தினமும் 1700 இலவச சாப்பாடு!

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சென்னைவாசிகளால் தொடங்கப்பட்டு, வெள்ளிவிழா கண்ட சேவை அமைப்பு,  ராஜஸ்தான் இளைஞர் சங்கம். இதன் கிளைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன.
தினமும் 1700 இலவச சாப்பாடு!

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட சென்னை வாசிகளால் தொடங்கப்பட்டு, வெள்ளிவிழா கண்ட சேவை அமைப்பு, ராஜஸ்தான் இளைஞர் சங்கம். இதன் கிளைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. அவற்றில் ஒன்று ராஜஸ்தான் இளைஞர் சங்கம் - "மெட்ரோ ஸ்டார்'. ஏழு ஆண்டுகளாக சேவைப் பணிகள் பல செய்துவரும் இந்த இளைஞர் சங்கம், தற்போதைய கரோனா பொது முடக்க காலத்தில் தேவையானவர்களுக்கு மருத்துவ சேவையையும், நோயாளிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உணவு வழங்கும் சேவையையும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். இது குறித்து விவரிக்கிறார் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் - "மெட்ரோ ஸ்டார்' தலைவர் அஸ்வின் ஜங்கடா:

""மறுபடியும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும், எங்கள் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மற்றும் உணவு வழங்கும் இலவச சேவையைத் தொடங்க முடிவு செய்தோம். அதற்காக ஓர் உதவி மையத்தை அமைத்தோம். எங்கள் சங்கத்தின் உறுப்பினர்களில் சுமார் நூறு பேர் இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்துடன் முன்வந்தார்கள்.

உடனடியாக ஓர் உதவி மையத்தை அமைத்து, அதன் தொலைபேசி எண்ணை சமூக ஊடகங்கள் மூலமாகப் பரவலாக்கினோம். சுமார் பத்து டாக்டர்கள் தொலைபேசி மூலமாக ஆலோசனை வழங்க முன்வந்தனர். தற்போது, தினமும் சுமார் 50 பேர்கள் வரை அதன் மூலமாகப் பயன் பெற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது ஒரு பக்கம் என்றால், அதைவிட பல மடங்கு பேர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய சகஜ வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகிறது. அதில் முதலாவது சாப்பாடு.

எனவே, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மூன்று வேளையும் உணவு சப்ளை செய்ய முடிவு செய்தோம். இதற்கென்று பெரம்பூர், தாம்பரம், கோபாலபுரம், பள்ளிக்கரணை என்று சென்னை மாநகரின் நான்கு பகுதிகளில் கேட்டரிங் சர்வீஸ் செய்பவர்களோடு பேசி, ஏற்பாடு செய்தோம். கரோனா பரிசோதனை செய்து கொண்டு, பாதிப்பு இருப்பதாக அறியும் நோயாளிகள் எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொண்டால், வாட்ஸ்அப் மூலமாக, அவர்களின் ரிப்போர்ட்டைப் பெற்று, சரி பார்த்து, ஒரு படிவத்தை அனுப்புவோம். அதன் மூலமாக பெயர், முகவரி, காலைச் சிற்றுண்டி, மதிய உணவு, இரவு உணவு எல்லாம் எத்தனை பேருக்கு, எத்தனை நாட்களுக்குத் தேவை என்று கேட்டறிந்து, தகவல்களை ஏரியா வாரியாகப் பிரித்து, நான்கு கேட்டரர்களுக்கும் முந்தைய தினம் மாலையே அனுப்பி வைத்துவிடுவோம். மறுநாள் காலை முதல் அவர்களுக்கு உணவு அனுப்பி வைக்கப்படும்.

""என்ன மெனு?''

""காலை சிற்றுண்டிக்கு இட்லி, தோசை, பொங்கல்; மதிய உணவுக்கு சப்பாத்தி, கலந்த சாதம், சப்ஜி, பொரியல், அப்பளம்; இரவு உணவுக்கு உப்புமா, பொங்கல். உணவு தயாரிக்கும் மையங்களில் இருந்து அவர்களே சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் மூன்று வேளையும் உணவுப் பார்சலைக் கொண்டு போய்க் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.

""கரோனா நோயாளிகள் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்குவது இன்றையச் சூழ்நிலையில் மிக ரிஸ்கான பணியாயிற்றே? என்னென்ன பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்கிறீர்கள்?''

""முகக்கவசம் கட்டாயம். வீடுகளுக்குச் சென்றதும், வீட்டுக்குள்ளே போகாமல், அவர்களை போனில் அழைத்து விவரம் சொல்லி, நுழைவாயிலுக்கு வெளியிலேயே பார்சலை வைத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்று அனைவரும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்''

""இந்தப் பணிக்கு ஏராளமாக செலவாகுமே! எப்படி சமாளிக்கிறீர்கள்?''

""இது முற்றிலும் இலவசமான சேவை. தற்போதைய நிலவரப்படி தினமும் மூன்று வேளைக்குமாக சேர்த்து, சென்னை நகரமெங்கும் 1700 உணவுப் பார்சல்கள் விநியோகித்து வருகிறோம். ஒரு நாளைக்கு சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. உதவி பெறுகிறவர்கள் எல்லாரும் மனம் நெகிழ்ந்து போகிறார்கள். கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எங்கள் உதவிக்காக நன்றி தெரிவிக்கும்விதமாக நன்கொடை வழங்குகிறார்கள். ஐந்து நாட்கள் உணவு பெற்ற ஒருவர், 25 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்தார். இன்னொரு குடும்பம் ஏழாயிரம், பத்தாயிரம், 15 ஆயிரம் என்று தவணைகளில் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எங்களின் இந்த சேவையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்தெல்லாம் கூட நன்கொடைகள் வருகின்றன. எனவே, எங்களுக்கு பணம் ஒரு பிரச்னையில்லாமல், ஏராளமானவர்கள் தாராளமாக உதவிக் கொண்டிருக்கிறார்கள்''

""நெகிழ்ச்சியான அனுபவம்?''

""தினமும் எங்களுக்கு வரும் தகவல்கள் எங்களை நெகிழச் செய்கின்றன; ஊக்குவிக்கின்றன. தினமும் தவறாமல், ஒருவர், "மெட்ரோ ஸ்டார் சங்கத்து கடவுள்களே! காலை வணக்கம்!' என்று தகவல் அனுப்புகிறார்.

இன்னொருவர், "இந்த பயங்கரமான கரோனா தொற்றுக் காலத்தில் மக்களுக்கு உதவ அனுப்பி வைக்கப்பட்ட கடவுளின் பிரதிநிதிகள் நீங்கள்!' என்று கூறினார். மக்களின் நன்றியும், பாராட்டும், உதவிகளும்தான் ஊக்க சக்தியாக இருந்து எங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன! மக்களுக்கு சேவை செய்வது மகேசனுக்கு சேவை செய்வது போன்றதல்லவா? அதுவும் பசியறிந்து உணவு கொடுத்தல் எத்தனை மகத்தானது!'' என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார் அஸ்வின் ஜங்கடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com