'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 28

ஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனார்ஜியின் அறையில் அவரது உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 28


ஸ்டர்ன் கோர்ட்டிலுள்ள மூப்பனார்ஜியின் அறையில் அவரது உதவியாளர் பாண்டியன் மட்டும்தான் இருந்தார். அறை வாசலில் கூட்டம் எதுவும் இல்லை என்பதிலிருந்தே ஜி.கே.மூப்பனார் அங்கே இல்லை என்பது தெரிந்தது. சோ சார் வந்திருக்கிறாரா என்பது குறித்து பாண்டியனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சந்திரசேகர் அரசு கவிழப் போகிறதோ என்கிற சந்தேகம் எனக்கு அழுத்தமாக இருந்ததால், அங்கிருந்து அக்பர் சாலையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தை நோக்கி நடந்தேன். வெஸ்டர்ன் கோர்ட்டிலிருந்து காங்கிரஸ் அலுவலகம் அதிக தூரத்தில் இல்லை. ஜன்பத் சாலையில் ராஜ்பத்தைக் கடந்து சென்று, மெளலானா ஆசாத் சாலையில் இடதுபுறம் திரும்பி நடந்தால், அக்பர் சாலை காங்கிரஸ் அலுவலகத்தின் பின்புற வாசலை அடைந்து விடலாம்.

காங்கிரஸ் அலுவலகமும் எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. ஒருசில காங்கிரஸ்காரர்கள் இருந்தனர். அடுத்த கட்டத் தேடலுக்கு பிரதமர் சந்திரசேகரின் செளத் அவென்யூ சாலை இல்லம்தான் சரியானது என்று நினைத்து, அங்கே செல்ல ஆட்டோவில் ஏறினேன். செளத் அவென்யூவில் நான் போய் இறங்கும்போது எதிரில் தென்பட்டவர் ஹிமான்ஷு பாண்டே.

ஜனதா கட்சி ஆட்சிக் காலத்திலிருந்து எனக்கு ஹிமான்ஷு பாண்டே அறிமுகம்.
தில்லிப் பிரதேச ஜனதாக் கட்சியின் இளைஞர் அணி (யூத் மோர்ச்சா) தலைவராக இருந்தார். ரபிரே, ராஜ் நாராயணன், சுவாமி அக்னிவேஷ், சத்யபிரகாஷ் மாளவியா, சந்திரஜித் யாதவ் உள்ளிட்ட பல முன்னணித் தலைவர்களை எனக்கு அறிமுகம் செய்தவர் அவர்தான். ஜனதா கட்சியில் அதன் தலைவராக இருந்த சந்திரசேகரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த ஹிமான்ஷு பாண்டே, ஜனதா தள அரசியலில் காணாமல் போனது மிகப் பெரிய அவலம்.

என்னைப் பார்த்தவுடன் நான் கேட்காமலேயே ஹிமான்ஷு பாண்டே அந்தத் தகவலைத் தெரிவித்தார். பிரதமர் சந்திரசேகரை சந்திக்க "துக்ளக்' ஆசிரியர் சோ ராமசாமி வந்திருப்பதாகவும், பிரதமர் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்துக்குப் புறப்படலாம் என்று கிளம்பிய என்னைத் தடுத்து நிறுத்தினார் பாண்டே.

""நீங்கள் அங்கே போய் சிரமப்பட வேண்டாம். அவர்கள் இருவரும் இன்னும் சிறிது நேரத்தில் இங்கேதான் வரப்போகிறார்கள். சுப்பிரமணியம் சுவாமியும் வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். நாம் பிரதமர் இல்லத்தின் வரவேற்பறையில் காத்திருப்போம்'' என்று என்னை அழைத்துக் கொண்டு 3, செளத் அவென்யூ லேனை நோக்கி நகர்ந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் பிரதமர் சந்திரசேகர் வந்தார். அவருடன் சோ சாரும் வந்தார். என்னைப் பார்த்ததில் சோ சாருக்கு இன்ப அதிர்ச்சி. அதற்குப் பிறகு பிரதமர் சந்திரசேகருக்கும், சோ சாருக்கும் இடையே என்னைப் பற்றி நடந்த அந்தக் கலந்துரையாடலை என்னால் வாழ்நாளில் மறக்க முடியாது.

""வைத்தியநாதனுக்குப் பிரணாப் முகர்ஜி, ஐ.கே. குஜ்ரால், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு என்று சர்வகட்சித் தலைவர்களிடமும் நெருக்கமுண்டு...'' என்றார் சோ சார்.

அதற்கு, பிரதமர் சந்திரசேகரிடமிருந்து வந்த உடனடி பதில் இதுதான்:

""சோ, அவர் "சோ' ராமசாமியின் நண்பர். நீங்கள் சொன்ன தலைவர்களுடனான அவரது தொடர்பு என்பது அதைவிட எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.''

ஒரு விநாடி நான் நெகிழ்ந்துபோய் நின்றுவிட்டேன். தில்லியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசியத் தலைவர்கள் அனைவரும் என்னிடம் நம்பிக்கை வைத்ததற்கும், மரியாதை செலுத்தியதற்கும் சோ சாருக்கு வேண்டியவர் என்பது ஒரு முக்கியமான காரணம். நான் பிரணாப் முகர்ஜிக்கு நெருக்கமானவர் என்பதால் சோ சாரும், சோசாருக்கு வேண்டியவர் என்பதால் பிரணாப் முகர்ஜியும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தனர் என்கிற உண்மையையும் நான் மறந்ததே இல்லை.

நாங்கள் அனைவரும் உள்ளே போனோம்.

வரவேற்பறையில் அமர்ந்தபடி பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். சுப்பிரமணியம் சுவாமி வந்தவுடன், பிரதமர் சந்திரசேகரும், சோ சாரும் எழுந்து அவருடன் பக்கத்து அறைக்குச் சென்று விட்டனர்.

அப்போதுதான் எனக்குக் கவிழப் போவது சந்திரசேகர் ஆட்சியல்ல; தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி என்கிற உண்மை உறைத்தது. "எனது செய்தி நிறுவனத்திற்கு நிறைய வேலை காத்திருக்கிறது' என்று பிரணாப்தா கூறியதன் பின்னணியை ஊகித்து விட்ட நிலையில், அங்கே காத்திருப்பதில் பயனில்லை என்று எனக்குத் தோன்றியது.

அங்கிருந்து கிளம்பி கன்னாட் பிளேஸில் ஏ.வி.ஜி. பவனில் இருந்த எனது அலுவலகத்துக்கு வந்துவிட்டேன். சென்னையைத் தொடர்பு கொண்டபோது, அங்கே இது குறித்து எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் இருந்தது தெரிந்தது. எனக்கு வியப்பாக இருந்தது.

முதல்வர் அலுவலகமும், அண்ணா அறிவாலயமும், திமுக அமைச்சர்களும் ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது என்கிற அசாத்திய நம்பிக்கையில் இருந்தனர். சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இருப்பது முதல் காரணம் என்றால், திமுகவுக்கு சாதகமான ஆளுநர் இருப்பது இன்னொரு காரணம். மத்திய அரசு வற்புறுத்தினாலும், ஆட்சிக் கலைப்புக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா முதல்வர் கருணாநிதிக்கு உறுதி அளித்திருந்தார் என்று கூறப்பட்டது.

ஆளுநர் பர்னாலா எந்தக் காரணத்தைக் கொண்டும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உடன்பட மாட்டேன் என்று முதல்வர் கருணாநிதிக்கு உறுதி அளித்திருந்தது போலவே, "ஆட்சியைக் கலைப்பது உறுதி' என்று அதிமுக தலைவர் ஜெயலலிதாவுக்குக் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி உறுதி அளித்திருந்தார். ம. நடராஜனைத் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என்று கேட்டபோது அவர் என்னிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

1991 ஜனவரி 31-ஆம் தேதி கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையை அரசியல் சாசனப் பிரிவு 356-இன் கீழ் கலைத்ததற்கு மூன்று வெவ்வேறு காரணங்கள் இருந்தன. 1980 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் படுதோல்வியைக் காரணம் காட்டி, திமுகவின் வற்புறுத்தலின்பேரில் அன்றைய எம்ஜிஆர் அரசைக் கலைத்ததுபோல, 1989 நவம்பர் மக்களவைத் தேர்தல் படுதோல்வியின் பின்னணியில் திமுக அரசு கலைக்கப்பட வேண்டும் என்பது ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவின் வற்புறுத்தல்.

தேசிய முன்னணியில் அங்கம் வகித்து, வி.பி. சிங்குடன் கைகோர்த்து, 1989 நவம்பர் மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸத் தோற்கடித்த திமுகவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் தலைமைக்கு (ராஜீவ் காந்திக்கு), ஜெயலலிதாவின் வற்புறுத்தல் சாதகமாகிப் போனது. காங்கிரஸ் தரப்பிலிருந்து திமுக அரசைப் பதவியிலிருந்து அகற்ற பிரதமர் சந்திரசேகருக்கு அழுத்தம் தரப்பட்டது.

எல்லாவற்றையும் விட, பிரதமர் சந்திரசேகருக்கு முக்கியமான காரணமாகப்பட்டது, திமுகவின் ஈழப் போராளிகள் தொடர்பு. அதற்கு வலு சேர்க்கும் விதமாக பத்மநாபா படுகொலை அமைந்தது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்த ஆதாரங்கள் மத்திய புலனாய்வுத் துறையால் உள்துறை அமைச்சகத்துக்குத் தரப்பட்டிருந்தன.

திமுகவை ஆட்சியில் தொடரவிட்டால், இலங்கையில் உள்ளதுபோல தமிழகத்திலும் போராட்டக் குழுக்களை அமைக்கும் முயற்சிக்கு அது வித்திட்டதாகும் என்கிற பலமான கருத்து பிரதமர் சந்திரசேகருக்கு இருந்தது. அது குறித்து என்னிடம் பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாகவே எடுத்துரைத்தார் அவர். ""தீவிரமாகக் கண்காணித்து அவ்வப்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்துக்கு ஆபத்து காத்திருக்கிறது'' என்று அவர் கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார்.

திமுக ஆட்சியை அகற்றுவதில் "துக்ளக்' ஆசிரியர் சோவின் பங்கு கணிசமானது. சொல்லப் போனால், பிரதமர் சந்திரசேகரை வற்புறுத்தி ஆட்சியைக் கலைக்கச் செய்ததில் முனைப்புக் காட்டியவர்கள், ராஜீவ் காந்தி, சுப்பிரமணியம் சுவாமி, "சோ' ராமசாமி ஆகிய மூவரும்தான். அதில் ஜெயலலிதாவின் பங்கு அதிகமில்லை.

காங்கிரஸ் தலைமையகத்துக்குச் சென்றிருந்தேன். பிரணாப் முகர்ஜி தனது அறையில் இருப்பதாகச் சொன்னார்கள். சென்றேன். ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்ததும் நிமிர்ந்து பார்த்தார். உட்காரும்படி சைகை காட்டினார். எதிரிலிருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

""எனக்கொரு சந்தேகம்... சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலம் இருக்கும்போது, அந்த அரசைக் கலைக்க முடியுமா? அது முறையாக இருக்குமா?''

சிரித்தார் பிரணாப்தா. பிறகு தொடர்ந்தார்.

""சட்டப்பேரவைப் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் மட்டும் மாநில அரசு என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடியாது. இந்திய தேசியத்துக்கும், ஒற்றுமைக்கும் எதிராக மக்களைத் திரட்டி மாநில ஆட்சியைக் கைப்பற்றி விட்டது என்பதால், அந்தக் கட்சி தேசவிரோதச் செயல்களில் ஈடுபட முடியாது. அதை மத்திய அரசு பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காகத்தான் அரசியல் சாசனப் பிரிவு 356 நீண்ட விவாதத்துக்குப் பிறகு இணைக்கப்பட்டது.''
""சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசினேன். ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே கூட மாநில ஆட்சியைக் கலைக்க முடியும் என்று சொல்கிறாரே, அது சாத்தியமா?''

""சட்ட அமைச்சராக இருப்பவர், தீர விசாரிக்காமல் அப்படிச் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.''

""நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட வேண்டுமா?''

""நான் அரசில் இல்லை. அப்படி இருக்கும்போது அது குறித்து நான் எப்படி கருத்துத் தெரிவிக்க முடியும்? தமிழகத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்றும், போராளிக் குழுக்கள் எந்தவிதத் தடையுமில்லாமல் சுற்றி வருகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது''

""இதை உங்கள் கருத்தாக நான் வெளியிடலாமா?''

""கூடாது. அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் இடத்தில் நான் இல்லை. தனிப்பட்ட முறையில் உனக்கு விளக்கம் தந்தேன் அவ்வளவுதான்.''

அதற்குப் பிறகு தமிழக நிலைமை குறித்து நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். உள்துறை அமைச்சருக்குக் கூடத் தெரியாத பல புள்ளி
விவரங்களை அவர் தெரிவித்தபோது நான் பிரமிப்பில் ஆழ்ந்தேன்.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது தூர்தர்ஷன் செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. அதில் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் ஒப்புதலுடன் அரசியல் சாசனப் பிரிவு 356-இன் கீழ் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்ட செய்தி வெளியானது.

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே ஆட்சி கலைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரது உதவியாளர் உள்ளே வந்து, காங்கிரஸ் தலைவர் வரப்போவதாகவும் அவரை வரும்படி அழைப்பதாகவும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியை சந்திக்கக் கிளம்பினார் பிரணாப் முகர்ஜி. நானும் கிளம்ப முற்பட்டேன். அப்போது அவர் தொடர்ந்தார்:

""ஆர். வெங்கடராமன் முதிர்ந்த அரசியல்வாதி. அரசியல் சாசனத்தைக் கரைத்துக் குடித்த வழக்குரைஞர். சட்ட விதிகளை மீறி எதுவும் செய்யாதவர். அவர் கையொப்பம் இட்டிருக்கிறார் என்றால், ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசைக் கலைக்க முடியும் என்பது உறுதியாகிறது''

நான் வெளியில் செல்வதற்காக அலுவலக முகப்புக்கு வந்தபோது, ராஜீவ் காந்தி காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com