தாய் மனம்

""ஈஸ்வரி, லோகமாதா! நான் என்ன பாவம் பண்ணினேன்? என்னை ஏன் இப்படி சோதிக்கறே?'' 
தாய் மனம்


""ஈஸ்வரி, லோகமாதா! நான் என்ன பாவம் பண்ணினேன்? என்னை ஏன் இப்படி சோதிக்கறே?''
சாரதாவின் மனது பாறையாய்க் கனத்தது. தன் பெண் அகிலாவுக்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
""ஐ ஆம் சாரி மாமி. அகிலாவுக்குக் கர்ப்பப் பை ரொம்பவும் "வீக்' கா இருக்கு. அதுலெ ஒரு சின்னக் கட்டியும் இருக்கு. கர்ப்பத்தை ஏத்துக்கற சக்தியோ, குழந்தைய முழுப் பிரசவ காலம் வரை தாங்கற வலிமையோ அவ யூடிரஸூக்கு இல்லே. கர்ப்பம் தரிச்சா, உயிருக்கே ஆபத்தாய் முடியும்'' டாக்டர் மாதவியின் வார்த்தைகள், சாரதாவுக்குள் இடியாய் இறங்கின.
விவரம் கேட்ட பஞ்சாபகேசன் நொறுங்கிப் போனார். எத்தனை கோயில்கள், எத்தனை வேண்டுதல்கள், பிரார்த்தனைகள் - அபூர்வமாகப் பிறந்த ஒரே பெண்! அவளுக்கு இப்படி ஒரு கஷ்டமா? "ஈஸ்வரா, ஏன் என்னை இப்படித் தண்டிக்கிறே?' - மனதுக்குள் புழுங்கினார்.
""ஏன்னா, காயத்ரிக்கு சொல்லிட்டேளா?''
""ம்... சொல்லிட்டேம்மா. நியூஸ் கேட்ட உடனே கொழந்தே அப்படியே கலங்கிப் போய்ட்டா. உடனே கௌம்பி வரேன்னா''
சாரதா ஜன்னலுக்கு வெளியே தனியாய்ப் பூத்திருந்த சிவப்பு நிற செம்பருத்திப் பூவையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு, பெரியவா அனுக்கிரகத்துலே, சீரும் சிறப்புமா ஐந்து நாட்கள் நடந்ததுதான் பஞ்சாபகேசன், சாரதா திருமணம். ஆனாலும், சாரதாவின் வயிற்றில் ஒரு பூச்சி பொட்டு கூட வைக்கவில்லை. போகாத டாக்டர் இல்லை, பார்க்காத வைத்தியம் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை - சாரதாவுக்குக் குழந்தை பாக்கியமே ஏற்படவில்லை. "இனியும் வாய்ப்பே இல்லே' ங்கற நிலை வந்தப்போ, வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேண்டாமா என்று இருவரும் யோசித்து, ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ள முடிவு செய்தனர்.
""இந்தக் குழந்தையப் பாருங்க. தொட்டில்ல கிடந்த பெண் குழந்தை. ஆறு மாசம் ஆகுது'' - ஆசிரம நிர்வாகி காண்பித்த குழந்தை, மூக்கும் முழியுமா, தலையிலே கரு கருன்னு கொள்ளை முடியுடன், வண்டாட்டம் கண்களுடன்,
சிரித்தது! பார்த்த உடனேயே சாரதாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. பஞ்சாபகேசனுக்கும் மனசுலே ஒரு நிம்மதி "சட்' டென்று பரவியது. சட்டப்படி ஆக வேண்டியவற்றைச் செய்து வீட்டுக்குக் குழந்தையைக் கூட்டி வந்தார். "காயத்ரி' ன்னு பெயர் வைத்து, வாய் நிறையக் கூப்பிட்டார் - பட்டுப் பாவாடை, காதில் தொங்கட்டான், கழுத்தில் தங்க செயின் எனக் குட்டித் தேராய் வளைய வந்தாள் காயத்ரி - வீடே புதுக் களையோடு "கல கல' வென்றிருந்தது.
காயத்ரிக்கு இரண்டு வயது. சாரதாவுக்குத் தலை சுற்றலும் வாந்தியும் வர, லேடி டாக்டர், ""கங்கிராஜுலேஷன்ஸ் மிஸ்டர் பஞ்சாபகேசன். உங்க மனைவி உண்டாயிருக்காங்க'' என்ற போது பஞ்சாபகேசனுக்கு மகிழ்ச்சியில் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.
""இந்த வயசிலே...''
""முப்பத்தஞ்சு வயசுதானே. எங்க மெடிகல் சைடுலே இதை "எல்டர்லி ப்ரைமி' என்போம். கொஞ்சம் கேர்ஃபுல்லா கவனிச்சுக்கணும், மற்றபடி ஒன்றும் ப்ராப்ளம் இல்லே''
சாரதாவுக்கு வெட்கமாயும், கொஞ்சம் பயமாயும் இருந்தது. "ஈஸ்வரி, ஜெகன்மாதா, இந்த வயசிலே எனக்கேன் இது? என்ன விளையாட்டு இது? கேட்டுக் கேட்டு சுத்தி அலைஞ்ச போது, பாராமுகமாய் இருந்துட்டு, இப்போ ஏன்? உன் மனசிலே என்னதான் இருக்கு?' - குழந்தை காயத்ரியின் சிரித்த முகம் மனதில் வந்து போனது.
""உனக்குத் தம்பிப் பாப்பா வேணுமா? தங்கச்சிப் பாப்பா வேணுமா?'' - கேட்ட பஞ்சாபகேசன் முகத்தைப் பார்த்து காயத்ரி சிரித்தது - கையில் ஈஷியிருந்த சாக்லெட்டை அவர் முகத்தில் தேய்த்தது! "பாப்பா..பா..பா' என்றது.
இறைவன் மனதினை யாரறிவார்?
""காயத்ரி மாதிரி குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க, நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் ஈஸ்வரன். அதோட, நம்ம பிரார்த்தனைக்கும் ஓர் அர்த்தம் வேணும் இல்லையா!'' என்றார் பஞ்சாபகேசன்.
""இந்த ஜென்மத்தில் இரண்டு குழந்தைகளை நம் பொறுப்பில் விட்டிருக்கிறான்'' - வித்தியாசமில்லாமல் இருவரையும் வளர்க்க வேண்டும் என்பதில் சாரதாவும், பஞ்சாபகேசனும் உறுதியாகவும், உண்மையாகவும் இருந்தார்கள்.
பிறந்ததும் அழகான பெண் குழந்தை - அகிலா என்று பெயரிட்டு, காயத்ரியுடன் அன்பாக வளர்த்தார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டுக்கு அழகும், வளமையும் சேர்த்தார்கள்!
காலம் தன் வேலையைத் தவறாமல் செய்துகொண்டுதான் இருக்கிறது. எப்போது, யாருக்கு என்ன என்பதைக் காலமே முடிவு செய்கிறது. அதன் தீர்மானங்களுக்கு முன்னால் மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
தன் அலுவலகத்தில் பணி புரியும் அருண் - அறிவும்,
அழகும், அன்பும் நிறைந்தவன் - தன்னை மணக்க விரும்புவதையும், தனக்கும் அதில் விருப்பம்தான் என்பதனையும் அகிலா சொன்ன போது, பஞ்சாபகேசனுக்கு வியப்பாக இல்லை. ஆனால், காயத்ரி தனக்குத் திருமணத்தில் விருப்பம் இல்லையென்று சொன்னதிலும், ஒரு மாதிரியாகத் தனிமை விரும்பியாக மாறிப் போனதிலும் அவருக்கு வருத்தம் இருந்தது. காரணம் கேட்டதற்கு, காயத்ரியும் சரியான பதில் சொல்லாதது மேலும் வருத்தத்தை அதிகரித்தது. காயத்ரி ஒரு புதிராகவே இருந்தாள்.
சரியான சமயத்தில் கிடைத்த வேலை மாற்றலையும் ஏற்றுக் கொண்டு, இரண்டு மணி நேரப் பிரயாண தூரத்தில் ஹாஸ்டலில் தங்கி விடுகிறேன் என்று காயத்ரி சொன்னதையும் மறுக்க முடியவில்லை. பெண்கள் மனதை, அதுவும் படித்து வேலை பார்க்கும் பெண்கள் மனதை, அந்தக் கால மனிதரான பஞ்சாபகேசனாலோ, சாரதாவாலோ புரிந்து கொள்ள முடியுமா?
அருண் குடும்பம் சமூகத்தில் ஓர் அந்தஸ்துடன் வாழும் நல்ல குடும்பம். கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளை நன்கு அறிந்த அழகான குடும்பம். அகிலாவின் விருப்பப்படியே, அருணுடன் திருமணம் விமரிசையாக நடந்தது. அருணின் பாட்டிக்கு உடல்நிலை சரியாக இல்லாததும், கண்ணை மூடுவதற்கு முன் பேரனின் கல்யாணத்தைப் பார்க்க ஆசைப்பட்டதாலும், காயத்ரிக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று ஒதுங்கிவிட்டதாலும், அகிலாவின் திருமணம் சாத்தியமாகியது!
திருமணமாகி இரண்டு வருடங்களில், அகிலாவுக்கு, கர்ப்பப்பை பிரச்சனை. பேரக் குழந்தைகளுக்காகத் தவம் கிடக்கும் சாரதா, பஞ்சாபகேசன் தம்பதிகளுக்கு டாக்டர் மாதவி, அகிலாவைப் பற்றிக் கூறிய செய்தி வருத்ததைத் தந்தது. குழந்தைக்கு ஏங்குவதே தங்கள் விதியாகிப் போனதோ என்று கூட நினைக்கத் தொடங்கினார்கள் அந்த வயதான தம்பதிகள்.
உள்ளே நுழைந்த காயத்ரியின் முகம் தெளிவாக இருந்தது. கட்டிலில் படுத்திருந்த அகிலாவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். கைகளைப் பிடித்துக் கொண்டு,""கவலைப் படாதே அகிலா. நமக்குன்னு என்ன போட்டிருக்கோ, அதுதான் வாழ்க்கை'' என்றவள் கண்களில் கண்ணீர். அகிலாவும், ""இந்த மாதிரி ஒரு ஏமாற்றத்தை நான் எதிர்பார்க்கவே இல்லை காயு. மனசு ரொம்ப தவிக்கிறது. அம்மாவையும் அப்பாவையும் பார்க்கவே தயக்கமா இருக்கு'' என்று கண்ணீர் விட்டாள்.
""ஏன் எனக்கு மட்டும் இந்த மாதிரியெல்லாம் நடக்கறது? ஊழ்வினை தொரத்துகிறது போல. நீயும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கற. இவளுக்கோ இப்படி. எங்க தவறு செய்தேன்னு தெரியலையே, ஈஸ்வரா'' - புலம்பினார் பஞ்சாபகேசன்.
""கொழந்தை இல்லையேன்னு அலஞ்சது ஒரு காலம். இப்போ, பொண்ணுக்குக் கொழந்தை வராதேன்னு ஏங்கற காலம். காலத்தை எதிர்த்து யார் போராட முடியும்?'' அகிலாவின் தலையைக் கோதியவாறு கண்ணீர் விட்டாள் சாரதா.
""நீ இருக்கும்போது, நான் கல்யாணம் செய்து கொண்டதே தப்புன்னு எனக்கு இப்போ தோன்றது. ஏன் காயு, நீ கல்யாணம் செய்துக்க மாட்டே? நீயாவது அவாளுக்கு ஒரு பேரக் குழந்தைய பெத்துக் கொடுக்கலாமில்லையா? ரொம்ப நியாயமான ஆசைதானே அவாளோடது?''
கண்ணைத் துடைத்துக் கொண்டே சாரதா வெளியில் பார்த்தாள். அந்தச் செம்பருத்திப் பூ இன்னும் காற்றில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது.
காயத்ரி அப்பாவையும், அம்மாவையும் பார்த்தாள். அகிலாவிடம் சொன்னாள். குரலில் ஒரு தெளிவு. தீர்க்கமான முடிவுடன் பேச ஆரம்பித்தாள்.
""அகிலா, உனக்கே தெரியாத ஓர் உண்மையை நான் இப்போ சொல்லப் போறேன். நான் நம்ப அப்பா அம்மாவுக்குப் பிறந்த கொழந்தையில்லே. நீயும் என் பயலாஜிகல் சகோதரி இல்லே''
அகிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "இரண்டு பேருக்கும் தெரியாம வளர்த்திருக்கோம்ன்னு நினச்சிண்டு இருந்தோமே. இவளுக்கு எப்படித் தெரியும்? சாரதாவும், பஞ்சாபகேசனும் குழம்பினர்.
""வருஷா வருஷம் நம்ம பிறந்தநாளுக்கு ஓர் அநாதை ஆசிரமத்துக்குப் போவோமே, அங்கதான் அந்த வயசான கமலா ஆயா வாய் தவறி எங்கிட்ட உண்மைய சொல்லிடுத்து. ஆறு மாசக் குழந்தையா என்னைத் தத்து எடுத்து, தன் குழந்தையா அவ்வளவு பாசத்தோட வளர்த்தா இவா. தனக்குன்னு ஒரு பொண்ணு பிறந்தும் கூட, அந்தப் பாசத்துலேயோ, அரவணைப்பிலேயோ கொஞ்சமும் குறை வைக்காத இவாளை விட வேற யாரை நான் பெற்றோரா நெனைக்க முடியும்? ஆனாலும், அவாளுக்குப் பொறந்த உன் மூலமா ஒரு சந்ததி வர்றதுதான் நியாயம்ன்னு என் உள்மனசு சொல்லித்து. என் மனசுக்கு பிடிக்காமதான் நான் வெளியூருக்குப் போனேன். உன் கல்யாணத்துக்கும் சம்மதிச்சேன். உனக்குப் பிறகுதான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணினேன்'' -
""ஏம்மா அப்படி ஒரு முடிவு எடுத்தே? நீயும் எங்க கொழந்தைதானேம்மா. உனக்குக் கொஞ்சமேனும் சந்தேகம் வரும்படியா நாங்க நடந்திருந்தா எங்களை மன்னிச்சுடும்மா. ஆசையா தத்து எடுத்த கொழந்தை மனசு நோகலாமா? அப்பா, அம்மாவா நாங்க எங்க கடமையிலே தவறிட்டோமோ?'' - பஞ்சாபகேசன் உடைந்து அழுதார்.
பதறினாள் காயத்ரி. தன்னோட அறிவு சொன்னதைக் கேட்டது தவறோ? அதை மீறின மனசும், பாசமும் நமக்கு ஏன் தெரியாம போச்சு? ஓடிச் சென்று அப்பாவின் காலில் விழுந்து அழுதாள்.
""என்ன மன்னிச்சிருங்கோப்பா. உங்களை மாதிரி அப்பா அம்மா கிடைக்க நாங்க ரொம்ப குடுத்து வெச்சிருக்கணும். இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுத்தாலும் நீங்கதான் எனக்கு அப்பா, அம்மா'' என்றாள்.
""இருந்தாலும் என் முடிவைச் சொல்றேன். அகிலாவுக்கு கர்ப்பபைதான் வீக். மற்றபடி குழந்தை ஏற்பட ஒரு தடையும் இல்லே. அதனாலே, அவளுக்கும் அருணுக்கும் உருவாகிற குழந்தையை என் கருப்பையிலே சுமந்து, பெற்றுக் கொடுக்க முடிவு செய்துட்டேன். ஒரு வாடகைத்தாயாக - ஐவிஎஃப் மூலம் வெளியில் உருவாகும் கருவைச் சுமக்கும் கெஸ்டேஷனல் சரகோட் ஆக - இருந்து உங்களுக்கு உங்கள் மரபணுவோட ஒரு பேரக் குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். இது பற்றி, வரும் வழியில் டாக்டர் மாதவிகிட்டே பேசிட்டுதான் வர்றேன்'' என்றாள் காயத்ரி.
பஞ்சாபகேசனும், சாரதாவும் வாயடைத்து நின்றார்கள். அகிலா, காயத்ரியின் கைகளில் முகம் புதைத்து விம்மினாள்.
தன் வாழ்வுக்கு ஒரு வடிவம் கொடுத்த இவர்கள் வாழ்வுக்கு ஓர் அர்த்தம் கொடுக்க என்னால ஆன ஒரு உதவி - இல்லை, நன்றிக்கடன் - நினைத்தபடியே அகிலாவை அணைத்துக் கொண்டாள் காயத்ரி.
சிலர் வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளதாக ஆவதற்கு ஆதாரம் அன்பும், பாசமும், மனித நேயமும்தான் என்று தோன்றுகிறது. சிவப்பு செம்பருத்தி இன்னும் தலையசைத்துக் காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com