'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 35

சந்திரசேகர்ஜி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அவர் மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கும் பரிந்துரைப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 35

சந்திரசேகர்ஜி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார் என்பதை எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி, அவர் மக்களவையைக் கலைத்து தேர்தலுக்கும் பரிந்துரைப்பார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் பதவி விலகியதுடன் நின்றிருக்க வேண்டுமே தவிர, அவையைக் கலைத்து தேர்தலுக்கு வழிகோலியிருக்கக் கூடாது என்று சோ சாரைப் போலவே நானும் கருதினேன்.

சந்திரசேகர்ஜி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்கும், அவையைக் கலைக்கப் பரிந்துரைத்ததற்கும் அடல் பிகாரி வாஜ்பாயின் ஆலோசனை மட்டுமே காரணமில்லை என்று தில்லி அரசியல் வட்டாரத்திலும், ஊடக வட்டாரத்திலும் பலரும் கருதினார்கள். அவரது முடிவுக்கு சந்திராசுவாமியும், குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனும் கூட காரணம் என்று சொல்பவர்கள் பலர் உண்டு.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனைச் சந்தித்தபோது இது குறித்து அவரிடம் கேட்டேன். ""ராஜீவ் காந்தி உள்பட எந்தப் பிரதமர்களுக்கும் அவர்கள் எப்படி, என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எந்தவித ஆலோசனையும் நான் கூறியதே இல்லை' என்று அவர் தெரிவித்தார். "எனது குடியரசுத் தலைவர் பதவிக்காலம்' (மை பிரசிடென்ஷியல் இயர்ஸ்) என்கிற அவரது புத்தகத்திலும் அப்படித்தான் அவர் எழுதி இருக்கிறார்.

மக்களவை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நான் சென்னைக்குத் திரும்ப முடிவெடுத்தேன். கிளம்புவதற்கு முன்பு முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் சந்திக்க முயன்றேன். பாஜக தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஜனதாதளம் பிளவுபட்டு பலவீனமடைந்துவிட்ட நிலையில், பல மாநிலங்களில் பெரும்பாலும் பாஜகவுக்கும் காங்கிரஸூக்குமான நேரடிப் போட்டிதான் காணப்படும் என்பதுதான் அவர்களது உற்சாகத்துக்குக் காரணம். பாஜக எதிர்ப்பு வாக்குகள் காங்கிரஸூக்கு விழுவதை ஜனதாதளம் பிரிக்கும் என்பதும் அவர்களது எதிர்பார்ப்பு.

ஆர்.கே. தவானைச் சந்திப்பதற்காக கோல்ஃப் லிங்க்ஸ் சென்றிருந்தேன். வழக்கம்போல அவரது வீட்டு வரவேற்பறையிலும், வெளியில் இருந்த புல்வெளியிலும், கேட்டுக்கு வெளியிலும் காங்கிரஸ் தொண்டர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேர்தல் வேறு அறிவிக்கப்பட்டு விட்டதால், போட்டியிட வாய்ப்புக்கு சிபாரிசு கோரி வந்திருந்தவர்கள் பலர். இதற்கிடையில் அவரை சந்திக்க முடியுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது.

வீட்டிக்குள்ளிருந்து அவர் வெளியில் வரும்போது கண்ணில் படும் இடத்தில் நான் நின்று கொண்டிருந்தேன். அங்கே குழுமியிருந்தவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபிலிருந்தும், உத்தர பிரதேசத்திலிருந்தும் வந்தவர்கள். தவான்ஜியின் உதவியாளர்களைத் தவிர அங்கிருந்த யாரையும் எனக்குத் தெரியாது என்பதால் நான் சற்று பொறுமை இழந்துதான் காணப்பட்டேன்.

திடீரென்று சலசலப்பு, வெளியே எட்டிப் பார்த்தேன். வாழப்பாடி ராமமூர்த்தி வந்து கொண்டிருந்தார். பேச்சுத் துணைக்கு ஆள் கிடைத்ததுவிட்டார் என்கிற மகிழ்ச்சி. நான் அவரைச் சந்திக்க வெளியே செல்ல எத்தனித்தபோது தவான்ஜி வீட்டிக்குள் இருந்து வெளியே வந்தார். கூட்டத்தில் வித்தியாசமாகத் தெரிந்த நானும், வாழப்பாடி ராமமூர்த்தியும் தவான்ஜியின் கவனத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?

நாங்கள் இருவரும் தனி அறைக்கு அழைக்கப்பட்டோம். தவான்ஜி முதலில் பேச்சுக் கொடுத்தது என்னிடம்தான்.

""சந்திரசேகர்ஜி என்ன இப்படி செய்துவிட்டார்? கொஞ்சம் நிதானித்திருந்தால், பிரச்னைக்கு ஏதாவது தீர்வு கண்டிருக்க முடியும். இப்படியெல்லாம் கோபமும் அவசரமும் இருப்பதால் யாருக்கு என்ன லாபம்?''

""அவர் தாமதித்திருந்தால், காங்கிரஸ் அவரது ஆட்சியைக் கவிழ்த்திருக்கும் என்கிற பயம் அவருக்கு வந்துவிட்டது. ஹரியாணா போலீஸ்காரர் பிரச்னையை எல்லாம் இந்த அளவுக்குப் பெரிதாக்கி இருக்க வேண்டாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது...''

""ராஜீவ்ஜிக்கும் அவருக்கும் இடையில் ஏன் புரிந்துணர்வு இல்லாமல் போனது என்று எனக்குப் புரியவில்லை. எனக்கோ, பிரணாப்தாவுக்கோ இந்திராஜி காலத்தில் இருந்ததுபோல முக்கியத்துவம் இல்லாமல் போனதுதான், பல பிரச்னைகளில் நாங்கள் தலையிட முடியாமல் செய்துவிட்டது. தாங்கள் செய்தது தவறு என்று ராஜீவ்ஜியும், சந்திரசேகர்ஜியும் ஒருநாள் உணர்வார்கள்.''
அவர்கள் இருவரும் உணர்ந்தார்களோ இல்லையோ, அந்த முடிவு தவறு என்பதைக் காலம் நிச்சயமாக உணர்த்தியிருக்கிறது.

எனக்கும் தவான்ஜிக்கும் இடையில் இந்த அளவுக்கு நெருக்கம் இருக்கும் என்பது அதுவரை வாழப்பாடி ராமமூர்த்திக்குத் தெரியாததால், நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை அவர் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார். தமிழக அரசியல் குறித்தும், நடக்க இருக்கும் தேர்தல் குறித்தும் பேச்சு திரும்பியது.

ஜெயலலிதாவுடனும், நடராஜனுடனும் தவான்ஜி தொடர்பில் இருக்கிறார் என்பது அவரது பேச்சிலிருந்து எனக்குத் தெரிந்தது. தமிழகத்தில் அதிமுகவுக்கும் காங்கிரஸூக்கும் சுமுகமான கூட்டணி உறவு இருந்து வந்தது.
""கூட்டணி குறித்து ஜெயலலிதாஜி என்ன சொல்கிறார்?'' என்று வாழப்பாடியிடம் கேட்டார் தவான்ஜி.

""கடந்த 1989 நவம்பர் போலவே இந்த முறையும் தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது. சட்டப்பேரவைக்கான இடங்களில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு...''

""நீங்கள் உடனடியாக அதிகாரபூர்வமில்லாத பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிடுங்கள். நமக்கு அதிக மக்களவைத் தொகுதிகள் வழங்கப்பட்டால் போதும். அசெம்பிளி குறித்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை.''

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். தமிழக சட்டப் பேரவை தோர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்கிற விருப்பம் காங்கிரஸூக்கு இல்லை என்பது தவான்ஜியின் பேச்சிலிருந்து தெரிந்தது. தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் அக்கறை காங்கிரஸ் தலைமைக்கு இல்லாமல் போனது மிகப் பெரிய துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாழப்பாடியாருக்குத் தனிப்பட்ட முறையில் தவான்ஜியிடம் பகிர்ந்து கொள்ள ஏதாவது தகவல் இருக்கலாம் என்பதால் நான் கிளம்பத் தயாரானேன்.

""நான் சென்னைக்குக் கிளம்புகிறேன். இனிமேல் தேர்தல் முடிந்த பிறகுதான் வருவேன். உங்களிடம் அதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்.''

""சென்னைக்குப் போவது இருக்கட்டும். இப்போது நீங்கள் கொஞ்சநேரம் வெளியில் அமர்ந்திருங்கள். நாம் ஓர் இடத்துக்குப் போக இருக்கிறோம். நீங்களும் கூட வருகிறீர்கள். முக்கியமான ஒருவரை நாம் பார்க்கப் போகிறோம்.''

தவான்ஜி சொல்லிவிட்ட பிறகு அதை எப்படி மறுப்பது? வெளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி அங்கிருந்த "நேஷனல் ஹெரால்ட்' தினசரியைப் புரட்டிப் படித்துக் கொண்டிருந்தேன். இங்கே திமுகவினர் வீடுகளில் "முரசொலி' இருப்பதுபோல, தில்லியில் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் அப்போதெல்லாம் ஜவாஹர்லால் நேரு தொடங்கிய "நேஷனல் ஹெரால்ட்' தினசரியின் இந்தி பதிப்போ, ஆங்கிலப் பதிப்போ நிச்சயம் இருக்கும்.

ஒரு பிரமுகரை சந்திக்க இருக்கிறோம் என்று தவான்ஜி சொன்னாரே, அவர் யாராக இருக்கும் என்று புரியாமல் நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகக் காத்திருந்தேன். இதற்கிடையில் தவான்ஜியிடம் விடைபெற்றுக் கொண்ட வாழப்பாடியார் சற்று நேரம் என்னிடமும் உரையாடிவிட்டுக் கிளம்பினார். சென்னையில் சந்திப்போம் என்று இருவரும் சொல்லிக் கொண்டோம்.

ஒருவழியாக தவான்ஜி கிளம்பினார். பின் சீட்டில் அவரும், முன் சீட்டில் நானும் அமர்ந்து கொண்டோம். அந்த வாகனம் சென்று நுழைந்த இடம் ஜன்பத் சாலை இலக்கம் 10!

அப்போது முதல் இப்போதுவரை ராஜீவ் காந்தி குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிட்டது "10 ஜன்பத்'. உள்ளே போனதும், முதலில் தவான்ஜி மட்டும் காரிலிருந்து இறங்கினார். நேராக வீட்டுக்குள் நுழைந்தார். பத்து நிமிஷம் கழித்து உள்ளேயிருந்து வந்த ஒருவர் என்னை வரும்படி அழைத்தார், சென்றேன்.

அங்கிருந்த அறை ஒன்றின் சோபாவில் ராஜீவ் காந்தி அமர்ந்திருந்தார். சிரித்த முகத்துடன் என்னை வரவேற்ற ராஜீவ் காந்தி அமரச் சொன்னார். என்னுடன் வந்த தவான்ஜி நின்று கொண்டிருந்ததால், நான் "வணக்கம்' சொல்லிவிட்டு தொடர்ந்து நின்று கொண்டிருந்தேன்.

எனது தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட தவான்ஜி என்னை அமரச் சொல்லிவிட்டு அவரும் ஒரு சோபாவில் அமர்ந்தார். சந்திரசேகர்ஜியின் ராஜினாமாவின் பின்னணியை ராஜீவ் காந்தியிடம் தெரிவிக்கச் சொன்னார் தவான்ஜி. நான் எனக்குத் தெரிந்ததை எல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னேன். நடுநடுவே சில கேள்விகளை எழுப்பினார்கள். பதில் சொன்னேன்.

""சந்திரசேகரிடம் உங்களுக்கு நெருக்கம் அதிகம் என்று சொல்கிறார்களே?'' என்று கேட்டார் ராஜீவ் காந்தி. ""அப்படியெல்லாம் கிடையாது. நன்றாகத் தெரியும். அவர்மீது எனக்கு மரியாதை உண்டு, அவ்வளவுதான்.''

""அவரது ராஜினாமா முடிவுக்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது
என்பது உண்மையா?''

""எனக்கு அப்படித் தோன்றவில்லை. வாஜ்பாயி போன்ற சில தலைவர்களிடம் அவர் ஆலோசனை கேட்டிருக்கலாம். ஆனால், அவர்களது அழுத்தத்துக்கு ஆளாகி முடிவெடுக்கக் கூடியவரல்ல சந்திரசேகர்ஜி என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.''

""அப்படியானால் அவரது பதவி விலகலுக்கும், மக்களவையைக் கலைத்ததற்கும் யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?''

""உண்மையைச் சொல்வதாக இருந்தால், நீங்கள்தான் காரணம். ஹரியாணா போலீஸ்காரர்கள் விவகாரத்தை நீங்கள் பெரிதுபடுத்தியதுதான் காரணம். அவரது ஆட்சியைக் கவிழ்க்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று அவருக்கு சந்தேகம் எழுந்தது. உங்களை முந்திக் கொண்டு ராஜினாமா செய்துவிடுவது என்று அவர் தீர்மானித்தார். என்னிடம் அப்படித்தான் சொன்னார்.''

ராஜீவ் காந்தி எதுவும் பேசவில்லை. டீ வந்தது. பருகினேன். நான் ராஜீவ் காந்தியைப் பார்த்து ஒரு கேள்வியை எழுப்பினேன். அது முட்டாள்தனமான கேள்வி என்று இப்போது தெரிகிறது; அப்போது தெரியவில்லை.

""காங்கிரஸூடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவாரா என்று சந்திரசேகர்ஜியைக் கேட்கட்டுமா?''

ராஜீவ் காந்தியும், தவான்ஜியும் சிரித்துவிட்டனர். எனது கேள்வி அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமானதாகத் தோன்றி இருந்தால் அதில் தவறில்லை.

""தனது ஆட்சி கவிழக் காரணமானவர்களுடன் கூட்டணி அமைக்க அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அது நடக்கிற காரியமல்ல'' என்றார் ராஜீவ் காந்தி.

நானும் தவான்ஜியும் விடைபெற்று வெளியில் வந்தோம். ராஜீவ் காந்தியுடனான எனது நேரடி கடைசி சந்திப்பு அதுவாக இருக்கப்போகிறது என்று அப்போது எனக்கு எப்படித் தெரியும்?

தவான்ஜியின் காருக்கு அருகில் வந்ததும் நான் விடை பெற்றுக் கொள்வதாகச் சொன்னேன்.

""எங்கே போகப் போகிறாய்? அங்கே உன்னை விட்டுவிட்டுப் போகிறேன்.''

""வேண்டாம். பக்கத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைமையகத்துக்குத்தான் போகிறேன். அங்கே பிரணாப்தாவோ, மூப்பனார்ஜியோ இருந்தால் பார்த்துவிட்டுக் கிளம்புவேன்.''

""எப்படி இருந்தாலும் கேட்டுக்கு வெளியே போய் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். காரிலேயே ஏறிக்கொள்.''

ஏறிக் கொண்டேன்.

""நான் வேண்டுமென்றேதான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தேன். துணிந்து ராஜீவ்ஜியிடம் நீ சொன்னதுபோல நாங்கள் யாரும் சொல்ல முடியாது. ராஜீவ் காந்தி மிகவும் எளிமையான மனிதர். யாராவது அவரிடம் ஏதாவது சொல்லி நம்ப வைத்து விடுகிறார்கள். அப்படி எடுக்கப்பட்டதுதான் சந்திரசேகர்ஜி குறித்தஅவரது அபிப்ரராயம் என்பது எனது கருத்து.''

24, அக்பர் சாலையிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்குள் நுழைந்தது ஆர்.கே. தவானின் வாகனம். நான் தவான்ஜியின் காரிலிருந்து இறங்குவதைப் பார்த்த பிரணாப் முகர்ஜியின் உதவியாளர் ஓடி வந்தார்.

""பிரணாப்தா உங்களை நேற்றிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார். சற்று முன்புதான் இங்கிருந்து கிளம்பினார். ஜவஹர் பவனில் உள்ள அவரது அலுவலகத்தில் இருப்பார். உடனடியாகப் போய் சந்தியுங்கள்.''

தவான்ஜி கட்சி அலுவலகத்துக்குச் சென்று விட்டார். ஓட்டுநரிடம் நான் விடைபெறும் தகவலைக் கூறிவிட்டு, ஜஹவர் பவனுக்கு ஆட்டோ பிடித்தேன்.

பிரணாப்தா எதற்காக அவ்வளவு அவசரமாக என்னைத் தேட வேண்டும்? அப்படியென்ன முக்கியமான பிரச்னை? எதுவும் புரியாத குழப்பத்துடன் ஜஹவர் பவனுக்கு விரைந்தேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com