திரைக்கதிர்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் "நெற்றிக்கண்'. "அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்குகிறார். 
திரைக்கதிர்

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்து வரும் படம் "நெற்றிக்கண்'. "அவள்' படத்தின் இயக்குநரான மிலிந்த் ராவ் இயக்குகிறார். 

அஜ்மல் முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாதநிலையில், படத்தை எப்போது வெளியிடுவது என்பது தெரியாமல்  உள்ளது. இந்நிலையில், "நெற்றிக்கண்' படக்குழுவினர் நேரடி ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.  

---------------------------------------------------------------------------------------------------------

மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்ற படம் "பிசாசு'. இதன் தொடர்ச்சியாக தற்போது "பிசாசு 2' படத்தை உருவாக்கி வருகிறார் மிஷ்கின்.   படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடையில்லாமல் ஒரு காட்சியில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு அந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்து கொடுத்தாராம். மேலும் அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர். 

---------------------------------------------------------------------------------------------------------

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் "மாஸ்டர்'. விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஆன படமாக இது பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின்  அனைத்து உரிமைகளையும் கைப்பற்றி லலித் குமார் வெளியிட்டார். இந்நிலையில், "மாஸ்டர்' படத்தின் வெற்றி, வசூல் நிலவரங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஹிந்தி ரீமேக் உறுதியாகியுள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க  சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் இயக்குநர் யார் என்பது இந்த மாத இறுதியில் தெரியவரும். முன்னதாக, "மாஸ்டர்' படம் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. ஆனால், சல்மான் கான் நடித்தால் இன்னும் பெரிய அளவில் ரீச் கிடைக்கும் என்ற காரணத்தால், ரீமேக்கை உறுதி செய்திருக்கிறார்கள்.

---------------------------------------------------------------------------------------------------------

யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான படம் "மண்டேலா'.  இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும்  பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், "மண்டேலா' படத்தை பார்த்த இயக்குநர் கௌதம் வாசுதேவ்மேனன், ஒரு சிறந்த காமெடி படம் என்று பாராட்டியதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி உள்ளார். இதற்கு நடிகர் யோகிபாபு சுட்டுரை வாயிலாக, இயக்குநர் கெளதம் வாசுதேவ்மேனனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனனே, அவருடன் பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளதால், இந்த கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

---------------------------------------------------------------------------------------------------------

விக்ரம் நடிக்கும் படங்களுக்கு எப்போதும் இந்திய அளவில் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இவர் நடித்துள்ள "கோப்ரா' படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.  மேலும் அதனைத் தொடர்ந்து விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி இணைகிறது.  விக்ரமின் 60-ஆவது படமான இதில் விக்ரமுடன் இணைகிறார் அவரது மகன் துருவ் விக்ரம். இந்நிலையில் தற்போது அப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விக்ரம் கேங்ஸ்டர் ரோலில் நடித்து வருகிறாராம். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பிட்சா படத்தை தவிர மற்ற எல்லா படங்களிலும் கேங்ஸ்டர் ரோல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

---------------------------------------------------------------------------------------------------------

கமலின் 223-ஆவது படமாக உருவாகவுள்ளது "விக்ரம்'.  இப்படத்தைப் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் "விக்ரம்' படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தையும் அன்பறிவு இயக்குகின்றார்.  இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்பறிவு, இதற்கு முன் "கே.ஜி.எப்', "கைதி', "கபாலி' உள்ளிட்ட பல படங்களுக்கு சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

---------------------------------------------------------------------------------------------------------

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com