'பிரணாப்தா'என்கிற மந்திரச் சொல்! - 59

ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய நான் வீட்டுக்குள் நுழைந்தேன். காட்கில் வந்திருக்கவில்லை.
'பிரணாப்தா'என்கிற மந்திரச் சொல்! - 59

ஷாஜஹான் ரோடிலுள்ள வி.என். காட்கிலின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கிய நான் வீட்டுக்குள் நுழைந்தேன். காட்கில் வந்திருக்கவில்லை. அங்கிருந்த சில ஆங்கில தினசரிகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எனது "நியூஸ் ஸ்கிரைப்' செய்தி நிறுவனத்தின் கட்டுரைகளைப் பிரசுரிக்கும் புதாரி, கவகாரி, லோக்மாத் ஆகிய மராத்தி தினசரிகளும் அங்கிருந்ததால் அவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தேன். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வி.என். காட்கில் சிரித்தபடியே உள்ளே வந்தார்.

""பிரணாப் முகர்ஜி, புவனேஷ் சதுர்வேதி என்று உனக்கு நெருக்கமானவர்கள் அமைச்சர்களாகி இருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து வாழ்த்துச் சொல்லப் போகாமல் இந்த நேரத்தில் இங்கே வந்திருக்கிறாய்?'' என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்தார்.

""நீங்கள் கட்டாயமாக அமைச்சரவையில் இடம் பெறுவீர்கள் என்று நான் எதிர்
பார்த்தேன்...''

காட்கில் கலகலவென சிரித்தார். எதையுமே சிரித்தபடி எடுத்துக் கொள்ளும் அணுகுமுறைதான் காட்கில்ஜியின் தனிச்சிறப்பு.

""என்னைச் சேர்த்துக் கொள்வதாகப் பிரதமருக்குத் திட்டமே இருக்கவில்லையே, பிறகு எப்படி? முதலில் நான் நாடாளுமன்ற உறுப்பினரில்லை. சபாநாயகராக எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சிவராஜ் பாட்டீல் இருக்கிறார். அமைச்சரவையில் எஸ்.பி. சவான் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கிறார். மகாராஷ்டிராவிலிருந்து எத்தனை பேருக்கு அமைச்சர் பொறுப்புக் கொடுக்க முடியும்?''

""அமைச்சரவையில் இடம் பெறப் போவதில்லை என்று உங்களுக்கு முன்பே தெரியுமா?''

""கட்சியின் செய்தித் தொடர்பாளராக நான் தொடர வேண்டும் என்று என்னிடம் பிரதமர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதைத் தெரிந்து கொள்ள என்னைத் தொலை பேசியில் தொடர்பு கொண்டிருக்கலாமே, எதற்காக இப்படி அடித்துப் பிடித்து வரவேண்டும். சரி, சரி, இரவு உணவை என்னுடன் சாப்பிட்டு விட்டுப் போகலாம். கொஞ்சம் பொறு'' என்றபடி தனது அறைக்குப் போனார் காட்கில். 

அமைச்சரவையில் சேர்க்கப்படாததில் காட்கில்ஜி வருத்தமாக இருப்பார் என்று நினைத்த எனக்கு ஏமாற்றம். அவரால் எப்படி எதையும் சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்று இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.

வி.என். காட்கிலின் பின்னணி சாதாரணமானதல்ல. அவரது தந்தை "காகா சாஹேப்' நரஹர் விஷ்ணு காட்கில், பண்டித நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்தவர். வி.என். காட்கில் என்கிற வித்தல்ராவ் காட்கிலும் சரி, நீண்டநாள் அரசியல் அனுபவசாலி. 1971 முதல் 1980 வரையிலும் மாநிலங்களவையிலும், 1980 முதல் 1991 வரை மக்களவையிலும், 1994 முதல் 2000 வரை மீண்டும் மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர்.

இந்திரா காந்தி அமைச்சரவையிலும், அதற்குப் பிறகு ராஜீவ் காந்தி அமைச்சரவையிலும் தகவல், தொலைத் தொடர்பு, செய்தி ஒளிபரப்பு அமைச்சராக இருந்த அனுபவசாலி வி.என். காட்கில். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி,  சோனியா காந்தி என்று அனைவரின் தலைமையிலும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் என்கிற சிறப்பும் அவருக்கு மட்டுமே உண்டு. வழக்குரைஞர் என்பதால், ஊடகவியலாளர்களை எப்படிக் கையாள வேண்டும், அவர்களுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதை காட்கிலிடம்தான் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

காட்கிலின் வீட்டில் பூரி,  தால், ஸ்ரீகண்ட் என்று மகாராஷ்டிர மாநிலத்துக்கே உள்ள இரவு உணவு சாப்பிட்ட பிறகு, மீண்டும் வரவேற்பறையில் வந்து அமர்ந்தோம். காட்கில்ஜியே பேசத் தொடங்கினார்:

""இனி வரப்போகும் நாள்களில் பல குழப்பங்கள் ஏற்படப் போகின்றன. ஆங்காங்கே மத கலவரங்களும், ஜாதிக் கலவரங்களும் ஏற்படும் என்பது மட்டுமல்லாமல் ஆட்சியைக் கவிழ்க்க ஏதாவது குழப்பங்களையோ பிரச்னைகளையோ கிளப்பிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலில் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நான் இருக்க வேண்டும் என்று பிரதமர் விரும்புவது, அவருக்கு  என் மீதிருக்கும் நம்பிக்கையைத்தான் காட்டுகிறது.'' அவரிடம் விடைபெற்று நான் கிளம்பும்போது இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது.

அடுத்த நாள் காலையில் கிரேட்டர் கைலாஷிலுள்ள பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்குப் போனபோது, அந்தத் தெருவே அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருந்தது. அதுவரை அவரை சந்திக்க வராதவர்கள் எல்லாம் ஜனவரி மாதத் தில்லிக் குளிரிலும் பூச்செண்டுகளுடன் திரளாக நின்று கொண்டிருந்தனர்.

கூட்டத்திலிருந்து ஒதுங்கி ஓர் ஓரமாக நான் நின்று கொண்டிருந்தேன். முக்கியமான பிரமுகர்கள் வரும்போது அவர்களை அறைக்குள் அழைத்துச் செல்வது, வரவேற்பது, நாற்காலியில் அமரச் செய்வது போன்ற உதவிகளை உதவியாளர்களுடன் இணைந்து செய்து கொண்டிருந்தேன்.

பதவி இருந்தால்தான் தில்லியில் மரியாதை என்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். இப்போதும் உணர்ந்தேன்.

சுமார் ஒன்பதரையானதும் அலுவலகம் கிளம்பத் தயாரானார் வர்த்தகத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அவர் உள்ளே போனதும் வந்திருந்த பார்வையாளர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலையத் தொடங்கினார்கள். ஒரு சிலர் வீட்டு வாராந்தாவிலும், சாலையிலும் நின்று கொண்டிருந்தனர். நான் வரவேற்பறையை ஒட்டியிருந்த உதவியாளர் அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தேன்.

இண்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசிய உதவியாளர் என்னைப் பார்த்தார். "வைத்தியநாதன்ஜி, உங்களை உள்ளே அழைக்கிறார் பிராணாப்தா'' என்று அவர் சொன்னபோது, நான் எதிர்பாராத அதிர்ச்சியில் திகைத்தேன். வரவேற்பறையைக் கடந்து உள்ளே இருக்கும் அறைக்குள் சென்றேன்.

அங்கே ஒருபுறம் பூங்கொத்துகள் குவிந்து கிடந்தன. இன்னொருபுறம் மேஜையில் பார்வையாளர்கள் கொண்டு வந்திருந்த பல்வேறு இனிப்புகளும், முந்திரி உள்ளிட்ட ட்ரை ஃப்ரூட்சும் நிறைந்து காணப்பட்டன. பிரணாப்தா என்னை அழைத்தார். அங்கிருந்த பெரிய இனிப்புப் பெட்டி ஒன்றை என்னிடம் தந்தார்.

""என்னைவிட நீ தான் மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்குத் தெரியும். வைத்துக் கொள்'' என்று அவர் சொன்னபோது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நா தழுதழுக்க "வாழ்த்துகள்' சொல்வதற்கு பதிலாக நான் நன்றி (தாங்க்ஸ்) என்று கூறினேன். நான் நெகிழ்ந்து போய் வார்த்தை வராமல் தடுமாறுவதைப் புரிந்து கொண்டது போல, தோளில் தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டார்.

புரிதலுடன் ஒரு புன்னகை. ஆதரவாகத் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நகர்தல். என்மீதிருந்த அன்பையும் அக்கறையையும் இதைவிட வேறு எப்படி வெளிப்படுத்திவிட முடியும்?

நான் சுதாரித்துக் கொண்டு வெளியே வருவதற்குள் இந்தியாவின் வர்த்தக அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கார் கிளம்பிப் போயிருந்தது.

அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னால், பிரதமர் நரசிம்ம ராவின் அரசியல் ராஜதந்திரம் மட்டுமல்ல, நிர்வாகத் திறமையும் பளிச்சிட்டதை என்னால் உணர முடிந்தது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, மேலை நாடுகளுடனும், வளைகுடா நாடுகளுடனுமான உறவு பாதித்து விடாமல் பாதுகாத்தாக வேண்டும். நீண்டகாலமாக வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்திருப்பதால், பல்வேறு நாட்டுத் தலைவர்களுடனும், முக்கியமான பிரமுகர்களுடனும் தொடர்புள்ள தினேஷ் சிங் நரசிம்மராவால் வெளியுறவுத் துறை அமைச்சராக்கப்பட்டார். பன்னாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், தொழில் துறையினர் அகன்று விடாமல் இருப்பதற்கு பிரணாப் முகர்ஜி வர்த்தகத் துறை அமைச்சராக்கப்பட்டிருந்தார்.

அடுத்த சில நாட்கள் தில்லியில்தான் இருந்தேன். தினேஷ் சிங்கை சந்தித்தேன். அமைச்சரவையில் இணைவதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார். தினேஷ் சிங் சற்று சோர்வாகக் காணப்பட்டார். முதுமையின் பாதிப்பு நன்றாகவே தெரிந்தது. வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்கும் பூரிப்பு ஒருபுறம் இருந்தாலும், அவரால் எந்த அளவுக்கு சூழ்நிலையைக் கையாள முடியும் என்கிற ஐயப்பாடு எனக்கே எழுந்தது.

அன்றைய சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சர் உலகம் முழுவதும் சுற்றி அலைந்து, பல நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசி இந்தியாவுடனான உறவு பாபர் மசூதி இடிப்பால் பாதிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. அவரால் இந்தப் பொறுப்பை சுமக்க முடியுமா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது போலவே பலருக்கும் சந்தேகம் எழுந்தது.

சரத் பவார் மகாராஷ்டிர முதல்வராக அனுப்பப்பட்டிருந்தார். அர்ஜுன் சிங் அமைச்சரவையில் தொடர்ந்தார் என்றாலும், அரசியல்ரீதியாக அவரைப் பலவீனப்படுத்தி இருந்தார் பிரதமர் ராவ். சோனியா காந்திக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் சதீஷ் சர்மா பெட்ரோலியத் துறை இணையமைச்சராக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

சதீஷ் சர்மாவுக்குப் பெட்ரோலியத் துறை ஒதுக்கப்பட்டது குறித்து அப்போது தில்லி வட்டாரங்களில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வலம் வந்தது.

தனக்கும் சோனியாவுக்கும் இடையேயான தொடர்புக்காக ராஜீவ் காந்தியின் குடும்ப நண்பரும் அமேதி எம்.பியுமான சதீஷ் சர்மாவை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள முடிவெடுத்தார் நரசிம்ம ராவ். முன்னாள் விமானியான சதீஷ் சர்மா தனக்கு விமானப் போக்குவரத்துத் துறை தரும்படி கேட்டிருக்கிறார். அதற்குப் பிரதமர் நரசிம்மராவ் சொன்ன பதில் இது}}

""விமானத் துறை வேண்டாம். இதுதான் முதல் தடவையாக நீங்கள் அமைச்சராகிறீர்கள். பாதி நேரம் உங்களுக்குத் தெரிந்த விமானப் பணிப்பெண்கள் உங்கள் நேரத்தை வீணாக்குவார்கள். மீதி நேரம் உங்களது விமான ஓட்டி நண்பர்கள் உங்களை வேலை செய்ய விடமாட்டார்கள். அதனால் பெட்ரோலியத் துறை தருகிறேன்...''

அதற்கு மேல் சதீஷ் சர்மாவால் பிரதமர் நரசிம்ம ராவிடம் எதுவும் பேச முடியவில்லை. அவர் தந்த இலாகாவை ஏற்றுக் கொண்டதாகச் சொல்வார்கள்.

அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்த 10 நாட்களில் குடியரசு தினம் வந்தது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதாகக் கூறியிருந்த பிரிட்டிஷ் பிரதமர் ஜான் மேஜர், பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து குடியரசு தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் எழுந்தது. வெளிவிவகாரத் துறை அமைச்சரான தினேஷ் சிங் எதிர்கொண்ட முதல் சவால் அதுதான். எந்தவித பிரச்னையுமில்லாமல் வெற்றிகரமாகக் குடியரசு தினம் கடந்து போனது.

நான் சென்னை திரும்பிவிட்டேன். பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அடையாறு பகுதிக்குச் சென்றிருந்தபோது, வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்துவிட்டு வரலாம் என்று சாஸ்திரி நகரிலுள்ள அவரது வீட்டுக்குப் போனேன். அங்கே நான் 

சற்றும் எதிர்பாராத விதத்தில், நரசிம்மராவ் அமைச்சரவையில் நாடாளுமன்றத் துறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் இருந்தார்.

அவர் என்னிடம் பெயர்கள் தட்டச்சு செய்யப்பட்டிருந்த காகிதத்தைக் காட்டினார், அதில் முக்கியமான பல காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் இருந்தன. அமைச்சர் ரங்கராஜன் தந்த காகிதத்தில் ஒரு பெரிய பட்டியலே இருந்தது. 

""இந்தப் பட்டியல் எல்லாம் எதற்கு?''

""பிரதமர் நரசிம்ம ராவுக்குத் கடிவாளம் போட வேண்டும். அதற்காகத்தான்!''
அவர்கள் இருவரும் அதற்கு மேல் என்னிடம் எதையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிந்தது. நானும் கேட்க விரும்பவில்லை. அவர்களிடமிருந்து விடை பெற்றேன்.

ரங்கராஜன் குமாரமங்கலம் என்னிடம் காட்டிய பட்டியலில் ஆர்.கே.  தவானின் பெயர் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அதேபோல, பிரதமரின் நம்பிக்கைக்குரியவர் என்று பலராலும் கருதப்பட்ட புட்டா சிங்கின் பெயரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்ததை நான் கவனிக்கத் தவறவில்லை.

தில்லியைத் தொடர்பு கொண்டபோது, அங்கே பிரதமர் நரசிம்ம ராவுக்கு எதிராக நிஜமாகவே ஒரு பெரிய எதிர்ப்பு உருவாகி இருப்பது உறுதியானது. அதை உறுதிப்படுத்துவது போல, எனக்கு பங்காரப்பாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com