ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால்...!

என் வயது 66. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவுக்குப் பிறகு 310 மி.கி. அளவில் இருப்பதால், சிறுநீரில் சர்க்கரையின் வெளியேற்றம் 3 + என்றும், ஆல்புமின் 1 +, சீழ் செல்கள் 20-22 எச்பிஎஃப், ஆர்பிசி 16-18 எச்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால்...!


என் வயது 66. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உணவுக்குப் பிறகு 310 மி.கி. அளவில் இருப்பதால், சிறுநீரில் சர்க்கரையின் வெளியேற்றம் 3 + என்றும், ஆல்புமின் 1 +, சீழ் செல்கள் 20-22 எச்பிஎஃப், ஆர்பிசி 16-18 எச்பிஎஃப், எபிதெலியல் செல் 7-9 எச்பிஎஃப் என்று அதிக அளவில் உள்ளன. உடல் சோர்வு அதிகம் ஏற்படுகிறது.எப்படிக் குணப்படுத்துவது?

தர்மலிங்கம்,
சிங்காரப்பேட்டை.

உணவின் செரிமானத்தில் வெளியாகும் சத்தான நீர்ப்பகுதியில் இனிப்பின் பகுதியை அதிகரிக்கும் வெல்லம், சர்க்கரை, புதிய அரிசி, கோதுமை, மாவுப் பண்டங்கள், எருமைப்பால், தயிர், மீன், மாமிசம், கொழுப்பு ஆகியவற்றின் அதிக சேர்க்கையாலும், அந்த இனிப்பானது ரத்தம், மாமிசம், மேதஸ் எனும் தாதுக்களில் உள்நுழையும்போது, அதை செரிமானம் செய்யும் நெருப்பின் அம்சம் குறைவாக உள்ளபோது, சரிவர செரிக்காமல், அந்த தாதுக்களே, அந்த இனிப்பை, உடலின் திரவமான கழிவுப் பொருளில், முக்கியமாக சிறுநீரின் வழியே வெளியேற்றுகிறது. அதனால் சிறுநீரில், சர்க்கரையின் வெளியேற்றத்தைத் துரிதப்படுத்தும் தாதுக்களின் நெருப்பு பலக்குறைவை சரி செய்வதை முதல் சிகிச்சையாகச் செய்தால்தான், தங்களுக்கு சிறுநீரில் வெளியேறும் கழிவுகளைக் கட்டுக்குள் கொண்டு வந்து வெளியேற்ற முடியும்.

தாதுக்களில் பொதிந்துள்ள செரிமானத்திற்கான நெருப்பு மந்தமாவதற்குக் காரணமாக உடற்பயிற்சி, உழைப்பு இல்லாமை, பகல்தூக்கம், அதி மிருதுவான சோபா, மெத்தைகளிலேயே எப்போதும் உட்கார்ந்திருத்தல், உறங்குதல், எவ்வித அலுவலும், சிந்தனையும் சிறிதும் செய்யாமல் உண்ணுதல், உறங்குதலுடன் சோம்பேறியாய் இருத்தல், அதிகக் கவலை, பீதி, துக்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதனால் ரத்தம், மாமிசம், மேதஸ் எனும் தாதுக்களில் இனிப்பின் வரவு குறைக்கப்பட வேண்டும். தாதுக்களில் அக்னி பலம் வளர்க்கப்பட வேண்டும்.

அறுவடையாகி 9 - 10 மாதங்கள் பழையதான அரிசி, கோதுமை ஆகியவற்றை உண்ணும்போது அதிக அளவில் சீரணமாகி இறுதியில் இனிப்பை வெளிப்படுத்துவதில்லை. புதிதுதான் கெடுதல். இவற்றுடன் கேழ்வரகு, வரகு, தானியங்களையும் சிறிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொத்துக்கடலை, துவரை, கொள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு பருப்பு வகைகளும் கூடவே மிதமாய் சேர்க்கவும். கசப்பு, துவர்ப்புச் சுவை மேலிட்டகறிகாய்களை, கீரைகளைத் தாராளமாக உணவில் சேர்க்க வேண்டும். புளிப்பு கூடாது. நெய்யும் அதிகம் சேர்க்கக் கூடாது. மாமிச உணவு சாப்பிடுபவராக இருந்தால், கோழி, புறா ஆகியவற்றைச் சேர்க்கலாம். முட்டையைத் தவிர்க்கவும்.

யவை எனும் வார்க்கோதுமை மிக நல்லது. ஜவ் என்ற பெயரில் வடநாட்டில் கூறப்படும் இந்த தானியம் மிகச் சிறந்த பத்திய உணவு. சிறுநீர் உபாதைகளைப் போக்கி, உடலில் தேவையற்ற மேதஸ் எனும் கொழுப்பைக் குறைக்கும்.

கசப்புச் சுவை கொண்ட பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக் கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளிக் கீரை, தூதுவளை, முருங்கைக்கீரை சாப்பிட, தாதுக்களில் ஏற்படும் அழுகல், அழற்சி விலகி அக்னியானது நன்கு வளரும். கற்ப மூலிகைகள் எனும் கருப்பு கரிசலாங்கண்ணிக் கீரையைத் தினசரி உணவில் உட்கொள்ள சுத்த ரத்தம் உற்பத்தியாகும். கசப்பு நார்த்தங்காய், கடார நார்த்தங்காய், நெல்லிக்காய் சேர்ப்பது, சிறுநீரில் வெளிப்படும் லஜிகா மேஹம் எனும் அல்புமினுரியா உபாதைக்கு மிக நல்லது. பச்சை மஞ்சள் கிழங்கு, மாங்காய் இஞ்சி, சிறு இளம் முள்ளங்கி, வாழைப்பூ, அவரை, புடல், பீர்க்கு, முருங்கை,

பச்சையான பயற்றங்காய் வகைகள் நல்லது. துவர்ப்புச் சுவையுடைய அத்திப் பிஞ்சு, தாமரை அல்லிக் கிழங்குகளின் வற்றல், நாவல் -விளாம்பழங்கள், மாங்கொட்டைப் பருப்பு முதலின உணவில் சேர்க்கப்பட வேண்டியவை.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com