'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 62

சூரஜ்குண்ட் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தலைவர்களும், தொண்டர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 62
Updated on
4 min read

சூரஜ்குண்ட் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு இந்தியாவின் எல்லா பகுதிகளிலிருந்தும் தலைவர்களும், தொண்டர்களும் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடுகளில் ஒரு "மினி' இந்தியாவைப் பார்க்க முடியும். இந்தியாவின் அனைத்து மொழியினர், இனத்தினர், பிரிவினர் கலந்து கொள்வார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஏனைய கட்சி மாநாடுகளில் இல்லாத பிரம்மாண்டம் காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் மட்டுமே காணப்படும்.

தமிழகத்திலிருந்து அநேகமாக அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி-க்களும், எம்எல்ஏ-க்களும் வந்திருந்தனர். முன்னாள் எம்பி, எம்எல்ஏ-க்களும் பெரும்பாலும் வந்திருந்ததாக நினைவு. தில்லியில் அவர்களை சந்திப்பதிலிருந்து சூரஜ்குண்டில் சந்திப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒருவரை ஒருவர் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும், தமிழில் பேசிக் கொள்ளும் அந்த ஆனந்தமும் சொல்லி மாளாது.

அப்போது மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களில் ப. சிதம்பரம் மட்டும்தான் இப்போதும் மாநிலங்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இருக்கிறார். சூரஜ்குண்ட் கட்சி மாநாட்டின்போது அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை. வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஓராண்டுக்கு முன்னர் 1992 ஜூலை 9-ஆம் தேதி, ஃபேர்குரோத் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, நரசிம்ம ராவ் அமைச்சரவையிலிருந்து மனசாட்சியைக் காரணம்காட்டி பதவி விலகி இருந்தார். ரங்கராஜன் குமாரமங்கலம், கே.வி. தங்கபாலு, எம். அருணாச்சலம் மூவரும் அமைச்சரவையில் இணையமைச்சர்களாக இருந்தனர்.

தமிழகத்திலிருந்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பழனியாண்டி, சோ. பாலகிருஷ்ணன், குமரி அனந்தன் தொடங்கி எல்லா முக்கியத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களுடன் சூரஜ்குண்ட் வந்திருந்தார்கள். டாக்டர் செல்லக்குமாரை அமைச்சர் ரங்கராஜனுடன் அங்கே சந்தித்ததாக நினைவு. எனது நெருங்கிய நண்பரான  ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை சந்தித்ததாக எனது டைரிக் குறிப்பில் இல்லை. எப்படி சந்திக்காமல் இருந்தேன் என்று புரியவில்லை. ஒருவேளை அவர் வரவில்லையோ என்னவோ... தங்கபாலுவின் ஆதரவாளர்களான ஜெயமோகன் எம்பி, முன்னாள் எம்எல்ஏ-க்கள் செஞ்சி முருகானந்தம், திருவொற்றியூர் குறளரசு ஜெயபாரதி உள்ளிட்ட பலரும் வந்திருந்தார்கள். காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவுத் தலைவராக இருந்த பி.வி. சுப்பிரமணியம், மகபூல் ஜான், பூதூர் வேணுகோபால் உள்ளிட்டவர்களை அங்கே சந்தித்ததும் உரையாடியதும் நினைவுக்கு வருகிறது.

சூரஜ்குண்ட் மாநாட்டுக்கு அகில இந்திய மாணவர் காங்கிரஸ் தலைவர் சலீம் அகமதின் தலைமையில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவர் காங்கிரஸாரும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டா தலைமையில் தொண்டர்களும் வந்து குவிந்திருந்தனர். சலீம் அகமதுடனும் அவரது மாணவர் காங்கிரûஸச் சேர்ந்த தலைவர்களுடனும் எனக்கு சூரஜ்குண்டில் ஏற்பட்ட நட்பும், தொடர்பும் இன்றுவரை தொடர்கிறது என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் எம்பி, எம்எல்ஏ-க்களாகவும், மத்திய - மாநில அரசுகளில் அமைச்சர்களாகவும் பின்னாளில் உயர்ந்தபோதும் அந்தத் தொடர்பு தொடர்ந்தது, தொடர்கிறது.

சூரஜ்குண்ட் மாநாடு நடந்த 1993-இல் இப்போது தமிழ்நாடு காங்கிரஸின் துணைத் தலைவராக இருக்கும் சிரஞ்சீவி, அகில இந்திய மாணவர் காங்கிரஸின் தேசியச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். என்எஸ்யு (ஐ) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பின் தலைமையகம் தில்லி லீ மெரிடியன் ஹோட்டலுக்குப் பின்னால் ராய்சினா சாலையில் இருக்கிறது. அமைச்சர் பூட்டா சிங்கின் வீட்டுக்கு அருகிலும், கேரளா ஹவுஸ், பிரஸ்கிளப் உள்ளிட்டவற்றிற்கு அருகிலும் இருந்ததால், நான் தில்லி செல்லும்போது சிரஞ்சீவியை அங்கே அடிக்கடி சந்திப்பது வழக்கம்.

1985-இல் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் மாநில அளவிலான பயிற்சி முகாம் ஒன்று நடந்தது. சிரஞ்சீவி தமிழ்நாடு மாணவர் காங்கிரஸில் அப்போது முக்கியப் பதவி வகித்து வந்தார். அதற்கு பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கவில்லை. ராஜீவ் காந்திக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகப் பரவலாகக் கூறப்பட்ட நேரம். அப்படி இருந்தும் அவர் மாணவர் காங்கிரஸ் முகாமுக்கு அழைக்கப்பட்டிருந்தது வியப்பாக இருந்தது.

எனக்குத் தெரிந்து, இன்றைய இளைய தலைமுறை காங்கிரஸ்காரர்களில் மூத்த அனுபவசாலி என்று சிரஞ்சீவியைத்தான் குறிப்பிட வேண்டும். அவருடன் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கட்சியில் பதவி வகித்தவர்கள் அனைவரும் மத்திய - மாநில அமைச்சர்களாகவும், மாநிலத் தலைவர்களாகவும் உயர்ந்ததுபோல, சிரஞ்சீவிக்கு கட்சித் தலைமை ஏன் முக்கியப் பதவியோ, பொறுப்போ தரவில்லை என்பது புரியவில்லை. 

மாணவர் காங்கிரஸ் தலைவர் சலீம் அகமதின் நம்பிக்கைக்குரியவர்களான சிரஞ்சீவி, ஆராதியா, ரமேஷ், தேபாஷிஷ் உள்ளிட்ட பலரும் சூரஜ்குண்ட் மாநாட்டில் முக்கியமான பங்கு வகித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, ஒழுங்கு படுத்துவது, உணவு வழங்குமிடங்களில் மேற்பார்வை இடுவது என்று அவர்களுக்கு முக்கியப் பணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன. அந்தந்த மாநிலத்தில் இருந்து வருவோர்களை உபசரிப்பதும், அவர்களுக்கு உதவுவதும் மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸின் பணியாக இருந்தது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, மாநாட்டுப் பந்தலுக்குள் பதற்றமான சூழல் தொடர்ந்து நிலவியது. பிரதமர் நரசிம்ம ராவ் மாநாட்டுக்கு வரவிருந்த வேளையில், அதிருப்தியாளர்கள், உரக்க கோஷம் எழுப்பினார்கள். அவர் அதை எப்படி எதிர்கொள்வார் என்று நான் சற்று தள்ளிநின்று எதிர்பார்ப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

பேண்டு வாத்தியங்கள் முழங்கப் பிரதமர் நரசிம்ம ராவ் காரில் வந்து இறங்கினார். பஜன்லால் உள்ளிட்ட காங்கிரஸ் முதல்வர்களும், செயற்குழு உறுப்பினர்களும், மூத்த மத்திய அமைச்சர்களும் அவரை வரவேற்றனர். அதிருப்தியாளர்களை அவர் நேருக்கு நேர் பார்த்துவிடக் கூடாது என்கிற திட்டத்தில், முதல்வர் பஜன்லால் அவரை முற்றிலுமாகச் சூழ்ந்தவண்ணம் அழைத்துச் செல்வது என்று திட்டமிட்டிருந்தார்.

அத்தனை திட்டங்களையும் ஒரே நொடியில் தகர்த்துவிட்டு, விறுவிறுவென்று நடக்கத் தொடங்கிவிட்டார் பி.வி. நரசிம்ம ராவ். பாதைக்கு வெளியே கூட்டமாக அமர்ந்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தவர்களைச் சட்டையே செய்யாமல் பிரதமர் கடந்தபோது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. சிலரது முகத்தில் ஆத்திரமும் கோபமும் வெளிப்படையாகவே தெரிந்தது. ஒருவர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஹிந்தியில் கெட்டவார்த்தையை உரக்கச் சொல்லி, ""எங்கள் தகுதிக்கு மரியாதை கொடுக்கும் விதத்தில் ஒரு நமஸ்காரம் சொல்லக்கூட உங்களுக்கு முடியவில்லை, அப்படித்தானே'' என்று கத்தினார்.

அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் நகர்ந்து சென்ற பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான நரசிம்ம ராவ், கரகோஷத்துக்கு இடையில் கட்சிக் கொடியை ஏற்றினார். சேவாதளத் தொண்டர்கள் அவரைச் சூழ்ந்து நின்றார்கள். சரத் பவார், மாதவ்சிங் சோலங்கி, ஆர்.கே. தவான் உள்ளிட்டோர் முன்வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஓர் ஓரமாகக் கருணாகரன், பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், தினேஷ் சிங் உள்ளிட்டோர் நின்று கொண்டிருந்தனர்.

அங்கிருந்து மாநாட்டுப் பந்தலுக்குள் அனைவரும் நுழைந்ததும், நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சித் தலைவர் நரசிம்ம ராவுக்கு பந்தலுக்கு வெளியே அதிருப்தியாளர்கள் அமர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள் என்றால், அவர்களில் ஒருவரான அர்ஜுன் சிங் மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்தபடியே, அதிருப்தியாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தேடிக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது.

அர்ஜுன் சிங்கின் இலக்கு பிரதமர் பதவியல்ல. நரசிம்ம ராவைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அகற்றி அவரது பல்லைப் பிடுங்குவது என்பதுதான். அதற்கு சோனியா காந்தியின் ஆதரவு இருந்தது என்பதை வருங்கால அரசியல் நிகழ்வுகள் உறுதிப்படுத்தின. மாநாட்டில் கலந்து கொண்டாலும்கூட மூப்பனார், ஏ.கே. அந்தோணி, அகமது படேல் உள்ளிட்ட பல சோனியா ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்கவில்லை என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து நன்றாகவே தெரிந்தது. அவர்கள் ஒதுங்கியே இருந்தார்கள்.

தனது எதிர்ப்பாளர்கள் திருப்பதி காங்கிரஸ் மாநாட்டில், கட்சித் தேர்தல் மூலம் தங்களது பலத்தை நிரூபித்திருந்த நிலையில், அப்படி எதுவும் நடக்க விடாமல் இருப்பதில் பிரதமர் நரசிம்ம ராவ் கவனமாக இருந்தார். தனக்கு எதிராக இருந்த பி.பி. மெளரியா, திக்விஜய் சிங் போன்றோரை மட்டுமல்ல, சரத் பவார், என்.டி. திவாரி ஆகியோரையும் தனக்கு ஆதரவாகத் திருப்பி இருந்தார்.

ராஜேஷ் பைலட்டும், குலாம் நபி ஆஸாத்தும் பிரதமரின் நம்பிக்கைக்குரிய இளைய தலைவர்களாகி இருந்தனர். அவர்கள்தான் அவருடன் அடிக்கடி உரையாடுவதும், அவரது கட்டளைகளை நிறைவேற்றுவதுமாக இருந்தனர். கே. கருணாகரன், விஜயபாஸ்கர ரெட்டி போன்றவர்கள் பிரதமருக்கு ஆதரவாக அனைவரையும் அணிதிரட்டுவதில் முன்னிலை வகித்தனர். 

அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் அமைச்சர்களைவிட கட்சிப் பொறுப்பாளர்கள்தான் முக்கியத்துவம் பெறுவார்கள்.  மேடையில் மூத்த அமைச்சர்கள் இடம்பெற்றாலும்கூட அவர்கள் நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகிக்க மாட்டார்கள். உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவாண், ஏ.கே. அந்தோணி, அர்ஜுன் சிங், சங்கரானந்த், பல்ராம் ஜாக்கர், ஜாபர் ஷெரீப், தினேஷ் சிங், குலாம் நபி ஆசாத், மன்மோகன் சிங், என்.கே.பி.சால்வே, பிரணாப் முகர்ஜி, சீதாராம் கேசரி, வித்ய சரண் சுக்லா என்று அனைத்து முக்கியமான மத்திய அமைச்சர்களும் காங்கிரஸ் மாநில முதல்வர்களும் மேடையில் இருந்தனர்.

பிரதமரும் கட்சித் தலைவருமான பி.வி. நரசிம்ம ராவ், தான் நடத்திக் கொண்டிருப்பது ஒரு குருஷேத்திர யுத்தம் என்று சொன்னவுடன் மாநாட்டுப் பந்தலில் எழுந்த கரவொலி விண்ணைப் பிளந்தது. அதிருப்தியாளர்களின் கோரிக்கையை எதிர்ப்பார்த்தது போலவே ஆதரவுக் குரல்கள் அடங்கிப் போகச் செய்தன. அர்ஜுன் சிங் பேச அனுமதிக்கப்பட்டார். அவர் அதிருப்தியாளர்களின் கோரிக்கையை முன்வைத்தார், ஆனால் எடுபடவில்லை.

அதிருப்தியாளர்கள் தவிர்க்கப்படுவதில் சீதாராம் கேசரிக்கும் அதிருப்திதான். அவரது கோரிக்கையும் எடுபடாததால் எழுந்து போய்விட்டார். மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே வந்த அவரிடம் பேச நான் எத்தனித்தேன். என்னை சட்டை செய்யாமல் அவர் விரைந்தபோது, கோபமாய் இருக்கிறார் என்பது தெரிந்தது. என் அருகில் இருந்த இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணீந்தர் சிங் பிட்டா, "சோனியா காந்திக்கு தகவல் தெரிவிக்க விரைகிறார்' என்று கேலி பேசியது நினைவுக்கு வருகிறது. 

சூரஜ்குண்ட் காங்கிரஸ் மாநாட்டுக்கும் திருப்பதி மாநாட்டுக்கும் வேறுபாடு தெரிந்தது. அங்கே பல தலைவர்களில் ஒருவராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ் சூரஜ்குண்டில் கட்சியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் என்பது வெளிப்பட்டது. எதிர்ப்பாளர்களுக்கும், அதிருப்தியாளர்களுக்கும் கட்சியில் இடமில்லை என்பதை சூரஜ்குண்ட் மாநாட்டின் மூலம் அவர் தெளிவுபடுத்தினார்.

மாநாட்டில் அரசியல் தீர்மானத்தை சரத் பவார் முன்மொழிந்தார். அனைவரும் பிரணாப் முகர்ஜி பொருளாதாரத் தீர்மானத்தை முன்மொழிவார் என்று எதிர்பார்த்த நிலையில், அதை முன்மொழிந்தவர் என்.டி திவாரி. அறிவிப்பு வந்ததும் நான் திடுக்கிட்டேன்; நான் மட்டுமல்ல; என்னைப்போல் பலரும். பிரணாப்தா எங்கே இருக்கிறார் என்று தேடினேன். அவர் கிளம்பிச் சென்று விட்டதாகச் சொன்னார்கள்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com