'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 36

பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்குக் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகத் தயாரானது.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 36

பிரதமர் சந்திரசேகர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்குக் காங்கிரஸ் கட்சி சுறுசுறுப்பாகத் தயாரானது. தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராகவும், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராகவும் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டிருந்தார். அதற்காக அவருக்கு ஜவஹர் பவனில் அலுவலகம் தரப்பட்டிருந்தது.
நான் ஜவஹர் பவனுக்குச் சென்றபோது, பிரணாப்தாவின் அலுவலகம் தலைவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உள்ளே மார்க்கரெட் ஆல்வாவும், நட்வர் சிங்கும் அவருடன் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அறைக்கு வெளியேயும் பல பிரமுகர்கள் வரவேற்பறையிலும், உதவியாளர் அலுவலகத்திலும் அவரை சந்திப்பதற்காகக் காத்திருந்தனர்.
என்னைப் பார்த்ததும் அவரது உதவியாளர் உள்ளே அழைத்தார். தேர்தல் அறிவிப்பு தொடர்பாகவும், தேர்தல் அறிக்கை தொடர்பாகவும் பிரணாப் முகர்ஜி உதவியாளருக்கு வழங்கிய வாய்மொழி அறிவிப்புகள் தட்டச்சு செய்யப்பட்டிருந்தன. அதை எழுத்துப் பிழைதிருத்தும் பணியை என்னிடம் ஒப்படைத்தார் அவர்.
""இதையெல்லாம் எழுத்துப் பிழைகளைத் திருத்தி, தேவைப்படும் இடத்தில் மாற்றி எழுதி சரி பார்த்து அவரிடம் ஒப்படைக்கும் பணியை உங்களிடம் தரச் சொல்லி இருக்கிறார் பிரணாப்தா'' என்று அவர் தெரிவித்தபோது, நான் அவசரமாக அழைக்கப்பட்டதன் காரணம் புரிந்தது. அதைவிட மகிழ்ச்சி அளிக்கும் வேலை, எனக்கு வேறென்ன இருந்துவிட முடியும்?
அங்கேயே திருத்த எனக்குத் தரப்பட்ட மேஜை நாற்காலியில் அமர்ந்து தட்டச்சு செய்யப்பட்டிருந்த பக்கங்களை எல்லாம் சரிபார்த்துக்
கொண்டிருந்தேன். அடுத்த இரண்டு நாள்களும் அதே வேலைதான். இடையில் ஓரிருமுறை பிரணாப்தாவை அலுவலகத்தில் நுழையும்போதும் வெளியேறும்போதும் பார்க்க முடிந்ததே தவிர, பேச முடியவில்லை. என்னைப் பார்த்து அவர் உதிர்க்கும் புன்னகை, அவர் என்மீது வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையை வெளிப்படுத்தும். நான் பூரித்தேன்.
அரசியல் வெளியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. இடைக்கால பிரதமராகத் தொடர்ந்த நிலையிலும், சந்திரசேகர்ஜி துணிந்து எடுத்த முடிவுகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. அவை குறித்து பிரணாப் முகர்ஜி என்ன கருதினார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த முடிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதை பிரணாப் முகர்ஜி மட்டுமல்ல, அடுத்த நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற டாக்டர் மன்மோகன் சிங்கே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் என்பதை இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும்.

சந்திரசேகர்ஜியின் பதவி விலகல் குறித்தும், ராஜீவ் காந்தியின் தலைமை குறித்தும், இந்தியாவின் வருங்காலம் குறித்தும் நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். "ராஜீவ் காந்தியும் சந்திரசேகரும் இணைவது காலத்தின் கட்டாயம்' என்கிற கருத்தில் "நீட் ஆஃப் தி ஹவர் இஸ் மெர்ஜர்' என்று நான் எழுதிய கட்டுரை, தில்லி வட்டாரங்களில் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
"நியூஸ்க்ரைப்' ஒரு செய்தி நிறுவனம் என்பதால், அந்தக் கட்டுரை இந்தியாவிலுள்ள 24 முக்கிய நாளிதழ்களில் நடுப்பக்கத்தில் கட்டுரையாக வெளி வந்தது. பல மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. அது பேசுபொருளானதற்கு அதுதான் காரணம்.
மூன்றாவது நாள் பிரணாப்தா என்னைத் தனது அறைக்கு அழைத்தார். அவரது மேஜையில் எனது கட்டுரை வெளிவந்திருந்த இரண்டு பத்திரிகைகள்
இருந்ததைப் பார்த்ததும் எதற்காக என்னை அழைத்திருக்கிறார் என்பது புரிந்தது.
""போகாத ஊருக்கு வழி சொல்கிறாய் நீ. எமர்ஜென்சி காலத்திலிருந்து கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருபவர் சந்திரசேகர்ஜி. அவர் காங்கிரஸில் இணைய வேண்டும், காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று எழுதி இருப்பதெல்லாம் சுத்த அபத்தம். அப்படி எழுதும்படி உன்னிடம் யாராவது சொன்னார்களா?''
""இன்னொருவர் சொல்லி எழுதுவது என்பது எனது மரபணுவில் இல்லாத ஒன்று. எனது மனதுக்குப்பட்டதை, நான் எழுதினேன். இதே கருத்தை நான் தங்களிடமும் இதற்கு முன்பு தெரிவித்திருக்கிறேன். சந்திரசேகர்ஜி அடிப்படையில் ஒரு காங்கிரஸ்காரர். கொள்கை அடிப்படையில் காங்கிரஸூடன் ஒத்துப் போகக் கூடியவர். அரசியல் கட்சியை ஒருங்கிணைப்பதில் திறமைசாலி. 1977- இல் பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து, ஜனதா கட்சிக்கு வடிவம் கொடுத்தவர். அவர் காங்கிரஸில் இருந்தால் கட்சி வலிமை பெறும். அவரும் ராஜீவ் காந்தியும் இணைய வேண்டும் என்று நான் இப்போதும் விரும்புகிறேன்.''
பிரணாப் முகர்ஜி புன்னகைத்தார்.

""பத்திரிகையாளர்கள் என்ன வேண்டுமானாலும் விரும்பலாம்; நினைக்கலாம்; எழுதலாம். ஆனால், அரசியலில் அவை எல்லாம் சாத்தியமாகாது. நீ எழுதி இருப்பதை நானே ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏன், ராஜீவ் காந்தியே அதை விரும்பமாட்டார். இந்தக் கட்டுரை தொடர்பாக நீ பிரதமரிடம் பேசினாயா?''
""பேசவில்லை. அவரை சந்திக்கவே இல்லை. கடந்த இரண்டு நாள்களாக நான் இங்கேதான் வந்து கொண்டிருக்கிறேன்.''
""அவரும் கூட இதை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகம்தான். காங்கிரஸில் சங்கமமாகித் தனது தனித்துவத்தை இழக்க பிரதமர் சந்திர சேகர்ஜி தயாராக மாட்டார். அவரெல்லாம் தனித்துவமான தலைவராக மாறிவிட்டவர். அவரே கூட இப்படி எழுதியதற்காக உன்னை கண்டிக்கக்கூடும்.''
நான் எதுவும் பேசவில்லை. மெளனமாக இருந்தேன். ஆனால், எனது கருத்தில் இன்றளவும் எந்தவித மாற்றமும் இல்லை.
""நாளைக்கு நான் சென்னைக்கு கிளம்பலாம் என்றிருக்கிறேன்.''
""தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?''
""என்னால் சரியாகக் கணிக்க முடியவில்லை. திமுக அரசு கலைக்கப்பட்டிருக்கிறது. அது எந்த அளவுக்கு அந்தக் கட்சிக்கு அனுதாபத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. மற்றபடி, அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதுதான் எனது எதிர்பார்ப்பு.''
நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். எதுவும் சொல்லவில்லை. நான் தொடர்ந்தேன்.
""அகில இந்திய அளவில் பாஜக மேலும் அதிக இடங்களில் வெற்றி பெறக்கூடும். ஜனதா தளத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு, காங்கிரஸூக்கு ஓரளவுக்கு சாதகமாக இருந்தாலும் கூட, மிகவும் சிரமப்பட்டுத்தான் தனிப்பெரும்பான்மை அடையக்கூடும் என்கிற எனது கணிப்பை நான் எழுதியிருக்கிறேன்.''
அவர் இதற்கும் எதுவும் பேசாமல் புன்னகைத்தார். இதுபோல எனது வாயைக் கிளறி, நான் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொள்வது அவர் வழக்கம். என்னை மட்டுமல்ல, மற்றவர்களைப் பேசவிட்டு, அவர்கள் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்பதும், அதற்குப் பிறகு தானே யோசித்து ஒரு முடிவுக்கு வருவதும் பிரணாப்தாவிடம் நான் பார்த்து வியந்த குணாதிசயம்.
பிரதமர் சந்திரசேகரை சந்திக்க நினைத்தேன். ஆனால் அவர் தனது தொகுதியான பலியாவுக்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். ஜந்தர் மந்தர் அருகில் உள்ள ஜனதா தள அலுவலகத்துக்கு வந்தேன். அந்தக் கட்டடத்துக்கு ஒரு வரலாறு உண்டு. அதைப் பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன்.
இலக்கம் எண் 7, ஜந்தர் மந்தர் சாலையில் உள்ள அந்த பிரம்மாண்டமான கட்டடம் இப்போது யாருக்கும் சொந்தமில்லாமல், கேள்விக்குறியாகப் பாழடைந்து காணப்படுகிறது. அந்தக் கட்டடம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்குச் சாட்சியாக இருந்திருக்கிறது என்பதை அந்த வழியே செல்வோர் உணர வாய்ப்பில்லை. இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்காது. ஏன், இன்றைய அரசியல்வாதிகளுக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.
பிரிட்டிஷ் இந்தியாவில் லுட்யின் என்கிற கட்டடக்கலை நிபுணரால் புது தில்லி நகரம் நிர்மாணிக்கப்பட்டபோது எழுப்பப்பட்ட கட்டடங்களில் 7, ஜந்தர் மந்தர் சாலை கட்டடமும் ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, அது இந்திய அரசுக்குச் சொந்தமானது. 1959-இல் இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவரான போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஓர் அலுவலகம் தேவைப்பட்டது. அப்போது, அந்தக் கட்டடம் ரூ.6,10,700-க்கு அரசால் கிரயம் செய்து கொடுக்கப்பட்டது. அது முதல் அங்குதான் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.
பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவில் தொடங்கி எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அந்தக் கட்டடத்துக்கு அடிக்கடி வந்து போனவர்கள்தாம். காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டங்கள் அங்குதான் நடக்கும். இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, காமராஜர், நிஜலிங்கப்பா, சாதிக் அலி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கிருந்துதான் செயல்பட்டனர்.
1969-இல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, அது நிஜலிங்கப்பா தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் தலைமையகமானது. 1977-இல் ஸ்தாபன காங்கிரஸ் ஜனதா கட்சியில் இணைந்தபோது, சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சியின் தலைமையகமாக மாறியது 7, ஜந்தர் மந்தர் சாலை கட்டடம்.
ஜனதா கட்சி ஆட்சியின்போதும் அதற்குப் பிறகும் கூட அந்தக் கட்டடம் தில்லியில் பரபரப்பான அரசியல் நிகழ்வுகள் நடக்கும் களமாகத் தொடர்ந்தது. 1980 படுதோல்வியும், 1984-இல் இந்திரா காந்தியின் மரணத்துக்குப் பிறகு ராஜீவ் காந்தி பதவிக்கு வந்ததும் ஜனதா கட்சியை உருக்குலைத்து, சிதைத்துவிட்டன. ஆனாலும் கூட ராம
கிருஷ்ண ஹெக்டே தலைமையிலான ஆட்சி கர்நாடகத்தில் இருந்ததால், அது ஜனதா கட்சித் தலைமையகமாக தொடர்ந்து இயங்கி வந்தது.
ஜனதா கட்சி, ஜனதா தளத்துடன் இணைந்ததும், ஜனதா தளம் பிளவு பட்டதும், அந்தக் கட்டடத்தின் முக்கியத்துவத்தை சிதைத்துவிட்டன. ஐக்கிய ஜனதா தளத்தின் அலுவலகம் சில ஆண்டுகள் முன்பு வரை அங்கே இருந்தது. அந்தக் கட்டடத்தின் பின்புறம்தான் சுவாமி அக்னிவேஷ் வசித்து வந்தார். அவரும் இப்போது மறைந்துவிட்டார். இப்போது அந்தக் கட்டடம் பாழடைந்து சிதிலமடைந்து காட்சியளிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் பிளவின்போதும், ஜனதா கட்சி உருவானபோதும், ஜனதா தளம் 1989-இல் ஆட்சி அமைத்தபோதும், அதற்குப் பிறகும் கூட 7, ஜந்தர் மந்தர் சாலை கட்டடம் இந்திய அரசியல் வரலாற்றில் சில முக்கியமான பங்கு வகித்திருக்கிறது. இப்போது அந்தக் கட்டடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து எந்த விவரமும் இல்லாமல், பாழடைந்து பேய் மாளிகை போலக் காட்சி அளிக்கும் அவலத்தை என்னவென்று சொல்ல?
ஒரு நூற்றாண்டு கால அடையாளமான அந்தக் கட்டடத்தைப் புதுப்பித்து அங்கே ஓர் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்கிற முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வேண்டுகோள் யார் காதிலும் விழவில்லை.
ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள ஜனதா தள கட்சியின் அலுவலகத்துக்குள் நான் போனபோது, அங்கே கட்சியின் அலுவலக மேலாளர் ராமகிருஷ்ணன் இருந்தார். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரானபோது அவரது தனிச் செயலாளராகப் பணியில் சேர்ந்த ராமகிருஷ்ணன், அதற்குப் பிறகு நடந்த எல்லா நிகழ்வுகளுக்கும் நேரடி சாட்சியாக விளங்கியவர். அவர் சொல்லித்தான் அந்தக் கட்டடம் குறித்தும், பல முக்கியமான அரசியல் நிகழ்வுகள் குறித்துமான பல தகவல்கள் எனக்குத் தெரிந்தன என்பதையும் நான் இங்கே குறிப்பிட வேண்டும்.
""உள்ளே ராம்விலாஸ் பாஸ்வானும் சரத் யாதவும் இருக்கிறார்கள்'' என்கிற தகவலைத் தந்தார் அவர். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மாடிப் படிக்கட்டில் சிலர் ஏறிவரும் சலசலப்பு கேட்டது.
நான் திரும்பிப் பார்ப்பதற்குள், ""வைத்தியநாத், நீவு ஹெக்கிதேரே....'' என்கிற விசாரிப்புடன் அவர் அருகில் வந்து விட்டார். அவரை அங்கே சற்றும் எதிர்பார்க்காததால் நான் திகைத்துப் போய் நின்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com