'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 27

தில்லியிலிருந்து நான் சென்னைக்கு  கிளம்பியபோது இருந்த பரபரப்பான சூழ்நிலை சற்றுத் தணிந்து தலைநகரில் அமைதி திரும்பி இருந்தது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 27


தில்லியிலிருந்து நான் சென்னைக்கு கிளம்பியபோது இருந்த பரபரப்பான சூழ்நிலை சற்றுத் தணிந்து தலைநகரில் அமைதி திரும்பி இருந்தது. முன்பு சர்வசாதாரணமாக சந்திரசேகரின் செளத் அவென்யூ லேன் வீட்டுக்குப் போய் வருவதுபோல இப்போது போக முடியாது என்பதை நான் உணர்ந்தேன். அதனால், சந்திக்க விழைகிறேன் என்கிற செய்தியை அவரது தனி உதவியாளர் யாதவிடம் தெரிவித்தேன்.

ஜனதா கட்சித் தலைவர் சந்திரசேகரின் நிழலாகத் தொடர்ந்த அவரது உதவியாளர் யாதவைப் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும்.

உதவியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யாதவ்தான் எடுத்துக்காட்டு.
யாதவ், சந்திரசேகரின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பது முன்னாள் பிரதமருடன்தொடர்பில் இருந்த அனைவருக்குமே தெரியும். அப்பழுக்கில்லாத நேர்மைக்கு யாதவ்தான் உதாரணம்.

தில்லியின் புறநகர் பகுதியில் அடித்தட்டு மக்களுக்காக அவர் தொடங்கிய ஆரம்பப் பள்ளி இப்போது பெரிய பள்ளிக்கூடமாகி இருக்கிறது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவதில் தனது கவனத்தைச் செலுத்தி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் யாதவ். இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் தலைவர்களும் அவருக்குப் பழக்கம், நெருக்கம். ஆனால், அவர்கள்தான் அவரை சந்தித்திக்கிறார்களே தவிர, யாதவ் யாரையும் சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் அவரைத் தங்களது உதவியாளராக வரும்படி அழைத்தனர். கட்சியில் இணையும்படியும், அவருக்கு மேலவை, மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகவும் சொன்னார்கள். மறுத்துவிட்டார்.

""சந்திரசேகர்ஜிதான் இல்லையே, நீங்கள் ஏன் உங்கள் திறமையை வீணாக்குகிறீர்கள்?'' என்று நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

""சந்திரசேகர்ஜியிடன் உதவியாளராக இருந்த பிறகு நான் எப்படி இந்த சாமானியர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்? அது நேதாஜியை (அப்படித்தான் முன்னாள் பிரதமர் சந்திரசேகரை பலரும் அழைப்பார்கள்) இழிவுபடுத்துவதாக அமையும்'' என்பதுதான் அவரிடம் இருந்த வந்த பதில் (நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள்).

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனைப் பார்க்கும்போது யாதவும், யாதவைப் பார்க்கும்போது, சண்முகநாதனும் எனக்கு நினைவுக்கு வருவார்கள். அவர்கள் இருவரும் அந்தத் தலைவர்களின் உதவியாளர்களாக இருக்கவில்லை. நிழலாகவும் முழு நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருந்தனர்.

தில்லி சென்ற இரண்டாவது நாள் எனக்கு பிரதமர் சந்திரசேகரின் அலுவலகத்திலிருந்து சந்திக்க வரச்சொல்லி அழைப்பு வந்தது.

பிரதமர் அலுவலகம் இருக்கும் செளத் பிளாக்கிற்குச் சென்றபோது, செளத் அவென்யூவுக்கு வரும்படி சொன்னார்கள். அங்கே சென்றுகாத்துக் கொண்டிருந்தேன்.

என்னிடம் அந்த இளைஞர்கள் தந்த கவர் இருந்தது. பிரதமராகிவிட்டதால் ஏகப்பட்ட கெடுபிடி. இப்போதுபோல செல்லிடப்பேசி இல்லாத காலம் என்பதால், உதவியாளர்களைத் தொடர்பு கொள்வதிலும் பல தடைகள்.

வேறு வேலையாக அங்கு வந்த யாதவின் கண்ணில் நான் பட்டேன். எஸ்.பி.ஜி-காரர்கள் என்னை ஒரு மூலையில் உட்கார வைத்திருப்பதைப் பார்த்ததும் அவர் பதறிவிட்டார்.

அவர்களிடம் சண்டையே போட்டுவிட்டார். என்னை அழைத்துக் கொண்டுபோய் அவரது அறையில் அமர வைத்தார்.

மிகப் பெரிய அரசியல் சர்ச்சை நடந்து கொண்டிருப்பது அப்போதுதான் தெரிந்தது. வளைகுடா நாடுகளில் நடக்கும் போருக்குச் செல்லும் அமெரிக்கப் போர் விமானங்கள் பெட்ரோல் நிரப்பிக் கொள்ள சந்திரசேகர் அரசு அனுமதி அளித்ததுதான் பிரச்னையாகி இருந்தது. இன்னொரு அறையில், பிரதமர் சந்திரசேகர் மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசனையில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தார் யாதவ்.

எனக்கு ஒரே குழப்பம். பிரதமரிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தரப்பட்டிருக்கும் கடிதத்தை இந்தச் சூழலில் நான் எப்படி அவரிடம் கொடுப்பது என்கிற தர்மசங்கடம். அந்தக் கடிதம் ஈழப்பிரச்னை தொடர்பானது என்பதை நான் யூகித்தேன். அதைப் பிரித்துப் படித்து விடலாமா என்றுகூட அப்போது எனக்குத் தோன்றியது. அது நம்பிக்கையை மீறிய செயலாக இருக்கும் என்பதால், அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.

ஒருவேளை ஒன்றுமில்லாத பிரச்னைக்காக அந்த இளைஞர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தால், அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்கிற ஐயப்பாடுதான் அதற்குக் காரணம். யாதவ் அறைக்குள் வந்தார்.

""பிரதமரை நீங்கள் சந்தித்துப் பேச முடியும் என்று தோன்றவில்லை. அரசின் முடிவை காங்கிரஸூம், ராஜீவ் காந்தியும் கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்தச் சூழலில் நீங்கள் அவரிடம் சகஜமாகப் பேச முடியாது.''

எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்தக் கடிதத்தை யாதவிடம் கொடுத்தேன். அதில் பிரதமருக்கு ஒரு முக்கியமான செய்தி இருப்பதாகவும், எப்படியும் அந்தக் கடிதத்தைப் பிரதமரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன், யாதவிடம் போனால் அது பிரதமரின் பார்வைக்கு நிச்சயம் போகும் என்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

செளத் அவென்யூ லேனில் உள்ள பிரதமர் சந்திரசேகரின் இல்லத்திலிருந்து வெளியே வந்த நிமிடமே நான் அந்தக் கடிதத்தை மறந்துவிட்டேன். அந்தக் கடிதத்தை பிரதமர் பார்த்தாரா, அதில் என்ன இருந்தது என்பது அடுத்த 20 ஆண்டுகளுக்குப் புதிராக இருந்தது. அந்தப் புதிருக்கான விடை எனக்கு பிரேசிலின் தலைநகரமான பிரேசிலியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்தது.

"பிரிக்ஸ்' மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலியாவுக்குப் போனபோது அவருடன் நானும் சென்றிருந்தேன். அங்கே என்னை சந்திக்க ஒருவர் வந்திருந்தார். அவர் பெயர் லிங்கநாதன்.

""இந்தியப் பிரதமருடன் வந்திருக்கும் குழுவில் சென்னையிலிருந்து வைத்தியநாதன் என்கிற பெயரைப் பார்த்தேன். அது நீங்களாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அது சரியாகி விட்டது...''

நடுத்தர வயதுடைய யாழ்ப்பாணத் தமிழரான அவர் பேசிக் கொண்டே போனார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. அவர் யார் என்று நான் கேட்டபோது, அவர் சொன்ன பதிலில் நான் திடுக்கிட்டேன்.

""என்றன் பெயர் லிங்கநாதன். நானும் எனது நண்பர்களும் உங்களை சந்திக்க வந்தோம் என்பது நினைவிலிருக்கிறதா? உங்கள் உதவியால்தான் நாங்கள் உயிர் பிழைத்து இந்தியாவிலிருந்து பத்திரமாக வெளிக்கிட்டோம்'' என்று அவர் சொன்னபோது எனக்கு ஏதோ உறைத்தது.

பிரதமர் சந்திரசேகரிடம் சேர்க்கச் சொல்லி என்னிடம் கடிதம் தந்த நான்கு இளைஞர்களில் லிங்கநாதனும் ஒருவர். பத்மநாபாவின் ஈ.பி. ஆர்.எல்.எஃப். போராட்டக் குழுவில் உறுப்பினர்களான அந்த நான்கு பேரும் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பிரதமர் தலையிட்டு அவர்கள் இந்தியாவிலிருந்து தப்புவதற்கு உதவ வேண்டும் என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கே. பத்மநாபாவின் ஈழப்போராட்டக் குழுவைச் சேர்ந்த அந்த நான்கு பேரும் 1990 ஜூன் 19-ஆம் தேதி சென்னையில் நடந்த படுகொலையின்போது எப்படியோ தப்பித்து விட்டனர். அந்த இடத்தில் அவர்கள் இருக்கவில்லை. பத்மநாபாவும் அவருடைய 12 தோழர்களும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நான்கு பேரும் தலைமறைவாக உயிருக்குப் பயந்து நடமாடிக் கொண்டிருந்தனர்.

""நீங்கள் கடிதத்தைக் கொடுத்ததைத் தொடர்ந்து, அதில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு நபரை அவர்கள் தொடர்பு கொண்டார்கள். எங்களைப் பத்திரமாக இந்தியாவிலிருந்து வெளியேற்ற பிரதமர் சந்திரசேகர் உத்தரவிட்டார். நான் பிரான்சுக்குப் போய் அங்கிருந்து பிரேசில் வந்து இங்கேயே தங்கிவிட்டேன். ஏனைய மூன்று நண்பர்களில் இருவர் ஆஸ்திரேலியாவிலும், ஒருவர் ஜெர்மனியிலும் இருக்கிறார்கள். நாங்கள் உங்களைத்தான் தெய்வமாக நினைக்கிறோம்'' என்று அவர் சொன்னபோது, என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை.

உதவியாளர் மூலம் நான் கொடுத்த அந்தக் கடிதத்துக்கு பிரதமர் சந்திரசேகர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது 20 ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிந்தது. கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை 1991 ஜனவரியில் பிரதமர் சந்திரசேகர் அகற்றியதற்கு அந்தக் கடிதமும் கூட ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது.

அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்திக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் சுமுகமான உறவு இருந்தது என்றாலும், அவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பிரணாப்தாவை நான் அவரது வீட்டிற்குப் போய் சந்திப்பது குறைந்துவிட்டது. அவர் பெரும்பாலும் கொல்கத்தாவில்தான் இருந்தார் என்பதும், கிரேட்டர் கைலாஷில் இருந்த அவரது வீடு மத்திய தில்லியிலிருந்து சற்று தூரம் என்பதும்தான் அதற்கு காரணங்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் இந்திரஜித் குப்தா, ஜி.கே. மூப்பனார் போன்றவர்கள் தங்கியிருந்த வெஸ்டர்ன் கோர்ட்டில் பிரணாப்தாவுக்கும் ஓர் அறை இருந்தது. கன்னாட் பிளேஸ் கட்டப்பட்டபோது கட்டப்பட்டவைதான் வெஸ்டர்ன் கோர்ட்டும், ஈஸ்டர்ன் கோர்ட்டும். வெஸ்டர்ன் கோர்ட் என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்குமிடமாக இருந்தது. ஈஸ்டர்ன் கோர்ட் தலைமை தபால் நிலையமாகத் திகழ்ந்தது.

சுதந்திர இந்தியாவில் ஒருசில மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெஸ்டர்ன் கோர்ட்டில் தங்கியிருந்தனர். முன்னாள் எம்பி-க்கள் தில்லி வந்தால் தங்குவதற்கான இடமாகவும் அது திகழ்ந்தது. இப்போது, நரேந்திர மோடி அரசு அதற்கு பதிலாக நட்சத்திர அந்தஸ்துள்ள மிகப் பெரிய எம்பி-க்கள் தங்கும் விடுதியைக் கட்டிவிட்டது.

வெஸ்டர்ன் கோர்டிலுள்ள தனது அறையில் ஓய்வெடுப்பதற்காக பிரணாப் முகர்ஜி மதிய வேளைகளில் வருவதுண்டு. அதேபோல, முக்கியமான சில சந்திப்புகளுக்கும் வெஸ்டர்ன் கோர்ட்டை அவர் பயன்படுத்துவதை வழக்கமாக்கி இருந்தார்.

பிரணாப் முகர்ஜியை வெஸ்டர்ன் கோர்ட்டில் நான் சந்தித்தேன். மிகுந்த சோர்வுடனும் சுவாரஸ்யமில்லாமலும் அவர் இருந்தது என்னை என்னவோ செய்தது.

""பிரதமர் சந்திரசேகர் என்ன சொல்கிறார்? அவரை சந்தித்தாயா?''

""சென்றிருந்தேன். சந்திக்க முடியவில்லை. அமெரிக்கப் போர் விமானப் பெட்ரோல் பிரச்னை குறித்து தீவிர விவாதத்தில் இருப்பதாக யாதவ் சொன்னார்.''

தலையசைத்துப் புன்னகைத்தார். நான் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்.

""எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண விரும்புகிறார். அவரால் தீர்வு காணவும் முடியும். ஆனால், தேவையில்லாத புதுப்புதுப் பிரச்னைகள் கிளம்புகின்றன. அதை அவர் சமாளிப்பதுதான் சவாலாக இருக்கப் போகிறது''

அதற்கும் நான் எதுவும் பேசவில்லை.

""சுப்பிரமணியம் சுவாமியிடம் உனக்கு நெருக்கம் உண்டா?''

""தெரியும். நெருக்கமெல்லாம் கிடையாது. பார்த்தால் சிரிப்போம். பேசுவோம். அவ்வளவுதான்.''

""சோ ராமசுவாமி தில்லிக்கு வந்திருக்கிறாரோ? உனக்குத் தெரியுமா?''

""வந்திருக்கிறாரா என்று எனக்குத் தெரியாது. எதிர்த்தாற்போல மூப்பனார்ஜியின் அறையில் கேட்டால் தெரியும். அவர்கள் நெருங்கிய நண்பர்கள்.''

""முடிந்தால் சுப்பிரமணியம் சுவாமியையும், சோ ராமசாமியையும் சந்தித்துப் பேசு. உனது செய்தி நிறுவனத்திற்கு நிறையே வேலை காத்திருக்கிறது.''

பிரணாப்தா என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை. குழப்பத்துடன் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தேன். சந்திர
சேகர் அரசு கவிழப் போகிறதோ என்கிற சந்தேகம் எழுந்தது.

சோ சார் தில்லி வந்திருக்கிறாரா என்று தெரிந்துகொள்ள எதிர்த்தாற்போல இருந்த மூப்பனார்ஜியின் அறையை நோக்கி நடந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com