"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 41

ராஷ்டிரபதி பவனிலிருந்து பதவி ஏற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இருந்தும் கூட, அதில் கலந்து கொள்ள மனமொப்பவில்லை. பிரணாப்முகர்ஜியும் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தனர்.
"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 41

ராஷ்டிரபதி பவனிலிருந்து பதவி ஏற்பு நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு இருந்தும் கூட, அதில் கலந்து கொள்ள மனமொப்பவில்லை. பிரணாப்முகர்ஜியும் கலந்து கொள்ளவில்லை என்று பத்திரிகை நண்பர்கள் தெரிவித்தனர். அது நான் எதிர்பார்த்ததுதான்.
நான் நெருங்கிப் பழகும் பலர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். வாழப்பாடி கே. ராமமூர்த்தி, ரங்கராஜன் குமாரமங்கலம், ராஜேஷ் பைலட், மார்கரெட் ஆல்வா, கிரிதர் கமாங், கிரிஜா வியாஸ் என்று பெரிய பட்டியலே உண்டு. தமிழகத்தில் இருந்து யாருக்குமே கேபினட் அந்தஸ்து தரப்படவில்லை என்கிற குறை எனக்கு நிறையவே இருந்தது.

முன்னாள் பிரதமர் சந்திரசேகரையோ, பிரணாப் முகர்ஜியையோ சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஜவஹர் பவனுக்குப் போயிருந்தேன். பிரணாப்தாவுக்கு நெருக்கமான சில வங்காள எம்.பி.க்களும், அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் அங்கே இருந்தனர்.

வங்காளிகளுக்கும், மலையாளிகளைப் போலவே ஒரு வழக்கம் உண்டு. அவர்களுக்குள் வங்காளி மொழியில் பேசுவார்களே தவிர, இந்தியிலோ, ஆங்கிலத்திலோ உரையாட மாட்டார்கள். அதனால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்கக் கூட முடியாது. அங்கே இருப்பதில் அர்த்தமில்லை என்பதால், காங்கிரஸ் தலைமையகம் நோக்கி நகர்ந்தேன்.

புதிதாக அமைச்சரவை அமைந்திருந்ததால் காங்கிரஸ் தலைமையகம் களைகட்டி இருந்தது. தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்து கொண்டிருந்தனர். தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரா. அன்பரசு, மணிசங்கர் ஐயர், ஏ.ஜி.எஸ். ராம்பாபு, டாக்டர் வி. ராஜேஸ்வரன் ஆகியோரை அங்கே சந்தித்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்திவிட்டு நகரும்போது, வசந்த் சாத்தே தென்பட்டார். அவரை சந்திக்க விரைந்தேன்.

தொடர்ந்து மூன்று முறை வென்ற வார்தா மக்களவைத் தொகுதியில் 1991-ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியைத் தழுவி இருந்தார் வசந்த் சாத்தே. அவரை அக்பர் ரோடு அலுவலகத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் அவர் வரவேற்ற போது, தோல்வியடைந்த அவரிடம் என்ன கூறுவது என்றே எனக்குத் தெரியவில்லை. எனது தயக்கத்தைப் புரிந்து கொண்ட வசந்த் சாத்தே சிரித்தபடியே கைகுலுக்கியபோதுதான் நான் நிதானத்துக்கு வந்தேன்.

அங்கிருந்த ஓர் அறைக்கு என்னையும் அழைத்துச் சென்றார் வசந்த் சாத்தே.

""பி.வி. இப்படிச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.''

நான் எதுவும் பேசவில்லை. அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

""பிரணாபைப் பிரதமர் தொலைபேசியில் அழைத்து நேரில் வந்து சந்திக்கச் சொல்லி இருக்கிறார். அவரிடம் அந்தக் காரணத்தைக் கூறக்கூடும். எங்களை எல்லாம் தவிர்த்து விடலாம். ஆனால், பிரணாபை காங்கிரஸ் கட்சியோ, காங்கிரஸ் ஆட்சியோ தவிர்த்துவிட முடியாது. விரைவிலேயே, ஏதாவது செய்தி கிடைக்கும்.''

பேசிக் கொண்டே போனார் வசந்த் சாத்தே. அவருக்கும் ஆதங்கம் இருந்தது தெரிந்தது. அவரது பேச்சிலிருந்து ஏதோ ஒரு நிர்பந்தத்தால்தான் பிரணாப் முகர்ஜியைத் தனது அமைச்சரவையில் பிரதமர் நரசிம்ம ராவால் சேர்த்துக் கொள்ள முடியவில்லை என்பது புரிந்தது.

""நீங்கள் இப்போது சொன்னதை உங்கள் கருத்தாக நான் எனது கட்டுரையில் சேர்த்துக் கொள்ளலாமா?''

""தாராளமாக... பிரணாபைப் பிரதமரால் தவிர்த்துவிட முடியாது என்று நான் சொன்னதாக தாராளமாகக் குறிப்பிடலாம். பிரணாப் முகர்ஜி இல்லாமல் நரசிம்ம ராவின் அமைச்சரவை முழுமை பெறவில்லை என்று நான் கருத்து தெரிவித்ததாகவும் எழுதிக் கொள்ளலாம்.''

சிறிது நேரம் வசந்த் சாத்தேவுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, நகர்ந்தேன். அதற்குப் பிறகு அன்று முழுவதும் ராஜேஷ் பைலட், வாழப்பாடி ராமமூர்த்தி, ரங்கராஜன் குமாரமங்கலம் என்று அமைச்சரவை நண்பர்களை நேரில் சென்று வாழ்த்துவதில் நேரம் ஓடிவிட்டது.

சப்தர்ஜங் இந்தியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்துக்குப் போய், அடுத்த நாள் மாலை விமானத்தில் சென்னை திரும்புவதற்கு டிக்கெட் எடுத்துக் கொண்டு இரவு நான் படுக்கும்போது நள்ளிரவு கடந்து விட்டது. இப்போது போலல்லாமல் அப்போது இந்தியன் ஏர்லைன்ஸ் விமான சேவை மட்டும்தான் இருந்தது என்பது மட்டுமல்ல, அதன் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டதாக இருந்தது. கடைசி நேரத்தில் சென்றால் அதிகக் கட்டணம் என்கிற தனியார் கட்டணக் கொள்ளை இல்லாமல் இருந்த நேரம் அது.

ராஜீவ் காந்தி படுகொலையின் எதிரொலியாக, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றி அடைந்திருந்தது. சொல்லப்
போனால், எதிர்க்கட்சி என்று சொல்வதற்கே எதுவும் இல்லாத நிலையில் இருந்தது தமிழக சட்டப்பேரவை. ஏற்கெனவே அதிமுக - காங்கிரஸூக்கு சாதகமான சூழல் நிலவிய நிலையில், ராஜீவ் படுகொலையும் சேர்ந்தபோது, அதிமுக கூட்டணி 234 இடங்களில் 225 இடங்களில் வெற்றி பெற்றதில் வியப்படைய ஒன்றுமில்லை.

அதிமுக 164 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 60 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. 39 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்களில் காங்கிரஸூம், 11 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றிருந்தன. திமுக கூட்டணி சட்டப் பேரவையில் வெறும் 7 இடங்களிலும், தேர்தலில் முதன் முறையாகக் களம் கண்ட பாட்டாளி மக்கள் கட்சி ஓர் இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. அன்றைய வெற்றியின் நீட்சிதான் இன்றுவரை பாமக ஓர் அரசியல் கட்சியாகத் தமிழகத்தில் இயங்குவதற்குக் காரணம் என்று கூறலாம்.

மீனம்பாக்கம் விமானநிலையத்திலிருந்து கருப்பு, மஞ்சள் டாக்ஸி பிடித்து, அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் இருந்த எனது வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது இருட்டிவிட்டிருந்தது. நான் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் இரண்டு அழைப்பிதழ்கள் அங்கே எனக்காகக் காத்திருந்தன.

ஜூன் 24-ஆம் தேதி, நடக்கவிருந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவைப் பதவி ஏற்புக்கான அழைப்பிதழ் ஆளுநர் மாளிகையிலிருந்து வந்திருந்தது. இன்னோர் அழைப்பிதழும், கடிதமும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது.

முதல்வராகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களையும், பத்திரிகையாளர்களையும் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க விரும்புவதாகவும், அதற்காக தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்த அந்தக் கடிதத்துடன், அதற்கான அழைப்பிதழும் இணைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த எனக்கு ஒரே வியப்பு. ஜெயலலிதாவிடமிருந்து அப்படி ஓர் அழைப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நான் மட்டுமல்ல, அந்தக் கடிதத்தையும் அழைப்பிதழையும் யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதை விருந்தில் கலந்து கொண்டபோது நான் உணர்ந்தேன். அதற்கு முன்னும், அதற்குப் பின்னும் ஜெயலலிதா உள்பட முதல்வரான எவரும் அப்படியொரு விருந்து ஏற்பாடு செய்து, அந்த விருந்துக்குப் பத்திரிகையாளர்களை அழைத்ததில்லை.

அந்த விருந்துக்கு "நியூஸ்டைம்' நிருபராக இருந்த நண்பர் பி.கே. பாலச்சந்திரனும் என்னுடன் வந்திருந்தார். சென்னையிலுள்ள முக்கியமான பத்திரிகை நிருபர்களும், ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். "இசட்' பிரிவு பாதுகாப்பு இருந்தும் கூட, சிரித்த முகத்துடன் விருந்துக்கு வந்திருந்தவர்களிடம் ஜெயலலிதா நலம் விசாரித்ததும், அறிமுகம் செய்து கொண்டதும் அவர் குறித்து அதுவரை இருந்த பிம்பத்தை உடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தாஜ் கோரமண்டல் ஹோட்டல் விருந்தின்போதே, அடுத்த தலைமைச் செயலர் டி.வி. வெங்கட்ரமணன் என்பதும், தலைமை வழக்குரைஞர் கே. சுப்பிரமணியம் என்பதும் தெளிவானது. இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற்று அதைப் பெற்றுத் தந்தவர் என்கிற முறையில் கே. சுப்பிரமணியம் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்படுவதில் நியாயம் இருக்கத்தான் செய்தது.

முதல்வராக ஜெயலலிதாவின் தொடக்கம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. அடுத்த இரண்டு நாள்களில் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எழுப்பப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் அவர் நிதானமாகவும், பொறுமையாகவும் பதிலளித்ததைப் பார்த்து நிருபர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் சமைந்தனர்.

அந்த விவேகம் ஆரம்ப வேகத்துடன் முடங்கிவிட்டது என்பதுதான் ஜெயலலிதா அரசியல் பயணத்தின் மிகப் பெரிய துரதிருஷ்டம்.

வருடத்திற்கு ஓரிரு முறையாவது பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் உரையாடி இருந்தால், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் எதிர்ப்பையும் அவர் சந்திக்க நேர்ந்திருக்காது. வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கும். தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், எதிர்ப்புகளைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்திருக்கும். இது ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அனைவருக்குமே பொருந்தும்.

ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்ட மூன்றாவது நாள், ம. நடராசனிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. நந்தனத்தில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அடுத்த நாள் காலையில் வர இருப்பதாகவும், அங்கே சந்திக்கலாம் என்றும் அவர் சொன்னபோது, நான் ஏற்றுக் கொண்டேன்.

தேர்தல் முடிந்து, ஆட்சியும் அமைத்துவிட்ட நிலையில், என்னை ம. நடராசன் ஏன் சந்திக்க விரும்புகிறார் என்கிற குழப்பம் இருக்கத்தான் செய்தது. அதிமுகவுக்கு மிகவும் நெருக்கமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுவிட்ட நிலையில், தில்லி தொடர்புக்கு வேறு யாரையும் நாட வேண்டிய அவசியம் இல்லையே என்று நான் நினைத்தேன்.

அப்போது என்னிடம் காரெல்லாம் இருக்கவில்லை. எனது "புல்லட்' மோட்டார் சைக்கிளில் நடராசனை சந்திக்க நந்தனத்துக்கு கிளம்ப இருந்தபோது, தொலைபேசி மணி அடித்தது. தில்லியிலிருந்து எஸ்.டி.டி. அழைப்பு என்று சொன்னதும், ஒடிப்போய் பேசினேன். எதிர்முனையில் மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) வாழப்பாடி கே. ராமமூர்த்தி பேச விரும்புவதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.

இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த இரண்டு, மூன்று நிமிடத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. இந்த முறை அமைச்சர் வாழப்பாடி கே. ராமமூர்த்தியே பேசினார்.

""வைத்தியநாதன், நடராசனை சந்திப்பதற்காகக் கிளம்பி விட்டீர்களா?''

""ஆமாம், உங்களுக்கு எப்படித் தெரியும்?''

""நேற்று இரவில் பேசும்போது சொன்னார்.

நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும்.''

""என்ன?''

""நடராசன் தில்லிக்கு வந்து என்னை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க வரப்போவதாகக் கூறுகிறார். இப்போது அவர் வரவேண்டாம். வரக்கூடாது. என்ன காரணம் என்பதை நான் பிறகு கூறுகிறேன். அவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் அவர் இப்போது போக வேண்டாம் என்று சொல்லித் தடுத்து விடுங்கள். நீங்கள் சொன்னால் அவர் கேட்பார்...''

""இந்தப் பிரச்னையில் என்னை ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்?''

""எங்கள் இருவருக்குமே நீங்கள் நண்பர் என்பதால் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக அவர் தில்லி வருவதைத் தடுத்து விடுங்கள். அது எனக்கும், அவருக்கும் தேவையில்லாத சிக்கல்களையும், கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தும்.''

நான் எதுவும் பேசவில்லை. என்னால் இயன்ற வரை சொல்லிப் பார்க்கிறேன் என்று கூறி உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

நந்தனம் வரை மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது, எதற்காக ம. நடராசன் தில்லி செல்ல விரும்புகிறார், அதை ஏன் வாழப்பாடி ராமமூர்த்தி விரும்பவில்லை என்றெல்லாம் யோசித்துக் கொண்டே சென்றேன். நந்தனத்தில்
ம. நடராசன் குறிப்பிட்டிருந்த முகவரியை நான் அடைந்தபோது, அந்த வீட்டின் முன்னால் அதிமுக கரை வேஷ்டியுடன் சிலர் நின்று கொண்டிருந்தனர். ம. நடராசன் வந்துவிட்டார் என்பது தெரிந்தது.

உள்ளே நுழைந்து ம. நடராசனை சந்தித்த எனக்கு எதிர்பாராத அதிர்ச்சி. மதியம் ஒரு மணி விமானத்தில் தில்லி செல்வதற்குத் தயாராகக் காத்திருந்தார் அவர். அதற்கு மேல் எனக்கு வேறு எதுவும் பேசத் தோன்றவில்லை. புதிதாக ஏதோ ஒரு பிரச்னை வெடிக்கப் போகிறது என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com