக்கு வந்து, பல முக்கியமான குறிப்புகளைத் தயாரித்துப் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்புவதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

பிரணாப்தா இருக்கிறார் என்று கேள்விப்பட்டு நான் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன். எனது பெயரை எழுதி சீட்டைக் கொடுத்தனுப்பினேன். உடனே உள்ளே அழைத்தார்.

உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
""என்ன யோசிக்கிறாய்?''

""காலையில் ஆர்.கே. தவானை சந்திக்க செளத் பிளாக் சென்றிருந்தேன்.''

பிரணாப்தா எதுவும் பேசவில்லை. சாவகாசமாகப் பைப்பைப் பற்ற வைத்தபடி புன்னகைத்தார்.

""நீ எதற்காக ஆர்.கே. தவானை சந்தித்தாய்? அவர் பேட்டியெல்லாம் தரக்கூடாதே..?''

""பேட்டி எடுக்கப் போகவில்லை. தனிப்பட்ட முறையில் அவரைச் சந்தித்தேன். தமிழ்நாடு அரசியல் குறித்துப் பேசினார். பிரதமரிடமும் அழைத்துப்போய், தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவிக்கச் சொன்னார்.''

பிரணாப்தா எதுவும் கூறவில்லை. "மேலே பேசு' என்பது போல, பைப்பைப் புகைத்தபடி பார்த்தார்.

""நான் முன்பே உங்களிடம் சொன்னதுபோல மூப்பனார்ஜி போட்ட கணக்குத் தவறிவிட்டது. அவர் ராஜீவ் காந்தியைத் தமிழகம் முழுவதும் ஊர்வலம் போக வைத்ததுதான் மிச்சம். ஜெயலலிதா பெற்ற அளவுக்குக் கூட அவரால் வெற்றி பெற முடியவில்லை. காங்கிரஸ் தமிழகத்தில் மீண்டும் தலைதூக்குவது இனிமேல் மிகமிக சிரமம்...''

அதற்கும் பிரணாப்தா எதுவும் பேசவில்லை. நான் பேசுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

""நாடாளுமன்ற வரவேற்பறையில் முன்னாள் எம்.பி. இரா. அன்பரசைப் பார்த்தேன். கட்சித் தலைமை மூப்பனாரை மாற்றப் போவதாக அவர் கூறுகிறார். தலைவர் பதவிக்குத் தன்னை முன்னிறுத்த "லாபி' செய்வதற்குத்தான் தில்லி வந்திருப்பதாகச் சொன்னார்...''

நான் மூப்பனார் பெயரைச் சொன்னபோது, பிரணாப் முகர்ஜியின் முகம் சற்று மாறியது. அவர் மெதுவாகப் பேசத் தொடங்கினார்.

""மூப்பனார்ஜி தமிழ்நாடு அரசியலில் இருந்து விலகி தில்லிக்கு வந்து விடுவதுதான் அவருக்கும் நல்லது, காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. இங்கே காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவரைவிடத் திறமையான ஒருவர் இல்லை. மூப்பனார்ஜியை மாநில அரசியலில் ஈடுபடுத்துவது கடல் மீனைக் கொண்டுபோய் கிணற்றில் விடுவதுபோல, அவருக்கு அந்த அரசியல் ஒருநாளும் வசப்படாது.''

இப்போது நான் எதுவும் பேசவில்லை. அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேன்.
இடையில் இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்தன. அவர் பேசிக் கொண்டிருந்தார். தொலைபேசியில் பேசி முடித்ததும், பிரணாப்தா தொடர்ந்தார்.

""ஆர்.கே. தவான் உன்னை எதற்கு அழைத்தார் என்று எனக்குத் தெரியாது. நான் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனப்படுவது நாட்டுக்கு நல்லதல்ல. தேசிய சக்திக்கு மாற்றாக மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவது ஆரோக்கியமான அரசியல். ஆனால் தேசிய கட்சிகள் பலவீனப்பட்டு மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவது நல்லதல்ல''

""நான் அப்போதே உங்களிடம் சொன்னேன், நினைவிருக்கிறதா? ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்காவிட்டால், தமிழக அரசியல் ஜெயலலிதா - கருணாநிதி என்று மாறிவிடும் என்று எச்சரித்தேன். அதுதான் நடக்கப் போகிறது.''

""இதுவரை, எம்ஜிஆருக்கும், கருணாநிதிக்கும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸின் தயவு தேவைப்பட்டது. அதே நிலை தொடர வேண்டும். தவான்ஜியும் அப்படித்தான் திட்டமிடுவார் என்று நினைக்கிறேன்.''

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, பிரணாப்தாவிடம் விடை பெற்று, எனது கன்னாட் பிளேஸ் ஏ.வி.ஜி. டவரிலுள்ள "நியூஸ் கிரைப்' அலுவலகத்துக்கு வந்துவிட்டேன்.

தவான்ஜி அறிவுறுத்தி இருந்ததைப்போல, சென்னைக்கு டிரங்க் கால் போட்டு ம. நடராஜனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அப்போது அவர் பெரும்பாலான நேரத்தை போயஸ் கார்டன் வேதா நிலையத்திலும், ஏனைய பொழுதுகளை அவரது ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் வீட்டிலும்தான் கழித்தார். இரண்டு இடங்களில் இருந்தும் அவர் இல்லை என்று பதில் வந்தது. தில்லியிலிருந்து நான் பேச விரும்புகிறேன் என்கிற செய்தியை மட்டும் தெரிவித்திருந்தேன்.

அன்று இரவு கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் சென்னைக்குக் கிளம்ப வேண்டும். காலையில் ஆர்.கே. தவானைத் தொலைபேசியில் அழைத்து விவரம் சொன்னேன். உடனே கிளம்பி வீட்டிற்கு வரச் சொன்னார். சென்றேன்.

""சென்னைக்குப் போனதும் முதல்வர் கருணாநிதியின் பத்திரிகையாளர் சந்திப்பில் நீ கலந்து கொள்ள வேண்டும். அவர் மத்திய அரசுடனும், காங்கிரஸூடனும் இணைந்து செயல்பட விரும்புகிறாரா, இல்லையா என்பதை உனது கேள்விகளின் மூலம் கேட்டுத் தெரிந்துகொள். எல்லாருக்கும் தெரியும்படி அவரிடமிருந்து வெளிப்படையாகத் திமுகவின் நிலைப்பாட்டை வெளிக்கொணர்வது உனது பொறுப்பு. அதனடிப்படையில்தான் அடுத்தாற்போல என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டும்.''

""இதற்கு என்னை பயன்படுத்துவானேன்? உங்களிடம் மத்திய ஆட்சி இருக்கிறது. புலனாய்வுத் துறை இருக்கிறது, கருணாநிதியுடன் தொடர்புடைய தலைவர்கள் இருக்கிறார்கள். நீங்களே கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே...''

""உனக்கு அதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைக்க முடியாது. திமுக பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. நாங்கள் நேரிடையாக அவர்களது நட்பைக் கோருகிறோம் என்று சொன்னால், அதிகாரபோதை அவர்களை உச்சாணிக் கொம்பில் ஏற்றிவிடும். அதிகம் பிரபலமில்லாத பத்திரிகையாளனான நீ கேட்கும்போது, யாருக்கும் சந்தேகம் ஏற்படாது. அதனால்தான் உன்னைக் கேட்கச் சொல்கிறேன்.''

ஏற்கெனவே ஆந்திர முதல்வர் என்.டி. ராமா ராவ் தலைவராகவும், வி.பி. சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் தேசிய முன்னணியில் திமுக முக்கியமான அங்கம். சட்டப்பேரவைத் தேர்தலில், திமுகவுக்காக தேசிய முன்னணித் தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்திருந்தனர். அந்த நிலையில், காங்கிரஸூடன் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ள திமுக விரும்பாது என்று நான் கருதினேன். அதை தவான்ஜியிடம் தெரிவித்தேன்.

அவர் கலகலவென்று சிரித்தார். சற்று நிதானித்து பிறகு பேசினார்.

""அது தேர்தலுக்கு முன்னர். இப்போது, அவர்கள் மாநிலத்தில் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். மத்திய அரசுடன் இணக்கமாகப் போகத்தான் விரும்புவார்கள். 1980-இல் இவர்கள் எம்ஜிஆரின் ஆட்சியைத் கலைத்ததுபோல, இவர்களது ஆட்சியையும் கலைக்க முடியும் என்பது கருணாநிதிக்குத் தெரியாமல் இருக்காது.''

எனக்கு "சுருக்'கென்றது. 1979-இல் நடந்ததுபோல, இப்போது 1989-இல் வரலாறு திரும்புமோ? தவான்ஜி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

""இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்குச் சாதகமாக சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அங்கே அமைதியை நிலைநாட்ட வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இலங்கைப் பிரச்னைக்குச் சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் ராஜீவ்ஜி விரும்புகிறார். மாநில ஆட்சியில் இருக்கும் திமுக நம்முடன் இணைந்து செயல்பட்டால்தான், சுமுகமான தீர்வை ஏற்படுத்த முடியும். உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.''

தலையாட்டினேன். எனக்குப் புரிந்தது. நன்றாகவே புரிந்தது. மிகச் சாதுர்யமான ராஜதந்திர வலை ஆர்.கே. தவானால் விரிக்கப்படுகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அன்று இரவு கிராண்ட் டிரங்க் விரைவு ரயிலில் பயணிக்கும்போது எனக்குத் தூக்கம் வரவில்லை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க நினைக்கிறது காங்கிரஸ். திமுக இணங்கி நடக்குமா, இல்லை 1979 சரித்திரம் திரும்புமா? யோசித்தபடியே தூங்கிவிட்டேன்...

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com