'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 42

எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இன்றுவரை புதிராகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 42

எனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே இன்றுவரை புதிராகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது. ஜெயலலிதாவுக்கும், அவரது தோழி சசிகலாவின் கணவரான ம. நடராசனுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டதன் காரணம் என்ன என்பதுதான் அது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் அடுத்தகட்ட அரசியலுக்கு அடித்தளத்தை உருவாக்கிக் கொடுப்பதற்கும. நடராசன் எந்த அளவுக்குப் பணியாற்றினார் என்பது என்போன்ற பலருக்கும் நன்றாகவே தெரியும்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகான அந்த காலகட்டத்தில், ஜெயலலிதாவின் ஒவ்வோர் அரசியல் நகர்வும் ம. நடராசனால்தான் தீர்மானிக்கப்பட்டது என்பதை நான் நன்றாகவே அறிவேன். குறிப்பாக, தில்லியில் காங்கிரஸ் தலைமைக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே சுமூகமான உறவை ஏற்படுத்தியதில்ம. நடராசனின் பங்கு சாதாரணமானதல்ல.

அதேபோல, ஜெயலலிதா, ஜானகி என்று பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்ததிலும், "இரட்டை இலை' சின்னத்தை மீட்டுப் பெற்றதிலும் அவரது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. இதெல்லாம் இன்றைய அதிமுக தலைவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான், அவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் வெளியில் தெரியத் தொடங்கின. அவர் ஒதுக்கப்பட்ட போதும், புறக்கணிக்கப்பட்ட போதும் கூட ம. நடராசன் எந்தவொரு கட்டத்திலும் ஜெயலலிதாவுக்கு எதிராகச் செயல்படவோ, அவருக்கு எதிராகப் பேசவோ இல்லை என்பது எனக்கு மட்டுமல்ல, அவரைத் தெரிந்திருந்த எல்லா பத்திரிகையாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அப்படி இருந்தும் கூட, ஜெயலலிதாவின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார் என்பதைக் கட்சித் தலைமை எடுத்த சில முடிவுகளும், அறிக்கைகளும் வெளிப்படுத்தின. அதை ம. நடராசன்சட்டை செய்யவில்லை என்பது மட்டுமல்ல, முன்பு போலவே அதிமுகவுக்கு சாதகமாக இயங்கியும் வந்தார் என்பதுதான் வேடிக்கை. அதனால்தான், ம. நடராசன் அகற்றி நிறுத்தப்பட்டிருந்தது ஒரு நாடகம் என்கிற பரவலான கருத்தாக்கத்துக்கு வழிகோலியது.

""நீங்க எப்ப தில்லி வர்றீங்க?''

என்னைப் பார்த்ததும் ம. நடராசன் கேட்ட கேள்வி இதுதான்.

""நான் இப்போதுதான் தில்லியிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கு அங்கே என்ன வேலை, திரும்பவும் போவதற்கு?''

""நீங்களும் தில்லி வந்தால் நன்றாக இருக்கும்.

பிரணாப் முகர்ஜியைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.''

நான் எதுவும் பேசவில்லை தயக்கத்துடன் அவரருகில் சென்று அமர்ந்தேன்.

""நீங்கள் இப்போது தில்லிக்கு வர வேண்டாம் என்றுதான் எல்லாரும் விரும்புகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றெல்லாம் கேட்காதீர்கள், எனக்குத் தெரியாது. ஆனால், தில்லிக்குப் போகாமல் இருப்பது நல்லது''

""வாழப்பாடியார் சொல்லியிருப்பார், அப்படித்தானே? நான் தில்லிக்குப் போவது முதல்வருக்குப் பிடிக்காது என்று சொல்லி இருப்பார். என்னை சந்திப்பதால் முதல்வரின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரும் என்று பயப்படுகிறார். அதற்கெல்லாம் அவர் ஏன் பயப்பட வேண்டும்? மத்திய அமைச்சராகிவிட்ட பிறகு, தமிழக முதல்வருக்குப் பிடிக்காது என்பதற்காக ஒருவரை சந்திப்பதை அவர் ஏன் தவிர்க்க வேண்டும்?''

ம. நடராசன் சற்று உணர்ச்சி வசப்பட்டுத்தான் பேசினார். அதிலிருந்து, அவர் தில்லி செல்வதில் ஜெயலலிதாவுக்கு விருப்பமில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. தன்னை முதல்வராக்குவதற்கு தில்லியில் அமர்ந்து அடித்தளம் ஏற்படுத்திய ம. நடராசன் தொடர்ந்து தில்லித் தொடர்புடன் இருப்பதை அவர் விரும்பாமல் இருக்கக்கூடுமோ என்கிற ஐயப்பாடு எனக்கு எழுந்தது.

""என்ன எதுவும் பேசாமல் மெளனமாகிவிட்டீர்கள்?''

""நீங்கள் சொல்வதுபோல, ஜெயலலிதாவிற்குப் பயந்து வாழப்பாடியார் உங்களை சந்திக்கத் தயங்குகிறாரா, இல்லை பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுக்குப் பயந்து அவர் உங்களைத் தவிர்க்க நினைக்கிறாரா என்று யோசிக்கிறேன்''

ம. நடராசனின் முகம் சட்டென்று மாறியது. ஒருசில நொடிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

""நீங்கள் சொல்வது கூட சரியாக இருக்கலாம். அதிமுக இப்படித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்திருக்காது. அதுமட்டுமல்ல, வாழப்பாடியார் என்னுடன் நெருக்கமாக இருப்பதால், ஜெயலலிதா அதிருப்தி அடைந்துவிடக் கூடாது என்றும் கருதலாம்''
""ஆமாம். அதுவும் கூட காரணமாக இருக்கலாம். காங்கிரஸூக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை. அதிமுக ஆதரவு தேவை. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள பிரதமர் விரும்பாமல் கூட இருக்கலாம்.''

""இதெல்லாம் உங்களது ஊகம்தான் என்றாலும் யோசிக்க வேண்டியவை. நான் தில்லிக்குச் செல்வது என்று முடிவெடுத்து விட்டேன். அவரைச் சந்திக்கிறேனோ இல்லையோ, தில்லிக்குப் போவதைக் கைவிடுவதாக இல்லை.''

1987-இல் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ம. நடராசனுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். அவர் தில்லிக்கு வருவது என்பது அரசியல் தலைவர்களை சந்திப்பதற்காக மட்டுமல்ல. பல தடவைகள் தில்லி வந்து பிரமுகர்கள் யாரையும் சந்திக்காமல் கூடத் திரும்பி இருக்கிறார். தில்லியிலுள்ள முக்கியமான பத்திரிகையாளர்கள் அவரை வந்து சந்திப்பார்கள். அதிமுக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை வந்து சந்திப்பார்கள்.

தில்லி அரசியலில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு அவர் வருகிறாரா, இல்லை குறிப்பாக ஏதாவது காரணத்துக்காக தில்லி வருகிறாரா என்று தெரியாது. அதனால், ம. நடராசன் தில்லி கிளம்ப முடிவெடுத்தது என்னை
ஆச்சரியப்படுத்தவில்லை.

""பிரணாப் முகர்ஜியை சந்திப்பதா, வேண்டாமா?''

""நான் இன்னும் அவரை சந்திக்கவில்லை. இப்போது சந்திப்பதை நீங்களும் தவிர்ப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன். அவரே அதை விரும்பமாட்டார் என்பதுதான் எனது கருத்து.''

""சரி, வாழப்பாடியார் விரும்பினால் சந்திக்கிறேன். இல்லையென்றால் விட்டு விடுகிறேன். குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். பிரதமரை சந்திக்கப் போகிறேன்.''

அதுவரை சுவாரஸ்யமில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த நான், "பிரதமரை சந்திக்கப் போகிறேன்' என்று ம. நடராசன் சொன்னபோது சற்று திடுக்கிட்டு நிமிர்ந்தேன். தனது அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி இவரை சந்திப்பதையே பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் விரும்பமாட்டார் என்று நான் நினைக்கும்போது, அவர் எப்படி ம. நடராசனை சந்திக்க சம்மதிப்பார் என்கிற குழப்பம் எனக்குள் எழுந்தது.

""என்ன, நீங்கள் எதிர்ப்பார்க்கவில்லை, அப்படித்தானே. அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். ஒரு வாரம் தில்லியில்தான் இருப்பேன். நீங்கள் அதற்குள் வந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். நான் வழக்கம்போல, கனிஷ்கா ஹோட்டலில்தான் தங்கி இருப்பேன்.''

அவர் விமான நிலையத்திற்குக் கிளம்பிவிட்டார். நானும் விடைபெற்று
பிரிந்தேன்.

அன்றைய சந்திப்புக்குப் பிறகு நான் எனது பத்திரிகைத்துறை வேலைகளில் மூழ்கிவிட்டேன். சென்னையில் அடிக்கடி சந்திக்கும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தேனே தவிர, தில்லி அரசியல் குறித்து அதிக ஆர்வம் காட்டவில்லை. திருவனந்தபுரம் சென்று முதல்வர் கே. கருணாகரனையும், பெங்களூரு சென்று பங்காரப்பாவையும் பேட்டி எடுப்பதற்காகப் போனதுடன் சரி. வெளியூர் பயணங்களையும் சில வாரங்களுக்குத் தவிர்த்தேன்.

இதற்கிடையில் ஒருநாள், மத்திய அமைச்சராக இருந்த வாழப்பாடி கே. ராமமூர்த்தி சென்னை வந்திருந்தார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தேன். அவர் சொல்லித்தான், ம. நடராசன் பிரதமரைச் சந்தித்த தகவல் எனக்குத் தெரியும். பிரதமரை சந்தித்த ம. நடராசன், வாழப்பாடியாரையும் சந்தித்திருக்கிறார் என்பதை அவர் என்னிடம் தெரிவிக்கவில்லை. நான் தெரிந்து கொண்டேன்.

திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து வந்தார் என்பதாலோ என்னவோ, வாழப்பாடி ராமமூர்த்தியின் அரசியல் ஏனைய காங்கிரஸ் தலைவர்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். திமுக பிளவுபட்டு, 1961-இல் ஈ.வெ.கி. சம்பத்தின் தலைமையில் தமிழ் தேசியக் கட்சி தொடங்கப்பட்டபோது அதில் இணைந்தவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி. கவியரசு கண்ணதாசன், எம்.பி. சுப்பிரமணியம், பழ. நெடுமாறன் ஆகியோரை அடியொற்றி அவரும் காங்கிரஸில் இணைந்தார்.

மத்திய அமைச்சரவையில் தனிப் பொறுப்புடன் தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டிருந்தும் அவர் மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்பது தெரிந்தது. தொழிற்சங்கவாதியான அவர், தொழிலாளர் நலத்துறை அளிக்கப்பட்டிருப்பதில் உண்மையில் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அந்தத் துறையில் அவரால் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க முடியும். தொழிலாளர் நலனுக்கு எதிராக பல கொள்கைகள் வராமல் தடுத்திருக்க முடியும்.

""இல்லை, வைத்தியநாதன். அரசின் நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் இப்படியே தொடர்ந்தால், இத்தனை நாள் தொழிற்சங்கவாதியாக நான் சேர்த்து வைத்திருக்கும் நற்பெயரை இழக்க நேரிடும்.''

மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கி, பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் கொண்டுவந்த தாராளமயமாக்கல் கொள்கையையும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதுதான் அவரது விரக்திக்குக் காரணம் என்று நான் புரிந்து கொண்டேன்.
""அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். அதனால் நீங்கள் அடையும் ஆதாயம்தான் என்ன?''

""லாப நஷ்டக் கணக்குப் பார்க்க, அரசியல் என்ன வியாபாரமா?

முதலில், அமைச்சரவை அமைக்கப்பட்டிருக்கும் விதமே கூட எனக்குப் பிடிக்கவில்லை. நல்ல நண்பர் என்பதால்தான் நான் உங்களிடம் மனம்விட்டுப் பேசுகிறேன். என்னய்யா இது? தமிழகத்துக்குக் கேபினட் அந்தஸ்துள்ள ஒரு மந்திரிகூட இல்லாமல் ஓர் அமைச்சரவை? இதைக் கேள்வி கேட்க திராவிடக் கட்சிகளுக்கும் தோன்றவில்லை. நமது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் துணிவில்லை.''

அவரது முகத்தில் கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அதனால் நான் குறுக்கிடவில்லை.

""நான் ஜூனியர், அதனால் பேச முடியாது. என்னய்யா செய்கிறார் அந்த ஜி.கே. மூப்பனார்? சண்டை போட்டிருக்க வேண்டாம். எனக்குத் தர வேண்டாம். அவருக்கு வேண்டியவர்தானே ப. சிதம்பரம்?அவருக்காவது கேபினட் அந்தஸ்து வாங்கி இருக்க வேண்டாம்?''

அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் கேள்வியில் நியாயம் இருந்தது. ஒருவித அறச்சீற்றம் என்று கூற வேண்டும். அப்போதே நான் தீர்மானித்துவிட்டேன். அதிக காலம் வாழப்பாடியார் அமைச்சராகத் தொடரமாட்டார் என்று. அதுதான் நடந்தது.

காவிரிப் பிரச்னையைக் காரணம் காட்டி அடுத்த ஒரே மாதத்தில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அவர்.

காவிரிப் பிரச்னைக்காக வாழப்பாடி கே. ராமமூர்த்தி பதவி விலகினாரா, இல்லை அதைக் காரணமாக்கி பதவியிலிருந்து விலகினாரா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், காவிரி தீர்ப்பு வந்தவுடன் அதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டவர் அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அல்ல; மக்களவை உறுப்பினராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தி. என்ன நடந்தது என்பதை திண்டிவனம் ராமமூர்த்தி மட்டுமே விளக்க முடியும்.

இதற்கிடையில் தில்லியில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த விவரங்களைத் தெரிவித்தார். பிரதமரின் அழைப்பின் பேரில், அவரது மோதிலால் நேரு மார்க் இல்லத்தில், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவுடன் பிரணாப் முகர்ஜியின் சந்திப்பு நடைபெறுகிறது என்பதுதான் அந்த நண்பர் அளித்த இன்ப அதிர்ச்சி.

நரசிம்ம ராவ் - பிரணாப் முகர்ஜி சந்திப்பில் என்ன நிகழ்ந்தது, பிரணாபை நிதியமைச்சராக நியமிக்காததற்குப் பிரதமர் என்ன காரணம் கூறினார், அதைப் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டாரா என்பதெல்லாம் தெரியாது. ஆனால், அடுத்த நாளே திட்டக் கமிஷனின் துணைத் தலைவராகப் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கிற அறிவிப்பு வெளியானது.

அதற்கு மேலும் எனக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. ஏன் பிரணாப் முகர்ஜி தவிர்க்கப்பட்டார் என்கிற காரணத்தை பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அவரிடம் தெரிவித்திருப்பார் என்பதால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவாவில், தில்லிக்குக் கிளம்பி விட்டேன் நான்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com