'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 43

பிரணாப் முகர்ஜியை உடனடியாக சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் தில்லி சென்றடைந்த எனது ஒரே குறிக்கோளாக இருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 43

பிரணாப் முகர்ஜியை உடனடியாக சந்தித்து வாழ்த்த வேண்டும் என்பதுதான் தில்லி சென்றடைந்த எனது ஒரே குறிக்கோளாக இருந்தது. கிரேட்டர் கைலாஷில் இருந்த அவரது வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் வீட்டில் இல்லை.

திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் என்பதால் நேரடியாகத் திட்டக் கமிஷன் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாமா என்று மனது பரபரத்தது. நேராகவே போய்விடலாமா என்றுகூட யோசித்தேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தேன் என்பதும், பக்குவமே இல்லாமல் நடந்து கொண்டேன் என்பதும் தெரிகிறது. அப்போது அப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை.

ஜவஹர் பவன் அலுவலகம் சென்றபோது, அவர் அங்கே வருவதை நிறுத்திவிட்டார் என்று சொன்னார்கள்.

வீட்டில் தொலைபேசியில் விசாரித் திருக்கிறேன் என்பதால், நான் தொடர்பு கொண்ட விஷயம் அவருக்குத் தெரிவிக்கப்படும் என்கிற நம்பிக்கை இருந்தது.
""அவர் இப்போது திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகி விட்டார். நீங்கள் நினைத்த போதெல்லாம் அவரைச் சந்தித்துவிட முடியாது. நான் அவரிடம் நீங்கள் தில்லி வந்திருப்பதைச் சொல்கிறேன். நாளைக்கு என்னைக் கூப்பிடுங்கள். எப்போது, எங்கே சந்திக்கலாம் என்பதை கேட்டுச் சொல்கிறேன்'' - இது அவரது உதவியாளர் எம்.கே. முகர்ஜியின் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு கறார் பதில். அந்த பதில் கிடைத்தது என்பதே, பிரணாப் முகர்ஜியை சந்தித்த மகிழ்ச்சியை அப்போது அளித்தது என்பதை, எனது டைரிக் குறிப்பில் இருந்து உணர முடிகிறது.

தில்லிக்கு சென்ற மூன்றாவது நாள்தான் பிரணாப்தாவை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. திலக் மார்க்கிலுள்ள யோஜனா பவனில், மாலை ஏழு மணிக்கு மேல் சென்றால் அவரை சந்திக்கலாம் என்று கூறியிருந்தார் எம்.கே. முகர்ஜி. அங்கே பிரணாப்தாவின் தனிச் செயலராக இருப்பவரின் தொலைபேசி எண்ணைத் தந்து, அவருடன் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளச் சொல்லிவிட்டார்.

யோஜனா பவன் அலுவலகத்தில் அவரை சந்திக்க நான் நுழைந்தபோது, முகம் மலர அவர் என்னை வரவேற்றதை வாழ்நாளில் மறக்க முடியாது. அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து வெளியேறும்போது எனது தோளில் தட்டிக் கொடுத்தபடி நகர்ந்த பிரணாப்தாவை, இப்போது யோஜனா பவனில் திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அதை அவரும் புரிந்து கொண்டார் என்பதை அவரது முகம் எடுத்தியம்பியது.

நான் கொண்டு போயிருந்த இனிப்புகளை அவரிடம் கொடுத்து, காலைத்தொட்டு வணங்கியபோது, வழக்கம்போல முதுகில் தட்டி ஆசிர்வதித்தார் அவர். எதிரில் அமரச் சொன்னார்.

அமர்ந்தேன். அலுவலக சிப்பந்தி பிஸ்கட்டும், சாயாவும் கொண்டு வந்தார்.

ஜெயலலிதா குறித்து, தமிழகம் பற்றி, காவிரிப் பிரச்னை என்று பல கேள்விகளைக் கேட்டார் அவர். காவிரிப் பிரச்னை குறித்துத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த இரண்டு தலைவர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயும், பிரணாப் முகர்ஜியும்தான். அவர்களில் ஒருவர் பிரதமராகி இருந்தால், காவிரிப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் நான் யோஜனா பவனில் பிரணாப் முகர்ஜியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேசிக் கொண்டிருந்தேன் என்பதைவிட, அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வப்போது அவர் கேட்கும் சில கேள்விகளுக்கு, எனக்குத் தெரிந்த பதிலைச் சொன்னேன், அவ்வளவுதான்.

வேடிக்கை என்னவென்றால், எதற்காக அவசர ஆத்திரமாக ரயிலேறி தில்லி வந்தேனோ, அந்தக் கேள்வியை நான் அவரிடம் கேட்கவில்லை. நாக்கு நுனிவரை அந்தக் கேள்வி வந்து நின்றது. ஆனால், கேட்க எனக்குத் துணிவு வரவில்லை.

அவர் வீட்டிக்குக் கிளம்பினார். நானும் அவருடன் கிளம்பி வெளியே வந்தேன். அவரது அம்பாசிடர் கார் புறப்பட்டுப் போனதையே பார்த்துக் கொண்டிருந்த என்னை, கேட்க மறந்த அந்தக் கேள்வி இம்சித்தது.

அப்போது நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதனால், எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் பேட்டி எடுப்பதற்கும் வாய்ப்பு கிடைத்ததால், அடுத்த இரண்டு வாரங்கள் நான் தில்லியில்தான் தங்கி இருந்தேன்.

இப்படியெல்லாம்கூட அரசியல் தலைவர்கள் இருந்தார்களா என்று இன்றைய தலைமுறையினரை ஆச்சரியப்பட வைக்கும் பலர் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரைக் கூற வேண்டுமானால், அவரது பெயர் சித்தா பாசு. அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச்செயலாளராக நீண்ட நாள்கள் இருந்தவர். எளிமை, நேர்மை, ஒழுக்கம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதற்கெல்லாம் நடமாடும் உதாரணமாக இருந்த ஒரு மனிதர் அவர்.

குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலையில் உள்ள அவரது வீடு, ஒருவகையில் பார்த்தால் பார்வர்ட் பிளாக் கட்சித் தொண்டர்களின் விருந்தினர் இல்லம் என்றுகூடச் சொல்லலாம். வங்கத்திலிருந்து தில்லிக்கு வரும் பார்வர்ட் பிளாக் கட்சித் தொண்டர்கள் தன்னுடன் தங்குவதில் மகிழ்ச்சி அடைபவர், பசும்பொன் தேவரைப்போலவே பிரம்மச்சாரியான சித்தாபாசு. கட்சித் தொண்டர்களை உறவினர்களாகக் கருதுபவர் அவர்.

1982-இல் பேட்டி காண்பதற்காக நான் அவரை சந்தித்தது முதல், 1997-இல் அவர் மறைவதுவரை எங்களது நட்பும், நெருக்கமும் தொடர்ந்தது. நேதாஜி சுபாஷ்போசுக்கு அடுத்தபடியாகப் "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவர் மீது அவருக்கிருந்த அளப்பரிய பக்தியோ என்னவோ, தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் என்பதால் என்மீது அக்கறையுடன்கூடிய நட்பு அவருக்கு நிலவியது.

ஆரம்பத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த சித்தா பாசு, மாநிலங்களவை உறுப்பினராகவும் இரண்டு முறை இருந்தார். 1977-இல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்து முறை மேற்கு வங்கத்தின் பராசத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதில்தான் ஆச்சரியமே இருக்கிறது.

தனது வேட்புமனுவுடன் செலுத்த வேண்டிய வைப்புத் தொகையை, தொகுதி மக்களிடம் வீதி வீதியாகச் சென்று ஐந்து, பத்து ரூபாயாகப் பெறுவதைக் கடைசி வரை வழக்கமாகக் கொண்டிருந்தார் சித்தா பாசு. போஸ்டர் அடிப்பது, பேனர் வைப்பது எதுவும் கிடையாது. சைக்கிள் டயரில் பேப்பரை ஒட்டி, அதில் சின்னத்தை சிவப்பு, ஊதா மையால் வரைந்து, மின் கம்பங்கள், நாற்சந்திகளில் தொங்க வைப்பார்கள், அவ்வளவே.

தேர்தலின்போது கூடப் பொதுகூட்டம் போடும் வழக்கம் இருந்ததில்லை. அவர் வீதி வீதியாக ஒரு ஜீப்பில் பயணிப்பார். தெருமுனைக் கூட்டங்களில் பேசுவார். வழிநெடுக முதல்வர், பிரதமருக்குத் தருவது போன்ற வரவேற்பை பராசத் தொகுதி மக்கள் அவருக்கு அளிப்பார்கள். அதெல்லாம் எனக்குக் காணக்கிடைத்த அனுபவங்கள். இப்படியும் ஒரு தலைவர் இருந்தார் என்று அவ்வப்போது நினைவுகூரத்தக்க நிகழ்வுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் தந்தால், அரசு விருந்தினர் இல்லத்தில் குறைந்த கட்டணத்தில் தங்க முடியும். ஒருமுறை அவரிடம் நான் வங்க பவனில் தங்குவதற்குக் கடிதம் கேட்டேன். தர மறுத்து விட்டார். யாருக்கும் நான் கடிதம் தருவதில்லை என்று கூறிவிட்டார்.

""நீங்கள் ஏன் விருந்தினர் இல்லத்தில் தங்க வேண்டும்? எனது விருந்தினராக என்னுடன் தங்கிவிடுங்கள்'' என்று அவர் என்னிடம் சொன்னபோது நான் வாயடைத்துப் போனேன்.

பலமுறை நான் அவரது குருத்வாரா ரகாப்கஞ்ச் சாலை வீட்டில் தங்கி இருக்கிறேன். காலையில் அவரே சாயா போட்டு, தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எழுப்பியதுண்டு. நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது, கூப்பிடு தூரத்தில் இருக்கும் நாடாளுமன்றத்துக்கு அவர் நடந்தே செல்வதைப் பார்க்க வியப்பாக இருக்கும்.

பள்ளி நாள்களில், அவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோûஸப் பார்த்திருக்கிறார். நேதாஜி கூட்டங்களில் உரையாற்றுவதைக் கேட்டிருக்கிறார். "பசும்பொன்' முத்துராமலிங்கத் தேவரைப் பலமுறை சந்தித்திருக்கிறார். 1957 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கியதே பசும்பொன் தேவர்தான் என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார் அவர்.

சித்தா பாசுவை சந்திப்பதற்காக அவரது குருத்வாரா ரகாப்கஞ்ச் வீட்டிற்குப் போயிருந்தேன். அங்கே அவரை சந்திக்க மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏற்கெனவே வந்திருந்தனர். அவர்களில் காங்கிரஸ்காரர்களும் இருந்தனர். நான் முன்பே ஒருமுறை குறிப்பிட்டதுபோல, அவர்களுக்குள் வங்க மொழியில்தான் பேசிக் கொண்டிருந்தனர்.

புரட்சி சோஷலிஸ்ட் கட்சியின் நானி பட்டாச்சார்யாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கீதா முகர்ஜியும் எனக்கு அறிமுகமான இருவர் என்பதால், வீட்டுக்கு வெளியே இருந்த புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவர்களின் உரையாடல் தடைபடவில்லை. அவர்களது பேச்சுக்கிடையே, "பிரணாப்தா, பிரணாப்தா' என்று அடிபட்டதை நான் கவனித்தேன்.

அவர்கள் கிளம்பிப் போன பிறகு, என்னையும் அழைத்துக்கொண்டு சித்தா பாசு அவரது வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தார். வங்கத்திலிருந்து வந்திருந்த கட்சித் தொண்டர் ஒருவர் சாயா எடுத்துக் கொண்டு வந்தார்.

""பிரணாப்தா குறித்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேச்சு நடந்ததே, ஏதாவது முக்கியமான செய்தியா?'' - நான் கேட்டேன்.

""ஆமாம், ஆமாம். அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாமல் பிரதமர் நரசிம்மராவ், பிரணாப் முகர்ஜியை ஏன் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக்கினார் என்பது குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவரைப் பிரதமர் எப்படி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வைத்தார் என்பதைத்தான் கீதா முகர்ஜி சொல்லிக் கொண்டிருந்தார்.''

சித்தாபாசு சொன்னதைக் கேட்டதும் நான் ஆர்வத்தின் உச்சத்துக்கே போய்விட்டேன். இந்தத் தகவலுக்காகத்தானே நான் தவித்துக் கொண்டிருந்தேன்.

(தொடரும்)

விளக்குகிறார் திண்டிவனம் ராமமூர்த்தி!

திண்டிவனம் ராமமூர்த்தி | வாழப்பாடி ராமமூர்த்தி


சென்ற இதழில் (27.06.2021) நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி பற்றிய தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, தமிழகத்திலும் தில்லியிலும் கூட பலருக்கும் தெரியாத, சக எம்.பி.க்களுக்கே கூடத் தெரியாத, அந்த சம்பவத்தை ஆசிரியர் கி. வைத்தியநாதன் எழுதியிருப்பது, அவரது நினைவாற்றலையும், அரசியல் நிகழ்வுகள் குறித்த கூர்மையான பார்வையையும் வெளிப்படுத்துகிறது.

அன்றைய நிகழ்வுகளை, அதன் பிறகு நான் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அது குறித்து ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிட்டிருப்பதால், விளக்கமளிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் 1991-இல் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நடந்த நிகழ்வு அது. நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான தீர்ப்பு வெளியானது. அந்தத் தீர்ப்பு, தமிழகத்தின் நலனுக்கு எதிரானதாக இருந்ததால், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகை நிருபர்களை சந்தித்தபோது, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், மத்திய அமைச்சரவையின் முடிவையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன். தில்லியிலுள்ள முக்கியமான ஆங்கில நாளிதழ்களிலும், தமிழகத்திலுள்ள ஓரிரு ஆங்கில தினசரிகளிலும் எனது அறிக்கை வெளியாகி இருந்தது. அந்த அறிக்கை கே. ராமமூர்த்தி என்கிற எனது பெயரில் வெளிவந்தது. திண்டிவனம் என்று குறிப்பிடப்படவில்லை.

என்னுடைய அறிக்கையை, வாழப்பாடி ராமமூர்த்தியின் அறிக்கையாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா நினைத்துக் கொண்டு விட்டார். சென்னை தியாகராயநகரில் வாழப்பாடி ராமமூர்த்திக்குப் பாராட்டு விழா நடத்த அவர் ஏற்பாடு செய்துவிட்டார். அன்று சென்னை வந்த வாழப்பாடி ராமமூர்த்தி, வேறு வழியில்லாமலும், மறுப்புச் சொல்ல முடியாத நிலையிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பத்திரிகைகளில் அது செய்தியாகி, தில்லியிலும் பிரதிபலித்தது.

மறுநாள் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை எதிரொலித்தது.மக்களவை உறுப்பினராக இருந்த கேரளத்தைச் சேர்ந்த கே.பி. உண்ணிகிருஷ்ணன், மத்திய அமைச்சரவையில் உள்ள ஒருவரே அமைச்சரவைக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருப்பதைப் பிரச்னையாக்கினார். அடுத்த நாள், சென்னையிலிருந்து தில்லி திரும்பிய வாழப்பாடி ராமமூர்த்தி, குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனை சந்தித்துப் பேசிவிட்டுத் தனது பதவிவிலகல் கடிதத்தையும் கொடுத்துவிட்டார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நான் வாழப்பாடியாரை சந்தித்து,
""என்னுடைய அறிக்கைக்கு நீங்கள் ஏன் பொறுப்பேற்றுக் கொண்டீர்கள்?'' என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ""வேறு வழியில்லாமல் போய்விட்டது. அதனால் எனக்கொன்றும் வருத்தமில்லை'' என்று தெரிவித்தார்.
இதுதான் அப்போது நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com