பேல்பூரி

உயரம் என்றால் "எவரெஸ்ட்'உயரவேண்டுமென்றால் "நெவர் ரெஸ்ட்'.
பேல்பூரி


கண்டது

(தர்மபுரியில் உள்ள நண்பர்தன் அலுவலகத்தில் எழுதிவைத்திருந்த வாசகம்)

உயரம் என்றால் "எவரெஸ்ட்'
உயரவேண்டுமென்றால் "நெவர் ரெஸ்ட்'.

மா.பழனி,
தருமபுரி.

(திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு எனும் ஊரில் உள்ள ஒரு பள்ளிச் சுவரில்)

இருளைப் பழிப்பதை விட,
அங்கு ஒரு மெழுகுவர்த்தியை
ஏற்றி வைக்க முயல்வது, மேலானது!

-வ.வெற்றிச்செல்வி,
வேதாரண்யம்.

(சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)

ஹோட்டல் ஹாலிவுட்

த லட்சுமி காந்த்,
சென்னை - 61.

கேட்டது


(தர்மபுரி ஜீவா நகர் காய்கறி கடையில்)

""என்னப்பா எலுமிச்சை பழம் விலை அதிகமா சொல்ற?''
""ஆமா சார்... கம்மி விலை விற்கும் போது இந்தப் பக்கம் வர மாட்டீங்க. கூவிக்கூவி விக்கணும். இப்போ கரோனா காலம். கூவாமலே விற்கிறோம். வாங்கிட்டுப் போங்க சார்...''

சி.சுரேஷ்,
தர்மபுரி.

( சிதம்பரம் ஆசிரியர் நகரில் இரு பெண்கள்)

""ஆமா.. இவ்ளோ வெரைட்டி சமையல்களை செஞ்சி வீடியோ எடுத்து யூ ட்யூப்ல அப்லோடு பண்றீங்களே... இதையெல்லாம் எங்க கத்துக்கிட்டிங்க? ''
"" யூ ட்யூப்ல தான்''

ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.

யோசிக்கிறாங்கப்பா!

முட்டாளுக்கு இதயம் வாயில் இருக்கும்.
அறிவாளிக்கு இதயம் மூளையில் இருக்கும்.

ஜானகி பரந்தாமன்,
கோயம்புத்தூர் -36

மைக்ரோ கதை


தனது தோழி சுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் கொடைக்கானல் போயிருந்த சுமதி, தனது கணவன் சோமுவுக்கு போன் செய்தாள்.
""என்னங்க.. நம்ம வீட்டு நாய்க்குட்டி ரோஸி நல்லா இருக்குதுங்களா?'' என்று கேட்டாள் சுமதி.
""அது வந்தும்மா... நீ போன மறுநாளே லாரிக்காரன் ஏற்றி போய்ச் சேர்ந்துடுச்சு'' என்றான் சோமு.
அதனால் மிகவும் வருத்தமடைந்த சுமதி, ""என்னங்க இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்றீங்க? இனி மேல் நான் எப்படி இங்கே என் தோழிகள் கூட சந்தோஷமாக இருப்பேன்'' என்றாள்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் சுமதி போன் செய்து, ""நான் அது மேல எவ்வளவு உயிரா இருந்தேன் என்று உங்களுக்குத் தெரியும் இல்லையா? நாய்க்குட்டி எங்கேன்னு நான் கேட்டா அது மாடி மேல உட்கார்ந்து இருக்குன்னு ஏதாவது சொல்லலாமில்ல, அப்புறம் ஊருக்கு வந்ததும் சொல்லியிருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு இங்கிதம் பத்தாதுங்க. போனை வையுங்க'' என்றாள் சுமதி கோபத்துடன்.
மறுநாள் மறுபடியும் தன் கணவன் சோமுவுக்குப் போன் செய்தாள் சுமதி.
"" என்னங்க... எங்கப்பா எப்படி இருக்காரு?'' என்று கேட்டாள் சுமதி.
""அது வந்தும்மா... அவர் மாடியிலே உட்கார்ந்திருக்காரு'' என்றான் சோமு.

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

எஸ்.எம்.எஸ்.


வார்த்தைகளின் மதிப்பு தெரிந்தவரோடு வாதம் செய்;
வார்த்தைகளால் வதம் செய்பவரோடு மெளனம் செய்!

எல்.மோகனசுந்தரி,
கிருஷ்ணகிரி-1

அப்படீங்களா!

உலகமயம் நிறைய மாற்றங்களை உருவாக்கிவிட்டது. கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு சிற்றூரில் இருந்து அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்காகப் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டனர்.

வேலை, தொழில், வணிகம் ஆகியவற்றுக்காக பிற நாடுகளில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லா நாட்டினருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த மொழியில் பேசுவது என்பது மிகவும் சிக்கலாகிவிட்டது.

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஜப்பான் நிறுவனம் உருவாக்கியுள்ள "MUAMA ENENCE' என்ற மொழி பெயர்ப்புக் கருவி உதவுகிறது.

இந்தக் கருவி ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹங்கேரியன், ஜப்பானிய மொழி, கொரிய மொழி, ரஷ்யன், ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட 36 மொழிகளில் உடனுக்குடன் மொழி பெயர்ப்புச் செய்யும் திறன் படைத்தது. நீங்கள் உங்களுக்குத் தெரிந்த மொழியில் பேசியதை, அந்த மொழி தெரியாத ஒருவர் புரிந்து கொள்ளவும், அவர் பேசியதை நீங்கள் புரிந்து கொள்ளவும் இந்த மொழிபெயர்ப்புக் கருவி உதவுகிறது.

இந்த மொழிபெயர்ப்புக் கருவியை நீங்கள் வாங்கிய பிறகு, உங்களுடைய செல்லிட பேசியில் இந்தக் கருவிக்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கருவிக்கும், உங்களுடைய செல்லிட பேசிக்கும் இணையதளம் மூலம் அல்லது வைஃபை மூலம் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்.

அதற்குப் பிறகு இந்தக் கருவியில் ஒரு பட்டனை அழுத்திக் கொண்டே நீங்கள் பேச வேண்டியதைப் பேச வேண்டும். பட்டனை விடுவித்தவுடன், நீங்கள் பேசியதை நீங்கள் மொழிபெயர்க்கச் சொன்ன மொழியில் கேட்கலாம்.

அதேபோன்று நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ, அவர் செல்லிட பேசியில் வேறு மொழியில் பேசியதை செல்லிட பேசியில் உள்ள பட்டனை அழுத்திக் கொண்டே கேட்க வேண்டும். செல்லிட பேசி பட்டனை விடுவித்ததும் உங்களுக்குத் தெரிந்த மொழியில் அவர் பேசியதைக் கேட்க முடியும்.

என்.ஜே.,
சென்னை-58.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com