'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 34

'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 34

மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்களில் பிரதமர் சந்திரசேகரின் நண்பர்கள் மூவர் உண்டு. முக்கியமான அரசியல் பிரச்னைகளில் இவர் அவர்களையும், அவர்கள் இவரையும் கலந்தாலோசிப்பது வழக்கம்.

மாற்றுக்கட்சி அரசியல் தலைவர்களில் பிரதமர் சந்திரசேகரின் நண்பர்கள் மூவர் உண்டு. முக்கியமான அரசியல் பிரச்னைகளில் இவர் அவர்களையும், அவர்கள் இவரையும் கலந்தாலோசிப்பது வழக்கம். அந்த மூன்று பேர் - அப்போது காங்கிரஸில் இருந்த சரத்பவார், பாஜகவின் முக்கிய தலைவரும், பின்னாளில் குடியரசு துணைத்தலைவராக இருந்தவருமான பைரோன்சிங் ஷெகாவத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்.

பிரதமர் சந்திரசேகர் மிகவும் மதித்த, இக்கட்டான தருணங்களில் கலந்தாலோசிக்கும் இன்னொரு மூத்த தலைவரும் உண்டு. அவருடன் அரசியல்ரீதியாக பிரதமர் சந்திரசேகருக்கு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், அதையும்மீறி அவர் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது, பாஜகவின் மூத்த தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய் மீதுதான்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனக்குக் கொடுத்துவரும் நெருக்கடி குறித்தும், தான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதுகுறித்தும் பிரதமர் சந்திரசேகர் விரிவாக விவாதித்து, கடைசியில் பதவி விலகுவது என்று முடிவெடுத்தது, அவரால் "குருதேவ்' என்று அழைக்கப்படும் வாஜ்பாயின் ஆலோசனைக்குப் பிறகுதான்.

1991 மார்ச் மாதம் 6-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ராஜீவ் காந்தியின் வீட்டை ஹரியாணா காவல்துறையினர் உளவு பார்த்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமருக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களது குற்றச்சாட்டுகளுக்கும், கேள்விகளுக்கும் பிரதமர் என்கிற முறையில் அவையில் தனது விளக்கத்தைப் பதிவு செய்தார் சந்திரசேகர்ஜி.

நாடாளுமன்றத்திலிருந்து கிளம்பியபிரதமர், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார் என்கிற தகவல், எனது அலுவலகத்தில் இருந்தபோது கிடைத்தது. சந்திரசேகர்ஜி பதவி விலகப் போகிறாரா, இல்லை குடியரசுத் தலைவரைக் கலந்தாலோசிக்கவோ, நிலைமையை எடுத்துச் சொல்லவோ போகிறாரா என்று தெரியாத குழப்பத்தில் நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே இருந்தது.

மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு என்னதான் நடக்கிறது என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்: ""பிரதமர் சந்திரசேகர் பூச்சாண்டி காட்டுகிறார். எங்களது தயவில் பிரதமராகி இருக்கும் சந்திரசேகருக்குப் பதவியை ராஜினாமா செய்ய பைத்தியமா பிடித்திருக்கிறது? அவரால் இனிமேல் பிரதமராக முடியுமா? தானாகவே பணிந்துவிடுவார்'' அவர் மட்டுமல்ல, அனைவருமே பிரதமர் சந்திரசேகர் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்க வில்லை. அப்படியே பதவி விலகினாலும் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலுக்கு வழிகோலுவார் என்பது யாருமே எதிர்பாராத திருப்பம்.

குடியரசுத் தலைவர் ஆர். வெங்கடராமனைச் சந்தித்த பிரதமர் சந்திரசேகர் ராஜினாமா கடிதத்துடன் அவையைக் கலைக்கவும் பரிந்துரைத்தது, காங்கிரஸூக்குத்தான் பேரிடியாக அமைந்தது. சந்திரசேகர் பதவி விலகினால் அவரது கட்சியிலிருந்தும், ஜனதா தளத்தில் இருந்தும் பலர் காங்கிரஸூக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்றும், ராஜீவ் காந்தி தலைமையில் ஆட்சி அமையும் என்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் எதிர்பார்த்தனர். அதற்கு ராஜீவ் காந்தி தயாராக இருந்தாரா என்பது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன.

பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதைத் தொடர்ந்து, மார்ச் 13-ஆம் தேதி மக்களவை கலைக்கப்பட்டது. ஜூன் 5-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மக்களவை அமையும் என்கிற அறிவிப்பும் வெளியானது. பிரதமர் சந்திரசேகரின் அரசு "காபந்து' அரசாகத் தொடர்ந்தது.

சந்திரசேகர்ஜி பதவி விலகியதில் எனக்குக் கூட உடன்பாடு இருக்கவில்லை. சோ சார் சொன்னதுபோல, காங்கிரஸூக்கு அவர் ஆதரவளித்து ராஜீவ் காந்தி ஆட்சி அமைய உதவாவிட்டாலும், சற்று சமரசம் செய்து கொண்டு பதவியில் தொடர்ந்திருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்தாக இருந்தது.

சந்திரசேகரின் பதவி விலகலையும், நாடாளுமன்ற கலைப்பையும் தொடர்ந்து மூன்று நான்கு முறை நான் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தலைமையகத்திலும், வெஸ்டர்ன் கோர்ட்டிலும் சந்தித்தேன். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவர் மேற்கு வங்கத்திலிருந்து போட்டியிட வாய்ப்புக் கேட்டு வருபவர்களை சந்திப்பது, ராஜீவ் காந்தியுடன் ஆலோசனையில் ஈடுபடுவது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து விவாதிப்பது என்று சுழன்று கொண்டிருந்தார். அதற்கிடையில் ஒருநாள் கட்சி அலுவலகத்தில் என்னைப் பார்த்தபோது சிரித்துக் கொண்டே கேலியாகக் கேட்டார்:

""நீயும் சோவும் எவ்வளவோ முயன்றும் எதுவும் பலிக்கவில்லை. பிரதமர் பதவியைவிட முன்னாள் பிரதமர் பட்டம் போதும் என்று சந்திர சேகர்ஜி ஒருவரால்தான் முடிவெடுக்க முடியும்.

இப்போது என்ன சொல்கிறார்?''

""நான் அவரை இன்னும் சந்திக்கவில்லை. நான் எதையாது சொல்லி அவருக்குக் கோபமூட்ட விரும்பவில்லை. நான் சென்னைக்குக் கிளம்புவதாக இருக்கிறேன்''

""போவதற்கு முன்பு அவரை சந்தித்துவிட்டுப் போ. நான் என்ன சொன்னேன் என்று கேட்டால், நான் சொன்னதை அப்படியே அவரிடம் சொல். பிறகு பேசுகிறேன்'' என்றபடி பிரணாப்தா நகர்ந்துவிட்டார்.

கன்னாட் பிளேஸ் ஏ.வி.ஜி. பவனில் இருந்த எனது "நியூஸ்கிரைப்' அலுவலகத்துக்கு வந்ததும், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் ஃபேக்ஸ் செய்தேன். அதில் நான் பிரதமரின் பேட்டி வேண்டும் என்று கோரியிருந்தேன். சந்திரசேகர்ஜியிடம் இப்படி கடிதம் எழுதி நான் பேட்டி கோரியது அதுதான்
முதலும் கடைசியுமான நிகழ்வு.

எனது ஃபேக்ஸ் போன அடுத்த ஒரு மணி நேரத்தில் யாதவின் தொலைபேசி
வந்தது.

""இதென்ன புதுப் பழக்கம், ஃபேக்ஸ் அனுப்பி பேட்டி கேட்பது? சந்திரசேகர்ஜி நேரில் வரச் சொன்னார். நீங்கள் அவரை சந்திக்க வருவதற்கு நேரம், காலம் எல்லாம் தீர்மானிக்கத் தேவையில்லை என்று சொல்லிவிட்டார்.''

""எப்போது வரட்டும்? எங்கே வரட்டும்?''

""எப்போது வேண்டுமானாலும் வாருங்கள். போன்சி பண்ணையில் சந்திப்பதாக இருந்தால் அங்கே போங்கள். பிரதமர் வரும்போது சந்தித்துப் பேசுங்கள்.''

""பிரதமர் எப்படி இருக்கிறார்? பதவி விலகியதால் மனவருத்தம் இருக்கிறதா?''
யாதவ் சிரித்தார்.

""சந்திரசேகர்ஜியை நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான். அவர் எப்போதும்போலத்தான் இப்போதும் இருக்கிறார். நீங்களே சந்தித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.''

எனக்கு வியப்பாக இருந்தது. பதவி விலகியபின் ஆத்திரமும், வருத்தமும் அவருக்கு இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.

அடுத்த நாள் நான் போன்சி பண்ணைக்குப் போனபோது மாலை சுமார் ஐந்து மணி இருக்கும். அங்கே இருந்த புல்வெளியில் பிரதமர் சந்திரசேகர்ஜி, தனது ஆத்ம நண்பரும், உத்தரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினருமான பேநி ப்ரதவ் மாதவ்வுடன் நாற்காலியில் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் சிரித்தபடியே எழுந்து உள்ளே வந்தார். முதுகில் ஒரு தட்டுத் தட்டி, ""என்ன இது, அப்பாயிண்ட்மென்ட் எல்லாம் கேட்கிறாய்?'' என்று செல்லமாகக் கடிந்து கொண்டார்.

அந்த வயதில் ஒரு பிரதமருடன் சர்வசாதாரணமாக உரையாட முடிந்த அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது. பிரணாப்தா எதிர்பார்த்த கேள்வியைப் பிரதமர் சந்திரசேகர் சிரித்துக் கொண்டே கேட்டார்.
""என்ன சொல்கிறார் பிரணாப் முகர்ஜி. நான் பதவி விலகியது குறித்து அவர் ஏதாவது "கமெண்ட்' அடித்திருப்பாரே...''

""பிரதமர் பதவியைவிட முன்னாள் பிரதமர் பட்டம் போதும் என்று சந்திரசேகர்ஜி ஒருவரால்தான் முடிவெடுக்க முடியும் என்று சொன்னார்.''

கலகலவென்று சிரித்துவிட்டார் சந்திரசேகர்ஜி. நாங்கள் உள்ளே வரவேற்பறைக்குச் சென்று அமர்ந்தோம். தான் பதவி விலகியது குறித்து பிரதமர் சந்திரசேகர் பேசத் தொடங்கினார். எனக்கெல்லாம் அவர் அப்படியொரு விளக்கம் தர வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும், நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார் என்றால், அவருக்கு என் மீதிருந்த அன்பு மட்டும்தான் அதற்கு காரணமாக இருக்க முடியும்.

""தேக்கியே... (இதோ பார்), என் மீது அளவு கடந்த மரியாதை உடையவன் நீ. அதனால் உனக்கு ஒன்று சொல்கிறேன். பிரதமர் பதவி என்பது சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. என்னைப் பொருத்தவரை பிரதமராக இருப்பதே வெற்றி அல்ல. எதுவும் செய்யாமல் அல்லது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் இருப்பதால் என்ன பிரயோஜனம்? அதிகாரத்துக்காக மட்டுமானதல்ல பிரதமர் பதவி. அதற்கென்று ஒரு கெளரவம் இருக்கிறது. சில
கடமைகள் உண்டு.

முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமரசம் செய்து கொண்டு, கொள்கைகளைத் தியாகம் செய்துவிட்டு ஒருவர் அரசாங்கத்தை நடத்த முடியாது; வேண்டுமானால் வெறுமனே பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். ஓர் அரசியல்வாதி அரசாங்கத்தை நடத்தும் முறைக்காகப் பாராட்டப்பட வேண்டுமே தவிர, பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்காக அல்ல...''

""நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாவிட்டால் நான் ஒன்று கேட்கிறேன். அப்படியானால் ஏன் நீங்கள் காங்கிரஸ் தயவுடன் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டீர்கள்? மறுத்திருக்கலாமே...''

""நான் பிரதமராக சம்மதித்து சந்தர்ப்பவாதம் அல்ல. அப்போது எண்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. "மண்டல்', "அயோத்தி' பிரச்னைகளால் மொத்த தேசமும் கொந்தளிப்பான நிலையில் இருந்தது. பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் அப்போது இருந்த கேள்வி. தானே உருவாக்கிவிட்ட கொந்தளிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னர் இருந்த வி.பி. சிங் அரசு திணறிக்கொண்டிருந்தது. வேறு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையில் இல்லை. அப்போதிருந்த ஒரே மாற்று, தேர்தல்தான்.''

""இப்போது நடக்க இருக்கும் தேர்தல் அப்போது நடந்திருக்கும். அவ்வளவுதானே...''

""நீ நினைப்பதுபோல அது அவ்வளவு எளிதானதல்ல. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்த கொந்தளிப்பு அடங்க வேண்டும் என நான் உறுதியாக நம்பினேன். அதனால்தான் காங்கிரஸ் வெளியில் இருந்து தரும் ஆதரவுடன் ஆட்சி அமைத்தேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.''

""பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததில் துளி கூட வருத்தமே இல்லையா, சந்திரசேகர்ஜி?''

""நிச்சயமாக இல்லை. ஒருவர் எத்தனை நாள் பதவியில் இருந்தார் என்பதைவிட, அந்தப் பதவியில் எப்படி செயல்பட்டார் என்பதுதான் முக்கியம். நான் பிரதமராக இருந்த கடந்த நான்கு மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றி அமைத்துவிட்டதாகக் கூறிக்கொள்ள முடியாது. ஆனால், அந்த நான்கு மாதங்களில் நாட்டில் நிலவிய பிரச்னைகளின் உஷ்ணத்தைத் தணிக்க முடிந்திருக்கிறது. அந்த அளவில் திருப்தி.''

அதைக் கேட்டபோது உள்மனதில் ஒரு கர்ம வீரராக சந்திரசேகர்ஜி உயர்ந்து நின்றார். அவரை ஏன் "நேதாஜி' (தலைவர்) என்று அழைக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. சந்திரசேகர்ஜி தொடர்ந்தார்:

""நான் இந்த விளக்கங்களை எல்லாம் உன்னிடம் ஏன் தருகிறேன் தெரியுமா? நான் இப்போது தவறாகச் சித்திரிக்கப்படுவேன். புரிந்துகொள்ளப்படுவேன். ஆனால், வருங்காலத்தில் இந்த உண்மைகள் உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதை நீ செய்வாய் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் உன்னை சந்திக்க வரச் சொன்னேன்...''

நான் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

பிரதமர் சந்திரசேகர்ஜியை சந்திக்க வேறு பலர் வந்திருந்ததால் அவர் எழுந்து போய்விட்டார். செய்வதறியாத திகைப்பில் சமைந்திருந்தேன் நான்.

முப்பது ஆண்டுகள் கழித்து, அன்று நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வேன் என்று அப்போது எனக்குத் தெரியாது. ஆனால், சந்திரசேகர்ஜிக்குத் தெரிந்திருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com