'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 61

சியாம சரண் சுக்லாவும், ஆர்.கே. தவானும் தனிமையில் உரையாடுவதற்குத் தடையாக இருக்க விரும்பாமல் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 61

சியாம சரண் சுக்லாவும், ஆர்.கே. தவானும் தனிமையில் உரையாடுவதற்குத் தடையாக இருக்க விரும்பாமல் நான் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

சூரஜ்குண்ட் தில்லியிலிருந்து வெகு தொலைவில் இல்லை. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரையிலான தொலைவு கூட இல்லை. வி.என். காட்கில் செய்தித் தொடர்பாளராக இருப்பதால் சூரஜ்குண்ட் மாநாட்டுக்கு பத்திரிகையாளர் அனுமதி அட்டை கிடைப்பதில் எனக்குப் எந்தவிதப் பிரச்னையும் இருக்கவில்லை. அவருடைய உதவியாளர்கள் செல்லும் காரில் என்னையும் இணைத்துக் கொண்டு விட்டார்கள். நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சூரஜ்குண்ட் சென்றுவிட்டோம்.

"சூரஜ்' என்றால் சூரியன். "குண்ட்' என்றால் ஏரி. சூரஜ்குண்டுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. தோமாரா வம்சத்தைச் சேர்ந்த சூரஜ்பால் என்பவரால் ஆரவல்லி மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய செயற்கை ஏரிதான் சூரஜ்குண்டின் தனி அடையாளம். அந்த ஏரியின் மேற்குக் கரையில் சூரியனுக்கு ஒரு கோயில் எழுப்பியிருக்கிறார் சூரஜ்பாலின் மகன் ஒன்றாவது அனங்பால்.

தோமாரா வம்சம் தில்லியை ஆண்டபோது, சூரஜ்குண்ட் இருக்குமிடத்தில் ஒன்றாவது அனங்பால் தனது தலைநகரை நிறுவ முற்பட்டார். அந்தக் கட்டடங்கள் எதுவுமே இப்போது இல்லை. அந்த வம்சத்தின் கடைசி அரசரான இரண்டாம் அனங்பால் தற்போதுள்ள தில்லியின் ஒரு பகுதியை தனது தலைநகராக்கிக் கொண்டார். தோமாரா வம்சத்தின் 457 ஆண்டு கால ஆட்சியில் பலமுறை தலைநகரங்கள் மாறியிருக்கின்றன.

கி.பி.686-இல் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சூரஜ்குண்ட் ஏரி ஒரு மிகப் பெரிய சூழலியல் பகுதி. அங்கே நூற்றுக்கணக்கில் மயில்கள் உலவுவதைப் பார்க்க முடியும். அதன் அருகிலுள்ள ஓர் அருவியும், அசோலா பட்டியில் உள்ள வனவிலங்கு சரணாலயமும் சுற்றுலாத் தலங்கள்.

கி.மு. 1,00,000-த்தைச் சேர்ந்த பாறைகளும், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களும் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் இங்கே கூடும் சூரஜ்குண்ட் மேளாவில், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலிருந்து பல்வேறு கைவினைப் பொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. சர்வதேச அளவிலான இந்த மேளாவுக்கு இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வெளிநாட்டவர்கள் வருகிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு சூரஜ்குண்டை பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தேர்ந்தெடுத்ததற்குப் பல பின்னணிக் காரணிகள் உண்டு என்பதை, காரில் பயணிக்கும்போது காட்கிலின் உதவியாளர்கள் சொல்லித் தெரிந்து கொண்டேன்.

ஹரியாணா அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருந்தார் முதல்வர் பஜன்லால். தனக்கு எதிராக அர்ஜுன் சிங் தலைமையில் ஒரு பிரிவினர் போர்க்கொடி உயர்த்த முயற்சிக்கும் நிலையில், தனது நம்பிக்கைக்குரிய பஜன்லால் முதல்வராக இருக்கும் ஹரியாணாவில் காங்கிரஸ் மாநாடு கூட்டுவது என்று பிரதமர் நரசிம்ம ராவ் முடிவெடுத்தார் என்று அவர்கள் சொன்னார்கள்.

மாநாட்டில் அதிருப்தியாளர்கள் குழப்பம் விளைவிக்கக்கூடும் என்று பிரதமர் நரசிம்ம ராவும் கட்சித் தலைமையும் எதிர்பார்த்ததில் வியப்பில்லை. தில்லியில் அப்போது நிலவிய சூழல் அப்படித்தான் இருந்தது. 1969-இல் ஏற்பட்டது போன்ற பிளவு ஏற்படக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.

அர்ஜுன் சிங் ஆதரவாளர்கள் அனைவரும் சோனியாவின் ஆசி தங்களுக்கு இருப்பதாகக் கூறிக் கொண்டார்கள். நரசிம்ம ராவ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று சோனியா காந்திக்கும், நேரு குடும்பத்துக்கும் நெருக்கமானவர்கள் என்று கருதப்படும் ஷீலா கெளல், ஷீலா தீட்சித், ஃபோத்தேதார் உள்ளிட்டவர்கள் வற்புறுத்துவதால் அவர்கள் சோனியா காந்தியின் ஒப்புதல் பெற்றுத்தான் கோரிக்கை எழுப்புகிறார்கள் என்று அனைவரும் கருதியதில் வியப்பில்லை.

பிரம்மாண்டமான முன்னேற்பாடுகளும், மிகப் பெரிய பந்தலும் போடப்பட்டு அலங்கார வளைவுடன் கூடிய முகப்பும் சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டை வரலாற்று முக்கியத்துவம் பெறச் செய்வதாக இருந்தன. சென்னையை அடுத்த மறைமலை நகரில் 1988-இல் நடத்த காங்கிரஸ் மாநாட்டையும், 1992- ஏப்ரல் மாதம் திருப்பதியில் நடத்த காங்கிஸ் மாநாட்டையும் நான் ஏற்கெனவே பார்த்திருந்ததால், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு எனக்குப் புதிதல்ல. இரண்டு நாள்கள் முன்னதாகவே சூரஜ்குண்ட் சென்றுவிட்டதால், திரைமறைவில் நடந்து கொண்டிருக்கும் பல அரசியல் நிகழ்வுகளை பலரிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவின் எல்லா மாநிலங்களிலிருந்தும் பிரதமர் நரசிம்மராவின் ஆதரவாளர்கள் சூரஜ்குண்டில் வந்து குவிந்து விட்டனர். முக்கியமான அரசியல் பிரமுகர்கள் தில்லிக்கும் சூரஜ்குண்டுக்குமாக காலை, மாலை என பயணித்துக் கொண்டிருந்தனர். இதுவும் கூட இன்னொரு சூரஜ்குண்ட் மேளா போல "ஜே ஜே'
என்றிருந்தது.

முதல்வர் பஜன்லால் சூரஜ்குண்டிலேயே தங்கியிருந்து ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன் மூன்று, நான்கு தடவைகள் சந்தித்துப் பேசவும் முடிந்தது. பார்வையிடச் செல்லும்போது அவரது கண்ணில் தட்டுப்பட்டால், உடன் வரச்சொல்லி அழைப்பார். அவர் ஹிந்தியிலும், நான் ஆங்கிலத்திலும் பேசிக் கொள்வது பலருக்கும் வேடிக்கையாக இருக்கும். எனக்கே கூட, அவருக்கு நான் சொல்வது புரிகிறதா என்கிற சந்தேகம் வருவதுண்டு. அவர் அதையெல்லாம் சட்டை செய்யாமல் ஹிந்தியில் பேசிக்கொண்டே போவார்.

""இதுபோல ஒரு மாநாடு இதற்கு முன்பும், இதற்குப் பின்பும் நடந்துவிடக் கூடாது என்பது பிரதமர் எனக்கு இட்டிருக்கும் கட்டளை. அதை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட வேண்டியது எனது பொறுப்பு'' என்று என்னிடம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார் முதல்வர் பஜன்லால். சொல்வது மட்டுமல்ல, செயலிலும் காட்டினார் என்பதை மறுக்க முடியாது.

பிரம்மாண்டமான பந்தல் இருக்கட்டும், ஏறத்தாழ 30,000 பேருக்கு மூன்று வேளை உணவு வழங்குவது, அதுவும் ஐந்து நட்சத்திர பாணியில் என்பது சாதாரணமா என்ன? மாநாடு நடந்த இரண்டு நாள்களிலும் மதிய உணவுக்கு 38 பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. பிரதமர் நரசிம்ம ராவே அதைப் பார்த்து மலைத்துப் போய்விட்டார் என்று சொன்னார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் என்று எடுத்துக் கொண்டால் 950 பேர்தான். ஆனால், 4,000-க்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி-க்கள் அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஒவ்வொரு செயற்குழு உறுப்பினரும் பத்து சிறப்பு விருந்தினர்களை அழைத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கான பேட்ஜுகளை எல்லாம் பிரித்து, விநியோகிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

தென்னிந்திய மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் சூரஜ்குண்ட் மாநாட்டுக்கு வந்திருந்தனர். அவர்களையெல்லாம் தெரிந்து கொள்வதற்கும், நெருங்கிப் பழகுவதற்கும் சூரஜ்குண்ட் மாநாடு எனக்கொரு வாய்ப்பாக அமைந்தது. அவர்களில் சிலர் பின்னாளில் மத்திய அமைச்சர்களாகவும், மாநில அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களாகவும் உயர்ந்தபோதும் எங்களது நட்பும் நெருக்கமும் தொடர்ந்தன.

அதிருப்தியாளர்களை எதிர்கொள்வதற்கான வியூகம் முதல்வர் பஜன்லாலால் வகுக்கப்பட்டிருந்தது. ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டவர்கள்தான் மாநாட்டு மேடையின் முன்னால் உள்ள முதல் நான்கு வரிசையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். அதாவது, அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களைக் கடந்துதான் மேடையை நோக்கி அதிருப்தியாளர்கள் போக முடியும். எந்தவொரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பஜன்லால் மிகவும் கவனமாக இருந்தார்.

அதிருப்தியாளர்களில் முக்கியமானவர்களான கே.என். சிங்கும், ஷீலா திட்சித்தும் எனக்கு நன்றாகவே அறிமுகமானவர்கள். கே.என். சிங் நெருக்கமானவரும் கூட. பி. சிவசங்கர், நட்வர் சிங், அஸ்லாம் ஷெர்கான், ராம் துலாரி சின்ஹா, எம்.எல். ஃபோதேதார் உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள் எதிர்ப்பு கோஷ்டியில் இருந்தனர். அவர்கள் விழா பந்தலுக்குள் நுழையும் பாதையின் ஓரமாக ஓர் அணியாக அமர்ந்திருந்தனர்.

கோஷம் எழுப்பியபடி பந்தலுக்கு வெளியே அமர்ந்திருந்தவர்களை மாநாட்டுக்கு வருபவர்கள் வணக்கம் சொல்வதும், சிரித்தபடி நலம் விசாரிப்பதும் பார்ப்பதற்கே வேடிக்கையாக இருந்தது. அதிருப்தியாளர்களுக்கு எந்தவிதக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள (கண்காணிக்க) முதல்வர் பஜன்லால், ஒரு பட்டாளத்தையே அங்கே நிறுத்தி இருந்தார். அவர்களுக்கு ஏகப்பட்ட உபசரிப்பு.

நட்வர் சிங் வேறு எதற்காகவோ எழுந்து வந்தார். அவரிடம் நான் பேச்சுக் கொடுத்தேன்.

""கட்சி மாநாடு நடக்கும்போது இப்படி பந்தலுக்கு வெளியே இருந்து குரலெழுப்புவானேன்? அதற்குப் பதிலாக உள்ளேயே குரலெழுப்பினால் என்ன?''
""பெருந்திரளாக பஜன்லாலும் பிரதமரும் திரட்டி இருக்கும் பார்வையாளர்கள் எழுப்பும் கூச்சலில் எங்கள் கோரிக்கைகள் யாருடைய காதிலும் விழாது. எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதற்காகத்தான் இப்படியொரு முடிவெடுத்தோம்.''

""உங்களது கோரிக்கைகள்தான் என்ன?''

""அப்படியொன்றும் தப்பான கோரிக்கை எதையும் நாங்கள் எழுப்பிவிடவில்லை. காங்கிரஸ் செயற்குழுவில் இரண்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. நியமன முறையில் அல்லாமல், மாநாட்டிற்கு வந்திருக்கும் உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் அந்த இரண்டு இடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை.''

""இரண்டாவது கோரிக்கை?''

""ஒரு நபர், ஒரு பதவி என்பதை கட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டும். இதுவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைதான்.''

வாக்கெடுப்பு மூலம் செயற்குழு உறுப்பினர்கள் இருவரைத் தேர்ந்தெடுக்கும்போது தங்களது செல்வாக்கை நிரூபிக்க முடியும் என்பது எதிரணியினரின் எதிர்பார்ப்பு. அதேபோல, "ஒரு நபர், ஒரு பதவி' என்று வந்தால், பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தனது கட்சித் தலைவர் பதவி அல்லது பிரதமர் பதவியைத் துறக்க நேரும்.

அதிருப்தியாளர்கள் முன்வைத்திருக்கும் இரண்டு கோரிக்கைகளும் பிரதமர் நரசிம்ம ராவையும் அவரது ஆதரவாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியிருந்தன. அவற்றை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது. பிரதமர் நரசிம்ம ராவ் அந்த சவாலை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com