'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 29

ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து ராஜீவ் காந்தி நிஜமாகவே வித்தியாசமானவர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 29


ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து ராஜீவ் காந்தி நிஜமாகவே வித்தியாசமானவர். நேரு குடும்பத்து வாரிசு என்கிற கர்வமோ, தலைவர் என்கிற மமதையோ அவருக்கு எப்போதுமே இருந்ததில்லை. தனது கடுமையான எதிரிகளையும் கூட அவர் சினந்து பார்த்ததாகவோ, தவறாகப் பேசியதாகவோ கூற முடியாது.

தானே ஓட்டி வந்த ஜீப்பிலிருந்து இறங்கி அக்பர் ரோடு காங்கிரஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்த ராஜீவ் காந்தியின் பார்வை சட்டென்று திரும்பியது. அவர் உள்ளே போகட்டும் என்று சற்று தள்ளித்
தயக்கத்துடன் நின்று கொண்டிருந்த என்மீது பதிந்தது.

சிநேகபூர்வச் சிரிப்புடன் எனக்கு அவர் கையசைத்தபோது நான் அதை எதிர்பார்க்கவில்லை. அவருக்கு என்னை நினைவிருக்கும், கையசைப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. கையசைத்துவிட்டு அவர் அவசர அவசரமாக போர்ட்டிகோ வழியாக உள்ளே நுழைந்து விட்டார்.

சுற்றியிருந்த அனைவரின் பார்வையும் என்மீது குவிந்தது. நான் யாராக இருக்கும் என்று சிலர் பேசிக் கொண்டது என் காதில் விழுந்தது. ராஜீவ் காந்தியின் சுறுசுறுப்பையும், நட்புணர்வுடன் அனைவரையும் சமமாகப் பாவித்துப் பழகும் தன்மையையும் வியந்தபடி அங்கிருந்து வெளியேறினேன்.

தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா அகற்றப்பட்டு பீஷ்ம நாராயண் சிங் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். சற்றும் எதிர்பாராதவிதத்தில் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் திமுக சற்று நிலைதடுமாறிப் போயிருந்தது என்பதுதான் உண்மை.

தில்லியிலிருந்து நான் தமிழகம் திரும்பிவிட்டேன். அதிமுக அணிகள் இணைந்து இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்ததும், காங்கிரஸூடனான கூட்டணியும், 1989 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கு 39 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தந்திருந்தன. எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தாலும், மக்களவைத் தேர்தல் முடிவுகள் எதிரொலிக்கும்
என்கிற நம்பிக்கையில் அதிமுகவும் காங்கிரஸூம் இருந்தன.

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நிலையிலும் திமுக தலைவர் மு. கருணாநிதி மனம் தளராமல் இருந்தார் என்பதுதான் ஆச்சரியம். முதலில் இந்திரா காந்தி, இப்போது அவரது மகன் ராஜீவ் காந்தியின் வற்புறுத்தல் என்று இரண்டு தடவை திமுக ஆட்சி காங்கிரஸால் கலைக்கப்பட்டிருந்தது. வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி கவிழ்ந்ததைக் கடுமையாக விமர்சித்து வந்த திமுக, தனது ஆட்சியும் கவிழ்க்கப்பட்டிருந்ததால் காங்கிரஸ் மீது கடுமையான ஆத்திரத்தில் இருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த காலகட்டத்தில் மூன்று நான்கு தடவை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கலந்து கொண்டேன். சாதாரணமாக நான் நிருபர் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் கேள்விகள் கேட்பதில்லை. எனது பேட்டிகள் அனைத்தும் நேரடி நேர்காணல்களாக மட்டுமே இருந்திருக்கின்றன. நிருபர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது, புதிய தகவல்களுக்காகதானே தவிர, வேறு காரணம் கிடையாது.

ஒருமுறை நிருபர்கள் கூட்டம் முடிந்து நான் வெளியேறும்போது, ""தலைவர்
உங்களைச் சற்று நேரம் இருக்கச் சொன்னார். பார்க்க விரும்புகிறார்'' என்று ஒருவர்என்னிடம் தெரிவித்தார். நான் காத்திருந்தேன். அழைத்தார்கள், போனேன்.

நான் உள்ளே நுழையும்போது நாஞ்சில் மனோகரனும், ஆற்காடு வீராசாமியும் வெளியேறிக் கொண்டிருந்தனர். திமுக தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் க. அன்பழகனும் மட்டும்தான் இருந்தார்கள். உள்ளே போய் அமர்ந்ததும், கருணாநிதியே பேச்சை எடுத்தார்.

""அடுத்தாற்போல என்ன செய்யப் போகிறார்களாம்? தேர்தல் நடத்துவதாக இருக்கிறார்களா இல்லை கவர்னர் ஆட்சி தொடரப் போகிறதா?''

""எனக்கெப்படித் தெரியும்? என்னிடம் இதையெல்லாம் கேட்கிறீர்கள்?''

""நீங்கள் காங்கிரஸ் தலைமைக்கும் நெருக்கமானவர். சோவுக்கும் வேண்டியவர். அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்.''

அந்த அளவுக்கு எனக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. கலந்தாலோசிக்கும் அளவுக்கோ, தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கோ காங்கிரஸ் தலைமையிடம் எனக்கு செல்வாக்கோ, நெருக்கமோ இல்லை என்பதை அவரிடம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் எதுவும் பேசவில்லை.

""நீங்கள் எதிர்பார்ப்பதுபோல கவர்னர் ஆட்சியை நீட்டிப்பார்கள் என்று தோன்றவில்லை. விரைவில் தேர்தல் நடத்துவதைத்தான் அதிமுக விரும்பும் என்று நினைக்கிறேன்'' என்று எனது சொந்த அனுமானத்தைச் சொன்னேன். அடுத்த நொடியில் அவரிடமிருந்து கேள்வி எழுந்தது.

""என்ன, நடராஜன் சொன்னாரா?''

""நான் அவரைப் பார்க்கவே இல்லை. எனது சொந்தக் கருத்து.''

திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து, அதிமுகவைப் போலவே திமுகவும் உடனடியாகத் தேர்தலைச் சந்திப்பதில் ஆர்வமாக இருப்பது தெரிந்தது. அதற்கு அவர்களுக்கு ஒரு காரணமும் உண்டு.

மின் கட்டண, பஸ் கட்டண உயர்வும், மக்களவைத் தேர்தல் தோல்வியும் திமுகவுக்குப் பெரிய செல்வாக்குச் சரிவை ஏற்படுத்தி இருந்தன. அரசின் மீதான அதிருப்திகளை அகற்றி, ஆட்சிக் கலைப்பு அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று திமுக எதிர்பார்த்தது என்று நான் நினைத்தேன்.

அறிவாலயத்திலிருந்து கிளம்பி சி.ஐ.டி. காலனியில் இருந்த துக்ளக் அலுவலகத்துக்கு வந்தேன். ஆசிரியர் சோ சாரிடம், திமுக ஆட்சிக் கலைப்புக் குறித்துப் பல கேள்விகள் கேட்க வேண்டும் என்று மனது பரபரத்தது. அறிவாலயம் சென்றது, என்னை காத்திருக்கச் சொன்னது, என்னிடம் கேட்டது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவரிடம் சொல்லிவிட்டுக் கேட்டேன் -

""எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை, முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மத்திய "காபந்து' அரசு கலைத்தது சரியா? அடுத்தாற்போல, திமுக ஆட்சியைக் கலைத்ததால் அந்தக் கட்சியினர் மீது மக்களுக்கு அனுதாபம் ஏற்படாதா?''

கருணாநிதி எந்த அளவுக்கு புத்தி கூர்மையானவரோ அதற்கு எள்ளளவும் குறையாத புத்தி கூர்மையுள்ள ஒருவர் இருப்பாரானால் அது "துக்ளக்' ஆசிரியர் "சோ' ராமசாமியாகத்தான் இருக்க முடியும். இருவரது அணுகுமுறையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. முன்னவரின் பதில்களில் சாதுர்யம் இருக்கும். சோ சாரின் கருத்தில் "ஸ்படிகம்' போன்ற தெளிவு இருக்கும். இருவரின் பேச்சிலும் நக்கல், கேலி, பகடி ஆகியவை இழையோடும்.

""சார், சந்திரசேகர் அரசை "காபந்து' அரசு என்று நீங்கள் சொல்வதே தப்பு. எந்தப்பிரதமரும் மக்களால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பார்லிமெண்ட் மெம்பர்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். நவம்பர் 19-ஆம் தேதி பார்லிமெண்டில் தன்னோட மெஜாரிட்டியை சந்திரசேகர் ப்ரூவ் பண்ணியிருக்கார். அதனால அவரோட கவர்ன்மென்ட், கான்ஸ்டிட்யூஷனால் அங்கீகாரம் பெற்ற அரசு. அதற்கு திமுக ஆட்சியைக் கலைப்பதற்கு சிபாரிசு பண்ணும் அதிகாரம் உண்டு. அது மாத்திரமில்லை, நியாயமான காரணங்களும் உண்டு!''

""ஆட்சியைக் கவிழ்த்ததாலேயே திமுகவுக்கு அனுதாபம் கிடைக்காதா?''

""நல்லது பண்ணின ஆட்சியைக் கலைச்சா அனுதாபம் கிடைக்கும். தப்புப் பண்ணினதுக்கு ஆட்சியைக் கலைச்சா எப்படி சார் அனுதாபம் கிடைக்கும்?

தேர்தல் தோல்விதான் கிடைக்கும். அனுதாபம் கிடைக்கும்னு அவர் எதிர்பார்க்கிறார்.


எதிர்பார்க்கட்டும்!''

எங்களுக்கிடையில் நடந்த இந்த உரையாடலை நான் எனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்ததை அப்படியே தந்திருக்கிறேன்.

பேட்டிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. கான்பூரில் ராஜீவ் காந்தி கலந்து கொள்ளும் பேரணிக்கு என்னையும் வரும்படி அழைத்திருந்தார் "நேஷனல் ஹெரால்ட்' பத்திரிகையின் நிருபர். தில்லிக்கு ரயிலேறி விட்டேன்.


தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டிருந்தது என்றால், மத்தியில் சந்திரசேகர் அரசு ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது. ஆட்சியில் அமர்ந்த சில வாரங்களில் மண்டல், அயோத்தி பிரச்னைகளால் ஏற்பட்டிருந்த பதற்றங்களைத் தணித்திருந்தார் பிரதமர் சந்திரசேகர். அவரை அப்படியே ஆட்சியில் தொடரவிட்டால், காங்கிரஸூக்கும் ராஜீவ் காந்திக்கும் போட்டியாளராக உருவாகிவிடக்கூடும் என்கிற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு இருந்தது.

சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக், குவைத் நாட்டை ஆக்கிரமித்திருந்தது. அதற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் 35 நாடுகள் அடங்கிய கூட்டணிப் படைகள் ஈரானுக்கு எதிராகப் போரில் இறங்கி இருந்தன.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், இரு நாட்டு ராணுவ விமானங்களும் பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கான ஒப்பந்தம் இருப்பதை யாரும் அதுவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது அது பிரச்னையாக வெடித்தது.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வளைகுடாப் போரில் ஈடுபட்ட அமெரிக்கப்
போர் விமானங்கள் இந்திய விமான நிலையங்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டன. அது இந்தியாவின் அணிசேராக் கொள்கையைப் பாதிப்பதாக இருக்கிறது என்றும், சந்திரசேகர் அரசு அதற்கு அனுமதி வழங்கியது தவறு என்றும் காங்கிரஸூம், ஏனைய அரசியல் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. நாடாளுமன்றத்திலேயே இந்தப் பிரச்னை விவாதப் பொருளானது.


ஏற்கெனவே, காங்கிரஸ் அரசால் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் நிலையில் இப்போது பெட்ரோல் போட மறுக்க முடியாது என்பது பிரதமர் சந்திரசேகரின் விளக்கம். அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அப்படிப்பட்ட சூழலில் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் நான் தில்லியை அடைந்தேன். பிரதமர் சந்திரசேகருடனான எனது பேட்டிக்கு நான்கு முறை நேரம் ஒதுக்கப்பட்டு, அரசியல் பிரச்னைகள் காரணமாக அவை ரத்து செய்யப்பட்டன. அந்த சூழலில் பேட்டி வேண்டாம் என்று கருதிய பிரதமர் சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திக்கவும் பேசவும் தவறவில்லை.

சந்திரசேகரைப் போல முன்கோபமும், தன்மான உணர்வும் கொண்ட அரசியல் தலைவர்கள் வெகு சிலர் தான் இருப்பார்கள். தனக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகச் சொன்ன காங்கிரஸ் கட்சி, இப்போது வேண்டுமென்றே பிரச்னைகளைக் கிளப்பித் தனது அரசைக் கவிழ்க்க முனைகிறது என்று அவர் ஆத்திரமடைந்ததில் அர்த்தம் இருக்கிறது.

""ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்திருக்கிறார்கள். நாங்கள் எப்படி பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்று அவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். இதையெல்லாம் இப்படியே எத்தனை நாள்கள் தாங்கிக் கொள்ள முடியும்?''

""நீங்கள் அவசரமும் கோபமும் கொள்வதில் அர்த்தமில்லை. உங்களுக்கு ஆலோசனை கூறுமளவுக்கு எனக்கு வயதும் கிடையாது. தகுதியும் இல்லை. ஆனாலும் ஒரு வேண்டுகோள். சற்று பொறுமையாக இருங்கள். பிரதமர் பதவி என்பது சாதாரணமானதல்ல. அதைச் சட்டென்று தூக்கி எறிந்துவிடக் கூடாது.''

""நான் எத்தனை நாள்கள் பிரதமராக இருந்தேன் என்பது எனக்கு முக்கியமல்ல. ஆனால் பிரதமராக எப்படிச் செயல்பட்டேன் என்பதுதான் எனக்கு முக்கியம். ஓரளவுக்குத்தான் இதையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியும்.''

பிரதமர் சந்திரசேகர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். அவரை எப்படிச் சமாதானம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

பிரதமரின் செüத் பிளாக் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த நான், சென்னைக்கு டிரங்க்கால் போட்டு சோ சாரைத் தொடர்பு கொள்ள முயன்றேன். அவர் ஏற்கெனவே தில்லி கிளம்பி விட்டதாகத் தெரிவித்தார்கள்.

அடுத்ததாக, பிரணாப்தாவைச் சந்திக்க வெஸ்டர்ன் கோர்ட்டுக்கு விரைந்தேன். அங்கே போனபோது, அவர் நான் வருவேன் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார் என்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com