'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 60

தில்லியில் ஏதாவது பிரச்னை வரும்போது பங்காரப்பாவுக்கு எனது நினைவு வந்துவிடும். என்னை மட்டுமல்ல; அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பேசுவது என்பது அவரது பழக்கம்.
'பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! - 60

தில்லியில் ஏதாவது பிரச்னை வரும்போது பங்காரப்பாவுக்கு எனது நினைவு வந்துவிடும். என்னை மட்டுமல்ல; அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமான எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பேசுவது என்பது அவரது பழக்கம்.

அந்த விஷயத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியைப் போலத்தான் பங்காரப் பாவும். பத்திரிகையாளர்களைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்குத் தொடர்பு வைத்திருப்பார்.

""நரசிம்ம ராவ் அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்று எனக்குக் கிடைக்கும் தகவல்கள் உண்மைதானா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா? கருணாகரனுடன் தொடர்பு கொண்டீர்களா?'' என்றபடி பேச்சைத் தொடங்கினார் பங்காரப்பா.

""நேற்று வாழப்பாடி ராமமூர்த்தி வீட்டில் அமைச்சர் ரங்கராஜனை சந்தித்தேன். அவர் கையில் அதிருப்தியாளர்கள் பட்டியல் இருந்தது. அதில் பூட்டா சிங், ஆர்.கே. தவான் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இருப்பதால் சற்று சந்தேகமாக இருக்கிறது.''

""நான் ஆச்சரியப்படவில்லை. நரசிம்ம ராவுக்கு நண்பர்கள் யாரும் கிடையாது. திருப்பதி அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், பெரும்பாலான ஏ.ஐ.சி.சி. உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற சரத் பவார், அர்ஜுன் சிங், ஆர்.கே. தவான் ஆகியோர் எதிராக இருக்கிறார்கள் என்றால், ஆட்சி ஆட்டம் காண்கிறது என்றுதான் அர்த்தம். கர்நாடகத்தில் என் அளவுக்கு ஆதரவாளர்களை முதல்வர் வீரப்ப மொய்லியால் திரட்ட முடியாது என்பதை நரசிம்ம ராவுக்கும் அவரது நண்பர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள்.''

நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டேன். அந்த அளவுக்கு எனக்கு செல்வாக்கு கிடையாது என்பதை நான் அவரிடம் எப்படி சொல்வது? என்மீது அந்த அளவுக்கு மரியாதையும், நம்பிக்கையும் பங்காரப்பாவுக்கு ஏன்ஏற்பட்டது என்பது இன்றுவரை எனக்குப்புதிராகத்தான் இருக்கிறது.

அதே நேரத்தில் அவர் கூறியதில் உண்மை இருக்கிறது என்பதை நான் உணர முடிந்தது. பங்காரப்பாவை பல விஷயங்களில் திமுக தலைவர் மு. கருணாநிதியுடன் ஒப்பிடலாம். இரண்டு பேருமே அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவும், தலைவர்களாகவும் அவரவர் மாநிலத்தில் திகழ்ந்தனர். கருணாநிதி அண்ணாவால் உருவாக்கப்பட்டவர் என்றால், சோஷலிஸ்ட்டாகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் என்றாலும் தேவராஜ் அர்ஸால் அரசியலில் பங்காரப்பா அடையாளம் காணப்பட்டவர்.

அத்துடன் நின்றுவிடவில்லை, ஒற்றுமைகள். கர்நாடக மாநிலம் சோரபா சட்டப்பேரவைத் தொகுதியை 1967 முதல் 1996 வரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்த சாரெகொப்பா பங்காரப்பாவும், திமுகதலைவர் கருணாநிதியைப் போலவே தொண்டர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றவராக விளங்கினார். அவரது கடைசிக்கால அரசியல் வாழ்க்கை இரு மகன்களுக்கு இடையேயான அரசியலாகத் தடம் புரண்டது என்றாலும் கூட, கர்நாடக மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் பங்காரப்பா.

திறமையான பத்திரிகையாளர்களை அடையாளம் கண்டு நண்பர்களாக்கிக் கொள்வதில் பங்காரப்பாவும், ராமகிருஷ்ண ஹெக்டேயும் சமர்த்தர்கள். எதிரணியில் என்ன நடக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள் மூலம்தான்இருவரும் தெரிந்து கொள்வார்கள். இருவருமே எனக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர். அது அவர்களுக்கும் தெரியும். ஒரு தடவை கூட ஹெக்டே குறித்து பங்காரப்பாவோ, பங்காரப்பா குறித்து ஹெக்டேயோ என்னிடம் எதுவும் கேட்டதில்லை என்பதுதான் உண்மை.

""கேரள முதல்வர் கருணாகரன் தில்லி செல்கிறாரா என்று கேளுங்கள். அவர் தில்லி செல்வதாக இருந்தால் அங்கே என்ன நடக்கிறது என்பதை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அமைச்சரவையில் என்னைச் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும், கட்சியில் எனக்கு முக்கிய பதவிதந்தால், நான் பிரதமரின் கேம்புடன் ஒத்துழைப்பதாகத் தெரிவித்தேன் என்று அவரது காதில் போட்டு வையுங்கள்.''

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவரும் எதிர்பார்க்கவில்லை. முதல்வர் பதவியிலிருந்து அகற்றப்பட்டதால், அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், காங்கிரஸில் தொடர வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாக இருந்ததை நான் உணர்ந்தேன்.

காங்கிரஸ் தலைமை ஏனோ அவரது வளர்ச்சியை விரும்பவில்லை. அவரை அங்கீகரிக்கவும் தயாராக இருக்கவில்லை.

1983-இல் அன்றைய கர்நாடக முதல்வர் குண்டுராவால் புறக்கணிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸிலிருந்து வெளியேறிய பங்காரப்பா, தேவராஜ் அர்ஸின் "கர்நாடக கிராந்தி ரங்கா'

என்னும் கட்சியில் இணைந்து அதன் தலைவரானார். "கர்நாடக கிராந்தி ரங்கா' - ஜனதா கட்சி கூட்டணி காங்கிரûஸத் தோற்கடித்ததன் விளைவாகத்தான் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையில், கர்நாடகத்தில் முதன் முறையாகக் காங்கிரஸ் அல்லாத அரசு ஆட்சிக்கு வந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1993-இல் அதேபோன்ற சூழலை காங்கிரஸ் வலிய வரவழைத்துக் கொள்வது போல, பங்காரப்பாவை ஓரங்கட்டி இருந்தது (1996-லும் 1983 போலவே நடந்தது).

தில்லியிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்த செய்திகள் என்னை உடனடியாகப் புறப்படும்படி அறிவுறுத்தின. ஜனவரி மாதக் கடைசியில் சென்னை வந்த நான், பிப்ரவரி கடைசி வாரத்தில் மீண்டும் தலைநகரை நோக்கிக் கிளம்பிவிட்டேன்.

பொதுவாகவே தில்லி குளிர் எனக்குப் பிடிக்கும்.

தில்லியின் கடுங்குளிர் போன்ற சுகானுபவம் வேறு எதுவும் கிடையாது என்று அடிக்கடிச் சொல்லும் பலரில் நானும் ஒருவன். கம்பளியால் உடம்பெல்லாம் மறைத்தபடி இருந்தாலும், அந்த தில்லிகுளிரில் நடமாடும் சுகமே அலாதியானது. தில்லிவாசிகளிடம் கேட்டால் எனது கூற்றை ஆமோதிப்பார்கள்.
கடுங்குளிர் தொடங்குவதற்கு முந்தைய அக்டோபர், நவம்பர் மாதங்களும், குளிர் விலகும் பிப்ரவரி - மார்ச் மாதங்களும் தில்லியில் இருக்க வேண்டிய காலம். கோடைக்கால ஊட்டி, கொடைக்கானல் தோற்றது போங்கள். அப்படிப்பட்ட பிப்ரவரி கடைசியில் நான் தில்லி சென்றடைந்தேன்.

அரசியல் தட்பவெப்ப நிலை சூடுபிடித்திருந்தது. அர்ஜுன் சிங் அணியினர் மும்முரமாக நரசிம்ம ராவுக்கு எதிராக அணி திரள்வது உறுதிப்பட்டது. அதே நேரத்தில், நரசிம்ம ராவ் ஆதரவாளர்களும் தீவிரமாக அந்த எதிர்ப்பை முறியடிப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வந்தது.

செளத் அவென்யூவில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வீட்டுக்கு வந்தேன். நமது தமிழகத்தைச் சேர்ந்த வசந்தா நந்தகுமார், சந்திரசேகரின் சமாஜவாதி ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார். அவரும் ஓம் பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, முன்னாள் மத்திய அமைச்சர் சத்ய பிரகாஷ் மாளவியா உள்ளிட்ட பலரும் புல்தரையில் நாற்காலியில் அமர்ந்து சர்ச்சை செய்து கொண்டிருந்தனர். அதில் நானும் இணைந்து கொண்டேன்.

நரசிம்ம ராவ் ஆட்சி கவிழுமா, தொடருமா என்கிற கேள்வியை நான் எழுப்பியபோது, சத்ய பிரகாஷ் மாளவியாவிடமிருந்து மிகவும் தெளிவான பதில் வந்தது:

""ஆட்சி கவிழாது. நரசிம்மராவ் ஆட்சி கவிழ்வதை சர்வதேச சக்திகளும், பன்னாட்டு முதலீட்டாளர்களும் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல, பாஜக அல்லாத எந்தக் கட்சியும் விரும்பாது. தேர்தலை சந்தித்துப் பரிசோதனை நடத்த யாரும் தயாராக மாட்டார்கள். அதனால்...'' என்று கூறி நிறுத்தினார் அவர்.

""அதனால்... என்ன சொல்ல வருகிறீர்கள்?''

""இப்போது நடப்பதை ஆட்சி அதிகாரத்துக்கான போட்டியாக நான் கருதவில்லை. கட்சி முழுமையாக நரசிம்ம ராவின் கைக்குள் போய்விடக் கூடாது என்பதுதான் அவரது எதிர்ப்பாளர்களின் குறிக்கோளாக இருக்கும். சோனியா காந்தியைத் தங்களது பக்க பலமாக வைத்துக் கொண்டு, அவர்கள் நடத்தும் நிழல் யுத்தம் இது என்பதுதான் எனது கருத்து.''

அவரது கருத்தை ஆதரிக்கும் விதத்தில் ஓம் பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவாவும் பேசினார். அவர்கள் இருவருமே சந்திரசேகர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவர்கள். அவர்கள் கூறுவது சந்திரசேகரின் கருத்தைப் பிரதிபலிப்பதாகவே நான் கருதினேன். அவர்களுடன் சந்திரசேகர்ஜியின் வீட்டிலேயே இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பும்போது எனக்கு சில தெளிவுகள் பிறந்திருந்தன.

பங்காரப்பா சொல்வது போலவே, வர்த்தகத்துறை அமைச்சராகிவிட்ட பிரணாப் முகர்ஜியை சந்திக்க முடியவில்லை. இதுபோன்ற அரசியல் சூழலில் அவர் சந்திக்க மாட்டார் என்பது எனக்கும் தெரியும். பூட்டா சிங் ஊரில் இல்லை என்றார்கள். கேரளா ஹெளசில் விசாரித்தபோது, முதல்வர் கருணாகரன் வரவில்லை என்று சொன்னார்கள். அக்பர் ரோடு காங்கிரஸ் தலைமையகத்தை வளைய வந்தபோது, அங்கே எந்தவிதப் பரபரப்பும் காணப்படவில்லை.

கேன்டீனில் காபி குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பலாம் என்று வெளியே வந்தபோது மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சியாம் சரண் சுக்லா காரில் வந்து இறங்குவது தெரிந்தது. ஏற்கெனவே நன்றாக அறிமுகமானவர் என்பதால் அவரை நோக்கி விரைந்தேன். நீண்ட நாளுக்குப் பிறகு என்னைப் பார்த்ததில் அவருக்கும் மகிழ்ச்சி.

சென்னை ராஜதானியைப் போல மத்திய ராஜதானியின் பிரதமராகவும்,மத்திய பிரதேச மாநிலத்தின் முதலாவது முதல்வராகவும் இருந்த ரவி சங்கர் சுக்லாவின் மூத்த மகன்தான் சியாம் சரண் சுக்லா. அவரது சகோதரர் வித்யா சரண் சுக்லா தேசிய அரசியலில் முன்னிலை வகித்தவர் என்றால், சியாம சரண் சுக்லா மூன்று முறை மத்திய பிரதேச முதல்வராக இருந்தவர். மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்.

அவரைப் பின்தொடர்ந்து நானும் கட்சித் தலைமையகத்திற்குள் நுழைந்தேன். அங்கே பொதுச் செயலாளர்களின் ஒருவரான ஆர்.கே. தவான் அறையில் இருக்கவில்லை. சியாம சரண் சுக்லாவும் நானும் அந்த அறையில் சென்று அமர்ந்தோம். பரபரப்பாகப் பேசப்படும் நரசிம்ம ராவ் எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்டேன்.

சிரித்தார்.

""அவர்கள் நினைப்பது எதுவும் நடக்காது. நரசிம்ம ராவ் இவர்கள் நினைப்பதுபோல பலவீனமானவர் அல்ல. அரசியலைக் கற்றுத் தேர்ந்தவர். என்னையும் என் சகோதரனையும் ஒருபுறமும், மோதிலால் வோராவை இன்னொரு புறமும், மாதவராவ் சிந்தியாவை மற்றொரு புறமும் செயல்பட வைத்து மத்திய பிரதேச அரசியலில் அர்ஜுன் சிங்கை முடங்கச் செய்து விட்டார். இதேபோல, கருணாகரன், மூப்பனார், ஜகந்நாத் மிஸ்ரா, சரத் பவார் என்று எல்லோருக்கும் "செக்' வைத்திருக்கிறார். அதே நேரத்தில், எங்களை தனக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறார்.''

""நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? நரசிம்ம ராவ் தாக்குப் பிடிப்பாரா, மாட்டாரா?''

""இவர்களால் அவரை அசைக்க முடியாது. கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தன்னை பலமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.''

""ஆட்சியில் சரி, கட்சியில்? திருப்பதி மாநாட்டில் அர்ஜுன் சிங், பவாருக்குக் கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் அவர்கள் இணைந்தால் பலமான சக்தியாக இருக்கிறார்களே...''

""இணைந்தால்தானே? இணைய மாட்டார்கள். அதைப் பிரதமர் நரசிம்ம ராவ் உறுதிப்படுத்திவிடுவார்.''

""கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவரை அகற்றுவதுதான் இலக்கு என்று கூறுகிறார்கள்...''

""கட்சித் தலைமையை விட்டுக் கொடுத்து விட்டு, கோப்புகளுடன் தினந்தோறும் தலைவரைப் பார்க்கப் பிரதமர் செல்வார் என்று இவர்கள் நினைத்தால் ஏமாறுவார்கள். இவர்களது முயற்சிகள் எதுவும் பலிக்கப் போவதில்லை.''

நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ஆர்.கே. தவான் வந்துவிட்டார். அவர் புதிதாக ஒரு செய்தி சொன்னார்.

ஹரியாணா மாநிலம் சூரஜ்குண்டில் கூட இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நரசிம்ம ராவின் எதிர்ப்பாளர்கள், அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று குரல் எழுப்ப முடிவெடுத்திருப்பதாக ஆர்.கே. தவான் சொன்னபோது நான் சியாம் சரண் சுக்லாவின் முகத்தைப் பார்த்தேன்.

அவரது முகத்தில் புன்னகை தவழ்ந்தது. ஆர்.கே. தவானின் முகத்தில் இறுக்கம் தெரிந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com